அன்று மாலை ஒன்றன் பின் ஒன்றாக வீட்டிற்கு வந்தவர்களை குழப்பமாக பார்த்தாள் நந்தனா. ஆனால் யாரிடமும் எதுவும் கேட்காமல் தன் அறைக்கு சென்று அடைந்து கொண்டாள், யாரும் தன்னுடன் பேசப்போவதில்லை என்று தெரிந்தபின் அவளும் யாருடனும் பேச முயற்சிக்கவில்லை. அறையில் இருந்த ஜன்னல் வழியாக வெளியில் வெறித்து கொண்டிருந்தவள், தன் தந்தை தன்னை அழைக்கும் குரல் கேட்டு வெளியில் வந்ததாள். அங்கு அனைவரும் இருக்க அவளும் சதாசிவம் சொல்லப்போவதைக் கேட்கத் தயாரானாள். நந்தனா இங்க வா, என்று அழைத்து மகளை அருகில் அமர்த்திக்கொண்டவர், நீ சொன்னத நான் யோசிச்சேன் அதுல நான் ஒரு முடிவுக்கு வரணுனா நான் சொல்றத நீ செய்யனும், செய்வியா? என்ன அப்பா செய்யனும் சொல்லுங்க என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்றேன்.
நீ எங்ககிட்ட சொன்ன விஷயத்தை, அதாவது அர்ஜுனை திருமணம் செய்ய ஆசைப்படுற விஷயத்தை அர்ஜுன் கிட்ட சொல்லனும். நந்தனாவை விட சுற்றி இருந்த அனைவரும் அதிகமாக அதிர்ந்தனர். நீங்க என்ன சொல்லிட்டு இருக்கீங்க என்று இடைபுகுந்த சாவித்திரியை அமைதியாக இருக்குமாறு சொன்னவர், நந்தனாவிடம் திரும்பி என்னமா சொல்றயா என்றார். அப்பாவை யோசனையாகப் பார்த்தவண்ணம் தலையசைத்தாள் நந்தனா. அப்புறம் இன்னும் ஒரு விஷயம் நீ அவர்கிட்ட சொல்லும்போது எங்களுக்கு இந்த விஷயம் தெரியும்னு சொல்லக்கூடாது என்றார். சரி என்றவள் அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு தனது அறைக்கு சென்றாள். ஹாலில் அனைவரும் சதாசிவம் ஏதாவது சொல்வார் என்று எதிர் பார்க்க அவர் எதுவும் சொல்லாமல் எழுந்து சென்றுவிட்டார்.
அந்த வாரம் முழுவதும் அலுவலகம் செல்லாமல் அவளது வேலைகளை வீட்டில் இருந்தே செய்தாள் நந்தனா. பலவாறாக யோசித்து அர்ஜுனிடம் பேச ஒத்திகை பார்த்து அந்த வாரம் ஞாயிறு அவனை பார்க்க வேண்டும் என்று அர்ஜுனிடம் கேட்டாள். யாழினி பற்றியதாக இருக்கும் என்று எண்ணி அவனும் வரச் சம்மதிக்க எங்கு எப்போது பார்ப்பது என்று பேசிமுடிவுசெய்தனர். யாழினிப் பற்றி பேசத்தான் என்று நினைத்து அவன் ஒப்புக்கொண்டாலும் ஒரு வாரமாக நந்தனாவை பார்க்காமல் இருப்பதும் சேர்ந்துதான் அவனை உடனே ஒத்துக்கொள்ள வைத்தது.
அவர்கள் அந்த பூங்காவில் வந்தமர்ந்து அரைமணி நேரம் ஆனது, தன்னிடம் பேச வரசொல்லிவிட்டு வந்ததில் இருந்து தன்னிடம் எதுவும் பேசாமல் அமர்ந்திருப்பவளை யோசனையோடு பார்த்தான். என்ன ஆச்சு நந்தனா, எதாவது பிரச்சனையா என்றான், ஹா அதெல்லா ஒன்னும் இல்ல, அப்புறம் ஏன் இப்படி அமைதியா இருக்க என்ன பேசனுமோ பேசு என்றான்.
அவன் கேட்டதும் பார்த்த ஒத்திகை எல்லாம் மறந்து போக, எனக்கு யாழினிக்கு அம்மாவாகனும் அதுனால உங்களுக்கு மனைவியாகனும் என்று சொல்லிவிட்டாள், அவள் சொன்னதைக் கேட்ட வேகத்தில் அவளை அடிக்க கை ஓங்கிவிட்டான் அர்ஜுன். அவளது பயந்த கண்களில் சற்று நிதானத்துக்கு வந்தவன் உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு, என்ன பேசுறனு தெரிஞ்சுதான் பேசுறியா என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான். நான் தெளிவா யோசிச்சுதான் இந்த முடிவுக்கு வந்தேன், என் முடிவுல எந்த மாற்றமும் இல்லை என்றவள் அங்கு இருந்து உடனே கிளம்பிவிட்டாள். செல்லும் அவளையே பார்த்தவன் போனில் கதிரை அழைத்து அவன் இருக்கும் இடம் சொல்லி வரச் சொன்னான்.
அங்கிருந்து வேகமாக வந்தவள் சிறிது தூரம் வந்தபின் தான் நடையின் வேகத்தை குறைத்தாள், அர்ஜுனிடம் தான் நேசிப்பதை சொல்லக்கூடாது என்று முன்னரே முடிவு செய்திருந்தாள், தனக்கு வரும் மனைவி யாழினியை சரியாகப் பார்த்துக்கொள்ள மாட்டாள் என்று அவனுக்கு இருக்கும் பயம் தான் அதற்கு காரணம். அதுபோக அவன் தன் காதலை நிராகரிப்பதை தாங்கும் சக்தி அவளுக்கு இல்லை. இப்படி எல்லாவற்றையும் யோசித்தவண்ணம் ஒரு ஆட்டோ பிடித்து வீடு போய் சேர்ந்தாள். சோர்ந்துபோய் வரும் மகளை எதுவும் கேட்காமல் அவளுக்கு காபி கலந்து குடுத்த சாவித்ரி அவளிடம் பேசவில்லை.
அர்ஜுன் சொன்ன இடத்திற்கு சென்ற கதிர், அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்தான். நந்தனா ஏன் தன் காதலை மறைத்தாள் என்று அவனுக்குப் புரியவில்லை. தான் சொன்னதைக் கேட்டு எதுவும் சொல்லாமல் நிற்கும் கதிரைப் பார்த்த அர்ஜுன், கதிர் உண்மையை சொல்லு உனக்கு இந்த விஷயம் தெரியுமா? தெரியும் சார், அதனாலதான் நான் அவகிட்ட கொஞ்சநாளா பேசுறதில்லை. என்ன கதிர் நீங்க அவளுக்கு சொல்லி புரியவெக்காம அவகூட பேசுறதில்லைனு சொல்றீங்க, சார் அதை சொல்ல போய் சண்டைவந்துதான் பேசாம இருக்கேன் அவ நான் சொல்லியெல்லாம் கேக்குறதா இல்லை, இதுவிசயம் என்கிட்ட பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என்று சொன்ன கதிர் அங்கிருந்து சென்றுவிட்டான். என்ன செய்வது என்று புரியாமல் அங்கேயே அமர்ந்துவிட்டான் அர்ஜுன்.
அங்கு நடந்ததை சதாசிவமிடம் தெரிவித்தான் கதிர், பின்ன அவர் சொல்லித்தந்த படிதான் கதிர் அர்ஜுனிடம் பேசினான்.
சிறிதுநேரம் அங்கயே அமர்ந்து யோசித்த அர்ஜுனிற்கு நந்தனா தன் வாழ்க்கையில் வந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. அவளைப் பார்த்த முதல் நாளில் இருந்து தனக்குள் மாற்றங்கள் நிகழ்வதை அவனும் அறிந்துதான் இருந்தான். நந்தனா பற்றிய யோசனையில் இருந்தவன் வேகமாக தன் தலையை குலுக்கி அந்த எண்ணத்தை விரட்டினான். தான் நந்தனாவிற்கு தகுதியானவன் இல்லை, தனது சுயநலத்திற்காக நந்தனா வாழ்க்கையைக் கெடுத்துவிடக் கூடாது என்று முடிவு செய்தான். பலவாறாக யோசித்து என்ன செய்வது என்று ஒரு முடிவுக்கு வந்தான்.
அன்று வீட்டிற்கு வந்த கதிர் நந்தனா எங்கே என்று சந்தியாவிடம் கேட்க, நீதான் அவ கூட பேசமாட்டியே இப்ப என்ன அவளை கேக்குற, என்று சந்தியா கேட்டாள். ஆமா நான் மட்டுந்தான் அவகிட்ட பேசுறது இல்லை, நீங்கயெல்லாம் டெய்லி அவளை கொஞ்சுகிட்டுதான் இருக்கீங்க என்று பொரிந்தான். அவனிடம் மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் நந்தனா மாடியில் இருக்கிறாள் என்று சொல்லி அனுப்பினாள் சந்தியா. வேகமாக மாடிக்கு சென்றவன் உன் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்க என்றான், அவனைத் திரும்பி பார்த்த நந்தனா தற்சமயம் நைட் அம்மா என்ன டின்னர் செய்யப்போறாங்கனு யோசிச்சுட்டு இருக்கேன், என்றவளை தன்னால் முடிந்த மட்டும் முறைத்தான்.
எதுக்கு முறைக்குற நீதான் என்ன நினைக்குறன்னு கேட்ட,
என்ன வெறுப்பேத்துறயா?
யாரு நான் உன்ன வெறுப்பேத்துறன்னா, ஒரு மாசமா என்கிட்ட பேசாம சுத்திட்டு இருக்குறது நீ, என்கிட்ட வந்து வெறுப்பேத்துறனான்னு கேக்குற என்றாள் நந்தனா. மச்சான் பேசாம இருந்ததுக்கு சாரி, உங்கிட்ட பேசி நீ அப்பா கிட்ட கேட்டமாதிரி என்கிட்ட கேட்டிருந்தா என்னால முடியாது எனக்கு பிடிக்கலைனு சொல்ல முடியாது அதான் பேசாம இருந்தேன், நீ ஆசைப்பட்டது நடக்கனும் ஆனா அது எல்லார் சம்மதத்தோட சந்தோசமா நடக்கனுன்னு நினைச்சேன் என்றவனை பார்த்தவள்,
தோஸ்த் இப்ப எல்லாரு சம்மதம்னு சொல்லி நீ மட்டும் வேண்டான்னு சொன்னா நான் அதை செய்ய மாட்டேன், கண்டிப்பா வருத்தம் இருக்கு அழுவ, சாப்பிடாம இருப்ப அதான் பார்த்துக்க நீங்கெல்லாம் இருப்பீங்களே அப்புறம் என்ன என்றவளை பார்த்தவன், சரிதான் நான் வேண்டான்னு சொன்னா நீ செய்யமாட்டனு எனக்கு தெரியும், அதேசமயம் என்னால உனக்கு வேற ஒருத்தரோட கல்யாணத்தை நடத்த முடியாதுனும் எனக்கு தெரியும்.
இது வெறும் அர்ஜுன் சம்மந்தப்பட்ட விஷயமா இருந்திருந்தா கண்டிப்பா நான் உனக்கு சப்போர்ட் பண்ணியிருக்க மாட்டேன், இதுல யாழினி இருக்கா நாளைக்கு அவளுக்கு எதுவும் தப்பா நடந்துட்டா அந்த குற்றவுணர்ச்சி நம்ப யாரையும் நிம்மதிய வாழ விடாது, அதனாலதான் உன்ன நான் தடுக்க நினைக்கல. ஹ்ம்ம் ஆமா எதுக்கு கோவமா வந்து உன்மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கனு கேட்ட என்றாள் நந்தனா. அர்ஜூன நீ நேசிக்குறத எதுக்கு அவர்கிட்ட மறைச்ச, உனக்கு எப்படி தெரியும் என்று ஆச்சரியமாகக் கேட்டவளிடம், அர்ஜுன் தன்னை அழைத்து பேசியதைச் சொன்னான்.
தோஸ்த் தனக்கு மனைவியா வர்ரவ கண்டிப்பா யாழினிய நல்லா பாத்துக்க மாட்டான்னு அர்ஜுன் நினைக்குறாரு, அவர்கிட்ட போய் நான் இந்த விஷயத்தைச் சொன்னா அதுக்காகத்தான் யாழினி கூட பழகி இருக்கனு கூட யோசிக்கத் தோணும் அதனாலதான் சொல்லலை. அதுமட்டுதான் காரணமா என்று கேட்டான் கதிர். அவனை நிமிர்ந்துப் பார்த்தவள் அர்ஜுன் என்ன நிராகரிக்குறத தாங்குற சக்தி எனக்கு கிடையாது என்று சொன்னவள் மனதின் வலிபோகத் தோழன் மீது தலைசாய்த்துக் கொண்டாள். எப்படியாவது இந்த திருமணம் நடக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டான் கதிர்.
இருதினங்களுக்குப் பிறகு நந்தனாவும், கதிரும் அவள் அறையில் அமர்ந்து அலுவலக விஷயமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். வெளியில் எதோப் பேச்சுக் குரல் கேட்கப் பழகியக் குரலாக இருக்கிறது என்று எண்ணி வெளியில் வந்த நந்தனா கண்டிப்பாக அங்கு அர்ஜுனை எதிர்பார்க்கவில்லை. அவள் அதிர்ந்து நிற்க அவள்புறம் திரும்பாமல் சதாசிவத்திடம் பேசத் தொடங்கினான் அர்ஜுன்.
அவன் வந்த சிறிதுநேரத்தில் அங்கு வந்த விக்ரம், சாவித்ரி, சந்தியா அனைவரும் அவனிடம் யாழினி பற்றி விசாரித்தனர். நந்தனாவைத் திருமணம் செய்ய சம்மதம் என்று சொல்லத்தான் வந்திருக்கிறான் என்று சாவித்ரி உறுதியாக நம்பினார். விக்ரமால் எதையும் யூகிக்கமுடியவில்லை. கதிரிடம் அர்ஜுன் பேசியது சதாசிவம் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவரவர் ஒரு எண்ணத்தில் இருக்க பேசத் தொடங்கினான் அர்ஜுன்.
சார், உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச வந்திருக்கேன். இதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கனு எனக்குத் தெரியல, ஆனா உங்கள தவிர வேற யாராலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு தர முடியாது. உங்க பொண்ணு நந்தனா என்ன கல்யாணம் பண்ணிக்க விருப்பப்படுறத என்கிட்ட சொன்னா, சரியா சொல்லணுனா யாழினிக்கு அம்மாவாகணுன்ணு சொன்னா. நானு ஒரு பொண்ணுக்கு அப்பா நாளைக்கு என்னோட பொண்ணு இப்படி ஒருத்தர கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டா எனக்கு எப்படி இருக்கும், என் பொண்ணுமேல எவ்வளவு பாசம் இருந்தாலும் எப்படி ஒருத்தருக்கு இரண்டாவது மனைவியா ஒரு குழந்தைக்கு அம்மாவா என் பொண்ண அனுப்பி வைப்பேன்.
நான் நினைக்குற மாதிரிதானே நீங்களும் நினைப்பீங்க, அதை தயவுசெஞ்சு உங்க பொண்ணுக்கு புரிய வைங்க. எனக்கு நந்தனா மேல நிறைய மரியாத இருக்கு, அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணுன்ணு ஆசைப்படுறேன், அதுகண்டிப்பா என்னால அவளுக்கு கிடைக்காது. நான் நந்தனாக்கு எனக்கு தெரிஞ்ச கம்பெனில வேலைக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன் இனி அவ அங்க வேலை செய்யட்டும். யாழினி இனி டான்ஸ் கிளாஸ், டியூஷன் எதுக்கும் வர மாட்டா. நந்தனாக்கு கல்யாணம் முடிவு பண்ணிட்டு சொல்லுங்க நானும் யாழினியும் கண்டிப்பா வருவோம் என்றான்.
அர்ஜுன் பேசியதை கேட்டு சாவித்ரி, விக்ரம், சந்தியா மூவரும் திகைத்து நின்றனர். நந்தனா மாதிரி பொண்ணு தானா வந்து கல்யாணம் பண்ணிக்குறண்ணு சொல்லி ஒருத்தன் வேண்டாண்ணு சொல்லுவானா என்று எண்ணினாள் சந்தியா, அப்பா ஏன் அர்ஜுனிடம் நந்தனாவை சொல்ல சொன்னார் என்று விக்ரமிற்கு புரிந்தது. இவர வேண்டானு சொல்லவேண்டிய நிலையை எண்ணி வருந்தினார் சாவித்ரி. இப்படி அனைவரும் தங்கள் சிந்தனையில் இருக்க, நந்தனாவின் குரல் அவர்களை நினைவுக்கு மீட்டுவந்தது.
உங்களுக்கு என்ன பாக்க பிடிக்கலைன்னா பாக்க வேண்டாம் எதுக்கு யாழினிய என்கிட்ட இருந்து பிரிக்க பாக்குறீங்க, என்னோட வாழ்க்கையை பற்றி முடிவெடுக்க நீங்க யாரு? யாரை கேட்டு எனக்கு வேற இடத்துல வேலை ஏற்பாடு செஞ்சீங்க, நான் நாளைல இருந்து எப்பவும் போல ஆபீஸ்க்கு வருவேன், யாழினி எப்பவும் போல கிளாஸ்க்கு வரணும், இல்ல அவள தேடி நான் வருவேன் என்று உரைத்தவள் அவளது அறைக்குள் சென்று மறைந்தாள்.
அர்ஜுன் சதாசிவத்திடம் திரும்பிப், பாருங்க சார் எப்படி பேசிட்டு போறான்னு யாரு சொல்றதும் அவளுக்கு புரிய மாட்டேங்குது நீங்களாவது சொல்லுங்க அவளுக்கு புரியவைங்க, என்ன கல்யாணம் பண்ணிகிட்ட இந்த சமூகம் அவளை இரண்டாவது மனைவினு அடையாளப்படுத்துனு சொல்லுங்க, சமூகம் பேசுறது முக்கியமில்லை நீங்க அவள எப்படி பாத்துக்குறீங்கன்னுதான் முக்கியம் என்று சொன்ன விக்ரமை அர்ஜுன் அதிர்ச்சியுடன் பார்த்தான்.