Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

யாயும் யாயும் - 11

11. இருநூறு கிராம்

பொழுது விடிந்த போது, திருச்செந்தாழை வினோத் முன்பு உட்கார்ந்து கொண்டிருந்தான். இருவருக்கும் இடையே ஒரு கண்ணாடி டேபிள் போடப்பட்டிருந்தது. இருவருக்கும் வினோத் வீட்டு சமையற்காரனால், போடப்பட்டிருந்த காஃபி அந்த டேபிளில் இருந்தது. முந்தைய இரவு முழுக்க பார்ட்டி பண்ணியதன் களைப்பு அவன் கண்களில் தெரிந்தது. முதல் தளத்தில் இருந்த பால்கனியில் அவர்கள் அமர்ந்திருந்தனர். அங்கிருந்து வினோத்தின் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பாக்கு மரங்களைப் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. ஹரீஷ் பற்றி வினோத்திடம் தனியாகப் பேச வேண்டுமென திருச்செந்தாழை கேட்டுக் கொண்டதால் வினோத் அவனது வேலைக்காரர்களை அந்த தளத்தை விட்டு நீங்கி கீழே காத்திருக்கச் சொன்னான்.

திருச்செந்தாழை காஃபியை குடித்துக் கொண்டே கேட்டான், "அப்புறம் வினோத் நைட் எல்லாம் என்ன ஒரே பார்ட்டியா?"

"என் பெஸ்ட்டி ஒருத்தி ஆன்-சைட் போறா. அதான் சின்னதா ஒரு ட்ரீட்" என்றான் வினோத்.

"எப்படி நீங்க அடிக்கடி இந்த மாதிரி பார்ட்டி பண்ணிட்டே இருப்பீங்களா?"

"எல்லா நாளும் இல்லை சார் எப்போவெல்லாம் டைம் கிடைக்கிதோ அப்போவெல்லாம் பண்ண வேண்டியது தான். உங்களுக்கும் டைம் இருந்தா நீங்களும் ஒரு நாள் வாங்க ஃபன்னா இருக்கும்."

"நான் எங்கங்க அங்கையெல்லாம் வரது? கிரிமினல்ஸை தேடுறதுக்கே நேரம் சரியா இருக்குது.

சரி, இந்த ஹரீஷ் ஆளு எப்படி?"

"ரொம்ப ஜாலியானவன் சார். அவனுக்கு எப்பவுமே எதை செஞ்சாலும் திரில் இருக்கணும்னு ஆசைப்படுவான். அதுக்காகவே அடிக்கடி ஹன்ட்டிங் போவான். எப்போவாவது என்னையும் கூட்டிட்டுப் போவான். "

"இன்ட்ரஸ்டிங்... பொதுவா எதை வேட்டையாடனும்னு ஆசப்படுவான்?"

"வேட்டைக்குப் போற எல்லோரும் அந்த நேரத்தில அங்க என்ன இருக்குதோ அதைத் தான் அடிக்கணும்னு நினைப்பாங்க ஆனா, ஹரீஷ் மட்டும் எப்பவுமே சிறுத்தை மாதிரி கஷ்டமான அனிமல் அடிக்கணும்னு தான் ஆசைப்படுவான்."

"ஓஹோ! ஹரீஷைக் கடைசியா பார்த்த அன்னைக்கு ஹரீஷ் உங்ககிட்ட ஏதாவது வித்தியாசமா சொன்னானா?"

"அப்படியெல்லாம் எதுவும் இல்லை சார். பார்ட்டி ஆரம்பிச்சு ரொம்ப நேரம் எங்க வீட்ல தான் இருந்தான். திடீர்னு நடுராத்திரிக்கு மேல ஆளக் காணோம். நான் தேடிப் பார்த்தேன். அவன் கார் இங்கையே தான் இருந்திச்சு. அதனால பக்கத்துல தான் எங்கேயாவது போயிருப்பான். திரும்ப வந்திருவான்னு வெயிட் பண்ணுனேன். ஆனா, அவன் வரவே இல்லை. அதுக்கப்புறம் தான் அவங்க அப்பா போலீஸ்க்குப் போயிட்டாரு."

"சரி, உங்களுக்கும் ஹரீஷ்க்கும் ஏதாவது பிரச்சினையா?"

"அதெல்லாம் இல்லையே, ஏன் கேட்கிறீங்க?"

"அதான், உனக்கும் ஹரீஷ்க்கும் எந்தப் பிரச்சினையும் இல்லையே அப்புறம் எதுக்கு நீ அவனைக் கொலை பண்ணுன?" என்று காஃபியைக் குடித்துக்கொண்டே கேட்டான் திருச்செந்தாழை.

வினோத் கண்களில் ஒரு பேரதிர்ச்சி உருவாகி அவனது முகம் முழுக்க அது பரவியது.

"சார், நான் ஏன் ஹரீஷைக் கொலை பண்ணனும்? அவன் என்னோட ஃப்ரெண்ட் சார்."

"அதனால தான் ஃப்ரெண்ட் காணாம போன அடுத்த நாளுல இருந்து விடாம பார்ட்டி பண்ணிட்டே இருக்கியா?" என்று கேட்டார் திருச்செந்தாழை.

"சார், அவன் காணாம போனதுல எனக்கும் கவலை தான் அதுக்காக இன்னொரு ஃப்ரெண்ட் கொடுக்கிற பார்ட்டிக்கு எப்படி சார் போகாம இருக்க முடியும்? அப்படி போகலைன்னா அந்த ஃப்ரெண்ட்டோட சங்கடம் ஆயிடாதா?"

"வினோத் நீயெல்லாம் இன்னொருத்தங்க மனசு சங்கடப்படும்னு நினைக்கிற ஆளுன்னு என்னை நம்பச் சொல்றியா? எனக்கு உன்னைப் பத்தியும் தெரியும் அந்த ஹரீஷைப் பத்தியும் தெரியும். "

வினோத் ஒரு சின்ன கேளிப் புன்னகையுடன்,

"அப்படி என்ன சார், என்னைப் பத்தியும் ஹரீஷைப்பத்தியும் தெரிஞ்சுக்கிட்டீங்க?"

"நீங்க ஹவுஸ் பார்ட்டினு சொல்லி டிரக்ஸ் பார்ட்டி நடத்துறதும் தெரியும். அந்தப் பார்ட்டிக்கு வரப் பொண்ணுங்கள நீங்க என்ன பண்றீங்கன்னு தெரியும். ஹரீஷ் எங்கப் போனான்னு உனக்கு தெரியும்கிறதும் எனக்கு தெரியும். உண்மையை சொல்லு ஹரீஷ் கடைசியா உன் கிட்ட என்ன சொல்லிட்டுப் போனான்? நீ அவனை என்ன பண்ணுன?"

அவர்கள் செய்த பாவத்தையெல்லாம் திருச்செந்தாழை சொல்லத் தொடங்கியதுமே, வினோத்தின் படபடப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

"சார், பிரசாத் அன்க்கிள் அனுப்புனார்னு சொல்லித்தான் நான் உங்ககிட்ட பொறுமையா பேசிட்டு இருந்தேன். நான் யாரு? என் அப்பா யாரு? என்னால என்ன செய்ய முடியும்ன்னு தெரியாம பேசிட்டு இருக்கீங்க. என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவன் சடாரென்று தன் முன் இருந்த கண்ணாடி மேஜையில் தலையை மோதிக்கொண்டான். யாரோ அவனை பின் பக்கமிருந்து தாக்குவது போல இருந்தது.

நிமிர்ந்து பார்த்த வினோத் தன்னை யார் தாக்குகிறார்கள் என்று தெரியாமல் குழப்பத்தில் தனது நெற்றியை தொட்டுப் பார்த்தான். அவன் யோசிப்பதற்குள் மீண்டும் யாரோ அவனது பின் தலையை பிடித்து அடிப்பது போல இருந்தது.

வினோத் வாயில் ரத்தம் வடிய நிமிர்ந்துப் பார்த்தான். உடனே மீண்டும் அவன் தலை அந்த டேபிள் மீது அழுத்தப்பட்டது.

திருச்செந்தாழை மிக நிதானமாக தனது காஃபிக் கோப்பையை எடுத்து குடித்துக் கொண்டே பேசத் தொடங்கினான்..

"வினோத் எனக்கு சாதாரணமாவே ஒருத்தனைப் போட்டு பொலக்கிறது ரொம்ப பிடிக்கும் நீ வேற ரொம்பத் திமிரா பேசிட்டு இருக்க. உன்னை பீஸ் பீஸா ஆக்கி, பிளாஸ்டிக் பேக்ல கட்டி குப்பையில் போட்டுருவேன். உன்னைப் பெத்து மேய விட்ட உன் அப்பன் ஆத்தானால கூட கண்டு பிடிக்க முடியாது. அதனால, ஒழுங்கு மரியாதையா உண்மையை சொல்லு." என்றான் திருச்செந்தாழை.

"டேய், நீ ஏதோ மேஜிக் பண்றேன்னு தெரியுது. ஆனால், உனக்கு உண்மையிலேயே என் அப்பாவோட பவரை பத்தி தெரியல. அவர் மட்டும் நினைச்சா ஒரே ஃபோன் கால்ல திருச்செந்தாழைன்னு ஒருத்தன் இருந்தாங்கிறதையே இல்லாம ஆக்கிடுவாரு"

வினோத் சடாரென்று நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தான். யாரோ அவனை பின் கழுத்தைப் பிடித்து இழுத்தது போல இருந்தது. அவனால் அவனது கழுத்தையும் அசைக்க முடியவில்லை கை கால்களையும் அசைக்க முடியவில்லை. உடனே சத்தம் போட்டு உதவிக்கு அவனது வேலைக்காரர்களை கூப்பிடலாம் என முடிவெடுத்து, "ஏ.....ம்....ம்...."

அவன் கத்த வேண்டும் என நினைத்தான். கத்தினான். ஆனால், சத்தம் வரவில்லை. அவனது கீழ் உதடு இழுக்கப்பட்டு அவனது மூக்கைச் சேர்த்து மூடி இருந்தது. வினோத்தால் மூச்சுவிட முடியவில்லை. திணறத் தொடங்கினான்.

திருச்செந்தாழை காஃபிக் கோப்பையை கீழே வைத்துவிட்டு நிமிர்ந்து நின்று ஹரீஷின் தோட்டத்தில் இருந்த பாக்கு மரங்களை பார்த்தபடி நெட்டை முறித்துக் கொண்டான். வினோத் திணறிக்கொண்டே இருந்தான். அவன் கண்களில் மரணப் பயம் இருந்தது.

திருச்செந்தாழையால் எவ்வளவு நிதானமாக முடியுமோ அவ்வளவு நிதானமாக பேசத் தொடங்கினான்.

"என்னடா எவனைப் பார்த்தாலும் நான் யார் தெரியுமா? என் அப்பா யார் தெரியுமா? அவரோட பவரைப் பத்தி தெரியுமா? இவரோட பவரைப் பத்தி தெரியுமான்னு பேசிட்டே இருக்கீங்க உண்மையிலேயே பவர்னா என்னன்னு தெரியுமா? நமக்கு என்ன வேணுமோ அதை அடுத்தவங்கள பண்ண வைக்கிறது. அது மூலமா அடுத்தவங்க லைஃப்ல, அடுத்து நடக்கிற நிகழ்வுகளை, ஏன் வரலாறையே மாத்தி அமைக்கிறது.

இடுப்புக்கு கீழ தொங்குற ஒரு இருநூறு கிராம் கறி, அதை வைச்சுட்டுத் தான இந்த ஆட்டம் போடுற. இப்போ பாக்குறியா உன் கண்ணு முன்னாடியே அதைப் பிடுங்கி உன் கைலயே கொடுக்கிறேன். ஆனா, நான் உன்னை சாக விடமாட்டேன். உன் உயிருக்கு நான் கியாரண்டி.

நான் மட்டும் அப்படி பண்ணுனா என்ன ஆகும்னு யோசிச்சுப் பாரு. உன் ஆயுசு முழுக்க உன்னால பார்ட்டி பண்ண முடியாது. உன் லைஃப்பையே மாத்த என்னால முடியும். அது தான் பவர். அது தான் என்கிட்ட இருக்கு. நீ, உன் அப்பன் ரெண்டு பேராலையும் ஒன்னும் புடுங்க முடியாது. சொல்லு நான் என் பவரைக் காட்டவா?"

வினோத்திற்கு மூச்சு முட்டியதில் கண்கள் இருட்டி விட்டது. திருச்செந்தாழை சொன்ன அனைத்துமே ஏதோ அசரீரி சொன்னது போல அவன் காதில் கேட்டது. கண்களாலேயே 'திருச்செந்தாழை சொல்வதையெல்லாம் கேட்கிறேன். கேட்பதையெல்லாம் சொல்கிறேன்' என்பது போலப் பார்த்தான்.

திருச்செந்தாழை வினோத் நினைப்பதை கண்ணில் புரிந்து கொண்டு, வினோத்தின் மாயக் கட்டுகளை அவிழ்த்து விடத் தொடங்கினான்.

வினோத் உண்மையை பேசத் தொடங்கினான். அவனது கீழ் உதடுகள் தொல தொலவென ரப்பர் போல இருந்தது. அதைத் தொட தொட வலித்தது. வினோத் வலியை அடக்கிக் கொள்ள நினைத்தான். ஆனால், அதையும் மீறி அவன் கண்களில் கண்ணீர் பெருகத் தொடங்கியது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டே சொன்னான்,

"சார், ஹரீஷ் அன்னைக்கு இங்க பார்ட்டிக்கு வந்தது உண்மை. திடீர்னு நடுராத்திரி அவனைக் காணோம். நான் அவனுக்கு கால் பண்ணுனேன். அவன் ஒரு கிஸ்ஸா மாட்டியிருக்கு ஹன்ட்டிங்ல இருக்கேன்னு சொன்னான்."

"கிஸ்ஸா... ஹன்ட்டிங்... புரியும் படி சொல்லுடா" என்று அவனது பின் தலையைத் தட்டினான் திருச்செந்தாழை.

தலையில் அடி வாங்கிய வினோத், "சார், கிஸ்ஸான்னா பொண்ணு ஹன்ட்டிங்னா அந்தப் பொண்ணைத் தூக்கப் போறான்னு அர்த்தம்."

"சரி, அவன் ஏதோ பொண்ணைத் தூக்கப் போனான். நீயேன்டா அவன் கூடப் போகலை?"

"சார், நியாமா பார்த்தா இந்த முறை திறப்பு விழா நான் தான் பண்ணனும் அதனால, நான் அவன் கிட்ட எங்கே இருக்க நானும் வரேன்னு கேட்டேன்.

ஆனால், அதுக்கு அவன் 'இப்ப நீ வர வேண்டாம் ஒரு மணி நேரம் கழிச்சு நானே கால் பண்றேன்னு சொல்லி ஃபோனை வைச்சுட்டான்"

வினோத் 'நியாமா' என்று சொன்னதற்காகவே அவனை இரண்டாகப் பொளக்க வேண்டுமென தோன்றியது. ஆனால், இப்போதைக்கு அவனது தேவையிருப்பதால் பின்னொரு நாள் அவனைப் பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்து வினோத் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தான்.

வினோத் தொடர்ந்தான், "அவன் ஒரு மணி நேரத்துல கூப்பிடுவான்னு, நானும் மாத்திரை போட்டுட்டு ரெடியா இருந்தேன். ஆனால், அவன் என்னைக் கூப்பிடவே இல்லை. அதனால நானே அவனைத் தேடிட்டுப் போனேன்.

ஆனா, அவன் அங்க இல்லை. நான் மறுபடியும் ஃபோன் பண்ணியும் அவன் ஃபோன் எடுக்கல. ரொம்ப நேரம் தேடிப் பார்த்தேன். அவனைக் காணோம். காலையில நாலு மணி வரைக்கும் தேடிப் பார்த்தேன் அவனைக் காணோம். அப்ப திடீர்னு மழை பெய்யத் தொடங்குச்சு. கூடவே, ஒரு பெரிய மின்னல் அடிச்சது. எனக்குப் பயம் அதிகமாயிடுச்சு. நான் வீட்டுக்கு வந்துட்டேன். ஹரீஷோட வண்டி என் வீட்ல தான் இருந்துச்சு, அதனால, அவன் விடியறதுக்குள்ள வீட்டுக்கு வந்துடுவான்னு நினச்சேன். ஆனா, அவன் வரவேயில்லை." என்றான்.

இடி என்ற வார்த்தையைக் கேட்டதும் திருச்செந்தாழையின் முகம் மாறியது. ஏதோவொன்றை யோசிப்பது போலவும் பின்னர் ஏதோ தெளிவு வந்தவன் போலவும் அவன் முகம் பிரகாசித்தது.

பின்னர் அங்கிருந்து கிளம்பும் முன் வினோத்திடம்,

''தேங்ஸ் ஃபார் யுவர் கோப்ரேஷன் வினோத். நான் கிளம்புறேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

கிளம்பியவன் திடீரென நின்று, "அப்புறம் வினோத் இங்க நடந்ததெல்லாம் வெளியில சொன்னா, அந்த இரு நூறு கிராமுக்கு நான் பொறுப்பில்லை பாத்துக்கோங்க" என்று சொல்லிவிட்டு சிரித்தபடியே கிளம்பினான்.