Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

குருதி படிந்த செங்கோல்


அத்தியாயம் 1: நிலவொளிச் சதி
சந்திரகிரிப் பேரரசின் அந்தப்புரம் அன்று ஒரு விசித்திரமான அமைதியில்

ஆழ்ந்திருந்தது. அங்கிருந்த ரத்தினத் தூண்களுக்கு நடுவே, ஒரு ஓவியம் உயிர் பெற்று வந்தது போன்ற தோற்றத்துடன் அமர்ந்திருந்தாள் இளவரசி யசோதரா தேவி.
மதியொளி தோற்றோடும் மாசற்ற
திருமுகம்,
மதி மயக்கும் விழி முனையில்
மர்மத்தின் கருவூலம்!
கார் மேகம் கவிழ்ந்தென்ன உன் கூந்தல் சரிவோ?
கூர் வாள் முனைக்கும் உன் கடைக்கண் அழகோ?

அவளது கார்மேகக் கூந்தல் முதுகின் பின்னே அருவி எனச் சரிந்து கிடக்க, முகமோ பௌர்ணமி நிலவின் ஒளியைத் தன்னுள் 

பிரதிபலித்தது. வில்லென வளைந்த புருவங்களுக்குக் கீழே, கூர்மையான வாள் முனையைப் போன்ற அவளது விழிகள் ஏதோ ஒரு ரகசியத்தைச் சுமந்திருந்தன. மின்னும் பட்டுத் துகிலால் ஆன அவளது உடையும், கழுத்தில் தவழ்ந்த நவமணி

மாலைகளும் அவளது அரச குலப் பெருமையைச் சாற்றின. ஒரு பேரழகியாக மட்டுமல்லாமல், விழிஞைத் தேசமே வியந்து நோக்கும் ஒரு வீர மங்கையாகவும் அவள் அங்கு வீற்றிருந்தாள்.
அவளது அழகைக் கண்டு அந்த அந்தப்புரத்துத் தீபங்களே நாணித் தலைகுனிந்தன. ஆனால், அந்தப் பேரழகின் பின்னால் இன்று ஒரு கலக்கம் தென்பட்டது.
"தேவி..." என்று மெல்ல அழைத்தாள் அவளது தோழி பவளக்கொடி.

யசோதரா தேவி மெல்லத் திரும்பினாள். அவளது அசைவில் ஒரு அன்னத்தின் நளினமும், ஒரு பெண் சிங்கத்தின் கம்பீரமும் கலந்திருந்தது.
"பவளம், மந்திரி சபை இன்னும்

முடியவில்லையா? என் தந்தை மகாராஜா இவ்வளவு நேரம் அங்கு இருக்க வேண்டிய அவசியம் என்ன? ஏனோ என் நெஞ்சம் இன்று ஒரு பேரபாயம் வரப்போவதாகச்

சொல்லிக்கொண்டே இருக்கிறது..." என்று அவளது செவ்வாய்கள் முணுமுணுத்தன.
"கவலை கொள்ளாதீர்கள் தேவி. சந்திரகிரிப் பேரரசு ஒரு

மலைக்கோட்டை போன்றது. அதை யாராலும் அசைக்க முடியாது," என்று பவளக்கொடி தேற்றினாள். ஆனால், யசோதராவின் பார்வை ஜன்னல்

வழியாக வானைப் பார்த்தது. அங்கு மேகங்கள் ரத்தச் சிவப்பாய் நகர்ந்து கொண்டிருந்தன. சந்திரகிரி கோட்டையின் உச்சியில் இருந்த எச்சரிக்கை முரசு 'டும்... டும்... டும்...' என ஒலிக்கத் தொடங்கியது. அந்தச் சத்தம் ஒரு பெரும் மாற்றத்தின் தொடக்கம்

என்பதை அவள் உணர்ந்தாள்.
அதே சமயம், காலம் சற்று பின்னோக்கிச் சுழன்றது...
விழிஞைத் தேசத்தின் அடர்ந்த கானகம் அது. சூரிய ஒளியே தரைக்கு வர அஞ்சும் அளவுக்கு மரங்கள்

ஒன்றோடொன்று கைகோர்த்து நின்றன. அந்தக் காட்டின் அமைதியைக் கிழித்துக் கொண்டு, ஒரு குழந்தையின் மெல்லிய அழுகுரல் கேட்டது. அது சாதாரண அழுகையல்ல; ஒரு

சாம்ராஜ்யத்தின் தலையெழுத்தையே மாற்றப்போகும் குரல்.
அந்தக் காட்டுக்கு மிக அருகில் இருந்த ஒரு சிற்றூரில் வாழ்ந்து வந்தவன் பொன்னன். பரம்பரை பரம்பரையாகக் காட்டில் காய்ந்த மரங்களை வெட்டி, அதைச் சந்தையில் விற்றுப்

பிழைப்பவன். அவனது மனைவி வசுந்தரா தேவி. வறுமை இருந்தாலும், மனதார ஒருவரையொருவர் நேசித்த தம்பதிகள் அவர்கள். ஆனால், அவர்களுக்கு ஒரு குறையிருந்தது; திருமணமாகிப் பல ஆண்டுகளாகியும் மழலைச் செல்வம் இல்லை.




அன்று காலை, பொன்னன் தன் தோளில் கோடரியைச் சுமந்து கொண்டு முன்னே செல்ல, பின்னால் வசுந்தரா தேவி காய்ந்த சருகுகளைச் சேகரிக்கக் கூடடையுடன் வந்து கொண்டிருந்தாள்.
"வசுந்தரா, இன்று ஏன் காடு இவ்வளவு மௌனமாக இருக்கிறது? பறவைகளின் சத்தம் கூடக் கேட்கவில்லையே..." என்று பொன்னன் கேட்டான்.
அவன் பேசி முடிக்கும் முன்பே, அந்தச் சிசுவின் அழுகுரல் காற்றின் திசையிலிருந்து அவர்கள் காதில்

விழுந்தது. இருவரும் அதிர்ச்சியில் நின்றனர். ஒரு முட்புதருக்கு நடுவே, ரத்தம் தோய்ந்த ஒரு பட்டுத் துணியில்

சுற்றப்பட்ட நிலையில், ஒரு அழகான ஆண் குழந்தை கை கால்களை

உதைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தது.
வசுந்தரா தேவி பாய்ந்து சென்று அந்தக் குழந்தையைத் தூக்கித் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். அவளது

தாய்மை பொங்கியது. பொன்னன் அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்தான். சாதாரணக் குழந்தையிடம் இருக்காத ஒரு தேஜஸும், தீர்க்கமும் அந்தச் சிறு முகத்தில் தெரிந்தது.


"வசுந்தரா, இந்தக் குழந்தை யாராக இருந்தாலும், இனி இவன் நம் மகன். இவனுக்கு விக்ரமசிம்மன் என்று பெயரிடுவோம். இவன் ஒரு சிங்கம் போல் வளர்ந்து நம்மைக் காக்கட்டும்," என்றான் பொன்னன் உணர்ச்சிவசப்பட்டு.


இருபது ஆண்டுகள் மின்னல் வேகத்தில் மறைந்தன.
காட்டில் மரம் வெட்டும் பொன்னனின் மகன் விக்ரமசிம்மன் இப்போது ஒரு வாலிபன். அவனது தோள்களில் கோ

டரி இருந்தாலும், அவனது நடை ஒரு அரசனின் கம்பீரத்தைக் கொண்டிருந்தது. தான் ஒரு விறகுவெட்டியின் மகன் என்று அவன்

நினைத்துக் கொண்டிருந்தாலும், அவனது நரம்புகளில் ஓடியது சந்திரபுரி அரச வம்சத்தின் வீரம்!


விக்ரமசிம்மனின் வீரப் பயணத்திற்கு இடையே, அவனது நிழலாகத் தொடரும் அமுதன் ஒரு விசித்திரமான பிறவி. கையில் எப்போதும் ஒரு பலகார மூட்டையுடனும், வாயில் வம்புப் பேச்சையுடனும் வலம் வருபவன். ஆனால், இந்த அமுதனின் உள்ளத்தைக் கொள்ளையடித்தவள் அந்தச் சிற்றூரின் எழில் மங்கை கார்மேகக் குழலி.
காட்டின் ஓரத்தில் இருந்த ஓடையருகே கார்மேகக் குழலி நீர் எடுத்துக் கொண்டிருந்தபோது, அமுதன் மெல்ல அவளருகே சென்றான்.



அவளது பெயர் போலவே மேகம் போன்ற அடர்ந்த கூந்தல் காற்றில் அலைபாய, அவளது அழகு அமுதனைச் சொக்க வைத்தது.
"கார்மேகக் குழலி... ஓடும் நீர்கூட உன் முகம் பார்த்து அப்படியே நின்று விடுகிறதே! இந்தப் பூக்கள் எல்லாம் உன் கூந்தலில் சூடிக்கொள்ளத் தவம் கிடக்கின்றனவே, பார்த்தாயா?" என்று அமுதன் ஒரு கவிஞனைப் போலப் பேச முயன்றான்.
கார்மேகக் குழலி நக்கலாக அவனைப் பார்த்து, "முதலில் உன் கையில்


இருக்கும் அந்தப் பலகார மூட்டையை ஓரமாக வையுங்கள் அமுதா! என் குழலைப் பற்றிப் பேசுவதை விட, அந்தப் பணியாரத்தின் வாசனைதான் உங்களை அதிகம் ஈர்க்கிறது போலும்," என்று கண்சிமிட்டிச் சிரித்தாள்.
"அடி போடி! இந்த அமுதன் உனக்காகப் பெரும்போர் புரியவும் தயார், இந்தப்

பலகாரங்களை உனக்காகப் பகிர்ந்து கொடுக்கவும் தயார்! சந்திரகிரி கோட்டைக்கே போனாலும், உன் நினைவை என் நெஞ்சில் சுமந்து

கொண்டுதான் செல்வேன்," என்று அவன் வீராவேசமாகச் சொல்ல,

கார்மேகக் குழலி அவனது அந்த அப்பாவித்தனமான காதலைச் கண்டு நாணினாள்.
"பத்திரமாகப் போய் வாருங்கள் அமுதா... நீங்கள் மீண்டு வந்தால் தான்

இந்தக் கார்மேகக் குழலியின் முகம் முழுமதியாய் மலரும்!" என்று அவள் மெல்ல முணுமுணுக்க, அமுதன் உற்சாகத்தில் குதித்தான். அந்தப்


பயணத்திலும் ஒரு சிறு காதல் தென்றல் வீசியது.
விதி யாரையும் விடுவதில்லை. சந்திரகிரி கோட்டையில் யசோதரா தேவி சுமந்திருந்த ரகசியமும், காட்டில் வளர்ந்த விக்ரமசிம்மன் சுமந்திருந்த



அடையாளமும் ஒன்றை ஒன்று சந்திக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. அந்தச் சந்திப்புதான் "குருதி படிந்த செங்கோல்" கதையின் ஆரம்பப்புள்ளி!
(தொடரும்...)