Declining human values - Tamil version books and stories free download online pdf in Tamil

Declining human values - Tamil version

அருகி வரும் மனிதப் பண்பாடுகள்

Author : C.P.Hariharan

e mail id : cphari_04@yahoo.co.in

மனிதனின் ஒழுக்கக் கோட்பாடுகள் நாளுக்கு நாள் வேகமாக அருகி வருகின்றன. மக்கள்தொகைப் பெருக்கமும் இயந்திரத்தனமுமே பண்பாடுகளின் இத்தகைய அதலபாதாள வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாகும். ஒரு நபரை நல்லொழுக்கத்தை கருத்தில் கொள்ளாமல் அவரது பொருளாதார அந்தஸ்தை வைத்துத்தான் எடைபோடுகிறோம். நம்முடைய எதிர்பார்ப்பிற்கு நிகராக இல்லாமலிருந்தால் அவரை நம்மை விட்டு விலக்கிவைத்து அவருக்குத் தேவையான நேரத்திலும் உதவாமல் நழுவிவிடுகிறோம். சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிகோலும் வகையில் ஏழை பணக்காரர்களிடையே மிகப்பெரிய அளவிலான வேறுபாடு நிலவுகிறது. அடுத்தவருடன் போட்டி போட்டுக்கொண்டு சொத்து சேர்க்கும் மனப்பான்மையைக் காணமுடிகிறது.

ஒழுக்கம் என்பது மனிதனின் நடத்தையை ஆதாரமாகக் கொண்டுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக கல்விப்பாடங்களில் ஒழுக்க போதனைக் கல்வி இன்று இல்லாமல் போய்விட்டது. சமூகத்தில் நடத்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மாறாக, மனம் போனபடி நடந்துகொள்கிறோம். பச்சோந்தியைப் போல நிறம் மாறிக் கொண்டேயிருக்கிறோம். சிலசமயம் கோபமாகவும் சிலசமயம் அமைதியாகவும் இருக்கிறோம். ஒழுக்கம் இல்லாத நிலையில் சகமனிதனிடம் அக்கறையின்மை அதிகரித்துக்கொண்டே வருகிறது. சுயநலம் அதிகரிக்கிறது. பிறர் மீதான நம்பிக்கை முற்றிலுமாக அழிந்துவிட்டது. மனிதனின் நடத்தையில் ஒரு ஒழுங்கின்மை காணப்படுகிறது.

மனிதன் தன் குழந்தைகளுக்குக் கொடுக்கும் உறுதிமொழிகளைக் காப்பாற்றி விடுகிறான். ஆனால் சகமனிதனுக்குக் கொடுக்கப்பட்ட உறுதிமொழி பற்றிக் கவலைப்படுவதில்லை. தன் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் சொல்லப்பட்ட வார்த்தை திரும்பப் பெற முடியாத, அனுப்பப்பட்ட மெயில் போன்றது என்பதை உணர்வதில்லை.

ஒருவர் உயிரோடு இருக்கும்போது அவரை மதிக்காமல் அவர் நம்மை விட்டுப் பிரிந்தபின் அவரது மதிப்பை உணர்ந்து துன்பப்படுகிறோம். சகமனிதனை மதித்தல் என்பது நிர்வாகத்துறையில் முக்கியமான கோட்பாடுகளில் ஒன்று. எனவேதான் ஒரு முதலாளியை விட ஒரு குழுவின் தலைவரால் தன்னுடன் வேலை செய்பவர்களிடமிருந்து அதிக திறமையை வெளிக்கொணர முடிகிறது. வாகனங்களில்லாமல் நடந்து செல்பவர்கள் சமூகத்தில் மதிக்கப்படுவதில்லை. ஆனால் வெளிநாடுகளில் அவர்கள் மதிக்கப்படுகிறார்கள். சிலர் பழங்கால வழக்கங்களைப் பின்பற்றி வந்தாலும் பெரும்பாலான இளைய சமுதாயத்தினர் வயதானவர்களை மதிப்பதில்லை. இன்று சகமனிதனை மதித்தல் போன்ற நற்பண்புகள் மலையேறிவிட்டன. திரும்பியே வரமுடியாத அளவுக்கு மறைந்துவிட்டன.

சமூகம் நம்மிடம் எதிர்பார்ப்பதைப் போல நாம் நடக்க நினைக்கிறோம். ஒரு மாணவனின் நடத்தையை உருவாக்குவதில் ஆசிரியரின் பங்கு முக்கியமானது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதை ஆசிரியர்கள் நன்கு அறிவார்களாகையால் மாணவர்களது கெட்ட பழக்கங்களை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுகிறார்கள். தொட்டில் பழக்கமே சுடுகாடு மட்டும்.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் உலகம் மிகச் சுருங்கிவிட்டது. சிறிய பொருட்களே அழகு என்று மக்கள் நினைக்கிறார்கள். இன்று தன் குடும்பம் மட்டும் அமரும் வண்ணம் சின்னஞ்சிறு கார்களை விரும்புகிறார்கள். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை சுருங்கிவிட்டதால் கார்களின் அளவுகளும் சுருங்கிவிட்டன. காரோட்டிகள் இல்லாத இந்த மினி கார்கள் அதிகமாகக் காணக்கிடைக்கின்றன.

சமூகப் பரிமாற்றம் நிகழ்வதேயில்லை. மக்கள் யதார்த்த நிலையிலிருந்து மிகவும் மாறிவிட்டதால் தனிமைப்ப்பட்டு வாழ்கிறார்கள்.

மக்களின் நடவடிக்கைகளில் கடலளவு மாறுதல்களைக் காண்கிறோம்.

மக்களிடையே சகிப்புத்தன்மை அறவே இல்லாமல் போய்விட்டது. சுயநலமும் கயமைத்தன்மையும் ஓங்கிவிட்டதால் பொதுநலன் ஓரங்கட்டப்பட்டுவிட்டது.

பணியிடங்கள் போர்முகாம்கள் போலாகிவிட்டன. இன்று கார்களை நிறுத்துவதிலும் சில்லறை விஷயங்களுக்காகவும் சண்டைகள் நடப்பது அன்றாட வழக்கமாகிவிட்டது. உப்புப் பெறாத விஷயங்களுக்காக சண்டைகள் நடப்பது சாதாரணமாகிவிட்டது.

ஒரே மாதிரி சிறகுள்ள பறவைகள் ஒன்றுகூடி வாழ்வதைப்போல தனிக்குழுக்களாக வாழத்தலைப்பட்டுள்ளனர் மக்கள்.

சுதந்திரமாகப் பிறக்கும் மனிதன் எல்லா இடங்களிலும் சங்கிலியால் கட்டுண்டிருக்கிறான்.

நாம் எப்படி நடத்தப்படவேண்டும் என்று நினைக்கிறோமோ அப்படியே அடுத்தவர்களையும் நடத்தேவண்டும்.

மனிதப் பண்புகள் வீட்டிலோ பள்ளிக்கூடத்திலோ கற்றுத்தர முடியாதவை.

மக்களை பாதிக்கும் தீய ஒழுக்கத்தைக் களைந்து மனிதப் பண்புகளை வளர்ப்பதென்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

உலக மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட 1948 ஆணையின் முக்கியத்துவத்தை நாம் உணரவேண்டும். அரசியல், சமூக, நீதிச் சுரண்டல்களிலிருந்து உலகில் உள்ள அனைத்து மக்களையும் மனித உரிமைகள் பாதுகாக்கிறது. டிசம்பர் 10ஆம் நாள் சர்வதேச மனித உரிமைகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

உரிமைகள் வழங்குவது மட்டுமல்லாமல் சர்வதேச முறைப்படி அரசாங்கங்களை நெறிப்படுத்துவதும் மனித உரிமைகள் இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

மனித உரிமைகள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் செயல்படுபவை. அகில உலகத்துக்கும் சமமானது. சமூகப் பரிவர்த்தனைகளையும் ஒப்பந்தங்களையும் நெறிப்படுத்தும் அதிகாரம் உண்டு. அடிப்படை சுதந்திரம் அளிப்பதோடு மக்களின் சுய மரியாதையையும் காக்கிறது மனித உரிமைகள். சர்வதேச உரிமைகள் ஆணையில் சுமார் முப்பது உரிமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றின் விபரங்கள் பின்வருமாறு:

சட்டப்படி தானொரு நபர் என்பது அனைவருக்கும் எங்கும் அங்கீகரிக்கப்படவேண்டும்.

வாழ்வுரிமை. நமக்குப் பிடித்தாற்போல வாழலாம். உணவு, உடை, உறைவிடம் போன்ற இன்றியமையாத பொருட்களை அடையும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. சமூக நீதி என்ற பெயரில் அரசாங்கங்கள் இதையே செய்கின்றன. உரிமைகளின் வளர்ச்சியை நோக்கும்போது குடிமை மற்றும் அரசியல் உரிமைகளின் முன்னேற்றம் அதிகமாக இருக்கிறது. மக்களின் நல்வாழ்க்கைக்கு மனித உரிமைகள் உத்திரவாதம் அளிக்கிறது. அமைதியான வாழ்க்கை வாழ அனைவருக்கும் சட்டத்தில் இடமுண்டு. வாழ்வின் அடிப்படைத் தேவைகள் சட்டத்தால் பாதுகாக்கப்படுகின்றன.

சுகாதாரம், நல்வாழ்வு பெற ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. உணவு, உடை, உறைவிடம், மருத்துவ வசதி, தேவையான சமூகசேவைகள் கிடைக்கப்பெற; வேலையின்மை, நோய், இயலாமை, முதுமை, வாழ வழியற்ற பிறநிலைகள் நிலவும்போது தக்க உதவிகள் பெறும் உரிமை நமக்கு உண்டு. நாம் யாரையும் நம்மைத் தாக்கவோ துன்புறுத்தவோ அனுமதிக்கக்கூடாது.

நமக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை. தேர்தல்களில் போட்டியிட்டோ வாக்களித்தோ தேர்தல்களில் பங்கெடுத்துக்கொள்ள நமக்கு உரிமை உள்ளது.

யாவர்க்கும் கல்வி பெற உரிமையுண்டு. ஆரம்பநிலையிலாவது கல்வி வழங்கப்படவேண்டும்.

தகவல் பெறும் உரிமை

எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் உரிமை. எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமை மட்டுமல்லாமல் எந்த மதத்திற்கும் மாறும் உரிமையும் நமக்கு உண்டு.

சமூக செயல்பாட்டு உரிமை. சமூகப் பரிமாற்றம் சுதந்திரப் போக்குடனும் ஒருமைப்பாட்டுடன் இருக்கவேண்டும். குழுக்களாகவோ சங்கங்களாகவோ அமைதியுடன் செயல்படும் உரிமை. நம் ஆளுமையை வளர்த்துக்கொள்ள சமூக, பொருளாதார பண்பாட்டு உரிமைகள்

கலைகளை வளர்க்க கலைநிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் உரிமை

காப்புரிமை

தனிமனத உரிமை

குற்றம் சுமத்தப்பட்டவர் எவருமே, குற்றம் நிரூபிக்கப்படும் வரையில் தீதறியாதவர் என்றே கருதப்படவேண்டும். தனது தரப்பினை முன் வைத்துத் தீர்ப்புப் பெற உரிய வாய்ப்புகள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளிக்கப்படவேண்டும்.

பாதுகாப்பாய் இருக்கும் உரிமை

சொத்துரிமை. யாரும் சொத்தை அபகரிக்க இயலாது.

ஒவ்வொரு நாட்டுக் குடிமக்களுக்கும் தமது நாடுகளில் எப்பகுதிக்கும் செல்ல, வீடமைத்துக்கொள்ள உரிமையுண்டு.

எந்நாட்டையும் விட்டகல யாருக்கும் உரிமையுண்டு. தன் நாட்டிற்கு மீளவும் உரிமையுண்டு. வேலைக்குச் செல்லும்போது நாம் பல கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறோம். சமூகத்தில் சுதந்திரத்தை விட நிறைய தடைகள் உள்ளன. மற்றவர் உரிமையையும் நலனையும் பாதுகாக்கும் பொது நோக்கில் தமது உரிமைகள், நலன்கள் மீது எழும் சில கட்டுப்பாடுகளையும் ஏற்று அனைவரும் செயல்படவேண்டும்.

வேலை செய்ய உரிமை, வேலைக்குத் தகுந்த ஊதியம் பெறும் உரிமை. தொழிலாளர் சங்கங்களிடம் பேரம் பேசும் உரிமை.

ஓய்வு, பொழுதுபோக்கு உரிமை. ஓய்வற்ற வேலை சலிப்பைத் தரும்.

திருமணம் செய்துகொள்ளும் உரிமை. உரிய வயதில் தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் குடும்பம் அமைப்பதற்கான உரிமை. தேவையானால் திருமண பந்தத்திலிருந்து விடுபடும் உரிமை.

தன் நாட்டில் தேசிய இனப் பங்காளனாகும் உரிமை. பிறநாடுகளில் புகலிடம் தேடிக்கொள்ளும் உரிமை உண்டு.

அடிப்படை உரிமைகள் சட்டப்படி அளிக்கப்படவேண்டும்.

மனித உரிமைகள் மற்றும் சுதந்திரம் அனைவரும் உணரும் வகையில் சமுதாய மற்றும் உலக அளவில் அனைவருக்கும் வழங்கப்படவேண்டும்.

சமூகநலன் பாதுகாப்புக் கடப்பாடு ஒவ்வொருவருக்கும் உண்டு.

மனிதர்களிடையே இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் சார்பு, சமூகப்பிரிவு, சொத்துமதிப்பு, பிறப்பு ஆகிய பிற எந்தக் காரணங்களின் அடிப்படையிலும் வேறுபாடுகள் காட்டப்படாமல் உரிமையிலும் சுதந்திரத்திலும் சம உரிமைக்கான அருகதையுடையவர்கள்.

யாரும் இத்தகைய உரிமைகளைத் தடுக்கக் கூடாது.

அடுத்தவர் உரிமையைப் பாதுகாக்கும் உரிமை நம் அனைவருக்கும் உண்டு.

மனித உரிமை மீறல்களால்தான் நாம் அடிக்கடி காணக்கூடிய மதக்கலவரங்கள், சகிப்பின்மை ஆகியவற்றால் எழும் மன அழுத்தம், மனவேதனைகள் கடுமையாக மக்களை பாதிக்கின்றன. மனித உரிமைக்கு குரல் கொடுப்பவர்கள் அரசாங்கங்களையே இத்தகைய பாகுபாடுகளுக்கான காரணிகளாக்க் கருதுகிறார்கள்.

மனித உரிமைப் பாதுகாப்பு அதிக அளவில் வளர்ச்சி அடைந்துவிட்டதால் எது உரிமை மீறல், எது உரிமைகளை அங்கீகரித்தல் என்பதில் குழப்பம் நிலவுகிறது. எது மனித உரிமை என்பதை எளிதாக அறிந்துகொள்ள உலக மனித உரிமை ஆணைய அறிக்கையுடன் ஒப்பிட்டு அல்லது சமூக ஒழுக்கம் சார்ந்து முடிவெடுக்கலாம்.

ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகள் மனித உரிமைகளைக் காப்பதிலும் சட்டவரைவாக்குவதிலும் தங்களுக்கென்று வழிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன. எந்த நாட்டிலாவது மனித உரிமைகள் மீறப்பட்டால் உலக நாடுகள் அத்தகைய நிகழ்வுகளை பார்த்துக்கொண்டிருப்பதில்லை. தொடர்ந்து மனித உரிமைகளை நசுக்கும் நாடுகள் மீது பாதிக்கப்பட்ட மக்களின் மேல் கொண்ட மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்துள்ளன. ஈராக்கிலும் மற்ற நாடுகளிலும் அமெரிக்காவின் இத்தகைய தலையீடு பல விவாதங்களை எழுப்பியுள்ளது. மனித உரிமை மீறல் அத்துமீறப்படும் நாடுகள் அடங்கியிருக்கவேண்டிய அவசியம் இல்லை.

மனித உரிமைகளின் தாக்கம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. அவசரப் பிரகடனத்தின்போது சில மனித உரிமைகள் தற்காலிகமாக மீறப்பட்டு பின் யதார்த்த நிலைக்குத் திரும்புகின்றன.

எந்த நாடும் மனித உரிமைகள் விஷயத்தில் திருப்திப்படுவதில்லை. பல நாடுகள் இந்த விஷயத்தில் முக்கிய பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றன. சில பல உரிமைகள் ஒழுங்கமைக்கப்பட்டு அதன் மூலமே மனித உரிமைகள் மீறப்படாவண்ணம் அரசுகள் பாதுகாத்து வருகின்றன.

சர்வதேச நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு நாடுகளில் நடக்கும் உரிமை மீறல்கள் விசாரிக்கப்படுகின்றன. சிலசமயம் இந்த நீதிமன்றங்கள் தனிமனிதர்களிடமிருந்து வரும் குற்றச்சாட்டுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்கின்றன.

Author : C.P.Hariharan

e mail id.: cphari_04@yahoo.co.in

பகிரப்பட்ட

NEW REALESED