Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

யாயும் யாயும் - 20

20. மயிலுக்கு போர்வை


"சரி அந்த ஒளடதத்தை எப்படிச் செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்டாள் கண்ணகி.

"வள்ளுவன் சொன்ன வழியில் தான். நோய் நாடி நோய் முதல் நாடி. ஒரு மனிதன் எப்படி இறக்கிறான்? அவன் உடலில் உள்ள உறுப்புகள் அதனுடைய வேலையை சரியாக செய்யாத போது. அந்த உறுப்புகளை இன்னும் ஆராய்ந்து பார்த்தால் அவை எல்லாமே சிறு சிறு உயிரணுக்களால் ஆகி இருக்கிறது. அந்த ஒவ்வொரு உயிரணுவும் தனக்கான உணவைத் தயாரித்துக் கொண்டு அதனுடைய வேலைகளை சரியாக செய்கிறது. ஒரு உயிரணு சிதையத் தொடங்கியதும் அது பக்கத்தில் இருக்கிற இன்னொரு உயிரணுவையும் சிதைக்கத் தொடங்குகிறது. அந்தச் சிதைவு மெல்ல மெல்ல வளர்ந்து மொத்தமாக அந்த உறுப்பையே சிதைத்து அதனை செயல் இழக்கச் செய்கிறது. உறுப்பு சிதைகின்ற போது மனிதனும் சிதைகிறான்.

ஒரு வீரனுக்கு போரில் அடிபடுகிறது. அவனது உயிரணுக்கள் சிதைகிறது. பின்னர், அந்தச் சிதைவு மெல்ல மெல்ல பரவி அவனுடைய உறுப்புகள் செயல் இழந்து அவன் இறுதியில் இறக்கிறான்.

ஒரு உயிரணு சிதைவதை என்னால் தடுக்க முடியாது. ஆனால், சிதைந்து போன ஒரு உயிரணு நன்றாக இருக்கக்கூடிய இன்னொரு உயிரணுவை சிதைக்காமல் தடுக்க முடியும். இதன் மூலம் சிதைந்த உயிரணுக்கள் வீரனின் உடலில் இருந்து வெளியேறி விடும். சிதைந்த உயிரணுக்கள் வெளியேறிய இடத்தில் அவர்களின் உடலே புதிய உயிரணுக்களை உற்பத்தி செய்யும். இதன் மூலம் தீவிரமாக காயம் பட்ட ஒரு வீரனைக் கூட மரணத்தில் இருந்து சில நிமிடங்களில் மீட்க முடியும். அதையே நான் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். அந்த ஆராய்ச்சி மூலம் ஒரு ஒளடதத்தை உருவாக்கி அதனை ஒரு போர்வை வடிவில் மாற்றி இருக்கிறேன். அதனை சோதித்தும் பார்த்தேன். அந்தப் போர்வை ஒரு இறக்க இருந்த எலியைக் காப்பாற்றியது." என்றான் பேகன்.

"அப்படியென்றால் உங்கள் ஆராய்ச்சியில் நீங்கள் வென்று விட்டீர்கள் தானே? இன்னும் ஏன் அதைப் பற்றி கவலையோடிருக்கிறீர்கள்?"

"இல்லை நான் உருவாக்கிய அந்தப் போர்வை ஒன்றே ஒன்று தான். போருக்கு அந்த ஒரு போர்வை போதாது. இன்னும் நிறையா போர்வைகளை தயாரிக்க எனக்கு நீல நாகங்களின் பாம்பு சட்டை மலை மலையாய் தேவை."

"என்னது நீல நாகங்களா? அவைதான் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்து விட்டனவே. இப்போது அவை வெறும் கதைகளில் மட்டும் தான் இருக்கிறது." என்றாள் கண்ணகி.

"நானும் பல வருடங்களாக அப்படிதான் நினைத்தேன். ஆனால், அவற்றில் இன்னும் சில உயிரோடு தான் இருக்கின்றன. அவை தனது சிதைந்த உயிரணுக்களை மேலாடையை கழற்றி வீசுவது போல கழற்றி வீசி விட்டு, புதிய உயிரணுக்களை உருவாக்கி பல ஆண்டுகள் உயிரோடு வாழ்கின்றன. அந்த நீல நாகங்களின் இந்த ஆற்றலைப் பயன்படுத்தி தான் நான் எனது ஒளடதத்தை உருவாக்கப் போகிறேன். அதற்காக தான் எனக்கு அவை தேவைப்படுகிறது"

"நான் விவரம் தெரிந்த நாள் முதல் இந்தக் கானகத்தில் சுற்றித் திரிந்திருக்கிறேன். ஒரு போதும் இம்மாதிரியான நீல நாகத்தைப் பார்த்தது இல்லை. அவற்றை எங்கே சென்று தேடுவீர்கள்?"  

"அந்த நாகங்கள் மொத்தமும். இதோ எதிரே இருக்கிறது பார் அந்த மலைச் சிகரத்தில் உள்ள கடுவன் குகையில் இருக்கிறது"

"என்ன கடுவன் குகையா?" அதிர்ச்சியோடு கேட்டாள் கண்ணகி.

"ஆம்" என்று புன்னகைத்துக் கொண்டே சொன்னான் பேகன்.

"இப்போது உங்களது முழுக் கவலையையும் நீங்கள் எனக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். முதலில் கடுவன் குகைக்குள் போக மாட்டேன் என எனக்கு சத்தியம் செய்து கொடுங்கள்"

"நான் எப்படி சத்தியம் செய்து கொடுப்பேன் என நீ நினைக்கிறாய் கண்ணகி? இந்த மக்கள் என் குழந்தை..."

"நிறையா முறை சொல்லி விட்டீர்கள். இந்த மக்கள் உங்கள் குழந்தைகள் என்று. ஆனால், எந்தக் காரணத்துக்காகவும் நீங்கள் அந்தக் கடுவன் குகைக்குள் போகக் கூடாது"

"அப்படியென்றால் அந்த நீல நாகத்தின் உறித்த தோலுக்கு நான் என்ன செய்வது?"

"இப்போது செய்திருக்கிறீர்களே இந்தச் சிறிய அளவு மருந்து. அதைச் செய்ய உங்களுக்கு எங்கு அவை கிடைத்ததோ அங்கேயே அந்த நாகத்தை தேடிக்கொள்ளுங்கள்." என்றாள் கண்ணகி.

"அது ஒரு அதிசய நிகழ்வாக நடந்தது, அந்தக் குகைக்கு சற்று தொலைவில் இருந்த காட்டெருமை மேட்டுக்கு வேட்டைக்குப் போன நம் பொடியன்கள், ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே எனக் கண்டு, கொண்டு வந்து கொடுத்தது. அது தான் நான் இவ்வளவு நாட்களாக தேடியலைந்தது என்று அறிந்து கொண்ட பின் நான் இந்தக் காட்டை முழுக்க புரட்டி தேடி விட்டேன். அந்த நீல நாகங்கள் உதிர்த்த தோல்கள் கடுவன் குகையன்றி வேறு எங்குமே இல்லை. அதனால், நான் மிக நிச்சயமாக அந்த குகைக்குள் சென்று அவற்றை கொண்டு வரத்தான் போகிறேன்"

"அப்படி அந்தக் குகைக்கு சென்று உங்களுக்கு ஏதாவது ஆகிப்போனால் உங்கள் மக்களைக் காக்க இன்னொரு தலைவன் வருவான். ஆனால், நீங்களின்றி நான் என்ன செய்வது?"

"இந்த மாதிரியான கடின வேலைகளை செய்யும் அனைவருக்கும் ஒரு குடும்பம் இருக்கும். உன்னைப் போல ஒரு காதலி இருப்பாள். ஆனாலும் யாரேனும் அதனைச் செய்து தானே ஆக வேண்டும்?"

"சரி, அதுவே உங்கள் விருப்பமென்றால், நீங்கள் அப்படியே செய்யுங்கள். ஆனால், உங்களை ஒருவேளை மரணம் தீண்டினால் வடக்கு நாட்டினர் போல நானும் உங்களுடன் சிதையில் இறங்குவேன்."

"என்ன முட்டாள் தனம் இது கண்ணகி?"

"நீங்கள் செய்வது மட்டும் முட்டாள் தனமில்லையா? நீங்கள் போரிலோ, வேட்டையிலோ அல்லது நோயிலோ இறந்தால் கூட நான் தாங்கிக் கொள்வேன். ஏனென்றால் இவையனைத்திற்கும் எதிராக நீங்கள் மிக நிச்சயமாக போராடி இருப்பீர்கள். இதில் நீங்கள் வெற்றி பெற உங்களுக்கு சிறிதளவேனும் வாய்ப்பு இருந்திருக்கும். அவ்வாறு நீங்கள் போராடி இறந்தால், சரி வேறு வழியில்லை. மரணம் இயற்கை நியதி. அதுவொரு நிலை என நான் என்னைத் தேற்றிக் கொள்வேன்.

ஆனால், இந்த ஆராய்ச்சிக் கிறுக்கு ஏறி கடுவன் குகைக்கு நீங்கள் செல்வதை தடுக்காமல் போனால், நான் எவ்வளவு பெரிய பாவி ஆகிப் போவேன்.

உங்களுடைய புத்திசாலித்தனத்திற்கு எதிராக வாதிடுவது தான் சிரமம். என்னால் முடியாது. ஆனால், உங்களுடைய முட்டாள் தனத்தை வேண்டாமென வாதிட பெரிய புத்திசாலித் தனம் எதுவும் தேவையில்லை இன்னொரு முட்டாள் தனமே போதும். நீங்கள் கடுவன் குகைக்கு சென்றால் நான் கண்டிப்பாக உங்களுடன் சிதையேறுவேன்." என்று உறுதியாக சொன்னாள் கண்ணகி.

"ஏன் இதற்கு இப்படி சண்டையிடுகிறாய். எப்போதும் காதலியாக இருக்கிறாய். ஆனால், அவ்வப் போது மனைவியாக மாறி என்னை வதைக்கிறாய்."

"எப்போது காதலியாக இருக்க வேண்டும், எப்போது மனைவியாக இருக்க வேண்டுமென எனக்குத் தெரியும். நீங்கள் முதலில் அந்தக் குகைக்குப் போக மாட்டேன் என எனக்கு வாக்குக் கொடுங்கள்."

மிகுந்த யோசனைக்குப் பிறகு இறுதியாக, "சரி, நான் இனிமேல் கண்டிப்பாக அந்தக் கடுவன் குகைக்குள் போக மாட்டேன்" என அரை மனதாக சத்தியம் செய்தான் பேகன்.

சத்தியம் செய்த நொடி முதல் பேகன் உடலில் பொங்கி இருந்த உற்சாகமும் அவன் மனதில் பொங்கியிருந்த ஆர்வமும் ஒரு நொடியில் வற்றிப் போனது.

சில நிமிடங்கள் கடந்த பிறகு, சோகமாக இருந்த பேகனின் மனநிலையை மாற்ற "சரி, வாருங்கள் கொஞ்சம் வெளியே காலாற நடந்து வருவோம்" என்று கூப்பிட்டால் கண்ணகி.

"இல்லை, எனக்கு மனசு சரியில்லை நான் எங்கேயும் வரவில்லை." என்றான் பேகன்.

"நடந்தால் மனது சரியாகி விடும். வாருங்கள்." என்று கூறி கண்ணகி பேகனை வற்புறுத்தி அவர்களது அந்த சிறு மண் அரண்மனையை விட்டு வெளியே கூட்டி வந்தாள்.

இருவரும் அந்த மலைக் காட்டில் இருந்த தெருவின் வழியே நடக்கத் தொடங்கினர். வழியில் பார்த்த மக்கள் அனைவரும் பேகனை வணங்கினர். பெரியவர்கள் பேகனை உரிமையாக அழைத்து அவர்களுடைய பிரச்சனைகளை கூறினர். பேகன் அந்த மக்களுடைய பிரச்சனைகளையெல்லாம் கேட்டு அதனை விரைவில் சரி செய்வதாக கூறினான்.

பேகனும் கண்ணகியும் பேசிக் கொண்டே மெல்ல அந்தக் கானகத்தில் நடந்து கொண்டிருந்தனர். மெல்ல மெல்ல அவன் மனமும் கவலைகளை மறந்து இயல்பாக மாறத் தொடங்கியது. அவர்கள் நடந்து கொண்டிருந்த வழியில் சில சிறுவர்கள் ஒன்று கூடி மூங்கில் வில்லில் பிரம்பு அம்புகளை பொறுத்தி வைக்கோல் பொம்மைகளை குறிபார்த்து அடித்துக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும் பேகனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

அவன் அவர்களுக்கு எப்படி பிரம்பின் முனையில் அம்பைக் கட்டுவது. அம்பு எப்படி எய்வது போன்ற நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தான். அந்தச் சிறுவர்களோடு சிறுவனாக அவனும் சிறிது நேரம் வைக்கோல் பொம்மை மீது அம்பு எய்தி விளையாடினான். அவன் மனதிற்குள் இப்போது சோகமென்ற ஒன்று இருந்ததற்கான சுவடே இல்லாமல் போனது.

அப்போது அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த ஆலமரத்தின் அடியில் ஒரு மயில் தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்தது. பேகனும், கண்ணகியும், அந்தச் சிறுவர்களும் அந்த மயிலருகே சென்றனர்.

அந்த மயிலைப் பார்ப்பதற்கு குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பது போல இருந்தது.

கண்ணகி, "அந்த மயிலுக்கு ஏதோ உடல் முடியவில்லை. அது என்னவென்று பாருங்கள்" என்றாள்.

பேகன் அந்த மயிலின் அருகே அமர்ந்து அதன் கழுத்தைப் பிடித்துப் பார்த்தான். பின்னர் கண்ணகியைப் பார்த்து, தன் கண்களாலேயே "அவ்வளவு தான். இந்த மயில் முடியப் போகிறது" என்று சொன்னபடி கைகளை விரித்தான்.

"இல்லை, அப்படிச் சொல்லாதீர்கள். உங்களால் இந்த மயிலைக் காப்பாற்ற முடியும்" என்றாள் கண்ணகி.

"கண்ணகி நான் என் போர்வையை எலியிடம் மட்டும் பரிசோதித்து உள்ளேன். அது இந்த மயிலை குணப்படுத்துமா? என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது."

"ஆனால், எனக்கு உங்கள் மீது நம்பிக்கை உள்ளது. வேகமாக உங்கள் போர்வையை எடுத்து வரச் சொல்லுங்கள்"

பேகன் அங்கிருந்த சிறுவர்களில் ஒருவனைப் பார்த்து, "வேகமாக அரண்மனைக்குச் சென்று, அங்கிருக்கிற சேவகனிடம் நான் தயாரித்த போர்வையை வேகமாகக் கொண்டு வரச் சொல்" என்றான்.

இதைக் கேட்டதும் அந்த சிறுவன் மிக வேகமாக அரண்மனையை நோக்கி ஓடினான். சிறிது நேரத்தில் பேகன் அவன் கையால் தயாரித்த மூலிகைப் போர்வை அவனிடம் வந்து சேர்ந்தது. பின்னர் அந்தப் போர்வையை நடுங்கிக் கொண்டிருந்த மயில் மீது போர்த்தி விட்டான்.

போர்வையைப் போர்த்திய சிறிது நேரத்தில் மயிலின் நடுக்கம் நின்றது. பேகன் அந்தப் போர்வையை மயிலின் மீதிருந்து எடுத்தான். மயில் மெல்ல எழுந்து நடக்கத் தொடங்கியது. பேகன் மீண்டும் மயிலுடைய கழுத்தைத் தொட்டு நாடியைப் பார்த்தான். அந்த மயில் வழக்கம் போல சீரான நாடியை அடைந்து விட்டிருந்தது. இறக்க இருந்த மயில் காப்பாற்றப்பட்டதால் அங்கிருந்த அனைவரும் மகிழ்ந்தனர்.

கண்ணகி பேகனுடைய தோள்களில் சாய்ந்து கொண்டு, அவன் உள்ளங்கையை தன் உள்ளங்கையோடு சேர்த்துக் கொண்டாள். அது பொது இடத்தில் யாரும் அறியாமல் அவனுக்கு கொடுக்கப்படுகிற முத்தம். தான் தன்னை இழந்து செய்த ஆராய்ச்சியின் விளைவை தன் காதலி அங்கீகரித்ததை எண்ணி மனம் குளிர்ந்தான்.

பேகன் மயிலைக் குணப்படுத்திய காட்சியைக் கண்ட சிறுவர்கள். ஒருவர் மாற்றி இன்னொருவருக்குச் சொல்ல, இறுதியாக பரிசில் பெற வந்த பாணர்கள்.

"மயிலுக்கு போர்வை ஈந்த பேகன்" என்று பாடிச் சென்றனர். பின்னர், அதுவே ஒரு கதையாக மாறி நாடு நகரம் முழுக்க நடை போடத் தொடங்கியது.

மயிலைக் காப்பாற்றிய அந்த இரவில் தன் அரண்மனைக்குத் திரும்பிய பேகன், ரகசியமாக ஆனால் தீர்க்கமாக முடிவு செய்தான். கடுவன் குகைக்குள் இருக்கிற நீல நாகத்தின் கழற்றிய தோல்களை எப்படியாவது எடுத்தே தீர வேண்டும்.