Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

யாயும் யாயும் - 10

10. விசாரணை 


விஜயேந்திரன் "தண்ணீ வேணும். ப்ளீஸ்." என்று இறைஞ்சினான்.

"தரேன், உள்ள வாங்க" என்று அழைத்து ஹாலில் இருந்த ஒரு பிரம்பு சோஃபாவில் அமர சொல்லிவிட்டு சமையலறைக்குள் சென்றான்.

விஜயேந்திரன் அந்த அறையை கவனித்தார். கீழே பார்த்த நெருக்கடிக்கும் சத்தத்திற்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் இருந்தது. அந்த இடமே ஒரு அசாத்திய சுத்தமாக மூச்சுமுட்டுகிற ஒழுங்காக இருந்தது. ஒரு பதினாறுக்கு பத்து ஹால், பத்துக்கு பத்து ஒரு படுக்கையறை அந்த அறை முழுக்க மரத்தலான ஷெல்ஃப்கள் அதில் முறையாக அடுக்கப்பட்ட புத்தகங்கள். அறையின் ஓரத்தில் ஒரு மேஜை அதன் மீது ஒரு சின்ன லேப்டாப் அதற்கு எதிரே ஒரு பிளாஸ்டிக் சேர். பத்துக்கு எட்டில் ஒரு சமையலறை அதிலிருந்து அருமையான ஒரு கத்திரிக்காய் சாம்பார் மனம் வீசிக் கொண்டிருந்தது. அந்த அறையிலிருந்து ஒரு சொம்பில் தண்ணீரை எடுத்துக் கொண்டு திருச்செந்தாழை வெளியே வந்தான். ஒரு கட்டம் போட்ட நீல நிற லுங்கியும் வெள்ளை நிற உள் பனியனும் அணிந்திருந்தார். தெங்பை போடாத வயிறு, சற்று விரிந்த மார்பு, வலுவான புஜங்கள், யாரும் அவ்வளவு எளிதில் திருச்செந்தாழையிடம் சண்டைக்கு செல்ல துணிய மாட்டார்கள்.

அந்தத் தண்ணீரை விஜயேந்திரனிடம் கொடுத்து விட்டு மீண்டுமொருமுறை, "உட்காருங்க" என்றான்.

தண்ணீரை வாங்கிப் பருகிய விஜயேந்திரன் ஆசுவாசமாக அந்த சோஃபாவில் அமர்ந்தான். அவனது டிரைவர் ஃப்ளாட் வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்.

திருச்செந்தாழை சென்று டிரைவருக்கும் தண்ணீர் கொடுத்தான். தண்ணீரை வாங்கி வேக வேகமாகக் குடித்த டிரைவர்,

"ரொம்ப தாங்ஸ் சார்" என்றான்.

திருச்செந்தாழை கதவைச் சாத்திவிட்டு வந்து விஜயேந்திரனுக்கு எதிரே இருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்தான். கால் மீது காலைப் போட்டுக் கொண்டு, மேஜையில் கிடந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்து மடியில் திறந்து வைத்துக் கொண்டு திருச்செந்தாழை கேட்டான்.

"சொல்லுங்க சார் உங்க பேரு என்ன?"

திருச்செந்தாழை இப்படி தன் எதிரே கால் மீது கால் போட்டு அமர்ந்திருப்பதை விஜயேந்திரன் விரும்பவில்லை. அதுவும் நாட்டிலேயே மிக முக்கியமான தொழிலதிபரான தன்னைப் பார்த்து பேரு என்ன? என்று கேட்டது அவருக்கு எரிச்சலை உண்டாக்கியது.

"ம்...சொல்லுங்க சார் உங்க பேரு என்ன?"

"கமிஷ்னர் என்னைப் பத்தி எதுவும் சொல்லலையா?" என்றான் விஜயேந்திரன்.

"கமிஷ்னர் நிறையா தடவை கால் பண்ணி இருக்காரு. நான் பாக்கலை. ஒருவேளை உங்களைப் பத்தி சொல்றதுக்கா கூட இருக்கலாம். எனக்குத் தெரியல" என்றான் திருச்செந்தாழை.

"நீங்க அந்தக் காலை எடுத்திருக்கனும். எடுத்திருந்தா நான் யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்."

"ஓ! அப்படியா, நீங்க ஒன்னு பண்ணங்க சார். இப்போ கிளம்பி போங்க, கமிஷ்னர் மறுபடியும் கால் பண்ணட்டும், நான் உங்களைப் பத்தி தெரிஞ்சுக்கிறேன். அப்புறமா வாங்க" என்று சொல்லி விட்டு நோட்டை மூடி மேஜை மீது வைத்து விட்டு பிரம்பு நாற்காலியில் நன்கு சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

"திருச்செந்தாழை விஷயம் ரொம்ப அர்ஜெண்ட். ப்ளீஸ் கொஞ்சம் என்னோட பிரச்சனைய கேட்குறீங்களா?"

"நான் உங்க பிரச்சனைய கேட்கணும்னா, நீங்க தான் உங்களைப் பத்தி சொல்லணும். உங்களுக்கு ஒன்னும் அதுல பிரச்சனை இல்லையே?" என்றான் திருச்செந்தாழை.

"திமிரு பிடிச்ச சுண்ணி, பையன் மட்டும் கிடைக்கட்டும் டா, உன்னை உயிரோட எரிச்சு விடுறேன்" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு
திருச்செந்தாழையிடம் பேசத் தொடங்கினான்.

"என் பேரு விஜயேந்திரன்"

திருச்செந்தாழை தனது நோட்டில் குறித்துக் கொண்டான்.

"என்ன தொழில் பண்றீங்க?" என்று கேட்டான்.

இவன் உண்மையிலேயே தெரியாமல் தான் கேட்கிறானா? அல்லது வேண்டுமென்றே வீம்புக்கு கேட்கிறானா? என்று புரியாமல் விஜயேந்திரன் வியந்தார்.

"ம்... சொல்லுங்க சார். என்ன பிஸினஸ் பண்றீங்க?" என்று மறுபடியும் கேட்டான்.

இந்தியாவின் 31 சதவீத முதலாளி என்று சொல்லத் தான் விஜயேந்திரன் நினைத்தார். பின்னர் தனது 22 தொழில்களையும் லிஸ்ட் போடத் தொடங்கினார். அவ்வளவு பெரிய லிஸ்டை விஜயேந்திரன் சொல்லி முடித்த பின்பு திருச்செந்தாழை ஒரு பெரும் மூச்சு விட்டான்.

பிறகு, "கேஸ் என்ன சொல்லுங்க." என்றான்.

"மூணு நாளைக்கு முன்னாடி என் பையன் வீட்டை விட்டுப்போனான் ஆனா, இன்னும் வரல, அவனுக்கு என்ன ஆச்சுன்னே தெரியல. நீங்க தான் அவனைக் கண்டுபிடிச்சு தரணும்"

"சார், உங்களுக்கு ஒரே பையனா?"

"ஆமா மிஸ்டர் திரு ரொம்ப வருஷம் குழந்தை இல்லாம பொறந்த பையன் "

"அப்ப உங்க பையன் கிட்ட பெரிய கார், லட்சக் கணக்குல செலவு பண்ண கிரெடிட் கார்டு எல்லாமே இருக்கணுமே?"

"ஆமா திரு, அவன் கிட்ட எல்லாம் இருக்கு. ஒருவேளை அதுக்காக யாராவது அவனை ஏதாவது பண்ணியிருப்பாங்களோ?"

திருச்செந்தாழை சிரித்துக் கொண்டு,

"சார் முதல்ல எதுக்கு உங்க பையனை யாராவது எதாவது பண்ணியிருப்பாங்கனு நினைக்கிறீங்க. அவன் எங்கேயாவது லடாக்குக்கு அட்வென்சர் டிரிப் ஏதாவது போயிருப்பான். நீங்க தைரியமா வீட்டுக்குப் போங்க. இன்னும் ரெண்டு நாளுல அவனே எதாவது ரீல்ஸ் போடுவான் பாருங்க" என்று சொல்லிவிட்டு திருச்செந்தாழை எழுந்தான்.

"மிஸ்டர் திரு எவ்ளோ வேலை இருந்தாலும் ஹரீஷ் என்கிட்டப் பேசாம ஒரு நாள் கூட இருக்க மாட்டான். அவனைக் கண்டிப்பா யாரோ ஏதோ பண்ணிட்டாங்க" என்றார் விஜயேந்திரன்.

"சார், நான் தான் இவ்ளோ சொல்றேன் இல்லை. உங்கப் பையனுக்கு எதுவும் ஆயிருக்காது. ப்ளீஸ் கிளம்புங்க. எனக்கு நிறையா வேலை இருக்கு"

"மிஸ்டர் திரு, நீங்க ரொம்பத் திமிரா நடந்துக்கிறீங்க. என்னை ரொம்பக் கோவப்படுத்துறீங்க. நான் நினைச்சா என்ன வேணும்னாலும் பண்ண முடியும்"

"அதான், என்ன வேணும்னாலும் பண்ண முடியும்ல, அப்போ நீங்களே உங்கப் பையனை கண்டுபிடிச்சுக்கோங்க" என்றான் திருச்செந்தாழை.

"மிஸ்டர் திரு என்னைக் கெஞ்ச வைக்காதீங்க. உங்களுக்கு என்ன வேணும், எவ்ளோ ஃபீஸ் வேணும் சொல்லுங்க நான் தரேன். நீங்க என் பையனை பத்திரமா என் முன்னாடி கொண்டு வந்து நிறுத்துங்க போதும்"

"அப்படியா?
அப்போ ஒரு நூறு கோடி கொடுங்க. உங்கப் பையன் ஒரு வேளை உயிரோட இருந்தா நான் உங்க முன்னாடி கொண்டு வரேன்"

"நூறு கோடியா?"

"ஏன் சார் உங்கப் பையன் அவ்ளோ வொர்த் இல்லையா?"

"சரி மிஸ்டர் திரு, நான் தரேன். என் பையனை மட்டும் பத்திரமா என்கிட்ட கொண்டு வந்து சேர்த்திடுங்க போதும்"

"மிஸ்டர் விஜயேந்திரன். நௌ யூ ஹாவ் மை க்யூரியாசிட்டி.

எனக்கு உங்கப் பையனை பத்தி ஒரு சில டீடெய்ல்ஸ் தெரிஞ்சாகனும்"

"சொல்லுங்க மிஸ்டர். திரு உங்களுக்கு என்ன தெரியனும்?"

"உங்க பையன் பொதுவா எப்படி?"

"ரொம்ப நல்ல பையன். நான் அவனுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கேன். ரொம்ப செல்லமா வளர்ந்தப் பையன். நீங்க சொல்ற மாதிரி அவன் என்கிட்ட செல்லாம எங்கேயும் போக மாட்டான்."

"சமீபத்துல அவன் ஏதாவது உங்ககிட்ட கேட்டு அதுக்கு நீங்க அவன் கிட்ட முடியாதுன்னு சொல்லீட்டீங்களா? ஏதாவது லவ் மேட்டர்?"

"அப்படியெல்லாம் எதுவுமே இல்லை மிஸ்டர் திரு. என் பையன் ஆசைப்பட்ட எதுவும் இதுவரைக்கும் அவனுக்கு கிடைக்காம போனதில்லை"

"உங்களுக்கோ இல்லை உங்கப் பையனுக்கோ யாராவது எதிரிகள் இருக்காங்களா?"

"ஹரீஷுக்கு யார் எதிரிகள்னு தெரியல. ஆனா, எனக்கு என் தொழில்ல நிறையா எதிரிகள்."

"உங்கப் பையன் யார் கூட யாவது ரிலேஷன்ஷிப்ல இருக்கானா?"

"எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அப்படி எதுவும் இல்லை."

"சரி, உங்கப் பையனுக்கு எதுல இன்ட்ரஸ்ட்"

"அவன் ஒரு ரைஃபிள் ஷூட்டர். அதோட ஹீ இஸ் வெரி மச் இன் டூ இட். அடிக்கடி அவன் ஹன்ட்டிங் வேற போவான்."

"எங்க ஹன்ட்டிங் போவான்?"

"எங்களோட, எஸ்டேட் ஒன்னு கொடைக்கானல்ல இருக்கு அங்கப் போவான். அதுக்காகவே லைசென்ஸோட ரக்கர் ஹாக் ஐ ரைஃபிள் வைச்சுருக்கான்"

"யார் கூட வேட்டைக்குப் போவான்"

"எஸ்டேட்லயே ஹன்ட்டிங் தெரிஞ்ச வேலைக்காரங்க இருக்காங்க. அவங்களோட தான் இவன் பெரும்பாலும் போவான். எப்போவாவது அவன் ஃப்ரெண்ட் வினோத் கூடப் போவான்.

"வினோத் ஆ அவன் யாரு?"

"அவன் ஹரீஷோட சைல்ட் ஹூட்ல இருந்து ஃப்ரெண்ட்"

" வினோத் எந்த மாதிரிப் பையன்? அவனுக்கும் ஹரீஷுக்கும் ஃப்ரெண்ட்ஷிப் எந்த மாதிரி?"

"வினோத்தும் ரொம்ப நல்ல பையன். அவன் மோஸ்ட் ஆஃப் தி டைம் இங்க தான் ஹரீஷோட வீடியோ கேம் விளையாடிட்டு இருப்பான். ஹரீஷ் அவன்கிட்ட தான் எல்லாத்தையும் ஷேர் பண்ணுவான்."

"சரி, உங்கப் பையன் காணாம போன அன்னைக்கு எங்கப் போறேன்னு சொல்லிட்டுப் போனான்?".

"வினோத் வீட்ல ஏதோ பார்ட்டின்னு சொல்லிட்டுப் போனான்."

"எத்தனை மணிக்குப் போனான்?"

"நைட் ஒரு பத்து மணி இருக்கும்"

"உங்க பையன் போன கார் கடைசியா எங்க இருந்தது?"

"வினோத் வீட்ல தான் இருந்துச்சு"

"நீங்க வினோத் கிட்ட ஹரீஷ் எங்க போனான்னு கேட்டீங்களா?"

"கேட்டேன். அவன் பார்ட்டி நடக்க நடக்க பாதியிலேயே காரை விட்டுட்டு போயிட்டான்னு சொன்னான். அதனால அவன் திரும்பி வருவான்னு நினைச்சு வினோத்தும் நைட் அவனைத் தேடல. விடிஞ்சதுக்கு அப்புறமும் ஹரீஷ் வரலைன்னு தான் அவன் எனக்கு கால் பண்ணுனான்."

திருச்செந்தாழை கண்களை மூடி ஒரு நிமிடம் இருந்து விட்டு ஒரு நோட்டை எடுத்து அதில் வினோத் என்று எழுதிக் கொண்டார்.

"ஏற்கனவே போலீஸ் வினோத் கிட்ட நிறையா விசாரிச்சுட்டாங்க. ஆனா அவனுக்கு எதுவும் தெரியலைனு போலீஸ் சொன்னாங்க."

"பரவாயில்லை சார். நான் ஒரு தடவை விசாரிச்சுக்கிறேன். போலீஸ் விட்ட ஏதாவது ஒன்னு எனக்கு கிடைச்சாலும் கிடைக்கும்."

"ஓகே மிஸ்டர் திரு நீங்க இன்வஸ்டிகேஷனை ஸ்டார்ட் பண்ணுங்க. என் ஆளு உங்களோட ஃபீஸ் அட்வான்ஸ் கொண்டு வருவான்." என்று சொல்லிவிட்டு விஜயேந்திரன் அங்கிருந்து கிளம்பினார்.

ஏனோ, திருச்செந்தாழைக்கு அவர்கள் திரும்பிப் போகும் போது கூட லிஃப்டை ஆன் செய்ய வேண்டுமெனத் தோன்றவில்லை. அவர்கள் படிக்கட்டில் இறங்கி கார் கதவைத் திறந்து செல்வது வரை திருச்செந்தாழை ஜன்னலில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் அங்கிருந்து சென்ற பின்பு லிஃப்டை ஆன் பண்ண சொல்லிவிட்டு, அடுத்த நாள் காலை முதல் வேலையாக வினோத்தைப் பார்க்க வேண்டுமென முடிவு செய்தான்.