Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நந்தவனம் - 4

அலுவலகத்தில் விளம்பரப் படப்பிடிப்பிற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கின, விளம்பரத்திற்கானப் புதுமுக நடிகைகளுக்கானத் தேர்வில் இருந்தாள் நந்தனா. இதற்கிடையில் அவளுக்கும் யாழினிக்குமான உறவு பலப்பட்டது. வாரத்தில் இரண்டு நாட்கள் கிளாஸ்ஸிற்கு வந்துகொண்டிருந்த யாழினி நந்தனாவை பார்ப்பதற்காகவே மூன்று நாட்கள் வரத்தொடங்கினாள், அவள் மட்டும் இன்றி அரவிந்தும் அவளுடன் மூன்று நாளும் வந்தான். அந்த வாரம் முழுக்க நடப்பதை நந்தனாவிடம் ஒப்பித்துவிட்டுத்தான் வீட்டிற்கு போவாள். நந்தனாவும் யாழினியை மிகவும் எதிர்பார்க்கத் தொடங்கினாள்.

இரண்டு வார அலசலுக்குப் பின் நந்தனா  மூன்று புதுமுகங்களைத் தேர்ந்தெடுத்து இருந்தாள், அதில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்யச்சொல்லி அர்ஜுனிடம் கொடுத்தாள். முதல் இரண்டு பெண்களைப் பற்றிக் கூறி அவர்களின் குறும்படக் காணொளியை அவனுக்குக் காட்டினாள். மூன்றாவது பெண்ணின்  படத்தைப் பார்த்த அர்ஜுன் தீ சுட்டதுபோல் எழுந்து நின்றான். அவனை விசித்திரமாகப் பார்த்தாள் நந்தனா. இந்த பெண் வேண்டாம் அந்த இரண்டு பெண்களில் ஒருவரை முடிவு செய் என்றான். அவள் காரணம் கேட்டாள், அந்த பெண்ணைப் பற்றி எதுவும் கேட்காமல் எப்படி முடிவு செய்யலாம் என்று அவனிடம் சண்டைக்கு நின்றாள். இவள என்ன சொல்லிச் சமாளிப்பது என்று தெரியாமல் எனக்கு தெரிஞ்ச பொண்ணு, அவங்க வீட்டில் இதெல்லாம்  பிடிக்காது என்றவனை, அனல் பறக்க பார்த்தாள் நந்தனா.

ரொம்போ நல்லா இருக்கு பாஸ், 8உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணு, அவங்களுக்கு இந்த பீல்ட்ல ஆர்வம் இருக்குன்னா அவங்க வீட்டுல இருக்கவங்களுக்கு எடுத்து சொல்லி புரியவைக்காம, இப்படி அவங்கள ரிஜெக்ட் பண்ண சொல்ரீங்க, ஒ, உங்க பேமிலி பொண்ணுங்களாம்  நடிக்க கூடாது வேற பேமிலி பொண்ணுங்கனா எப்படி போனா உங்களுக்கு என்ன நீங்க இப்படி ஒரு ஆணாதிக்கவாதியா இருப்பீங்கனு நான்  நினைக்கவே இல்ல. என்று பேசிக்கொண்டே போனவளை, பார்த்து ஸ்டாப் இட் அண்ட் கெட் லாஸ்ட் என்று கோபத்தின் உச்சியில் கத்தினான், அவனது கோபத்தைக்கண்டு மிரண்டு போனவள் உடனடியாக அவன் அறையை விட்டு வெளியேறினாள்.

வெளியில் வந்தவள், நேராக தன் இடத்திற்கு சென்று அமர்ந்து, விட்ட இடத்தில் இருந்து தொடங்கி திட்டிக்கொண்டு இருந்தாள்.

அங்கு வந்த ஜெனிஃபர் ஏய் பட்டாசு அர்ஜுன் சார் பாக்க போறேன்னு சொல்லிட்டு இங்க உக்காந்து என்ன பண்ணிட்டு இருக்க? பேசாம போயிடு  நானே செம கடுப்புல இருக்கேன், பெரிய சாரு. என்னடி ஆச்சு கொஞ்ச நாளா அர்ஜுன் சார் கூட முஸ்தபா முஸ்தபானு பாடிட்டு இருந்த திரும்ப  டாம் அண்ட் ஜெர்ரி சண்டைய ஆரம்பிச்சாச்சா என்றாள்? ஆமா எனக்கு வேற வேலை  இல்ல பாரு உங்க சார் கூட சண்டை போடத்தான் எனக்கு சம்பளம் குடுக்குறாங்க, சரிடி என்ன பிரச்சனைன்னு சொல்லு. அர்ஜுனை பற்றி எதும் கூற விரும்பாமல், நடிகை செலக்ட் பண்றதுல பிரச்சனை என்று மட்டும் சொன்னாள். அவ்ளோதான மூணு பேர் பெயரையும் சீட் எழுதிப்போட்டு எடுக்கலாம் யாரு  பெயர் வருதோ அவங்க ஹீரோயின் எப்படி ஐடியா? செம ஐடியா!!! வா இப்பவே போய் அத செய்வோம் என்றாள் நந்தனா. ஏண்டி நா ஏதோ உன்கிட்ட காமெடி பண்ண சொன்னா நீ என்ன அதையே செய்யலாங்குற என்று அலறினாள். காமெடியோ சீரியஸ்யோ எனக்கு ஐடியா பிடிச்சு இருக்கு வா  போலாம் என்றாள். சரி அதுக்கு எங்க போறது இங்கயே செய், இல்ல இல்ல பாஸ் முன்னாடியே செஞ்சாதான் நாளைக்கு எந்த பிரச்சனையும் வராது. என்னது அவர்கிட்டயா ஆள விடு என்று அலறின ஜெனிஃபரை விடாமல் கையோடு இழுத்துக்கொண்டு அர்ஜுன் ரூமிற்க்கு சென்றாள் நந்தனா. கர்த்தரே நீ தான் என்ன காப்பாத்தணும் என்று வேண்டிக்கொண்டே சென்றாள் ஜெனிஃபர்.

அங்கு அர்ஜுன், என்னதான் கோவமாயிருந்தாலும் ஒரு பொண்ணுகிட்ட இப்படி கத்தியிருக்க கூடாது.  அவளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தவன் முன் வந்து நின்றாள் நந்தனா. திரும்ப சண்டைபோட வந்திருக்காளோ என்று  அவன் நினைக்க , பாஸ் உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் எல்லாருக்கு ஒத்துப்போறமாதிரி ஒரு ஐடியாவோட வந்திருக்கோம். வந்திருக்கோம்னா?  அவள் பின்னாள் நின்று கொண்டு இருந்த ஜெனிஃபரை  இழுத்து முன்னாடி நிறுத்தினாள் நந்தனா,  ஐடியாவை சொல்ல இவள என்ன தான் செய்றது என்று பார்த்தான் அர்ஜுன். வெளியில் எதும் காட்டிக்காம இந்த ஐடியாவ குடுத்தது யாரு? நந்தனா தன் தோழியைக் காட்ட அவளோ அய்யோ சார் நான்  எதோ காமெடிக்கு சொன்னா பட்டாசு அத சீரியஸா எடுத்துக்கிட்டா. வேண்டான்னு சொல்லச்  சொல்ல நந்தனா பிடிவாதம் அதிகமாகும் என்று நினைத்தவன்,  அவள் யோசனைக்கு சரி என்றான். ஜெனிஃபர் அவனை நீங்களுமா என்பதுபோல பார்த்தாள், நந்தனா பெயர்களை எழுதி போட்டு அவனையே எடுக்க சொன்னாள், எடுத்துப்பார்த்தவன் விதி வலியது என்று நினைத்து கொண்டான். அதில் அவன் வேண்டாம் என்று சொன்ன துர்காவின் பெயர் இருந்தது. அதை நந்தனாவிடம் கொடுத்தவன் நீ சொன்னதுக்கு நான் ஒத்துக்கிட்டேன் இப்ப நான் சொல்றத நீ கேளு. நந்தனாவின் புருவங்கள் உயர்ந்தன. இந்த ஷூட்டிங் முடிக்குற வரைக்கும் என்ன எதுக்கு நீ கூப்பிடக்கூடாது, அதாவது உனக்கு என்னோட எந்த ஹெல்பும் கிடைக்காது என்றான். சரி ஓகே என்று சொல்லிச் சென்றவளை யோசனையோடு பார்த்தான், இப்படி அமைதியா சரின்னு ஒத்துக்குற  டைப்  இல்லையே இவ என்ன செய்யப்போறாளோ என்று நினைத்தான்.

அன்று வழக்கம் போல நாட்டியபள்ளிக்கு சென்ற நந்தனா, மரத்தடியில் தனியாக அமர்ந்திருக்கும் யாழினியைக் கண்டு அவளிடம் சென்றாள். அங்கு யாழினி அழுதுவிடுவதை போல உக்காந்திருந்தாள். யாழ் குட்டி என்ன  ஆச்சு ஏன் இப்படி டல்லா உக்காந்து இருக்க, ஸ்கூல்ல மிஸ் திட்டிட்டாங்க கிளாஸ்ல  எல்லா  சிரிச்சாங்க என்று அழ தொடங்கினாள், அவளை சமாதானபடுத்தி எதுக்கு திட்டினாங்க?  நா ஹோம்  ஒர்க் தப்பு தப்பா செஞ்சிருக்கனு திட்டுனாங்க. ஹோம் ஒர்க் ஏன் தப்பா  செஞ்ச, எனக்குதான் யாரும் சொல்லிகுடுக்குறது இல்லையே என்றாள் பரிதாபமாக.

நந்தனா சிறிது நேரம் யோசித்து விட்டு நான்  சொல்லிக்கொடுத்தா  ஒழுங்கா செய்வையா? சிரித்து கொண்டே வேகமாக தலையை ஆட்டினாள் யாழினி. அன்று அரவிந்த் அவளுடன்  வரவில்லை. எனவே அவனிடம் யாழினி பற்றிப் பேச அவனுடைய நம்பரை டாக்குமென்டில் இருந்து எடுத்து வைத்துக்கொண்டாள்.

கிளாஸ் முடிச்சு வீட்டுக்கு சென்றவள் அன்றைக்கு நடந்தவைகளை தன் தாயிடம் கூறி யாழினியை வீட்டிற்கு வரவைத்து பாடம் சொல்லிக்கொடுக்க போவதாகக் கூறினாள் , முன்பே யாழினி பற்றி அறிந்து இருந்த சாவித்ரியும் அதற்கு சரியென்று சொன்னார். அன்று இரவு அவர்கள் சாப்பிட அமர்ந்த போது ஷூட்டிங் லொகேஷன் பார்க்கச் சென்ற கதிர் உள்ளே  வந்தான்.  அவனைப் பார்த்த நந்தனா ஹே, தோஸ்த் போன வேலை என்ன ஆச்சு ஆல் ஓகேவா, அதெல்லாம் ஓகே தான் நீ இன்னைக்கு என்ன பண்ண ஆபீஸ்ல? வந்தது வராததுமா அவளே ஏன்டா கேள்வி கேட்டுகிட்டு இருக்க என்றாள் சந்தியா. உனக்கு தெரியாது டார்லிங் இவ என்ன கூத்து அடிச்சுயிருக்கானு நீயே கேளு. பூரியை சாப்பிட்டுக்கொண்டே நீ எதை  சொல்ற காலைல இருந்து நிறைய வேலை செஞ்சேன்  என்றவளிடம்,  ஹ்ம்ம்  ஹீரோயின் செலக்ட் பண்ண நீ பார்த்த வேலைய கேக்குறேன் என்றான். என்னடா செஞ்சா?  என்றான் விக்ரம், இவர்கள் சீட் குலுக்கி போட்டு ஹீரோயின்  செலக்ட் செய்ததை சொன்னான் கதிர், அனைவரும் சிரிக்க தொடங்கினர், ஏன்டா இவதான் சொன்னானா உங்க ஹெட் எப்படிடா ஒத்துக்கிட்டாரு என்று கேட்டாள் சந்தியா. அத அவரத்தான் கேக்கணும், ஜெனிஃபர் போன் பண்ணி எனக்கு சொன்னா என்றான் கதிர். அவர்கள் பேசுவதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லாதது போல தாயிடம் இன்னொரு பூரி வேணும்மா என்று செல்லம் கொஞ்சிக்கொண்டிருந்தாள் நந்தனா.

சாப்பிட்டுமுடித்து நந்தனா, கதிர் இருவரும் மொட்டை மாடிக்கு சென்றனர். நந்தனாவின் தாத்தா அவர்காலத்தில் வாங்கிப் போட்ட நிலத்தில், நந்தனாவின் அப்பா சுற்றி மதில் சுவர் எழுப்பி அழகாக ஒரு வீட்டைக் கட்டினார். வீட்டைச் சுற்றி பூச்செடி வைத்து அதை இன்னும் அழகாக மாற்றினார் சாவித்ரி. சிட்டியை விட்டு சற்றுத் தள்ளி இருப்பதால் அவர்கள் வாழும்பகுதி எப்பொழுதும் அமைதியாக இருக்கும். நந்தனாவிற்கும், கதிருக்கும் மாடியில் உட்கார்ந்து அரட்டை அடிக்க மிகவும் பிடிக்கும். சில சமயங்களில் குடும்பமாக உட்கார்ந்து நிலா சோறு சாப்பிடுவதும் உண்டு. நந்தனா அதை நினைத்துக் கொண்டு இருக்க கதிர் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.

அவனைப் பார்த்தவள் இப்ப எதுக்குடா என்ன இப்படி பாக்குற நான் சொன்ன பொண்ண வேண்டான்னு சொன்னாரு சரி யாருக்கும் பிரச்சன வேண்டான்னு சீட் குலுக்கி பார்த்தோம் என்றாள். உண்மைய சொல்லு எல்லாத்துலயும் அவரு வேண்டான்னு சொன்ன பொண்ணு பெயர் தானே எழுதுன என்ற கதிரைப் பார்த்து நண்பேண்டா! எப்படிடா கண்டுபிடுச்ச என்றாள். கதிர் அவளை முறைக்க சும்மா முறைக்காத எல்லாத்துலயும் ஒன்னு இல்ல ரெண்டுல தான் எழுதுன லக் எப்படி இருக்குனு பார்த்தா அது எனக்கு சாதகமா இருந்துச்சு அவ்ளோதான். 2:1 அப்படினு லக் செக் பண்ணி இருக்க என்று நக்கலாக கேட்டான். விடு தோஸ்த் அய்யனாரே ஏதுவும் சொல்லல என்றவளிடம், ஏன் மச்சான் நீ என்கிட்ட எதையாவது சொல்லாம மறைக்கிறியா? என்று கேட்டான். நீ என்ன லூசா  தோஸ், உன்கிட்ட எப்ப எதை மறைச்சுருக்கேன் என்றவளை கூர்மையாக பார்த்தவன். உன்கிட்ட மாற்றம் இருக்கு மச்சான் உக்காந்து யோசி, யோசிச்சு கண்டுபிடிச்சு என்கிட்ட சொல்லு என்று சொல்லிவிட்டு சென்று விட்டான் கதிர். நந்தனா வெகு நேரம் மாடியிலேயே நின்று கொண்டு இருந்தாள், அவளுக்கும் அவளது மாற்றம் பற்றி தெரியும் ஆனால் என்னவென்று உக்காந்து யோசிக்கப் பயமாக இருந்தது. அன்று அவள் உறங்க வெகு நேரம் ஆனது.

இரவே அரவிந்திடம் பேசவேண்டும் என்று நினைத்திருந்தவள், கதிரிடம் பேசிக்கொண்டிருந்ததில் மறந்தே போனாள். எனவே காலையில் நேரமாகவே அவனுக்கு அழைத்தாள். புது எண்ணை பார்த்தவன் யாராக இருக்கும் என்று யோசித்து கொண்டே எடுத்தான். நான் நந்தனா பேசுறன் யாழினியோட டான்ஸ் டீச்சர், அவ்வளவு அறிமுகம் தேவையில்ல நந்தனானு சொன்னாலே தெரியும் என்றான் அரவிந்த், அவன் சொன்னதுக்கு சிரித்தவள்  சம்பிரதாயமாக விசாரித்து விட்டு, தான் போன் செய்ததற்கான காரணத்தை சொன்னாள். அதைக் கேட்ட அரவிந்த் நீங்க ஏற்கனவே யாழினிக்காக நெறைய செஞ்சுட்டு இருக்கீங்க இப்ப இதுவுமா?, நான் யாழினிய டியூஷன் சேர்த்து விடுறேன் என்றான். என்ன அரவிந்த் சார் டியூஷன் எடுக்குற யாரையோ நம்புறீங்க என்ன நம்பி யாழினிய விடமாடீங்களா என்றாள். அச்சோ அப்படி எல்லா இல்ல உங்கள மேலும்  சிரமப்படுத்த வேண்டான்னு நினைச்சேன், எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல என்றான். டான்ஸ் கிளாஸ் இல்லாத நாட்களில் யாழினி நந்தனா  வீட்டிற்கு டியூஷன் வருவது என இருவரும் முடிவு செய்தனர். முதல் நாள் அரவிந்த் வந்து யாழினியை விட்டுச் சென்றான். அவனுக்கு நந்தனா வீட்டைச் சேர்ந்தவர்களை பிடித்து இருந்தது, அதை விட அவனுக்கு நந்தனாவை மிகவும் பிடித்து இருந்தது அதை சொல்ல நேரம் பார்த்து கொண்டு இருந்தான். ஆனால் நேரம் யாருக்காகவும் நிற்பதில்லை.