Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

யாயும் யாயும் - 23

23. சிறை

மோகன் முழுக்க வெண்மையால் சூழப்பட்ட சூனியத்தில் விழுந்து கிடந்தான். எத்தனை நாட்கள் இங்கு அடைபட்டு கிடக்கிறோம் என்ற கணக்கை அவன் எப்போதோ விட்டுவிட்டான். நாட்களா, வாரமா, அல்லது மாசமா எந்தக் கணக்கும் அவனுக்கு நினைவில்லை.

கண்ணாடி சுவர்களை உடைத்து உடைத்து அவன் சோர்ந்து விட்டான். உடைத்து உடைத்து அவன் முன்னேற முன்னேற இன்னொரு சுவர் அங்கு இருந்து கொண்டே இருந்தது. அவன் அத்தனை நாட்கள் அங்கிருந்தபோதிலும் அவனுக்குப் பசி எடுக்கவில்லை. தாகம் எடுக்கவில்லை. சிறுநீர் வரவில்லை. வியர்க்கவில்லை. இது எதுவுமே அவனுக்கு ஏன் என்று புரியவில்லை. ஆனால், அந்த இடத்தில் தனிமை மட்டும் நன்கு வலித்தது. அதை விடக் கொடுமையானது, எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருப்பது.

சும்மா இருப்பது மிகக்கடினமான ஒன்று. ஒன்றைச் செய்கின்ற போது மட்டுமே ஒருவனுடைய இருப்பை அவன் உணர முடியும். யாரும் தன்னைப் பார்க்காத போது, செய்வதற்கு என்று எந்தவொரு வேலையும் இல்லாத போது ஒருவனுக்கு தன்னுடைய இருப்பு மீதே சந்தேகம் வரத் தொடங்கிவிடும்.

மோகன் இப்போது அந்த மனநிலையில் இருந்தான். அவனால் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை. அதே நேரம் அங்கேயே இறந்துவிடவும் முடியவில்லை.

அவன் மாயாவைப் பற்றி நினைத்தான்.அவள் அனுப்பிய ‘“ஹாய்” மெஸேஜை தான் பார்த்தது எப்போதோ ப்ளூ ட்டிக் மூலம் அவளுக்குத் தெரிந்திருக்கும். தன்னிடமிருந்து பதில் மெஸேஜ் வராததற்கு குழம்பியிருப்பாள். அவளுடைய பிறந்த நாளுக்கு தான் இல்லாமல் போனதற்கு கோபப்பட்டிருப்பாள். இரண்டு நாள் கழித்து அவளும் நண்பர்களும் என்னைத் தேடி வீட்டிற்கு வந்து விசாரித்திருப்பார்கள். பின்னர், ஒரு வாரம் தன்னைத் தேடி இருப்பார்கள். இரண்டு மாதத்தில் என்னை மறந்துவிட்டு அவரவர் படிப்பிலும் வேலையிலும் மூழ்கிப் போயிருப்பார்கள்.

நல்ல வேளையாக எனக்கு மேக்பெத் கதாபாத்திரம் கொடுக்கவில்லை என மகேந்திரன் நினைத்திருப்பான். ஒருவேளை கொடுத்திருந்தால் கடைசி நிமிடத்தில் எனக்கு பதிலாக இன்னொருவரை எப்படித் தேடியிருக்க முடியும்.

மோகனுடைய மனம் முழுக்க முழுக்க அவன் நினைக்கிற அனைவரைப் பற்றியும் தவறாகவே நினைத்தது. சரியாக சொல்லவேண்டுமானால் மோகன் அப்போது அவனுக்குத் தெரிந்த அனைவரையும் தப்பாக நினைக்கவே விரும்பினான். ஆனால், அப்போதும் அவனுடைய அத்தையை அவ்வாறு நினைக்கத் தோன்றவில்லை.

எப்படியாவது இங்கிருந்து தப்பி அவனது அத்தையைப் பார்த்து விட வேண்டும், அவள் சமைத்த உணவை உண்ண வேண்டுமென நினைத்தான். அவள் தன்னைக் காணாமல் எங்கெங்கு தேடுகிறாளோ, தான் இல்லாமல் சாப்பிட்டாலோ? இல்லையோ? அவள் தன் வாழ்வை தியாகம் செய்து தன்னை வளர்த்தற்கு தன்னால், அவள் பெருமைப்படும் படி ஒரு விஷயத்தைக் கூட செய்ய முடியாமல், இப்படி வீணாய் இந்தச் சிறையில் மாட்டிக் கொண்டிருக்கிறோமே? என்று வருந்திக் கொண்டிருந்தான்.

அப்போது அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு திருச்செந்தாழை உள்ளே நுழைந்தான்.

தன்னை இப்படி அடித்து தூக்கி வந்து இரக்கமே இல்லாமல் இந்த சிறையில் அடைத்ததற்காக மோகனுக்கு திருச்செந்தாழை மீது கொலைவெறி உண்டானது. மோகன் ஓடிச்சென்று திருச்செந்தாழையின் குரல்வளையைப் பிடிக்க முயன்றான்.

திருச்செந்தாழை மோகனை அவன் நின்ற இடத்திலேயே அப்படியே நிற்க வைத்தான். மோகனால் கொஞ்சம் கூட அசைய முடியவில்லை. திருச்செந்தாழை மோகனைத் தரையில் அமர வைத்தான். பின்னர், அவனும் மோகனுக்கு இணையாக தரையில் அமர்ந்து கொண்டான்.

“டேய், யாருடா நீங்கெல்லாம்? எதுக்குடா என்னை இப்படி டார்ச்சர் பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கோபமாக கேட்டான் மோகன்.

“ஒரு நிமிஷம் அமைதியா இரு. நான் எல்லாத்தையும் உனக்கு விவரமா சொல்றேன்” என்றான் திருச்செந்தாழை.

‘“ஒரு வெவரமும் எனக்கு வேண்டாம். நான் உங்க எல்லோரையும் கொல்லாம விடமாட்டேன்” என சீறிக் கொண்டே எழ முயன்றான். ஆனால், அவன் நினைப்பதை அவன் உடல் கேட்கவில்லை.

அவன் உட்கார்ந்த இடத்திலேயே எழ முயன்று முடியாமல் அதே இடத்தில் உட்கார்ந்திருந்தான். 

திருச்செந்தாழை அமைதியாக, “இங்க பாரு மோகன், நீ இங்க இருந்து போகனும்னா, அது நான் நினைச்சா மட்டும் தான் முடியும். அதனால நான் என்ன சொல்றேனோ அதை மட்டும் கவனமா கேளு. கேட்டுட்டு அப்புறமா ஒரு முடிவெடு” என்றான்.

மோகன் வேறு வழியின்றி திருச்செந்தாழை சொல்வதைக் கேட்கத் தொடங்கினான்.

“உன்னை ஒரு ஆள் மிஸ்ஸிங் கேஸ் விஷயமாத் தான் தேடி வந்தோம். ஆனா, உனக்கும் அந்தக் கேஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு இப்போ முடிவாயிருச்சு. அதனால, நீ நிம்மதியா உன் வீட்டுக்குப் போகலாம்” என்றான் திருச்செந்தாழை.

மோகனுடைய கண்களில் நீர் சொட்டத் தொடங்கியது.

“இந்தக் கேஸுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தான். ஆனா, உன்னைப் பத்தி உனக்கே தெரியாத சில விஷயங்கள் இருக்கு. அதை நீ தெரிஞ்சுக்கிட்டே ஆகணும்.”

மோகன் குழப்பமாக திருச்செந்தழையைப் பார்த்தான்.

“ஒரு குறிப்பிட்ட இரவோட நினைவுகளை மட்டும் யாரோ உன்னோட நினைவுல இருந்து அழிச்சு இருக்கங்க” என்றான் திருச்செந்தாழை.

“என் நினைவுகளை யார் அழிச்சுருப்பாங்க?”

“வேற யாருமில்ல, உன்னோட அத்தை கலைவாணி தான்” என்றான் திருச்செந்தாழை.

“பொய். உங்களுக்கு ஏதோ தேவைன்னு என்னை குழப்பப் பார்க்குறீங்க. என் அத்தை எதுக்கு என்னோட நினைவுகளை அழிக்கப் போறாங்க?”

“அதைத்தான் நாம அடுத்து கண்டு பிடிக்கணும். ஆனா, நடந்தது இது தான்.”

“நான் உங்களை நம்ப மாட்டேன்.” என்றான் மோகன்.

“எனக்குத் தெரியும் நீ எங்களை நம்ப மாட்டேன்னு. ஆனா, சொல்றதை புரிஞ்சுக்க ட்ரை பண்ணு.

ஒரு தடவை மட்டுமில்ல, இதுக்கு முன்னாடி பல தடவை உன் அத்தை உன் நினைவுகளை அழிச்சு இருக்காங்க. அதுவும் உன்னோட சக்திகள் வெளியில வந்த எல்லா தடவையும் இதைப் பண்ணி இருக்காங்க.

உன் நினைவுகளை நான் டெஸ்ட் பண்ணும் போது ஒரு குறிப்பிட்ட ராத்திரியோட நினைவுகள் மட்டும் ப்ளாங்க் ஆ இருந்துச்சு. அன்னைக்கு நீ உன்னோட சக்திகளை பயன்படுத்தி இருந்த, ஆனா, அது எதுவும் உன் நினைவுல பதிவாகல. அதனால, உனக்கு ஏதாவது ஸ்ப்லிட் பர்சனாலிட்டி இருக்கும்னு நினைச்சு. அந்தப் பர்சனாலிட்டியை வெளியில கொண்டு வரணும்னு தான் உன்னை இப்படி டார்ச்சர் பண்ணுனோம்.

ஆனா, உன்னோட நினைவுகளை மறுபடியும் ஸ்கிரீனிங் பண்ணிப் பார்க்கும் போது தான் தெரிஞ்சது. நீ அன்னைக்கு நைட் தூங்குறதுக்கு உன்னோட ரூம்க்கு போயிருக்க, உன்னோட ரூம்ல உனக்கு கனவு வந்து அங்கதான் முழிச்சு எழுந்திருச்சுக்க. ஆனா, அதுக்கப்புறம் முழுக்க முழுக்க ப்ளாங்கா தான் இருக்கு. அதுக்கப்புறம் தான், உன்னோட பவர்ஸ் வெளியான ஒவ்வொரு நாளா உன்னோட நினைவுகளை செக் பண்ணுனோம். எல்லாமே அழிஞ்சு இருக்கு. அதை வைச்சு தான் சொல்றேன். உன் அத்தை உன்னை ஹிப்னாட்டைஸ் பண்ணி உன் நினைவுகளை யெல்லாம் அழிச்சு இருக்காங்க.” என்றான் திருச்செந்தாழை.

“இல்லை, நீங்க திரும்ப திரும்ப பொய் சொல்றீங்க. என்னைக் குழப்பி, பைத்தியமாக்கப் பாக்குறீங்க. என்னை விட்டுடுங்க” என்றான் மோகன்.

“மோகன், நீ சொன்னாலும் சொல்லாட்டாலும். உன்னை நாங்க அனுப்பத் தான் போறோம். இதுக்கு மேல நீ எங்களோட விசாரணைக்கு தேவையில்லை. ஆனா, நீ உன்னைப் பத்தி ஒரு சில விஷயங்களை தெரிஞ்சுக்கணும்.”

“இல்லை, நீங்க சொல்ற கதையையெல்லாம் நான் நம்ப மாட்டேன். என் அத்தை எனக்கு எந்தக் கெட்டதும் செஞ்சுருக்க மாட்டாங்க” என்றான் மோகன்.

“நீ நம்பிட்டு இருக்கிற நிறையா விஷயங்கள் தப்பு மோகன். நீ ஒன்னும் சாதாரண மனுஷன் கிடையாது. உன்கிட்ட சில அதிசய சக்திகள் இருக்குது. உன்னால நீ நினைக்கிறத விட ரொம்ப பெரிய விஷயங்களை செய்ய முடியும். உன் ஜனங்களுக்கு உன்னோட உதவி தேவைப்படும்.”

“எனக்கு எந்த சக்தியும் இல்லை. என் அத்தையை விட இந்த உலகத்துல எனக்குன்னு யாருமே இல்லை.” என்றான் மோகன்.

“நீ அத்தை அத்தைன்னு சொல்றியே அவங்க உன் அத்தையே கிடையாது” என்று சொன்னான் திருச்செந்தாழை.

மோகன் அதிர்ச்சியில் உறைந்தான்.

“இல்லை, நீங்க ஏதோ என்னை வெச்சு விளையாடுறீங்க. நீங்க சொல்றது எல்லாமே பொய்” என்று தான் சொன்னான். ஆனால், தன்னையறியாமலேயே தன்னுடைய பேச்சில் உறுதி இல்லாமல் போனதை மோகன் உணர்ந்தான். திருச்செந்தாழை செல்வதில் உண்மை உள்ளதென அவனை அறியாமலேயே அவன் மனம் சொன்னது.

“மோகன், உனக்கு உங்கப்பாவை பத்தி தெரியுமா? அவரைப் பத்தி உன் அத்தை உன்கிட்ட ஏதாவது பேசி இருக்காங்களா?” என்று கேட்டான் திருச்செந்தாழை.

‘அப்பா, ஒரு ராணுவ வீரர் என்றும் அப்பாவும் அம்மாவும் ஒரு விபத்தில் இறந்து போனார்கள்’ என்று மட்டும் தான் அத்தை சொல்லியிருக்கிறாள். அவர்களைப் பற்றி அவள் எதுவுமே இதற்கு முன் பேசியதில்லை. தன் பெற்றோரைப் பற்றி தனக்கு எதுவுமே பெரிதாக தெரியாது என்பதை மோகன் அப்போது தான் உணர்ந்து கொண்டான்.

“அவங்க உன்னோட அப்பாவைப் பத்தி எதுவுமே உன் கிட்ட பேசி இருக்க மாட்டாங்க. ஏன்னா, அவங்களுக்கே உன் அப்பாவைப் பத்தி தெரியாது. உன்னோட அப்பா கேப்டன் கதிரவன், அவர் தான் என்னோட மாஸ்டர். எனக்கு மட்டும் இல்லை, அவர் நிறையா பேருக்கு மென்ட்டாரா இருந்திருக்காரு. ஆனா, அவருக்கு தங்கச்சின்னு யாருமே இல்லை. நீ அத்தைன்னு நினைச்சிட்டு இருக்கறவங்க உன்னோட அத்தை இல்லை. உன்னோட அப்பா, யாராலையும் நம்ப முடியாத பல விஷயங்களை செஞ்சிருக்காரு. நீ அவரைப் பத்தி தெரிஞ்சுக்க வேண்டாமா?”

மோகனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. குழப்பத்தில் அவனது உடல் தளர்ந்தது. இப்போது திருச்செந்தாழை அவனது சக்தியை மோகன் மீது பிரயோகப்படுத்தி அவனைக் கண்ட்ரோல் செய்யவில்லை. இருந்த போதிலும் மோகன் எதுவும் எதிர்ப்புக் காட்டவில்லை. திருச்செந்தாழையை தாக்க முற்படவில்லை.

“நீ ரொம்ப பதட்டமா இருக்கிற மோகன். நீ உன் வீட்டுக்குப் போ, கொஞ்சம் ரெஸ்ட் எடு. பதட்டம் குறைஞ்சதும், மறுபடியும் நீ எங்களைப் பார்க்கணும். உன்னைப் புத்தியும் உன்னோட அப்பா பத்தியும் ஏதாவது தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டா, நாங்களே உன்னை மறுபடியும் தேடி வருவோம்.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், உனக்கு இந்த இடத்தில மூணு மாசம் அடைஞ்சு இருக்கிறது மாதிரி இருக்கும். ஆனா, இது வெறும் மெமரி சிமுலேஷன் மட்டும் தான். இங்க நடந்த எல்லா விஷயமும் முழுக்க முழுக்க உன்னோட நினைவுகள்ள தான் நடக்குது. உண்மையான உலகத்துல உன்னை நாங்க எங்களோட இடத்துக்கு கொண்டுவந்து முழுசா ஒரு மணி நேரம் கூட ஆகலை.

அதனால நீ கண் முழிக்கும் போது உன்னை நாங்க எங்க தூக்கிட்டு வந்தமோ. அங்கேயே தான் இருப்ப. ஒரு மணி நேரம் தான் உண்மையான உலகத்துல நீ இல்லாம இருந்திருப்ப” என்றான் திருச்செந்தாழை.

“என்ன?” என்று மோகன் கேட்க நினைத்தான். ஆனால், அதற்குள்ளாக அவன் நாக்குக் குழறி மயங்கி விழுந்தான்.

அவன் மயக்கம் தெளிந்து எழுந்த போது மயில்வாகனனை சந்தித்த அதே தெருவில் இருந்தான்.