“மறந்து போன காதல் கடிதம் “
ஒரு அழகிய கிராமம். இயற்கையின் இசையை ஒவ்வொரு நாளும் தன்னுள் கொண்டிருக்கும் மலைகளும், வயல்களும் சூழ்ந்த ஒரு மனதை ஈர்க்கும் கிராமம் அது. அந்த கிராமத்தில், திண்ணையுடன் கூடிய பாரம்பரிய வீடு. அந்த வீட்டில் தனிமையோடு வாழ்ந்து வந்த ஒருவர்தான் – நம் தாத்தா.
அவருடைய மகன் நகரத்தில் நல்ல வேலையுடன், குடும்பத்தோடு வாழ்வை அமைத்துக் கொண்டார். உறவினர்கள் எல்லாம் தூரத்தில் இருந்ததால், குரல்வழி தான் ஒரே தொடர்பு. அடிக்கடி செல்போனில் மகனிடம் பேசுவார் தாத்தா.
தாத்தாவுக்கு நிலமும், மாடுகளும் இருந்தன. அவற்றை வேலைக்காரர்களுடன் சேர்ந்து நன்கு பராமரித்து வந்தார். ஆனால், ஒரு பக்கம் மட்டும் நிரப்ப முடியாமல் இருந்தது — தனிமை. ஆம், அவருடைய மனைவி காலமாகி விட்டதால், வீடு வெறிச்சோடிய உணர்வைத் தந்தது.
என்னதான் காலையில் வெளியே சென்று வேலைசெய்தாலும் வீட்டில் தனியாக இருப்பது கஷ்டம்தான், அந்த கவலை நம் தாத்தாவுக்கும் இருந்தது.
ஆனால் அவரது மனக்கவலைக்கு ஒரு சிறந்த மருந்தாக இருந்தது ஒரு இடம் இருந்தது ஒரு பெரிய மரத்தின் கீழ் அமைந்த ஒரு டீக்கடை. அங்கே அவர் கிராம மக்கள் சிலருடன் தினமும் பேசுவார், சிரிப்பார், தனது தனிமையை மறந்துவிடுவார். எல்லோரும் கூடி சிரிக்கும் அந்த இடம், குட் வைப்ஸ் நிறைந்த இடம் போல் இருந்தது.
ஒரு நாள், தாத்தா வீட்டு முன் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அருகில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களின் சிரிப்பும், அலறல்களும் தாத்தாவுக்கு ஒரு காலத்தை நினைவுபடுத்தின.
“நான் கூட இப்படி தான்... நண்பர்களுடன் விளையாடிய நாட்கள்...,” என்று நினைவில் தோன்ற, அவருடைய முகத்தில் ஒரு மென்மையான புன்னகை தோன்றியது.
அந்த நாட்களில், தாத்தா ஒரு பெரிய கூட்டு குடும்பத்தில் வாழ்ந்தவர். வீடு எப்போதும் கலகலப்பாக, உறவுகளின் சிரிப்பால் நிரம்பியதாக இருந்தது. அந்த நினைவுகள் மனதை நெகிழவைக்கும் வகையில் அவரை கவர்ந்தன.
அப்போது வேலைக்காரன் ஒருவர், “ஐயா, ஒரு கயிறு வேணும்,” என்றார்.
தாத்தா வீட்டுக்குள் சென்று பரண் மேல் இருந்த கயிறை எடுக்க, அங்கே ஒரு பழைய பெட்டி இருந்தது. அந்த பெட்டியையும் எடுத்தார். கயிறை வேலைக்காரனிடம் கொடுத்தபின், ஒரு ஆச்சரியக் கிளிக்கு ஆசை கொண்டது போல் அந்த பெட்டியைத் திறந்தார்.
அதில் பழைய நினைவுகள் அடங்கியிருந்தன – சில முத்திரைப் பொருட்கள்,பள்ளிப் பை, பழைய காகிதங்கள், பழைய ரூபாய் நோட்டுகள் இருந்தன . தெரிந்தும் தெரியாமலும், இவை அனைத்தும் தற்போது அற்புதமான நினைவுகளாக மாறிவிட்டது. அந்த பள்ளிப் பையை எடுத்தார். உள்ளே ஒரு நோட். அதை கவனமாகத் திறந்து பார்த்தார். ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டிச் செல்லும் போது, மெல்ல மெல்ல கடந்த கால நல்ல நினைவுகள் அவரைத் திரும்ப அழைத்தது.
புறட்டும்போது அதில் ஒரு கடிதம் இருந்தது.அது மிகவும் பழமையானது. எழுத்துகள் பல இடங்களில் மங்கியிருந்தன. கடிதத்தை துறந்து படிக்கச் ஆரம்பித்தார்.
ஆனால் இதில்தான் அந்த ஆழமான நொறுக்கம் இருந்தது —
அந்த மங்கிய காகிதம்… ஆனால் அதன் சொற்களில் மட்டும் காலம் மங்கவில்லை.
ஒரே ஒரு வரி படித்ததிலேயே, மனது துடிக்கத் தொடங்கியது…
“அன்பானவனே…”
என்று தொடங்கியது அந்த மௌனமான காதல் வரிகள்.
அன்பானவனே,
நான் உன்னை நீண்ட நாட்களாக காதலிக்கிறேன். ஆனால் இதுவரை சொல்லியதில்லை.
நாமிருவரும் பெரிதாகப் பேசிக்கொண்டதில்லை, ஆனாலும் நான் எப்போதும் உன்னை கவனித்து கொண்டேயிருப்பேன் .
நீ எல்லோரிடம் மென்மையாக நடந்து கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும்.
நான் நாள் முழுக்க உன்னை நினைத்துக் கொண்டிருப்பேன்.
நாம் பேசினால் எப்படி இருக்கும், ஒன்றாக இருந்தால் எப்படியிருக்கும் என்று என் உள்ளத்தில் எண்ணிக்கொண்டே இருப்பேன்.
நேரில் இதைச் சொல்ல என்னால் முடியவில்லை, தயக்கமும் பயமாக இருந்தது.
அதனால்தான் இந்தக் கடிதத்தை உன் பையில் வைத்தேன்.
உனக்கும் என்னை பிடித்திருந்தால், அல்லது என்னிடம் பேசவேண்டுமென்றால்,
மாலை 7 (சில எழுத்துகள் மங்கியிருந்தது) நம் கிராமத்து கோவிலுக்கு வா.
நீ வரவில்லை என்றாலும், நான் புரிந்து கொள்வேன்.
அன்புடன்,
—----------
தாத்தா சிறு சிரிப்புடன், இதை யார் எழுதியிருப்பார் என்று தெரிந்து சிரித்தார்.அங்கே பள்ளிக்கூட காலத்தில், சற்றே வெட்கத்துடன் நின்ற அந்த முகம் நினைவில் வந்தது. பின்னர், “நான் ஏன் இதைப் பார்க்கவில்லை?” என்று எண்ணினார்.
அதற்கும் காரணம் நினைவுக்கு வந்தது…
அன்று பள்ளியின் கடைசி நாள். தாத்தா வீட்டிற்கு வந்து, பையை ஒரு மூலையில் வைத்துவிட்டு, அவருடைய நண்பர்கள் சிலர் இரவே வேறு ஊருக்கு கல்லூரிக்காக செல்ல இருந்ததால், அவர்களுடன் நேரம் செலவழிக்க புறப்பட்டுவிட்டார். அதன் பிறகு அந்தப் பையை அவர் பெரிதாகக் கவனிக்கவே இல்லை.
இப்போது, 40 ஆண்டுகள் கழித்து, அந்த பையைத் திறந்து இந்தக் கடிதத்தை வாசிக்கிறார்.
ஆனால்… அவருக்கு எந்த வருத்தமும் இல்லை.
ஏனென்றால், வாழ்க்கை அவருக்கு அழகான மனைவியையும், அன்பு நிறைந்த குடும்பத்தையும் வழங்கியுள்ளது.
தாத்தா சுவரில் தொங்கிய மனைவியின் புகைப்படத்தையும் , குடும்பப் புகைப்படத்தை பார்த்தார். மனைவியின் சிரிப்பு, குழந்தைகளின் முகங்கள்—அவை அனைத்தும் அவரது நெஞ்சில் அமைதியையும், பூரிப்பையும் கொண்டுவந்தன.
ஒரு மென்மையான புன்னகையுடன் அவர் நிமிர்ந்தார்.
அவரது செல்போன் சத்தம் கேட்டது.
அதைக் கேட்டதும்,அதில் அவர் மகன் ,அவர் மெல்ல சிரித்தபடியே எடுத்தார்.
“அப்பா... நீங்க தனியா இருக்க வேண்டாம். நாம் எல்லாம் சேர்ந்து இருப்போம்.
நிலமும், மாடுகளும் வேலைக்காரங்க பாத்துக்குவாங்க.
நாம் அப்பப்பா ஊருக்கு வந்து பாக்கலாம்.
நாளைக்கு வர்றேன். ரெடி ஆயிட்டு இருங்க!”
தாத்தாவின் மனம் அப்போது சிறகு கட்டியது.
தனிமையில் உறைந்திருந்த அந்த நொடிகள்…
அந்த அழைப்பில் கரைந்துபோனது.
அவர் முகத்தில் ஒரு மென்மையான புன்னகை பரவியது.
நெஞ்சை நனைக்கும் சந்தோஷம் அவரை ஆட்கொண்டது.
அந்த சந்தோஷத்தோடு, அவருடைய செல்லமான இடமான டீக்கடைக்குச் சென்றார்.தன் நண்பர்களிடம் அவர் தன் மகனுடன் செல்ல இருப்பதை மகிழ்ச்சியுடன் கூறினார்.
ஆனால் இன்று, அவர் முகத்தில் இருந்த ஒளி — வேறுவிதமானது.
அது விடுதலையின் ஒளி. நன்றி கலந்த நிம்மதியின் ஒளி.
சில வார்த்தைகள்…
"நாம் ஒவ்வொரு நிகழ்வையும், தருணத்தையும் மகிழ்ச்சியோடு வாழ்ந்தால்… அது மறக்க முடியாத இனிய நினைவாகவே மாறும்."
நன்றி...
இந்தக் கதையை உங்கள் நேரத்தையும், மனதையும் கொடுத்து வாசித்ததற்காக என் நெஞ்சார்ந்த நன்றி.
"மழலைப் போல் பிறந்த இந்தக் கதையும், உங்கள் நெஞ்சில் ஒரு சின்ன சிரிப்பையாவது பதித்திருக்க வேண்டும் என்று நம்புகிறேன்."
“மறந்துபோன காதல் கடிதம்”… நம் வாழ்க்கையிலும் நம் மனதிலும் ஒளிந்திருக்கும் சில நினைவுகளைப் போலதான் அல்லவா?
மறந்துபோன நினைவுகள் சில, நம் நெஞ்சில் மீண்டும் மலரும்போது...
வாழ்க்கையும் மெல்ல சிரிக்க ஆரம்பிக்கிறது.
உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்,
உங்கள் சிறு வயது நினைவுகள், உங்கள் கதைகள் — இங்கே என்றும் வரவேற்கப்படுகின்றன.
வாழ்க்கை
"உங்கள் பார்வையும், புன்னகையும் தான், எனக்கு மீண்டும் எழுத உந்துதல்!
இந்தக் கதை உங்களுக்கு ஒரு நிமிடம் கூட இனிமையாய் இருந்திருந்தால் — அதுவே எனக்கான மிகப்பெரிய வெற்றி."
அன்புடன்,
ஒரு வாசகர் போல,
சித்தார்த்….