22. முடிவிலியின் உள்
மோகன் கண் விழித்துப் பார்த்த போது சுற்றிலும் வெண்மை மட்டுமே இருந்த ஒரு இடத்தில் இருந்தான். அது ஒரு அறையா அல்லது திறந்த வெளியா என்று எதுவும் தெரியவில்லை. அது ஒருவேளை அறை என்றால் அந்த அறையின் கதவு எங்கே என்று தெரியவில்லை. ஒரு வேளை அதுவொரு திறந்த வெளி என்றால் வானம் எங்கே என்று தெரியவில்லை. தலைக்கு மேலே, காலுக்குக் கீழே, தன்னைச் சுற்றி என எங்கு பார்த்தாலும் வெண்மை. வெண்மை மட்டுமே.
அப்போது அந்த இடத்தின் கதவு திறக்கப்பட்டது. திருச்செந்தாழை அந்த அறைக்குள் நுழைந்தான்.
"வணக்கம் மோகன், என் பேரு திருச்செந்தாழை. உங்களுக்கு உடம்பு பரவாயில்லையா?"
"இப்ப பரவாயில்லை. ஆனா, நீங்க யாரு? இது எந்த இடம்?"
"நானும், இதுக்கு முன்னாடி உங்க கிட்ட ஒருத்தர் வந்து பேசுனாரே மயில்வாகனன் அவரும் இந்திரசேனைனு ஒரு ரகசிய அமைப்புல வேலை செய்றோம். ஒரு ஆள் காணாமப் போன கேஸ் விஷயமா உங்ககிட்ட விசாரிக்கணும்னு எங்க இடத்துக்கு கூட்டிட்டு வந்திருக்கோம்."
மோகன் எதுவும் புரியாமல் விழித்தான்.
"சத்தியமா நாங்க எம்.எல்.எம் பண்ற ஆட்கள் கிடையாது" என்று புன்னகைத்துக் கொண்டே சொன்னான் திருச்செந்தாழை.
"நீங்க ஒன்னும் என்னைய கூட்டிட்டு வரல. என்னை அடிச்சி தூக்கிட்டு வந்திருக்கீங்க. ஆமா, நீங்க போலீசா?"
பொதுவாக டீன் ஏஜ் பையன்களை வாடா போடா என்றோ அல்லது தம்பி என்றோ தான் அனைவரும் அழைப்பார்கள். ஆனால், அதே பையனுக்கு மரியாதை கொடுப்பதன் மூலம் அவனிடமிருந்து மிகச் சுலபமாக ஒத்துழைப்பை வாங்கி விட முடியும். திருச்செந்தாழை இந்த யுத்தியைக் கையாண்டான்.
"இல்லை. நாங்க போலீஸ் இல்லை. கவர்ன்மெண்டும் இல்லை. மொத்தமா வேற ஒரு க்ரூப்பு. இன்னும் அதிகமா நீங்க தெரிஞ்சுக்கணும்னா ஒரு வேளை நீங்க உயிரை விடும்படி ஆகலாம். என்ன பண்ணலாம்?"
"இல்லை இல்லை எனக்கு இதுக்கு மேல எதுவும் தெரிய வேண்டாம்." என்றான் மோகன்.
"குட், மோகன் நீங்க ஒரு வாரத்துக்கு முன்னாடி நைட் எங்க இருந்தீங்கன்னு சொல்ல முடியுமா?"
"நான் எங்க வீட்ல தான் தூங்கிட்டு இருந்தேன்."
"நைட் முழுக்க வீட்ல தான் இருந்தீங்களா? இல்லை நடுவுல எங்கேயாவது வெளியில போயிட்டு வந்தீங்களா?"
"சார், என் அத்தை நைட் பத்துமணிக்கு மேல என்னை எங்கேயும் வெளிய விட மாட்டாங்க. நான் காலையில் 8 மணிக்கு காலேஜ் போகத்தான் வீட்டை விட்டு வெளியே வந்தேன்."
திருச்செந்தாழை மோகனை ஊடுருவிப் பார்த்தான். அவன் பேச்சில் கொஞ்சம்கூடப் பொய் இல்லை.
"சரி, அன்னைக்கு நைட் ஏன் உங்களோட பவர்ஸை யூஸ் பண்ணுனீங்க?"
"சார், பவர்ஸ்ஸா? என்ன பவரை சார் சொல்றீங்க?"
"இன்னைக்கு நீங்க எங்க ஏஜென்ட் கூட சண்டை போடும் போது தேவையேயில்லாம ஒரு மயில் மேல மின்னலை அடிச்சீங்க இல்லை. அந்தப் பவரை தான் கேட்குறேன்."
"சார், எனக்கு உண்மையிலேயே இன்னைக்கு என்ன நடந்ததுன்னே தெரியல. எப்படி என் கையில் இருந்து மின்னல் வந்துச்சுனே தெரியல. நானே ரொம்பக் குழப்பத்துல இருக்கேன். ப்ளீஸ் சார் என்னை என் வீட்டுல விட்டுருங்க" என்றுக் கெஞ்சினான் மோகன்.
"அப்போ நீங்க இதுக்கு முன்னாடி, ஒரு தடவை கூட உங்க கையில் இருந்து மின்னலை வரவழைச்சதே இல்லை. சரியா?" என்று கேட்டான் திருச்செந்தாழை.
"சார், என்னால மின்னலைக் கொண்டு வர முடியும்னே எனக்குத் தெரியாது சார்" என்றான்.
"ஹ்ம்.." என்று தலையசைத்து விட்டு,
"ஒரு வேளை இதெல்லாம் உங்களுக்கே தெரியாம நடந்திருக்கலாம் இல்லையா?"
"அதெப்படி சார் எனக்கே தெரியாம அது நடக்கும்?"
"அதைக் கண்டுபிடிச்சிடலாம் கொஞ்சம் என் கூட கோ ஆப்ரேட் பண்ணுங்க" என்றான் திருச்செந்தாழை.
"நீங்க என்னைய சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பிடுவீங்கனா, நான் என்ன வேணும்னாலும் செய்யறேன் சார்." என்றான் மோகன்.
திருச்செந்தாழை பாவமாக அவனைப் பார்த்து விட்டு, "சரி, ஒரு நிமிஷம் இருங்க நான் வரேன்." என்று சொல்லி விட்டு அந்த அறையிலிருந்து வெளியேறி கதவை மூடிச் சென்றான்.
அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்த மயில்வாகனன்,
"ஏதாவது சொன்னானா?" என்று கேட்டான்.
"விஷுவல்ஸ்ல என்ன தெரிஞ்சுதோ அதையே தான் சொன்னான். ஆனா, அவன் சொன்னது எல்லாமே உண்மை. ஒரு வார்த்தைக் கூட பொய் இல்லை."
"சரி, இப்போ என்ன பண்ணலாம்?"
"உண்மையோ, பொய்யோ ரெண்டுமே அவங்கவங்க மனசு சார்ந்த ஒன்னு தான, ஒரு ஆத்திகனை விசாரிச்சா கடவுள் இருக்குனு சொல்வான். அவனை டெஸ்ட் பண்ணுனா அவன் சொல்றது உண்மைனு வரும். அதுவே ஒரு நாத்திகனை விசாரிச்சா அவன் கடவுள் இல்லைனு சொல்லுவான். அவனை டெஸ்ட் பண்ணுனாலும் அவன் சொல்றதும் உண்மை தான் வரும். இதெல்லாம் அவங்களோட மனசை டெஸ்ட் பண்ணி அதுல வர ரிசல்ட்ஸ். ஆனா, உண்மைனு ஒன்னு தனியா எப்பவும் இருக்கும். நாம அதைத் தான் கண்டுபிடிக்கணும்.
இப்போ வரைக்கும் இந்தப் பையன் சொன்னது. இவனோட மனசறிஞ்ச உண்மை. ஒருவேளை இவனோட மனசுக்கே தெரியாத ஒரு உண்மை இருந்தா, அதை நாம கண்டுபிடிக்கனும்.
அதனால, இந்தப் பையனை ஒரு ஆறு மாசம் ஊற வைக்கலாம்னு இருக்கேன்." என்றான் திருச்செந்தாழை.
திருச்செந்தாழை அறையின் உள்ளே மோகனை விசாரித்துக் கொண்டிருந்த வேளையில், மயில்வாகனன் கணினியில் இருந்த மோகனுடைய நினைவுப் பதிவுகளைப் பார்த்தான். அவன் ஒரு பெண்ணை காதலிக்க வேண்டி செய்த பிரயத்தனங்களையும் அவனுடைய அப்பாவித் தனத்தையும் பார்த்த போது மயில்வாகனனுக்கு அவனது நினைவுச் சரடில் ஏதோவொன்று சட்டென்று அவிழ்ந்து கொண்டது. ஒரு நொடியில் அவனுடைய காதல் ஒரு மின்னல் போல வந்து மறைந்தது. அதனால் மோகன் மீது கரிசனம் உண்டானது.
"வேண்டாம் திரு, இவன் சின்னப் பையன் தாங்க மாட்டான். நானே, ஏதோ தெரியாத் தனமா இவனைக் கொல்லப் பாத்துட்டேன். அதுவே எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. ஆறு மாசமெல்லாம் இவனுக்கு ரொம்ப அதிகம்." என்றான் மயில்வாகனன்.
"எனக்குமே கவலையாத்தான் இருக்குது மயிலு. இவன் என்னோட மாஸ்டரோட பையன். இவனுக்கு இதைப் பண்றது எனக்குமே பிடிக்கலை தான். ஆனா, நம்ம கிட்ட வேற என்ன வழி இருக்கு?"
"பேசாம ஆறு மாசம்கிறத ஒரு வாரம் ஆக்கிடலாமா?"
"உனக்குத் தெரியாததா மயிலு. ஒரு வாரத்துக்கு எல்லாம் எந்த ரிசல்ட்டும் கிடைக்காது மயில். குறைஞ்சது ஆறு மாசம் வேணும். வேணும்னா ஆறு மாசம்கிறத ஒரு மூணு மாசமா மாத்திப் பார்க்கலாம். ஒருவேளை ரிசல்ட் கிடைக்காட்டி லெவல் டூ வை ட்ரை பண்ணலாம். " என்றான் திருச்செந்தாழை.
வேறு வழியின்றி மயில்வாகனனும் அதனை ஒட்டிக் கொண்டான்.
*
மோகன் அந்த வெள்ளை அறையிலேயே வெகு நேரமாக காத்திருந்தான். யாரும் வரவில்லை. சில மணி நேரங்கள் கழித்து பொறுமையிழந்து கத்தத் தொடங்கினான் அப்போதும் யாரும் வரவில்லை. பின் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தான். பதிலுக்கு ஒரு எதிரொலி கூட எங்கும் கேட்கவில்லை. வெறும் வெள்ளை ஒளி மட்டுமே அங்கு இருந்தது. அது அன்றி அங்கு வேறு இல்லை.
ஆனால், அதிசயமாக அவன் அவ்வளவு நேரம் அந்த அறைக்குள் இருந்தும் அவனுக்கு பசியோ தாகமோ எடுக்கவில்லை. ஏன் சிறுநீர் கழிக்க வேண்டுமெனக் கூட தோன்றவில்லை. நேரங்கள் போய்க் கொண்டே இருந்தது. மோகனுடைய பொறுமையும் மெல்ல மெல்ல கரைந்து கொண்டிருந்தது.
திருச்செந்தாழை அந்த அறைக்குள் நுழைந்த திசையை நோக்கி நடந்தான் மோகன். அந்தச் சுவற்றின் ஏதேனும் ஒரு இடத்தில் தான் அந்த அறைக்கான கதவு இருக்குமென அவன் நம்பினான். மோகன் சிறிது தூரம் நடந்தான். எதுவும் அவன் மீது இடிக்கவில்லை. அவன் இன்னும் கொஞ்ச தூரம் நடந்தான். அப்போதும் அவன் மீது எதுவும் இடிக்கவில்லை. அவனுக்கே கொஞ்சம் குழப்பமாக இருந்தது. "நாம் ஏதும் தவறான திசையில் நடக்கிறோமா என்று தோன்றியது. ஆனாலும் அவன் அந்த திசையை நோக்கி நடந்தான். கண்டிப்பாக ஏதேனும் ஒரு புள்ளியில் சுவர் வந்து தான் ஆக வேண்டும் என்று நம்பி நடந்தான்.
சிறிது தூரம் சென்ற பிறகு ஒரு இடத்தில் சென்று இடித்துக் கொண்டான். அந்தச் சுவரை தொட்டுப் பார்ப்பதற்கு மிகவும் வழவழப்பாக இருந்தது. ஆனாலும், வெள்ளை நிறம் அந்தச் சுவருக்கு அடுத்தப் பக்கமும் தெரிந்தது. அப்போது தான் மோகனுக்குப் புரிந்தது அதுவொரு கண்ணாடி சுவரென அவன் மெல்ல அந்த சுவரின் மீது கையை வைத்து தொட்டுப் பார்த்தான். இந்தச் சுவற்றின் ஏதேனும் ஒரு இடத்தில் கதவு இருக்கும். அதை மட்டும் கண்டுபிடித்துவிட்டால், பின்னர், அந்தக் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்று விடலாம் என நினைத்தான். சுவரை முழுக்க தொட்டுப் பார்த்தபடி நடந்து கொண்டே இருந்தான்.அந்தச் சுவர் முடியவேயில்லை. அது நீண்டு கொண்டே இருந்தது. உண்மையிலேயே அது ஒரு அறையல்ல ஒரு மிகப்பெரிய குடோன் என்பதை மோகன் உணர்ந்தான். நீண்ட நேரம் நீண்ட தூரம் அந்தச் சுவற்றை கொட்டுக் கொண்டே நடந்தும் அவனால் அந்தச் சுவரில் எங்கே கதவு இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியவில்லை.
மோகனுக்கு கோபமும் அழுகையும் சேர்ந்து வந்தது. அவன் வேகமாக அந்தச் சுவரை ஓங்கிக் குத்தினான்.
கை வலித்தது ஆனால், சுவருக்கு எதுவும் ஆகவில்லை. மீண்டும் ஓங்கிக் குத்தினான். கை இன்னும் வலித்தது. அவன் அப்படியே அந்தச் சுவற்றில் சாய்ந்தபடி கீழே உட்கார்ந்து அழுதான்.
பின்னர், என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே தரையில் சாய்ந்து படுத்துக் கொண்டான். அவனையறியாமலேயே அவன் தூங்கிப் போனான்.
எவ்வளவு நேரம் தூங்கினான் என்று தெரியாது. எத்தனை நாட்கள் இங்கு தூங்கினான் என்றும் தெரியவில்லை. வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போன திருச்செந்தாழையும் எப்போது வருவான் என்று தெரியாது. உடனடியாக இங்கிருந்து தப்பிச் சென்று அவனது அத்தை மடியில் படுத்து உறங்க வேண்டுமெனத் தோன்றிது. மாயாவின் நினைவு வேறு வந்தது. மோகன் கடத்தப்படுவதற்கு முன் தனக்கு மாயாவிடமிருந்து வந்த "ஹாய்" மெஸேஜைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.
அந்த ஹாய்க்கு என்ன அர்த்தமாக இருக்கும்? என்னை காதலனாக ஏற்றுக் கொண்டாளா? இல்லை, அன்று நடந்தது போல அவளுக்காக எதையும் செய்யக்கூடாது என்று திட்டப் போகிறாளா? இல்லை, இப்போதைக்கு நண்பனாக வைத்துக் கொள்வோம் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வந்தபின்னர், காதலனாக மாற்றிக் கொள்ளலாம் என நினைக்கிறாளா? என்று யோசித்துக். கொண்டிருந்தான்.
பின்னர், இதெல்லாம் நாம் ஏன் நினைக்கிறோம்? நாம் வெளியே சென்றால்தானே இதைப் பற்றியெல்லாம் கவலைப் பட வேண்டும். நாம் தான் இங்கேயே கிடந்து வயதாகி சாகப்போகிறோமே நாம் எதற்கு இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவேண்டுமென அவனுக்குத் தோன்றியது.
இந்த எண்ணம் வந்த அடுத்த நொடியே எப்படியாவது இந்த அறையை விட்டு வெளியேறி விட வேண்டுமென அவனுக்குத் தோன்றியது. ஒன்று வெளியேறி விட வேண்டும் அல்லது வெளியேறுகிற முயற்சியில் இந்த உயிர் போனால் கூட பரவாயில்லை என நினைத்தான்.
எழுந்து நின்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, வேகமாக அந்தக் கண்ணாடி சுவரைக் குத்தினான். கை வலிப்பதை பற்றியெல்லாம் எவ்விதக் கவலையும் இன்றி குத்திக்கொண்டே இருந்தான். கை வலிக்க வலிக்க வெறி கொண்டவன் போல வேகமாக குத்தினான்.
அந்தச் சுவரில் ஒரு இடத்தில் 'டிக்' என்ற சத்தம் கேட்டது. மோகன் அந்த இடத்தை உற்றுக் கவனித்தான். ஒரே ஒரு கண்ணாடித் துகள் மட்டும் உடைந்து கீழே விழுந்தது.
மோகனுக்கு நொடிப் பொழுதில் அவன் உடல் முழுக்க உற்சாகம் கொப்பளிக்கத் தொடங்கியது. அவன் உடைந்த கண்ணாடித் துகள் இருந்த புள்ளியில் தொடர்ந்து ஓங்கி ஓங்கி குத்தினான். கை வலிக்கின்ற போது காலால் அந்த இடத்தை எட்டி உதைத்தான். மெல்ல மெல்ல அந்தப் புள்ளி பெரிதாகி விரிசலடைந்து, 'டமார்' என்ற பெரும் சத்தத்துடன் அந்தக் கண்ணாடிச் சுவர் உடைந்து விழுந்தது.
மோகன் கண்ணீருடன் அந்தக் கண்ணாடி அறையைவிட்டு வெளியே வந்தான். இன்னும் அந்த இடம் முழுக்க சூனியமான வெண்மை மட்டுமே இருந்தது. மோகன் வேகமாய் அந்த அறையை விட்டு ஓடினான். அவனுடைய களைப்பையும் மீறி விடுதலை கொடுத்த பலத்தில் ஓடிக்கொண்டே இருந்தான். அவன் நீண்ட தூரம் ஓடியும் அவனால், அந்த வெள்ளை மைதானத்தை தாண்டி ஓட முடியவில்லை. ஆனாலும், அவன் மனம் தளராமல் ஓடினான்.
இறுதியாக, பொத்தென்று ஒரு கண்ணாடிச் சுவரில் போய் மோதி விழுந்தான். அவன் விழுந்த சுவருக்கு வெளியே அதைப் போலவே ஆயிரம் ஆயிரம் சுவர்கள் இருந்தன.