36. சோஃபியா
உப்புக் காத்து அவளை முத்தமிட்டுச் சென்றது. காற்றில் அவளது பின் கூந்தல் பறந்து கொண்டிருந்தது. சோஃபியா பாய்மரக் கப்பலின் மேல் தளத்தில் நின்றபடி தன் முன் நீண்டு விரிந்திருந்த நீலக் கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கப்பல் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது.
கிரேக்கர்களுக்கே உரித்தான பளிங்கு போன்ற வெள்ளைத் தோல், கையும் காலும் கழுத்தும் முழுவதும் மறைக்கப்பட்ட இறுக்கமான உடை, அதன் மீது ஒரு இறுக்கமான நீல நிற அங்கி. இடுப்பில் தோலால் செய்யப்பட்ட ஒரு கச்சையை அணிந்திருந்தாள். அந்தக் கச்சையின் ஓரத்தில் உறையில் பத்திரமாக சொருகி வைக்கப்பட்டிருந்த நீண்ட கட்டானா கத்தி இருந்தது. அந்தக் கத்தியைப் போன்ற கச்சிதமான ஒரு உடலமைப்பு. அவளது முதுகில் ஒரு தோல் பையை அணிந்திருந்தாள். அதுவும் அவளைப் போலவே பல ரகசியங்களை தன்னுள் வைத்திருந்தது.
எந்தத் திசையில் கப்பலைச் செலுத்துவது என அதன் மாலுமிகள் குழம்பிக் கொண்டிருந்தனர். இரவாக இருந்தால் நட்சத்திரங்களைக் கொண்டு திசையை அறியலாம். பகலாக இருந்தால் சூரியனைக் கொண்டு அறியலாம். ஆனால், அது இரவுமில்லாத பகலுமில்லாத ஒரு பொழுது. கரு மேகங்கள் மொத்த வானத்தையும் மூடி இருந்தது.
அந்தக் கப்பலின் தலைவர் ப்ரோடஸ் கொஞ்சம் கோபக்காரர். இது போன்ற சமயங்களில் எப்படி திசையை அறிவது? என்று அவர் ஏற்கனவே பல முறை தன்னுடைய குழுவினருக்கு பயிற்றுவித்திருந்தார். ஆனால், காற்றின் போக்கை வைத்து நிலத்தை அறிகிற நுட்பத்தை இன்னும் அவரது குழுவில் எவரும் கைக்கொள்ளவில்லை.
“அவர் விழித்திருக்கும் நேரம் முழுக்க வேலை செய்து கொண்டே இருப்பார். எப்போதாவது தான் அசந்து தூங்குவார். இப்போது, அவர் தூங்கிக் கொண்டிருக்கிறார். எப்படி அவரை எழுப்பி, எந்த திசையில் கப்பலைச் செலுத்துவது என்று யார் அவரிடம் கேட்பது?” என்று மாலுமிகள் குழம்பிக் கொண்டிருந்தனர்.
போன முறை இவ்வாறு தூக்கத்திலிருந்து எழுப்பிய ஒருவனுக்கு அவரே அவர் கையால் நூறு கசையடிகளைக் கொடுத்தார். அது தூக்கத்தை களைத்ததற்காக அல்ல. சொல்லிக் கொடுக்கும் போது கற்றுக் கொள்ளாமல் இருந்ததற்காக. ஆனால், அதற்காக கப்பலை அதே இடத்தில் நிறுத்தி வைத்துக் கொண்டிருக்க முடியாது. நாளைய விடியலில் தொண்டி துறைமுகத்தை அடைய வேண்டும். அது தவறி விட்டால் பின்னர், மொத்தக் குழுவிற்கும் தண்டனை கிடைக்கும்.
மாலுமிகள் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சோஃபியா மேல் தளத்தின் முன் பக்கத்திற்கு வந்தாள். அங்கே கண்காணிப்பு கம்பத்தின் கீழே ஒரு கூண்டில் வைக்கப்பட்டிருந்த காகத்தை கண்டாள். அது கப்பல் தலைவனின் செல்லப்பிராணி. சோஃபியா கூண்டைத் திறந்து காகத்தை எடுத்து வெளியே பறக்க விட்டாள். அது அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து முப்பது டிகிரி வலது புறம் திரும்பி பறக்கத் தொடங்கியது.
“அந்தப் பறவையைத் தொடர்ந்து
செல்லுங்கள். நிலம் வரும்.” என்று கட்டளையிடும் பாவனையில் சொன்னாள் சோஃபியா.
“யாரென்றே தெரியாத ஒரு பெண் தங்களது கப்பல் தலைவனின் செல்லப்பிராணியை பறக்கவிட்டதுமில்லாமல் என்ன திமிர் இருந்தால், இப்படி தங்களுக்கே ஆணையிடுவாள்? அவளைச் சும்மா விடுவதில்லை.” என்ற நோக்கத்தோடு மாலுமிகளில் சிலர் அவளை சிறைபிடிக்க சென்றனர்.
“அந்தப் பொண்ணு சொன்ன திசையிலேயே கப்பலைச் செலுத்துங்க.” அவர்களுக்கு பின்னால் இருந்து கப்பலின் தலைவன் ப்ரோடஸ் ஆணையிட்டார். அரைத் தூக்கத்தில் இருந்து விழித்திருந்த அவருடைய வலது கண் சிவந்து இருந்தது. அவருடைய இடது கண்ணை கருப்புத் துணியால் மூடியிருந்தார். அவரது கடலைப் பற்றிய அனுபவம் வெள்ளைத் தாடியென அவரது முகத்தில் நீண்டிருந்தது.
அவரது ஆணையைக் கேட்டதும் கல் எறியப்பட்ட தேனீக்களைப் போல அனைத்து கப்பல் பணியாளர்களும் ஆளுக்கொரு திசை நோக்கி ஓடினர்.
ப்ரோடஸ் சோஃபியாவின் அருகே வந்தார். ட்ராய் நகரில் கப்பல் புறப்படத் தொடங்கும் போதே ப்ரோடஸ் சோஃபியாவை கவனித்தார். புதிய தேசத்திற்கு பயணப்படுகிறோம் என்ற ஒரு சிறு பயமோ உற்சாகமோ இன்றி ஒரு பெரும் மலையின் பொறுமையாக கடலையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். இது போன்ற பலரை இதற்கு முன் ப்ரோடஸ் பார்த்திருக்கிறார். தான் நம்புகிற விஷயத்திற்காக தன் உயிரைக் கொடுக்கத்தயாராக இருக்கிற கொள்கை வீரர்களால் மட்டுமே இத்தகைய பொறுமையுடன் இருக்க முடியும்.
அவர் சோஃபியாவை இங்கே வா என்று சைகையில் அழைத்தபடி சென்று அருகே இருந்த ஒரு மரத் திண்டில் அமர்ந்தார். பின், “நீ யாரு?” என்று கேட்டார்.
“என் பேரு சோஃபியா. நான் ட்ராய் நகரத்துல இருந்து வரேன். நான் ஒரு நாடோடி” என்றாள்.
“என்னை மாதிரி களபதிகள் நிறையா பேரு ஏன் எங்களோட ஒரு கண்ணை எப்பவும் ஒரு கருப்பு துணியை வைச்சு மூடி வைச்சிருக்கோம் தெரியுமா?”
“தெரியும். இரவு நேரத்துல உங்க கண் இருட்டுக்கு பழகணும்னு ஒரு கண்ணை எப்பவும் மூடி வைச்சிருக்கீங்க. ராத்திரி நேரமானதும், உங்களோட வலது கண்ணை மூடிட்டு இடது கண்ணுல பாப்பீங்க” என்றாள்.
“ரொம்ப சரியா சொன்ன சோஃபியா. என்னால இருட்டுலேயும் பார்க்க முடியும். அதனால என்கிட்ட பொய் சொல்லாத” என்றார்.
சோஃபியா சில நொடிகள் அமைதியாக ப்ரோடஸ்ன் கண்களையே பார்த்தாள்.
ப்ரோடஸ் தொடர்ந்தார், “மொசபடோமியன் காகத்தை வைச்சு கடல் திசையை கண்டுபிடிப்பாங்கன்னு ஒரு நாடோடியா உனக்கு தெரிஞ்சிருக்கலாம். அது ஒன்னும் பெரிய விஷயமில்லை. ஏன்னா, காகத்தை மொசபடோமியன் அவங்களோட நாணயத்துல பொறிச்சு வைச்சுருக்காங்க. நாம இப்போ போகப்போற தமிழ் நிலத்துல, காகம் வந்தா விருந்தாளி வருவாங்கன்னு ஒரு சொலவடையே இருக்கு. ஆனா, இந்தத் திசையில போங்கன்னு உறுதியா சொல்லணும்னா அறிவு மட்டும் போதாது.
ஒருத்தன் தான் சொல்ற விஷயத்தை முழுமையா நம்பலைன்னா அவனால கட்டளையிட முடியாது. அப்படி இல்லாட்டி தன்னைத் தியாகம் பண்றதுக்கு தயரா இருக்குற ஒரு தலைவனால தான் இப்படி யாருன்னே தெரியாத மாலுமிகளுக்கு கட்டளையிட முடியும்.
நீ சாதாரண நாடோடி இல்லை. சொல்லு நீ யாரு”
சோஃபியா மெல்லத் தன் உறையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.
“என்னோட கப்பல்ல நீ என்னைக் கொன்னுட்டு தப்பிச்சுற முடியும்னு நினைக்கிறியா சோஃபியா. நீ உன்னோட கத்தியை உறையில இருந்து எடுக்கிறதுக்கு முன்னாடியே நான் உன்னைக் ரெண்டு துண்டா வெட்டி மீனுக்கு போட்டுருவேன். ஆனா, அது என்னோட நோக்கமில்லை.
எனக்குன்னு எந்த அரசியலுமில்லை. நான் எந்த ராஜாவுக்கும் விசுவாசியும் இல்லை. என்னோட அனுபவங்களை அசை போட்டுட்டு இருக்கிற ஒரு சாதாரணக் கிழவன். வித்தியாசமான பொண்ணா இருக்கியேன்னு உன்னைப் பத்தி தெரிஞ்சுக்கத் தான் கேட்டேன். உனக்கு சொல்றதுக்கு விருப்பமில்லைனா அதை விட்டுரு.” என்று சொல்லி விட்டு அவர் எழுந்தார்.
“களபதி ஒரு நிமிஷம் இருங்க. என்னாலையும் உண்மையான மனுஷங்களை அவங்களோட கண்ணைப் பார்த்து கண்டுபிடிக்க முடியும். உங்ககிட்ட நான் என்னைப் பத்தி சொல்றதுனால எனக்கோ நான் எடுத்துக்கிட்ட வேலைக்கோ எந்தவொரு பிரச்சனையும் வந்திராது.” என்று சொல்லிவிட்டு சோஃபியா தான் யார் என்பதையும் தான் எதற்காக தொண்டி நகரம் நோக்கி செல்கிறாள் என்றும் ப்ரோடஸிடம் சொன்னாள்.
அவள் சொல்வதை நிதானமாக கேட்டுவிட்டு ப்ரோடஸ் அவளது தலையில் கை வைத்து,
“பெரிய நோக்கங்கள் எல்லாமே பெரிய தியாகங்களை கேட்கக் கூடியது. இவ்ளோ பெரிய வேலையை செய்யப் போற நீ என்னோட கப்பல்ல மட்டுமில்ல எங்க வேணும்னாலும் உத்தரவு போடலாம்.” என்று சொல்லிவிட்டு புன்னகைத்தார்.
பதிலுக்கு சோஃபியாவும் புன்னகைத்தாள்.
“விடியும் போது நாம தொண்டி துறைமுகத்துல இருப்போம். அப்படின்னா, இன்னைக்கு ஒரு நாள் மட்டும்தான் நீ ஓய்வெடுக்கிற நேரம். அந்த நேரத்தை இந்தக் கிழவன் எடுத்துக்க விரும்பல. நீ போய் நல்லா தூங்கு, இனிமேல் உனக்கு அது எப்போ கிடைக்கும்னு சொல்ல முடியாது. நான் கிளம்புறேன். நானும் என் கப்பலும் இன்னும் கொஞ்சம் மாசத்துக்கு இந்த துறைமுகத்துல தான் இருப்போம். நீ உன்னோட வேலையையெல்லாம் முடிச்சுட்டு கிளம்பும் போது வாய்ப்பிருந்தா இந்தக் கிழவனை வந்து பார்த்துட்டுப் போ” என்று சொல்லிவிட்டு ப்ரோடஸ் அங்கிருந்து கிளம்பினார்.
சோஃபியா சிறிது நேரம் அங்கேயே அமர்ந்தபடி கடலைப் பார்த்துவிட்டு பின்னர் எழுந்து சென்று தனது இடத்தில் படுத்துக் கொண்டாள்.
மறுநாள் காலை வணிகர்களின் உத்தரவு சப்தமும் வேலையாட்கள் வேகவேகமாக சரக்குகளை கப்பலில் இருந்து இறக்கும் சப்தமும் கேட்டு சோஃபியா எழுந்தாள். கப்பலில் பெரும்பாலும் யாரும் இன்னும் எழவில்லை. அவள் தன் பொருட்களை எடுத்துக் கொண்டு கப்பலில் இருந்து கிளம்பினாள். கிளம்பும் முன் ப்ரோடஸைப் பார்த்து சொல்லிவிட்டுப் போகலாம் என நினைத்தாள். ஆனால், அதனைச் செய்யாமல் அவள் அங்கிருந்து கிளம்பினாள்.
அந்தப் பெரிய கப்பலில் இருந்து சரக்குகளை எடுத்துச் செல்ல வந்த சிறு படகு ஒன்றில் ஏறி அவள் துறைமுகத்திற்கு வந்தாள். சிறு படகுகளை இழுக்கிற சப்தமும் அதில் மீனவர்கள் வலைகளை வீசிக் கொண்டு அதனைக் கடலுக்குள் செலுத்துக்கிற சத்தமும், வணிகர்களுக்கிடையேயான காரசாரமான பேரங்களும், கப்பல்களை பழுது நீக்குகிற சப்தமும், கடற்கரையின் கவுச்சி வாடையும், கப்பலில் ஏற்றுவதற்கு தயாராக இருந்த வாசனைப் பொருட்களின் வாடையும் என அனைத்தும் சேர்ந்து அவளைக் கிறங்க வைத்தது.
கப்பலில் வந்த சரக்குகளை இறக்க மிக உயரமான மரக்கம்பங்களை எடை தூக்கிகளாக பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அதன் இன்னொரு முனையில் இணைக்கப்பட்ட கயிறு யானையால் இழுக்கப்பட்டிருந்தது. அந்த எடை தூக்கியை முதல் வகை நெம்புகோல் தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கி இருந்தனர். என்றோ ஒருநாள் தொண்டி வந்திறங்கிய யாரோ ஒரு கிரேக்க வியாபாரி இங்கே ஆர்க்கிமிடீஸின் வரைபடத்தை விற்று விட்டு போயிருக்கிறான்.
அந்த துறைமுகத்திற்கு அருகிலேயே எயினர் பட்டணம் என்ற இடமிருந்தது. பெரும் செல்வத்தை எடுத்து வரும் வணிகர்கள் அங்குள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து விட்டு செல்வார்கள். அவர்கள் திரும்பி வந்து அந்த செல்வத்தை எடுத்துக் கொள்ளும் வரை அவர்களது செல்வம் பத்திரமாக அங்கு இருக்கும். அந்த சேவைக்கு பணம் கொடுத்து விடுவார்கள்.
அவள் துறைமுகத்தை விட்டு வெளியே வந்தாள். உள்ளே பார்த்த அத்தனை செல்வக்குவியல்களுக்கும் தானியங்களுக்கும் அது சார்ந்த ஒரு பெரும் வணிகத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் வெளியே ஒரு ஏழ்மையால் பீடிக்கப்பட்ட ஒரு உலகம். பசி அங்கு ஒரு நதி பேய் போல எங்கும் நிறைந்திருந்தது.
“அம்மா தாயே பசி… பசி…” என அங்கு பசி கூத்தாடிக்கொண்டிருந்தது. சோஃபியா அந்தக் குரல்களை கேட்டாள். இந்த நகரில் உள்ள அனைவரது பசியையும் தீர்க்க கூடிய தானியம் துறைமுகத்தினுள் இருக்கிறது. இந்த நகரில் இருக்கிற அத்தனை மக்களின் வறுமையையும் துடைத்தெறிகிற அளவிற்கு எயினர் பட்டினத்தில் செல்வம் தூங்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால், இங்கே யாராலும் கண்டு கொள்ளப் படாத அல்லற் படுகிற இந்த மக்களின் கண்ணீர் தான் ஒருநாள் இந்த நகரத்தில் இருப்போரின் செல்வத்தையெல்லாம் அழிக்கப் போகிறது, என்று நினைத்துக் கொண்டாள்.
பிரதான சாலையில் இருந்து சற்று விலகி, ஒரு ஒதுக்குப் புறமான மரத்திற்கருகே சென்றாள். யாரும் தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, தனது வலது கையை வட்டமாக சுழற்றி தனது தலைக்கு மேலே கொண்டு வந்தாள். பின்னர் தனது இடது காலை ஒரு அடி முன்னகர்த்தி, இரண்டு பாதங்களையும் ‘வீ’ வடிவில் வைத்துக் கொண்டாள். பின்னர் தனது இடது கையை தூக்கி தனது முகத்துக்கருகே கொண்டு வந்து, தனது இரு உள்ளங்கைகளையும் கடலை நோக்கி நீட்டினாள்.
கடலின் தூரத்தில் ஒரு சூறாவளி கிளம்பியது. அந்தச் சூறாவளி மெல்ல மெல்ல பெரிதானது. அது பெரிதாகும் தோறும் சோஃபியாவின் கண்கள் ஒளிரத் தொடங்கின. மெல்ல மெல்ல அந்தச் சூறாவளி பெரிதாகி நடுக்கடலில் பேய் போல ஆடத் தொடங்கியது. சோஃபியாவின் கண்களும் உள்ளங் கைகளும் வெண்மை நிறத்தில் பிரகாசமாக ஒளிரத் தொடங்கின. சோஃபியா அந்த வெள்ளை ஒளியில் வெடித்துச் சிதறி விடுவாள் என்பது போல இருந்தது.
அப்போது வானில் மீன் மழை பொழியத் தொடங்கியது. அங்கே தெருவில் பசியிலிருந்த அனைவரும் ஓடிச்சென்று அந்த மீன்களை எடுத்துக் கொண்டனர். அவர்களது பசியில் மழையாய் பெய்த அத்தனை மீன்களும் மறைந்து கொண்டிருந்தன. ஆனாலும், தொடர்ந்து அங்கே மீன்கள் கொட்டிக் கொண்டிருந்தன. சோஃபியாவின் கைகளிலும் கண்களிலும் ஒளிர்ந்த வெள்ளை ஒளி மறைந்தது. அவள் தனது கைகளை இறக்கிக் கொண்டாள்.
தெருவில் பெய்து கிடந்த மீன்களை எடுத்துக் கொண்ட மக்கள், பசித்த போது இப்படி மீன்களையே மழையாக பெய்ய வைத்ததற்காக கரங்களை உயர்த்தி வானை நோக்கி இந்திரனுக்கு நன்றி சொன்னார்கள்.
இதைப் பார்த்த சோஃபியா ஒரு சிறு புன்னகையுடன் அங்கிருந்து கடந்து சென்றாள்.