Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

யாயும் யாயும் - 35

35. யாராகினும் கொல்வேன்

அன்று மாயாவுடைய பிறந்தநாள். நிச்சயமாக இன்று மோகன் மாயாவிடம் ப்ரப்போஸ் செய்து விடுவான். கண்டிப்பாக எதாவது நடக்குமென டெஸ்லா ஆவலோடு எதிர்பார்த்தான்.

‘இன்னைக்கு ஏதாவது நடந்துருமோ’ என்று மகேந்திரன் பயந்து கொண்டிருந்தான். ஏற்கனவே நாடகத்திற்கான பாத்திரங்கள், திட்டங்கள் என அனைத்தும் முடிவாகி ஒத்திகை போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மோகன் ஏதாவது மாயாவிடம் சொல்லப் போய், மாயா கோபித்துக் கொண்டு, நாடகத்தை விட்டு வெளியேறி விட்டால், பின்னர் எப்படி நாடகத்தை அரங்கேற்றுவது என மகேந்திரன் பயந்து கொண்டிருந்தான்.

எப்போதுமே ஒருவனது ஒரு தலைக் காதலைப் பற்றிய விஷயங்களைப் பற்றி அறிவதில் அவனை விட அவனுடைய நண்பர்களுக்கே ஆர்வம் இருக்கும். நண்பர்கள் இல்லாத போது க்ரஷ் என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லை. ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது போல அன்று எதுவும் நடக்க வில்லை.

இரவில் பதவியேற்பு நிகழ்வில் நடந்த சம்பவத்திற்கு பிறகு மாயா மிகுந்த உடல் வலியில் பகல் முழுக்க தனது அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

மோகனும் அன்று காலை வழக்கம் போலவே கல்லூரிக்கு வந்திருந்தாலும், இந்திர சேனைக்கு செல்ல வேண்டி இருந்ததால், யாருக்கும் தெரியாமல் கல்லூரி நூலகத்திலேயே பதுங்கி இருந்தான். ஏனென்றால், அங்கு தான் அவனைத் தேடி யாரும் வர மாட்டார்கள் என்பது அவனுக்குத் தெரியும். மிகச் சரியாக பத்து மணிக்கு அவனது கல்லூரி கழிவறைக்கு சென்ற போது அங்கே அவனுக்கென இந்திர சேனையின் லிஃப்ட் காத்துக் கொண்டிருந்தது. மோகன் அந்த லிஃப்ட்டில் ஏறியதும் அது இந்திர சேனையின் தலைமையிடத்தை நோக்கிச் சென்றது.

அன்றைய ரிகர்சலுக்கு மாயாவும் மோகனும் வராததை வைத்து புள்ளிகளை இணைத்து அவர்கள் லவ் ஓகே ஆகி அவுட்டிங் சென்று விட்டார்கள் என டெஸ்லா நினைத்தான்.

ஆனால், மகேந்திரனுக்கு அது டென்ஷனாக இருந்தது. நேற்று மோகன் வரவில்லை. ஆனால், அது அவனுக்கு பிரச்சனை இல்லை. மோகனுக்கென வசனங்கள் இல்லை. மூன்று சூனியக்காரிகளில் அவனும் ஒருவன் அவ்வளவு தான். சும்மா அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தால் போதுமானது. ஆனால், மாயா விஷயத்தில் அப்படி இல்லை. அவள் தான் லேடி மேக்பத். முக்கியமான பாத்திரம். இப்படி ரிகர்சலுக்கு வராமல் இருந்தால், இவர்களை வைத்துக் கொண்டு எப்படி நாடகம் போடுவது என அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.

*
ஹரீஷ் காணாமல் போன கேஸை திருச்செந்தாழையிடம் ஒப்படைத்து இன்றோடு மூன்று நாட்கள் ஆகிறது. ஆனால், இன்று வரை ஹரீஷைப் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை. ஒருவேளை தன்னுடைய வேலையை திருச்செந்தாழை மறந்து விட்டானோ? என்று விஜயேந்திரப் பிரசாத் நினைத்தார். அவர் மீண்டுமொருமுறை திருச்செந்தாழையை கைப்பேசியில் அழைத்தார்.

*
தனது ஆராய்ச்சியை தொடர பேகனுக்கு நீல நாகத்தின் சட்டை மலை மலையாக தேவைப்படுகிறது அதனை எப்படி எடுப்பது என்று அவன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், தொண்டி துறைமுகத்தில் கிரேக்கர்களின் கப்பல் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து சோஃபியா என்ற பெண் இறங்கி வந்தாள்.

*
சொல்லப்படாத ஒரு கதையென ஒரு பெரும் சாகச வாழ்வை தன்னகத்தே மூட்டை கட்டி வைத்தபடி மோகனுடைய தந்தையின் கடிதங்கள் அமைதியாக மோகனது அறையில் இருந்தன.

*
மோகன் இந்திர சேனையின் தலைமையிடத்திற்கு சென்றான். அங்கே திருச்செந்தாழை விஜயேந்திரப் பிரசாத்திடம் இருந்து வந்த அழைப்பை நிராகரித்து விட்டு மோகனை வரவேற்றான். இம்முறை லிஃப்ட் பயணத்தில் மோகனுக்கு வாந்தி வரவில்லை. அந்த லிஃப்டின் வேகத்தை அவன் கொஞ்சம் பழகி இருந்தான்.

மோகன் சொன்னான், “எனக்கு என்னோட அப்பா எப்படி இறந்தார்னு கண்டுபிடிக்கனும்.” என்றான்.

“அதான் நாங்களே அதை ஏற்கனவே கண்டுபிடிச்சிட்டுடோமே. நான் தான் அதை இன்வெஸ்டிகேட் பண்ணுனேன். என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்றான் திருச்செந்தாழை.

“நம்பிக்கை இருக்கு சார். ஆனா, நானும் ஒரு முறை விசாரிச்சா, ஏதாவது கிடைக்கும்னு நினைக்கிறேன்.”

“சரி, அதுக்கு நாங்க என்ன செய்யணும்னு நீ நினைக்கிற?”

“என்னை இந்திரசேனையில சேர்த்துக்கனும்”

“மோகன், இங்க நினைச்சவுடனே ஒருத்தர சேர்த்துக்கவோ இல்லை வெளிய அனுப்பவோ முடியாது. இதுவொரு ஆர்மி இது ஒரு சண்டைக்கு தயாராகிட்டு இருக்குது. உன்னைப் படையில சேர்த்துக்கிறது ரொம்பக் கஷ்டம்.

நீ, எங்களோட படையில சேரணும். உன்னை உன் அப்பா மாதிரியே ஒரு நல்ல கமேண்டரா மாத்திப் பாக்கணும்னு எங்களுக்கும் ஆசை தான். ஆனா, இந்த மாதிரி உன்னோட தனிப்பட்ட காரணத்துக்காக உன்னைப் படையில சேர்த்துக்க முடியாது. நீ இந்திரசேனையில சேர்ந்தா தேவலோகத்துல இருக்குற மக்களை நீ உன்னோட மக்களா நினைக்கனும். அவங்களோட பசியைத் தீர்க்க நீ உன்னோட உயிரை விட தயாரா இருக்கணும். உன்னோட தனிப்பட்ட காரணத்தையெல்லாம் தூக்கி ஓரமா வைச்சுட்டு, இந்திரசேனையோட பொது நோக்கத்துக்கு உடன்பட்டு நடக்கணும். இதெல்லாம் முடியும்னா சொல்லு, உன்னைப் படையில சேர்த்துக்கிறத பத்தி யோசிக்கலாம்.” என்றான் திருச்செந்தாழை.

தனது தந்தை இந்திரசேனையில் தான் எடுத்துக் கொண்ட வேலையின் விளைவாகத்தான், இந்திரசேனையிலிருந்து வெளியேறிய பிறகும் இறந்து போனார். ஆனால், இப்போதைக்கு இந்த விஷயத்தை திருச்செந்தாழையிடம் சொல்ல மோகன் விரும்பவில்லை. அதே நேரத்தில் தான் இந்திரசேனையின் உறுப்பினனாக இருந்தால் மட்டுமே தனது தாய் தந்தையின் மரணத்திற்கு பின் உள்ள மர்மங்களை விலக்க முடியும் என்று அவனுக்குத் தோன்றியது. அதனால், திருச்செந்தாழை சொன்ன நிபந்தனைகளுக்கெல்லாம் சரி என்று சொல்லி விட்டு மோகன் இந்திரசேனையில் இணையத் தயாரானான்.

“சரி, சார் நான் இதுக்கு ஒத்துக்குறேன். நான் இந்திரசேனையில சேர்ந்துக்கிறேன்” என்றான் மோகன்.

“படையில சேரணும்னா, அதுக்கு ஒரு சில தேர்வுகள் இருக்கு. அதுல நீ தேறியாகணும். அந்தத் தேர்வுகள் உனக்கு சிமுலேஷன்ல நடக்கும். அது முடிஞ்சதும் நீயும் எங்கள்ல ஒருத்தன்.

நீ இந்திரசேனையில சேரும் போது, இன்னொரு விஷயத்துக்கும் தயாரா இருக்கணும். எடுத்துக்கிட்ட கடமைக்காக உயிரைக் கொடுக்குறது மட்டுமில்லை ஜீயூஸ் படையினரோட உயிரை எடுக்கவும் நீ தயங்கக் கூடாது. சரியா?” என்று கேட்டான் திருச்செந்தாழை.

உறுதியான குரலில் மோகன் சொன்னான். “நம்மளோட எதிரிகள் யாரா இருந்தாலும், எத்தனைப் பேரா இருந்தாலும். அவங்கள அழிக்க நான் கொஞ்சம் கூட தயங்கமாட்டேன்.”

*
மாயா தன் முன் மண்டியிட்டு நிற்க வைக்கப்பட்டிருந்த இரு இனத் தலைவர்களையும் பார்த்தாள். அவளது வாளின் நுனி எருமையாரின் நெஞ்சின் மீதிருந்தது. இதற்கு முன் நிகழ்த்தப்பட்ட பெரும் சண்டையின் விளைவாக அவருக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. ஒரே ஒரு அழுத்தம் போதும் அவரது இதயத்தைக் கிழித்து எரிந்து விட முடியும்.

மாயா அந்த வாளை எடுத்து எருமையாரின் இரு கொம்புகளுக்கு இடையே கிடைமட்டமாக வைத்து, 

“இன்று முதல் எருமையர் இனத்தலைவரான உங்களை என்னுடைய அரசியல் ஆலோசகராக நியமிக்கிறேன்” என்றாள்.

எருமையார் உட்பட அனைவருக்கும் அவள் என்ன செய்தாள் என்று புரியவில்லை. மாயா புன்னகைத்தபடி குதிரையாரின் அருகே சென்றாள். வியப்போடு விழித்துக் கொண்டிருந்த அவரது தலைமீது வாளை வைத்து,

“இன்று முதல் குதிரையர் இனத் தலைவரான உங்களை என்னுடைய மெய்க்காப்பாளராக நியமிக்கிறேன்.” என்றாள்.

எதற்காக இப்படிச் செய்கிறாள் என்று யாருக்கும் தெரியவில்லை. மாயாவே அதற்கு விளக்கம் கொடுத்தாள்.

“உங்கள் இரு இனங்களையும் அவமானப்படுத்துவதற்காக நான் அந்தக் கனியை நெருப்பில் வீசி எறியவில்லை. என் தலைமைக்கு கீழ் இயங்குகிற அனைத்து ஜீயூஸின் வாரிசுகளும் எனக்கு ஒன்று தான். அவர்களுக்குள் சிறு சிறு பிணக்குகள் உருவாவது, படையின் ஒழுங்கிற்கு நல்லது அல்ல.

நாம் எடுத்துக் கொண்ட பணி மிக முக்கியமான ஒன்று. நம்முடைய எதிரிகள் மிகுந்த பலம் வாய்ந்தவர்கள். நாம் எடுத்துக் கொண்ட இந்தக் கடமைக்காக என் தாய் உட்பட பலர் தங்களது உயிரைக் கொடுத்துள்ளனர். இப்படி தியாகத்தால் எழுப்பப்பட்ட இந்தப் படையின் அமைதியை ஒரு அதிசயக் கனி குழைக்குமென்றால் நான் அதனை அழிக்க கொஞ்சம் கூட தயங்க மாட்டேன்.

தான் நம்புகிற ஒரு விஷயத்துக்காக ஒருவர் செய்யக்கூடிய மிகப்பெரிய விஷயம் என்பது தங்களது உயிரைக் கொடுப்பது தான். ஆனால், நான் நம்புகிற இந்த படையின் நோக்கத்திற்காக நான் எனது மரணத்தையே விட்டுக் கொடுத்துள்ளேன். சாகாமல் இருப்பதை விட வேறெந்த சோகம் இந்த உலகினில் உள்ளது. ஆனாலும், அதனை நான் ஏற்றுக் கொண்டதற்கான காரணம், நமது படையின் வெற்றி மட்டுமே.

நான் திமிரிலோ அல்லது பல வருடங்களாக இந்தப் படைக்கு சேவை செய்து கொண்டிருக்கிற உங்களை அவமானப் படுத்தவோ, நான் அந்தக் கனியை தூக்கி நெருப்பில் வீசவில்லை. படையை சரியாக வழி நடத்த வேண்டும் என்ற பொறுப்பினாலே தான் நான் வீசியெறிந்தேன்.

இரண்டு இனத் தலைவர்களின் ஒற்றுமை என்பது இரு இனக்குழுக்களின் ஒற்றுமையாக மாறும். அதற்காக தான் உங்கள் இருவருடனும் நான் ஒன்றாக சண்டையிட்டேன். பொது எதிரி என்று ஒருவர் வருகின்றபோது, நீங்கள் உங்களுக்கிடையே இருக்கிற வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து போரிடுவதைக் கண்டேன். இந்த ஒற்றுமை தான் நமக்கான வெற்றியை ஈட்டித் தருமென நான் நம்புகிறேன்.

யார் தவறிழைத்தாலும் அதனைத் தட்டிக் கேட்கிற குதிரையாரின் துணிச்சலும், ஒரு பெரும் ராணுவக் கலகமாக மாறியிருக்கக் கூடிய ஒரு விஷயத்தை வெறும் மூவருக்கான சண்டையாக மாற்றிய எருமையாரின் அரசியல் சாதுர்யமும் அசாத்தியமானது. அதுபோக உங்கள் இருவரது வலிமையும் போர்த்திறனும் அரிதினும் அரிதானது. உங்கள் இருவரையும் இழப்பது ஜீயூஸ் படைக்கு மாபெரும் பின்னடைவு.

எனக்கான ஆசிரியர்களாக நீங்கள் இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். நாம் எடுத்துக் கொண்ட லட்சியத்திற்காக நீங்கள் இருவரும் என்னோடு தோளோடு தோள் நின்று போராடவும், என்னை உங்களது மாணவி என ஏற்றுக் கொண்டு உங்களுடைய அரசியல் அறிவையும் போர் கலையையும் எனக்கு கற்றுக் கொடுக்கவும் வேண்டுமென கேட்கிறேன். உங்களால் அதனைத் தர முடியுமா?.” என்று கேட்டாள்.

மாயா அவளுக்கிருக்கிற அதிகாரத்திற்கு அவள் செய்கிற எந்தவொரு செயலுக்கான விளக்கத்தையும் சொல்ல வேண்டியதில்லை. அதேபோல் அவள் யாரிடமும் எதுவும் கேட்க வேண்டிய அவசியமில்லை. எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அவளுடைய அந்தச் செய்கை, அவள் அந்தச் சபையின் உறுப்பினர்கள் அனைவரையும் மதிக்கிறாள், சரிக்கு சமமாக நடத்துகிறாள் என்று உணர்த்தியது.

எருமையாரும் குதிரையாரும் எழுந்தனர். 

“தலைவி உங்களை நாங்கள் சிறு பிள்ளையென்றும், இந்தப் பொறுப்பிற்கு தகுதி இல்லாதவர் என்றும் நினைத்தோம். ஆனால், தலைமைப் பண்பிற்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதை உணர்த்தி விட்டீர்கள். நாங்கள் உங்களை எங்களது ஒரே தலைவி என ஏற்கிறோம். இனி நீங்கள் சொல்கிற ஒரு சொல்லுக்காக நாங்கள் எங்கள் உயிரையும் கொடுப்போம். இப்போதும் இந்தக் காலம் உள்ள வரையிலும்.” என்றார் குதிரையார்.

பின்னர், குதிரையாரும் எருமையாரும் இருவரும் சேர்ந்து, அவர்களுடைய புதிய தலைவியை தங்கள் தோள்களில் ஏற்றி அமர வைத்து இருபத்தியொரு படிகள் தூக்கிச் சென்று அரியாசனத்தில் அமர வைத்தனர். மொத்த சபையும் “ஜீயூஸ் படை வாழ்க…தலைவி மாயா வாழ்க…” என வாழ்த்தொலி எழுப்பியது.

மாயா தன் கால் மீது கால் போட்டபடி அரியாசனத்தில் நிமிர்ந்து உட்கார்ந்தாள். அவளது மரகதக் கொண்டை ஊசி ஒளி வீசியது.

*
அதிகாலையில், இரவு உடையைக் கூட மாற்றாமல், மாயா தனது வீட்டின் மொட்டை மாடியில் துவைக்கிற கல்லில் அமர்ந்த படி வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நிலா மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் விடிந்து விடும். அன்றைய இரவின் பதவியேற்பு களேபரங்களுக்குப் பின்னர் வீட்டிற்கு வந்த மாயாவும் முத்துக்குமரனும் அவரவர் அறைக்கு தூங்கச் சென்றனர். மாயாவால் தூங்க முடியவில்லை. மொட்டைமாடிக்கு வந்தாள். சில்லென்ற மொட்டைமாடிக் காற்று இதமாக இருந்தது. குளிர்ந்த துவைக்கிற கல்லில் அமர்ந்து நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.

தூரத்தில் பல ஒளியாண்டுகள் தள்ளி யாரோ ஒரு பெண் அவளது மொட்டைமாடியில் அமர்ந்து தன்னைப் போலவே வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பாளோ? என்று தோன்றியது. நட்சத்திரம் மின்னுகிற போதெல்லாம் அந்தப் பெண், தான் வானைப் பார்த்து சிரிப்பது போல அவளும் தன்னைப் பார்த்து சிரிக்கிறாளோ என்று தோன்றியது.

“ஏம்மா? தூங்க முடியலயா?” என்று முதுகிற்கு பின்னால் இருந்தபடி முத்துக்குமரன் கேட்டார்.

“இல்லைப்பா. தூங்கணும்னு தோணல அதான் இங்க வந்துட்டேன்.” என்றாள் மாயா.

“இன்னைக்கு நீ ரொம்ப நல்ல ஒரு லீடரா நடந்துக்கிட்டமா.”

“இதுக்குதானப்பா நான் இத்தனை வருஷம் பயிற்சி எடுத்துட்டு இருந்தேன்.”

“நீ சந்தோஷமா இருக்கியாமா?”

“ஏன்ப்பா, இப்படி கேட்குறீங்க? உங்களுக்கு சந்தோஷம் இல்லையா?”

“இதுக்கு எப்படி பதில் சொல்றதுன்னே தெரியல மா. ஒரு குருவா உன்னை நினைச்சு எனக்குப் பெருமையா இருக்கு. ஆனா, ஒரு அப்பாவா எனக்கு கவலையா இருக்குது மா.

சரி, அத விடு. அதைப்பத்தி இப்போ பேசி என்ன பண்றது. அந்தப் பழத்தை நீ என்னமா பண்ணப் போற?” என்று கேட்டார் முத்துக்குமரன்.

“எப்படிப்பா கண்டுபிடிச்சீங்க?”

“என் பொண்ணைப் பத்தி எனக்குத் தெரியாதாமா. அவ்ளோ சக்தி வாய்ந்த ஒரு ஆயுதத்தை, ஒரு சண்டையை நிறுத்துறதுக்காக நீ அழிக்க மாட்டேன்னு தெரியும்.” என்றார்.

மாயா தனது உள்ளங்கையை காற்றில் ஆட்டினாள். அவளது கையில் அந்த அதிசய கனி தோன்றியது. எளிய வித்தை தான் முத்துக்குமரன் சொல்லிக் கொடுத்தது தான்.

“இந்தாங்க அப்பா” என்று அந்தக் கனியை அவரிடம் கொடுத்தாள்.

“எல்லா வித்தையையும் தெரிஞ்சுக்கிறத விட முக்கியமான விஷயம். எந்த வித்தையை எப்போ எங்கே பயன்படுத்துறதுன்னு தெரிஞ்சுக்கணும். உனக்கு அந்த சாமர்த்தியம் இருக்குடா. நீயே இந்தப் பழத்தை சாப்பிட்டுரு.”

“இல்லைப்பா நான் இப்போ இந்தப் பழத்தை சாப்பிட மாட்டேன். ஒரு நாள் வரும். என் அம்மா சாகும்போது நான் கேட்ட அந்தக் குரலுக்கு சொந்தமானவன் முன்னாடி நான் நிப்பேன். என் அம்மாவுக்காக வட்டியும் முதலுமா நான் கணக்கு தீர்ப்பேன். அன்னைக்கு எனக்கு இந்தப் பழம் தேவைப்படும்.” என்றாள்.