அன்று அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு சென்ற நந்தனா, யாருடனும் பேசாமல் தனக்குள்ளேயே அர்ஜுனைத் திட்டிக்கொண்டு இருந்தாள். நந்தனா அர்ஜுனைத் திட்டி முடிப்பதற்குள் நாம் நந்தனா குடும்பத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம். நந்தனாவின் அப்பா சதாசிவம் பேங்க் மேனேஜர், அம்மா சாவித்ரி பள்ளி ஆசிரியராக இருந்து தற்போது விருப்ப ஓய்வு பெற்று வீட்டைக் கவனித்து கொண்டிருக்கிறார். அவர் விருப்ப ஓய்வு பெற முக்கிய காரணம், அவரது செல்ல மருமகள் சந்தியா, நந்தனாவின் அண்ணன் விக்ரமின் காதல் மனைவி, இப்போ ஆறு மாத கர்ப்பிணி. விக்ரம் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறான், சந்தியா கல்லூரி விரிவுரையாளராக இருக்கிறாள். கல்லூரிக் காலத்தில் இருந்து ஐந்து வருடமாகக் காதலித்து வந்த விக்ரம்-சந்தியா ஜோடியின் கல்யாணத்திற்கு முக்கிய கரணம் நம்ம நந்தனாவும்,அவளோட தோஸ்த் கதிரும்தான். தாய் தந்தை இல்லாத சந்தியாவிற்கு திருமணத்திற்குப் பிறகு விக்ரமின் வீடே அனைத்துமாகிப்போனது. நந்தனாவும், சந்தியாவும் தோழிகள் போல ரகசியம் பேசிப்பாங்க.
இவங்க இத்தனைபேர் இருந்தாலும் கதிர் இல்லாம நந்தனாவுக்கு எதுவும் ஓடாது. நீங்க அந்த surfexcel விளம்பரம் பார்த்து இருக்கீங்களா ஒரு குட்டி பொண்ணுமேல கரை ஆய்டுச்சுன்னு கூட இருக்க சின்ன பையன் அந்த அழுக்கு தண்ணி கூட சண்டைபோடுவான், அந்த மாதிரி வயசுல ஆரம்பிச்சது இவங்க நட்பு. கதிர் அப்பா வீராசாமி, தேனிக்கு பக்கத்துல பெரிய விவசாயி, நந்தனவோட சின்ன வயசுல அவங்க அப்பா அந்த ஊர் பேங்க்ல வேல செஞ்சாரு, அதுக்கப்புறம் அந்த ஊரைவிட்டு நந்தனா குடும்பம் கிளம்புறப்ப, அழுது அடம்பிடிச்சு நந்தனா படிச்ச பள்ளி விடுதியில் சேர்ந்துட்டான் கதிர். அப்ப இருந்து அவங்க ஒண்ணாதான் இருக்காங்க.
கதிர் அம்மா ராதாவிற்கு வாரம் ஒரு முறை பேசுற பையன விட, தினம் சாப்பிடீங்களா, இன்னைக்கு அந்த நாடகத்துல என்ன ஆச்சுன்னு கேக்குற நந்தனவாதான் ரொம்ப பிடிக்கும். அச்சச்சோ உங்ககிட்ட பேசிக்கிட்டே ஹாலில் தனியா உக்காந்து திட்டிகிட்டு இருந்த நந்தனாவ மறந்தே போய்ட்டேன். தனியா பேசிட்டு இருந்த மகளை விசித்திரமாகப் பார்துக்கொண்டு இருந்தார் சாவித்ரி. அப்போது அங்கு வந்த விக்ரம் தாயிடம் என்னவென்று கேட்க அவர் நந்தனாவைக் காட்டினார். தன் தங்கையிடம் சென்று அவள் தலையில் கொட்டினான் விக்ரம். அவனை முறைத்துவிட்டு மறுபுறம் திரும்பி அமர்ந்துகொண்டாள் நந்தனா. அவளது செயல் அவனுக்குச் சிரிப்பை வரவைக்க அவள் முன் சென்று அமர்ந்தான், உனக்கு என்ன பிரச்சன எதுக்கு இப்படி லூசு மாதிரி தனியா பேசிட்டு இருக்க என்று கேட்டான்.
யாரு நானா லூசு?, எங்க கிரியேட்டிவ் ஹெட் தான் லூசு, நம்ப ஊரு அய்யனாருக்கே காம்பெடிஷன் குடுக்குற அளவுக்கு ஒரு முசுடு. என்று கூறி காலையில் இருந்து நடந்ததை அவர்கள் சவால் அனைத்தையும் தன் அண்ணனிடம் சொன்னாள். கிரியேட்டிவ் ஹெட்டை டெல்லிக்கு திருப்பி அனுப்பனுனு அவன் முன்னாடியே சொல்லிட்டு அவன்கிட்டயே சவால் வேற விட்டுட்டு வந்து இருக்க, இவளை என்னதான் செய்ய என்று நினைத்தவனுக்கு சிரிப்புதான் வந்தது, சிரித்து இவளிடம் யார் வாங்கிக்கட்டிக்கொள்வது என்று சிரிப்பை அடக்கினான்.பின் அவளிடம் அதுதான் சவால் விட்டிருக்கல அப்ப அதுல எப்படி ஜெய்க்கறதுனு பாரு அத விட்டுட்டு இப்படி தனியா பொலம்புனா உன்ன லூசுன்னுதான் சொல்லுவாங்க. நான் ஒன்னு லூசு இல்ல சவால்ல ஜெயிச்சு அந்த அய்யனார என்ன பண்றனு பாரு. என்று சொல்லிவிட்டு அவள் அறைக்கு சென்றாள். இதைக்கேட்டுக் கொண்டே உள்ளே வந்தனர் சந்தியாவும், கதிரும்.சந்தியா விக்ரமிடம் என்ன ஆச்சு மேடம் இன்னைக்கு வாயில டான்ஸ் ஆடிட்டு போறாங்க என்றாள், இதைக்கேட்ட விக்ரம் சிரித்துக்கொண்டே நடந்ததை தன் மனைவியிடம் சொல்ல சந்தியாவும் விக்ரமுடன் இணைந்து சிரித்தாள். கதிர்தான் என்னது சவாலா, போச்சு என்ன அந்த அய்யனாருக்கு பலிகொடுக்காம இருந்தா சரி என்றவனை பார்த்து இன்னும் அதிகமாகச் சிரித்தனர்.
அதன்பின் வந்த நாட்கள் பெரிய மோதல்கள் எதுவுமின்றி சென்றன. நண்பர்கள் குழு எப்பொழுதும் போல பேச்சும்,சிரிப்புமாக தங்களது வேலைகளைத் தொடர்ந்தனர். நந்தனாவிற்கும், அர்ஜுனிற்கும் உள்ள சவால் பற்றி கதிர் தவிர யாருக்கும் தெரியாது. பலவிதமாக யோசித்து நிறைய இடங்களுக்குச் சென்று புதிய யோசனைகளைக் கொண்டு விளம்பரங்களுக்கானத் திரைக்கதையைத் தயாரித்துக்கொண்டு இருந்தார்கள். தேவையேற்பட்டால் தவிர, அர்ஜுன் அவர்களிடம் எந்த பேச்சும் வைத்துக்கொள்ளவில்லை. நந்தனா வழக்கம்போல தன் நாட்டியபள்ளிக்குச் செல்லத் தொடங்கினாள். அவள் அங்குதான் நாட்டியம் பயின்றாள். தற்போது அங்கேயே சிறுபிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கிறாள். இன்று அவளுடைய வகுப்பிற்கு புதிதாக ஒரு குட்டிப் பெண் வரப்போவதாக முன்னமே சொல்லி இருந்தனர். கண்களில் சிறு பயத்துடன் அவளைப் பார்த்துச் சிரித்த யாழினியை பார்த்ததும் நந்தனாவிற்கு பிடித்துப்போனது. அவளிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டாள். யாழினியுடன் நின்றவன் தன்னை அரவிந்த், யாழினியின் சித்தப்பா என்று அறிமுகம் செய்து கொண்டான்.
அவனிடம் நாட்டியப்பள்ளியின் நடைமுறைகளைச் சொல்லிவிட்டு யாழினியை அழைத்துக்கொண்டு வகுப்பிற்குச் சென்றாள். அந்த நாட்டியப் பள்ளியில் சிறுவர் வகுப்புகளுக்கு மட்டும் பெற்றோர் அருகிருந்து பார்க்கும் அனுமதி உண்டு. யாழினியின் வகுப்பை பார்வையிட்டுக் கொண்டிருந்த அரவிந்தின் கவனத்தை நந்தனாவின் குரலும்,நடனமும் ஈர்த்தது. இதை அறியாத நந்தனா தன் வகுப்பைத் தொடர்ந்தாள். அப்படியும் இப்படியுமாகக் கிளைன்ட் இவர்களுக்குக் கொடுத்திருந்த ஒருமாதம் முடிந்தது, இன்று அவர்களின் திரைக்கதைகளைக் கிளைண்ட்டிற்கு டெமோ கொடுக்க வேண்டும்.
காலையிலேயே பரபரப்பாகக் கிளம்பிக்கொண்டு இருந்த நந்தனாவை அழைத்துச் செல்ல கதிர் வந்தான். விக்ரம் அவனிடம் சவாலில் யார் ஜெயிச்சாங்கன்னு எனக்கு போன் பண்ணி சொல்லு என்றான், கதிர் அவனிடம் ரகசியமாக பட்டாசே அத மறந்துட்டாபோல நீங்க கொளுத்திவிட்டுடாதீங்க என்றான், ரகசியம் பேசும் இருவரையும் சந்தேகமாக பார்த்த நந்தனா எதுவும் சொல்லாமல் கதிர் உடன் கிளம்பிவிட்டாள். அவள் எண்ணம் முழுக்க இன்று டெமோ நல்லபடியாக நடக்க வேண்டும் என்பது மட்டுமே ஓடிக்கொண்டு இருந்தது. கதிர் சொல்லியது போல அவளுக்கு சவால் பற்றிய சிந்தனையே இல்லை. மூன்று மணிநேர டெமோவிற்கு பிறகு கிளைன்ட் எங்களுக்கு ஐந்து யோசனைகளும் மிகவும் பிடித்து உள்ளது. இதில் நீங்கள் எதை தேர்வு செய்தாலும் எங்களுக்கு சம்மதம் என்றனர். ஆறு மாதத்திற்குள் விளம்பரப் படப்பிடிப்பை முடித்தும் கொடுக்க வேண்டும் என்றும் நடிகர்கள் புது முகங்களாக வேண்டும், போன்ற இன்ன பிற கோரிக்கைகளோடு ஒப்பந்தம் போடப்பட்டது. கிளைன்ட் கிளம்பியவுடன் நண்பர் குழு கைதட்டி, ஆரவாரம் செய்தது, அர்ஜுன் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி சென்றான். இப்பாவது கொஞ்சம் சிரிச்சா முத்து உதிர்ந்திரும் பாரு என்று அவன் போன வழியை பார்த்து நொடித்தாள் நந்தனா.
அன்று மதியம் நந்தனாவை அழைத்த அர்ஜுன் அவளிடம் ஒரு கவரைக் கொடுத்தான், அதை பிரித்து பார்த்தவளால் அதை நம்ப முடியவில்லை. இன்று முடிவாகிய விளம்பரப் படத்தை எடுப்பதற்கான முழு அதிகாரத்தையும் அவளுக்குக் கொடுத்து இருந்தான். பாஸ் என்ன இது என்று அதிர்ச்சி குறையாமல் கேட்டாள். சவாலில் நீ ஜெயிச்சதுக்கு என்னோட பரிசு. எப்பவும் கலாட்டா பண்ணிக்கிட்டு சிரிச்சுக்கிட்டு விளையாட்டுத்தனமா இருக்கறதுனால வேல ஒழுங்கா நடக்காதுனு நினைச்சேன், அது தப்புனு நீ நிரூபிச்சுட்ட என்றான். நந்தனாவால் அதை நம்ப முடியவில்லை. திமிரு நம்மகூடலாம் சிரிச்சு பேசிட்டா கிரீடம் இறங்கிரும் இப்படி அவனை திட்டி இருக்கிறாள். அவன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டதோடு, எந்த வேலையை அவள் ஒழுங்காகச் செய்யமாட்டாள் என்று சொன்னானோ, அதே வேலையின் முழு பொறுப்பையும் அவளிடம் கொடுத்து இருக்கிறான். பாஸ் பொறுப்ப என்கிட்ட கொடுத்து மாட்டிவிட பாக்குறீங்களா? இது எனக்கு பழக்கம் இல்லாத வேலை. அவளைப் பார்த்து நான் எங்கயும் போய்ட மாட்டேன் உனக்கு எப்ப தேவைப்பட்டாலும் என்கிட்ட ஹெல்ப் கேட்கலாம், வேணுனா இந்த வேலய முடிக்க உன் ஸ்டைலுல சவால் போட்டுக்கலாமா? என்றான். நந்தனா அவனை பார்த்து சிரித்துவிட்டு சவால் போட்டுட்டு யார்கிட்ட போய் உதவி கேக்குறது, அதனால உங்ககூட சேர்ந்து இந்த ப்ராஜெக்ட் முடிக்குறதுனு முடிவுபண்ணிட்டேன் என்றாள். அவனிடம் அடுத்து செய்யவேண்டியதைப் பற்றி சிறிது பேசிவிட்டு வெளிய வர எழுந்தவளைப் பார்த்து, சிரிக்காம இருக்கவங்க எல்லாம் திமிரு பிடிச்சவங்க இல்ல. வாழ்க்கை அவங்களுக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்காம விட்டு இருக்கலாம் என்றான். அந்த வார்த்தைகள் அவளைப் பலமாகத் தாக்கியது. சவாலில் ஜெயித்து இவ்வளவு பெரியப் பொறுப்பும் கிடைத்து இருக்கிறது அந்த சந்தோஷம் கொஞ்சம் கூட இல்லாம என்ன யோசிச்சுட்டு இருக்கா? என்று அவளை கவலையாகப் பார்த்தான் கதிர்.