21. டார்ச்சர் டெஸ்ட்
மோகன் அவனது கண்கள் விரிய அவனை நோக்கி வருகிற மரணத்தை அதிர்ச்சியுடன் பார்த்தபடி உறைந்து நின்றான்.
திடீரென அந்த வேல்க்கம்பு அந்தரத்தில் அப்படியே நின்றது. மோகனுக்கு இது வரை நடந்தது எப்படி புரியவில்லையோ அது போல இப்போது நடப்பதும் புரியாமல் திகைத்து நின்றான்.
மயில்வாகனனும் ஒரு நொடி அதிர்ச்சி அடைந்து, பின்னர் சுதாரித்துக்கொண்டான். இது திருச்செந்தாழையின் வேலை. அப்போது தான் மயில்வாகனன் தன்னிலைக்கு வந்தான். விசாரணைக்கு கிளம்பிய போது,
"என்ன ஆனாலும் அந்தப் பையனை உயிரோட கொண்டு வரணும்" என்று திருச்செந்தாழை சொன்னது நினைவிற்கு வந்தது.
திருச்செந்தாழை, மயில்வாகனனுக்கும் மோகனுக்கும் இடையே வந்து நின்றான். அங்கே அந்தரத்தில் நின்று கொண்டிருந்த வேல்க்கம்பை தனது கையால் தொட்டு எடுத்தான். மயில்வாகன் தனது வெள்ளிக் காப்பைத் தொட்டபடி "பவர் டவுன்" என்றான். பின்னர், ஒரு பெரும் வெள்ளை ஒளி அவனை மூடி மறைந்தது. அப்படி மறைகின்ற போது அவனது கவச உடையும் மறைந்து அவன் முதலில் அணிந்திருந்த ஃபார்மல் உடைக்கு மாறினான்.
திருச்செந்தாழை மோகனைப் பார்த்த படி விரலசைத்தான் அப்போது அருகே மரத்தில் இருந்த ஒரு சிறு கிளைத் துண்டு உடைந்து பறந்து வந்து மோகனது காதுக்கும் கழுத்துக்கும் இடையே இருந்த ஒரு மர்மப் புள்ளியில் வேகமாய் அடித்தது. மோகன் பொத்தென்று மயங்கிக் கீழே விழுந்தான். அப்போது அவனைப் பிடித்துக் கொண்டிருந்த அத்தனைப் பறவைகளும் அவனை விட்டு விலகி நின்றது. மயில்வாகனன் அந்தப் பறவைகளை விலகிச் செல்லும்படி தன் விரலால் ஆணையிட்டான். உடனே, அத்தனைப் பறவைகளும் அங்கிருந்து பறந்து மறைந்தன.
திருச்செந்தாழை அந்த வேல்க்கம்பை எடுத்து வந்து மயில்வாகனனிடமே கொடுத்தான். மயில்வாகனன் அந்த வேல்க்கம்பை கையில் வாங்கி தன் விரலால் ஒரு சொடுக்கு சொடுக்கினான். அந்த வேல்க்கம்பு மறைந்து போனது.
"என்னை மன்னிச்சுரு திரு தெரியாம ஆயிடுச்சு" என்றான் மால்வாகனன்.
"மயிலு அந்தப் பையன் யாருன்னு உனக்கு தெரியுமில்லை? நான் மட்டும் சரியான நேரத்துக்கு வரலைன்னா என்ன ஆயிருக்கும்? கொஞ்சம் கவனமா பாத்துக்கோ" என்றான் திருச்செந்தாழை.
மயில்வாகனன் அமைதியாக நின்றுகொண்டிருந்தான்.
"சரி விடு, மீராவுக்கு என்ன ஆச்சு?" என்று கேட்டான்.
"நல்லா, பெரிய ஒரு மின்னல் அடி. மீராவுக்கு நாடியே இல்லை. அதனால தான் நான் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்." என்றான் மயில்வாகனன்.
"புரியுது மயிலு. ஆனா அந்தப் பையன் மீராவுக்கு குறி வைக்கல உன்னை அடிக்க முயற்சி பண்ணி தான். மீராவை அடிச்சுட்டான். ஒருவேளை இதே மாதிரி தான் அந்த விஜயேந்திரன் பையனையும் ஏதோ பண்ணிட்டான் போல? சரி அதை அப்புறமா விசாரிச்சுக்கலாம்"
என்று சொல்லிவிட்டு திருச்செந்தாழை அடிபட்ட அந்த மயிலிடம் சென்றான். பின், அந்த மயிலின் கழுத்தைத் தொட்டுப் பார்த்துவிட்டு,
"மீரா உண்மையிலேயே ரொம்ப பிடிவாதம் தான். சாகமாட்டேன்னு விடாம உயிரைப் பிடிச்சிட்டு இருக்கா. சீக்கிரம் நம்ம இடத்துக்குக் கூட்டிட்டுப் போயிட்டா காப்பாத்திறலாம்" என்றான்.
இதைக் கேட்டவுடனேயே மயில்வாகனனுடைய முகத்தில் இருந்த ஒரு பெரும் கவலை மறைந்து ஒரு நிம்மதி வந்தது.
பின்னர், மயில்வாகனன் மீரா என்ற அந்த மயிலையும், திருச்செந்தாழை மோகனையும் தூக்கிக் கொண்டு அருகே இருந்த மரத்தின் அருகே நிறுத்தி வைத்திருந்த அவர்களது புஷ்பக விமானத்தின் அருகே சென்றனர். இருவரும் அவரவருடைய விமானத்தில் ஏறி விட்டு பொத்தானை அழுத்தினர். அந்த விமானம் வானில் ஏறிப் பறக்கத் தொடங்கியது. அந்த இரவில் யாரும் அவர்கள் மேலே பறப்பதை பார்க்கப்போவதில்லை என்றாலும், அவர்கள் அவர்களையும் அந்த விமானத்தையும் மறைத்துக் கொண்டு பறந்தனர்.
சரியாக இருபது நிமிடங்களுக்குள் அவர்கள் தங்களது ரகசியத் தலைமையிடமான அந்நகரின் புராதன தியேட்டருக்கு வந்தனர். அவர்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வழியாக கீழே இறங்கி வந்தனர்.
முதல் முறையாக இந்திரசேனையில் இல்லாத ஒருவன் பாக்ஸ் ஆஃபிஸ் வழியாக அந்த இடத்திற்கு உயிரோடு வந்தான். அதுவும் எவ்வித அதிகாரமும் பதவியும் இல்லாத கல்லூரி நண்பர்களால் கலாய்க்கப்படக் கூடிய மொக்க மோகன்.
மீராவுக்கு அடி பட்டிருப்பதால் மயில்வாகனன் இந்த விதிகளைப் பற்றியெல்லாம் பெரிதாக யோசிக்கவில்லை.
அவர்களது இடத்திற்குள் நுழைந்தவுடனேயே மயில்வாகனன் மீராவைத் தூக்கிக்கொண்டு மருத்துவ அறைக்குச் சென்றான். அங்கே ஒரு அலமாரியில் இருந்து பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பேகன் தயாரித்து வைத்திருந்த, மயிலுக்கு கொடையாக கொடுக்கப்பட்டதாக பாணர்கள் பாடிய அந்தப் போர்வையை எடுத்து அடி பட்டிருந்த மீராவை அந்தப் போர்வையில் சுற்றினான். சிறிது நேரத்தில் அந்தப் போர்வைக்குள் ஒரு அசைவு தெரிந்தது. அந்த மயில் போர்வைக்குள் இருந்த படி மிகவும் கஷ்டப்பட்டு மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. மீரா முழுவதுமாக குணமடைய வேண்டுமென நினைத்துக் கொண்டு மயில் வாகனன் மீராவின் அருகிலேயே அமர்ந்து கொண்டான்.
திருச்செந்தாழை மோகனை விசாரணை அறைக்கு கூட்டிச் சென்று, ஸ்கேனர் நாற்காலியில் அமர வைத்தான். மோகன் இன்னும் மயங்கிய நிலையிலேயே இருந்தான். ஸ்கேனர் நாற்காலியைப் பார்ப்பதற்கு ஒரு சொகுசு சாய்வு நாற்காலியில் இ.சி.ஜி வையர்களும் கணினியும் இணைக்கப்பட்டது போல இருந்தது.
திருச்செந்தாழை மிகக் கவனமாக அந்த ஸ்கேனர் இயந்திரத்தில் இருந்த எலக்ட்ரோடுகளை எடுத்து மோகனது தலையில் வைத்தான். அந்த எலக்ட்ரோடோடு இணைக்கப்பட்டிருந்த கணினித்திரையில் மோகனது நினைவுகள் எல்லாம் காட்சிகளாக தோன்றியது. மோகனது நாடக ஒத்திகைக்கு அவனது நண்பர்களின் எதிர்வினை, மாயாவைப் பார்த்து இவன் வழிகின்ற போது மாயாவுடைய எதிர்வினை என அனைத்தையும் பார்த்து திருச்செந்தாழை புன்னகைத்தான்.
பொதுவாக ஒருவனுடைய மனதில் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் ஒருசில உணர்வுகள் மட்டும் மேலோங்கி இருக்கும். மற்றவர்கள் அவனைக் கேலி செய்யும் போது கூச்சமும் சில நேரங்களில் கோபமும் இருக்கும். இதுவே மாயா அவனைப் பார்க்கிற வேளைகளில் அவனுள் வெட்கமும் படபடப்பும் இருக்கும். ஆனால், மயில்வாகனன் அவன் முன் தோன்றுவதற்கு ஒரு சில நொடிகள் முன்னாடி மாயாவின் "ஹாய்" மெஸேஜைப் பார்த்த மாத்திரத்தில் அவனுள் சந்தோஷம், படபடப்பு, வெட்கம், கூச்சம், பயம், போதை என அனைத்து உணர்வுகளும் தாறுமாறாக தாளம் போட்டிருக்கிறது. இப்படி அத்தனை உணர்வுகளும் ஒன்றாக வெடிக்கிற நொடியில்தான் ஒருவன் தன் உடலைக் கடந்து அங்கும் இங்கும் எங்கும் அலைகிற ஒரு சிறு புள்ளியென மாறிப் போகிறான். மோகனைப் பார்த்து பாவம் சிறு பையன் என நினைத்துக் கொண்டான்.
பிறகு திருச்செந்தாழை சில நிமிடங்களில் தீவிரம் அடைந்து தான் எடுத்துக் கொண்ட பணியில் மூழ்கிப் போனான். விஜயேந்திரப் பிரசாத்தின் மகன் உலக மகா யோக்கியன் ஹரீஷ் காணாமல் போன அன்றைய இரவின் மோகனின் நினைவுகளைத் தேடிப் பார்த்தான்.
மோகன் வீட்டிற்கு வந்து இரவுணவை தனது அத்தையுடன் உண்கிறான். பின்னர் படுக்கைக்கு சென்று தூங்குகிறான். மாயாவைப் பற்றிய கனவைக் காண்கிறான். பின்னர் அதிகாலை எழுந்து கல்லூரிக்கு நேரமாகி விட்டதெனக் கூறி அவசர அவசரமாக ஓடுகிறான். இந்தக் காட்சிகளைப் பார்த்ததும் திருச்செந்தாழைக்கு எதுவும் புரியவில்லை. மீண்டும் மீண்டும் அந்த நினைவுக் குறிப்புகளை ஸ்கேன் செய்தும் பார்த்தான். ஆனால், எத்தனை முறை செய்தாலும் அதே காட்சிகள் தான் திரும்பத் திரும்ப வருகிறது.
திருச்செந்தாழை கணினிக்கு வேறு சில கட்டளைகளை கொடுத்து ஹரீஷ் காணாமல் போன அந்த இரவின் குறிப்பிட்ட சில மணி நேரங்களை உள்ளீடு செய்தான். குறிப்பிட்ட அந்த சில மணி நேரங்களில் திரை ஏதுமற்ற ஒரு வெண்மையாக இருந்தது. அந்த நேரத்தில் மோகனது நினைவில் எவ்விதக் காட்சிகளும் பதிவாகவில்லை. இது திருச்செந்தாழைக்கே சற்று சவாலாக இருந்தது. எப்படி அந்த குறிப்பிட்ட மணி நேரங்களில் மட்டும் நினைவுகள், காட்சிகள் ஏதுமற்ற ஒரு சூனியமாக இருக்கும்? ஒரு வேளை மோகன் தூங்கியிருந்தால் அவன் கனவுகளாவது அங்குப் பதிவாகியிருக்கும். ஏதுமற்ற ஒரு மனது எப்படிச் சாத்தியம்? என யோசித்துக் கொண்டிருந்தான்.
அரை மணி நேரம் கழித்து மீரா பேகனின் போர்வையிலிருந்து முழுவதுமாக குணமாகி வெளியே வந்தது.
மீராவை உயிருடன் பார்த்த மயில் வாகனன் அதனைக் கட்டி அணைத்துக் கொண்டான். பின்னர், அதற்கு மாறி மாறி முத்தமிட்டான். அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதை அவனால் தடுக்க முடியவில்லை. மீராவை ஆசை தீர கட்டி அணைத்தப் பின் அந்த மயிலை மெல்ல தூக்கிக் கொண்டு சென்று, அதனுடைய கூண்டில் படுக்க வைத்தான். பின்னர், அதனுடைய தட்டில் சில மக்காச்சோளத்தைப் போட்டுவிட்டு இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சம் குடிக்கத் தண்ணீரை வைத்து விட்டு, அவனும் விசாரணை அறைக்கு வந்தான்.
திருச்செந்தாழை அவனது நெற்றியில் கை வைத்துக் கொண்டு கணினித் திரையை பார்த்துக் கொண்டு, அதன் மெளஸை கோபமாக ஆட்டிக் கொண்டிருந்தான்.
"என்ன திரு ஏதாவது கிடைச்சதா?" என்று கேட்டான் மயில்வாகனன்.
"இன்னும் எதுவும் சிக்கல மயிலு. கிட்டத்தட்ட ஹரீஷ் காணாமப்போன அந்த நைட்டோட விஷுவல்ஸ் எதுவுமே கிடைக்கல. கிடைச்ச விஷுவல்ஸை வைச்சுப் பார்த்தா, ஹரீஷ் காணாம போன அன்னைக்கு இவன் சும்மா தின்னுட்டு தூங்கிட்டு தான் இருந்திருக்கான்."
"அப்போ, நாம தப்பான ரூட்ல போயிட்டு இருக்கோம்னு சொல்றியா? தேவையில்லாம இந்தப் பையனை இங்க தூக்கிட்டு வந்துட்டமோ?" என்று கேட்டான் மயில்வாகனன்.
"எனக்கு அப்படித் தோணல மயிலு. அதுக்கு ரெண்டு காரணம். ஒன்னு நாம எனர்ஜி மானிட்டர்ல பார்த்த அந்த எனர்ஜி இவன் கிட்ட இருந்து தான் வந்திருக்கு.
அத நாமே இன்னைக்கு நேரிலயே பார்த்தோம்.
இன்னொன்னு அன்னைக்கு ராத்திரி ஒரு பர்ட்டிக்குலர் டைம்ல இவன் மெமரில ஒன்னுமே இல்லை. இது ரொம்பவும் வியர்ட்ஆ இருக்கு." என்றான் திருச்செந்தழை.
"இவனுக்கு மின்னல் சக்தி இருக்குதுன்னு நானும் ஒத்துக்கிறேன். நம்மளோட எனர்ஜி மானிட்டரும் கரெக்டா தான் காட்டியிருக்கு. அதுல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனா, எப்படி இவனோட நினைவுகள்ல ஒரு குறிப்பிட்ட போர்ஷன்ல காணாம போயிருக்கும்? இது எப்படி சாத்தியம் ஆச்சு? வேற யாராவதுனால இப்படி பண்ண முடியுமா?"
"ஒரு சிலரால தன்னோட நினைவுகளே தாங்களே அழிச்சுக்க முடியும். அதுக்கு அவங்களுக்கு அதிகப்படியான மன உறுதியும் கவனமும் வேணும். அது இல்லாட்டி இப்படியெல்லாம் பண்ண முடியாது. ஆனா, இந்தப் பையனைப் பார்த்தா அந்த மாதிரி கூர்மையான கவனத்தோடவும் வலிமையோடவும் இருக்கிற மாதிரி தெரியல." என்றான் திருச்செந்தாழை.
"இவன் மாஸ்டரோட பையன்தான அதனால ஏதாவது ஸ்பெஷல் பவர் ஏதாவது இருக்குமோ?" என்று கேட்டான் மயில்வாகனன்.
"கண்டிப்பா இல்லை. இதெல்லாம் மாஸ்டரே நினைச்சாக் கூட பண்ண முடியாது" என்றான் திருச்செந்தாழை.
"அப்படின்னா வேற என்ன காரணமா இருக்கும்னு நீ நினைக்கிற திரு?"
"இவனுக்கு ஒரு வேளை ஸ்பிலிட் பர்சனாலிட்டியா கூட இருக்கலாம். ஒரே நினைவுக்குள்ள ரெண்டு பேரு. நான் நினைக்கிறது ஒரு வேளை சரியா இருந்தா, இவனுக்குள்ள இருக்கிற இன்னொரு பர்சனாலிட்டிய வெளிய கொண்டு வந்தா நம்மளோட கேள்விக்குப் பதில் கிடைக்கலாம்."
"சரி அதை எப்படி கொண்டு வரது?" என்று கேட்டான் மயில்வாகனன்.
"டார்ச்சர் டெஸ்ட்டை முயற்சி பண்ணிப் பார்க்கலாம்" என்றான் திருச்செந்தாழை.
மயில்வாகனனுக்கு ஒரு நொடியில் திருச்செந்தாழையைப் பார்த்து பயமாக இருந்தது.