Read DNA Murders – 1 by KATHIRMATHI in Tamil த்ரில்லர் | மாட்ருபர்த்தி

Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

DNA கொலைகள் - 1

DNA ☠️கொலைகள் -1


தனது வேலைகள் முடிந்து விட்டதால் கான்ஸ்டபிள் முருகனை தேடிக்கொண்டு வெளியே வந்த ஏட்டு கனகாபிஷேகம் முருகன் சென்ட்ரியில் நின்று தம் அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். பார்த்தவர்.,

ஏய்யா எத்தனை வாட்டி சொல்றது இந்த சிகரெட் பிடிக்கிற பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சு நிப்பாட்டிடுனு உடம்புக்கு நல்லதில்லையா. அதுவும் இல்லாம நம்ம ஐயாவுக்கும் இது பிடிக்காதுய்யா. ஏன் சொல்றன்னா டியூட்டி நேரம் தவிர மத்த நேரமெல்லாம் ஃப்ரெண்ட்லியாத்தான பழகுறாரு. டியூட்டி நேரத்துலக்கூட மரியாதையாத்தான பேசறாரு. நம்ம டிப்பார்ட்மெண்ட்ல இந்த மாதிரி ஆஃபிசர்ஸ் கிடைக்கிறது கஷ்டம்யா. அதுக்காவது அவருக்கு மரியாதை கொடுத்து நிறுத்திக்கையா.

சரினே கொஞ்சம் கொஞ்சமா நிறுத்திடறேன்.

சரி, சரி நீ நிறுத்துறது இருக்கட்டும். அய்யா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஃபோன் பண்ணாரு. ஒரு கால் மணி நேரத்துல வந்துருவாராம். இந்தா டீ வாங்கிட்டு வந்துரு என்று பிளாஸ்கை கொடுத்தவர் நீயும் டீ சாப்பிட்டு வந்துடு என்று காசு கொடுத்து அனுப்பினார்.

முருகன் டீ வாங்கிக் கொண்டு வரவும் இன்ஸ்பெக்டர் ரவி ஸ்டேஷனுக்கு வரவும் சரியாக இருந்தது.

ஏட்டு கேட்டார் ஏங்கைய்யா வண்டியிலயே போயிட்டு வந்துட்டீங்களே. ஜீப்பு ஸ்டேஷன்ல்ல தான இருக்கு அதுல போய் வந்திருக்கலாம்ல.

நம்முடைய பர்சனல் வேலைக்கு ஆஃபிஸ் ஜீப்பை பயன்படுத்துறது எனக்கு பிடிக்காது கனகம். அதனாலதான் வண்டியிலேயே போயிட்டு வந்துட்டேன். சரி டீ வாங்கியாச்சா.

வாங்கியாச்சு சார் டேபிள்ல வச்சிருக்கேன்.

சரி நான் ஃப்ரெஷ்ஷப் ஆயிட்டு வந்துடறேன்.

சரிங்க சார் என்றவர், என்ன இது இன்னக்கு மழை இப்படி பெய்யுது? என்று யோசித்து கொண்டிருக்கும் போதே சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரம் நேரம் இரவு 11:30 என காட்டியது. இடியும் மின்னலும் கலந்தடித்த  அந்த நேரத்தில் அந்த பெருமாள்புரம் போலிஸ் ஸ்டேஷன் டெலிஃபோன் அடிவயிற்றில் அடித்துக்கொண்டு அலறத் தொடங்கியது.

வெளியில் போய்வந்ததால் ஃப்ரெஷ்ஷப் ஆகி வந்து தனது நாற்காலியில் சாய்ந்து ஒரு கப் சூடான டீ குடிக்கலாம் என்று ஃப்ளாஸ்க்கை எடுத்த இன்ஸ்பெக்டர் ரவி தனது எதிரில் இருந்த சுவர் கடிகாரத்தை பார்த்தார் அது நான் இரவு 11:30ல் இருக்கிறேன் என்றது. இந்த நேரத்தில் யாராக இருக்கும்.. சரி போலிஸ் காரனுக்கு ஏது நேரம் காலம். அவனுக்கு எல்லா நாளும் திருநாள் தான்.. எல்லா நாளும் வெறும் நாள்தான் என்றபடியே வாய் ஓயாது அலறிக் கொண்டிருந்த அந்த ஃபோனை எடுத்தார்.(ஃபோன் எடுக்கப்பட்டதும் அவசரம் அவசரமாக) ஹலோ நான் தேவன் திருச்சபை சர்ச்-லேருந்து பேசுறேங்க இன்ஸ்பெக்டர் அய்யா இருக்கறாங்களா.. அய்யா இங்க சீக்கிரம் வாங்கைய்யா என எதிர்முனை அலற..

இருங்க.. இருங்க இன்ஸ்பெக்டர்தா பேசுறே. முதல்ல பதட்டம் படாம யாரு எங்கிருந்து பேசறீங்கன்னு சொல்லுங்க.

அய்யா நான் தேவன் திருச்சபை சர்ச்சுல இருந்து தோட்டக்காரன் பேசறேங்க.

தேவன் திருச்சபைனு ரெண்டு இருக்குது. நீங்க எந்த திருச்சபை மெயின் ரோட்டுல இருக்குதே அதுங்களா இல்ல செண்பகா நகர்ல இருக்குதே அதுக்குளா.

அய்யா செண்பகா நகர்ல இருக்குதே அதுங்க.

சரி என்ன பிரச்சனை ஏதாவது அடிதடியா இல்ல சர்ச்சுல யாராச்சும் திருடங்க புகுதுட்டாங்களா.

அதெல்லாம் இல்லைங்க இது பெரிய சம்பவங்க.

பெருசா...

ஆமாங்கைய்யா தோட்டத்துல புதுசா புதைச்ச சவப்பெட்டி இருக்குதுங்க.

ஏங்க இதுல பதட்டப்பட என்ன இருக்கு.கிறிஸ்டியனா இறந்தா புதைக்கத்தான செய்வாங்க.

அய்யா நீங்க சொல்றதும் வாஸ்தவம் தான் ஆனா ஒருவாரமா இங்க யாரும் சாகலைங்களே...

உண்மையிலேயே பெரிய விபரீதம் என நிலைமையைப் புரிந்துக்கொண்ட இன்ஸ்பெக்டர் ரவி.. ஓகே பதட்டப்படாதீங்க. கிட்ட யாரும் போகாதீங்க, எதையும் தொடாதீங்க,ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்திடறோம் என்றவர், கனகம் டிரைவரை ஜீப்பை ரெடி பண்ணச் சொல்லுங்க செண்பகா நகர் சர்ச்சுக்கு போறோம்.அவர் கூப்பிட்டதும் ஏட்டு கனகாபிஷேகம் என்னங்கைய்யா ஏதாவது பிரச்சனையா என்றார்.

ஆமா ஏதோ பெரிய சம்பவம் நடந்திருக்கு தோட்டக்காரன் பேசுனதுல இருந்து தெரியுது. சரி முருகன் எங்க. முருகன்.. முருகன் என்று கூப்பிட வெளியில் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த கான்ஸ்டபிள் முருகன் சிகரெட்டை தூக்கி போட்டு விட்டு தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த கொய்யாக்காய் மிட்டாயை வாயில் போட்டபடியே வேகமாக வந்து எஸ் ஸார் என சல்யூட் வைத்து கேட்டார் சொல்லுங்கைய்யா.

விபரத்தை கான்ஸ்டபிள் முருகனிடமும் சொல்லிவிட்டு ஜீப்பிற்கு விரைந்தார்.

அவர் பின்னாடியே ஏட்டு கனகாபிஷேகமும் கான்ஸ்டபிள் முருகனும் ஓட்டநடையோடு வந்தனர்.

ஜீப் புறப்பட்டதும் ஃபோனில் சொன்னபடி நான்காவது நிமிடம் முடியும் தருவாயில் அங்கு வந்தார்.

போலிஸ் வந்து சேரும் முன்னே, ஊருக்குள் செய்தி பரவி விட ஊரில் உள்ளோரில் பாதிப்பேர் அங்கு கூடியிருந்தனர்.

தேவன் திருச்சபை சர்ச்சானது கிறித்துவர்களுக்கு மட்டுமின்றி சுற்றியுள்ள அனைத்து மக்களுக்கும் முடிந்த வரை நற்பணி செய்து வந்ததால் கூடியிருந்தோர் அனைவரின் முகத்திலும் பயத்துடன் கலந்த ஆர்வம் ஒட்டியிருந்தது.

சைரன் சத்தம் கேட்டதும் அந்த விடாத காத்து மழையிலும் கூடியிருந்த கூட்டம் சற்று நகர்ந்ததே அன்றி, யாரும் இடத்தை விட்டு விலகவில்லை.

ஏதோ திருவிழா கூட்டம் போல் இருந்த கூட்டத்தை கண்டதும் நகருங்க, நகருங்க இன்ஸ்பெக்டர் வராரு, என ஹெட் காண்ஸ்டபிள் கனகாபிஷேகம் வர, இன்ஸ்பெக்டர் ரவி உள்ளே வந்தார்.ரவி உள்ளே வந்ததும்..

யார் எனக்கு ஃபோன் பண்ணது.கெட்சலான உருவத்தோடு நடுங்கியபடியே ஒருவன் முன்னே வந்தான். பதட்டத்தில் வார்த்தை உலர்ந்து போய் வந்தது. நா.. நான் தாங்க ஃபோன் பண்ண.

உன் பேரு?

ஜெபாஸ்டியன்ங்க.

இங்க என்ன வேல பார்க்குற?

தேவாலயத்த சுத்தம் பண்றதும் தோட்டத்த பராமரிக்கறதும்.

சர்ச்க்கு ஃபாதர் இல்லையா, நீ ஃபோன் பண்ணியிருக்க?

ஃபாதரைய்யா திருச்சியில நடக்குற மாநில ஞபமாலை மாநாட்டுக்கு போயிருக்காருங்க.

என்னைக்கு போனாரு?

அஞ்சு நாள் ஆகுதுங்க.

சரி வா இடத்த காட்டு.

ஜெபாஸ்டியன் அழைத்துச் சென்றான்.இன்ஸ்பெக்டர் ஸ்பாட்டுக்கு வர.. வர கூட்டம் நகர்ந்து வழிவிட்டது. சம்பவ இடத்திற்கு வந்ததும்,

என்ன இது பின்பக்க காம்பௌன்ட் இடிஞ்சிருக்கு.

அது இடிஞ்சி ஏழெட்டு மாசம் ஆவுதுங்க.

அதை ஏன் சரி பண்ணல.

அய்யா அதெல்லாம் சர்ச் நிர்வாக சம்பந்தப்பட்டதுங்க இதெல்லாம் ஃபாதர் கிட்ட தான் கேட்டு தெரிஞ்சுக்கணும் என்கிட்ட கேட்கறீங்களே என்றபடியே சவப்பெட்டி இருந்த இடத்தை காட்டினான்.

ஜெபாஸ்டியன் காட்டிய இடத்தில் ஒரு சவப்பெட்டியின் மேல்பாகம் சிறிது எசகு பிசகாக ஒழுங்கற்று வெளியே எட்டி பார்த்து கொண்டிருந்தது. அது இருந்த அமைப்பை பார்த்த இன்ஸ்பெக்டர் ரவி உட்பட உடன் வந்திருந்த ஏட்டு மற்றும் கான்ஸ்டபிள் முருகனுக்குமே சந்தேகம் வர ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அதன் பிறகு இன்ஸ்பெக்டர் ரவியின் குரலும் பார்வையும் உத்தியோக மிடுக்கை எடுத்துக்கொள்ள ஜெபாஸ்டியனை ஒரு முறைப்போடு பார்த்தார். அதில் அவன் ஆதி முதல் அந்தம் வரை சர்வ நாடியும் அடங்கிப் போனான்.

இதுவரை காவல்துறையின் விசாரணை பார்வை எப்படி இருக்கும் என பார்த்திராத ஜெபாஸ்டியன் அய்யா என்னையா அப்படி பார்க்கறீங்க. நான் எந்த தப்பும் பண்ணலீங்க என பதறியபடியே சொன்னான்.

ஒழுங்கா உண்மைய சொல்லிடு. அப்புறம் நான் வேற மாதிரி விசாரிக்கற மாதிரி ஆயிடும். போலிஸோட சாதாரண விசாரணை ஸ்டைலை கூட நீ தாங்க மாட்ட என்ன நடந்தது ஒழுங்கா சொல்லிடு.

அய்யா என்னென்னமோ சொல்றீங்களே எனக்கு பயமா இருக்குங்க. ஏசப்பா மேல சத்தியமா சொல்றங்க. எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்க. என்ன நம்புங்க என்று முகம் வெளிறிப்போய் சொன்னான்.

அப்புறம் ராத்திரி பதினோரு மணிக்கு ஒரு தோட்டக்காரனுக்கு இங்கென்னயா வேலை?

அய்யா நான் சர்ச்சுலதாங்க தங்குவேன். சர்ச்சுக்கு பின்னாடி தெருவுலதா என்னோட ஊடு. நாலைஞ்சு நாளாவே எம்பொண்டாடிக்கு ஒடம்பு செரியில்லேங்க. இன்னைக்கு பார்த்து காய்ச்சல் கடுமையாயிடுச்சுனு ஃபோனு வந்ததுங்க. தோட்டத்து வழியா போனா குறுக்கால சீக்கிரம் போயிடலாங்க. அப்படி தாங்க இங்க வந்தே.

அப்புறம் ஏய்யா பெட்டி கொஞ்ச வெளியே வந்த மாதிரி இருக்கு.

நீயே பொதைச்சிட்டு ஃபோன் பண்ணியா இல்ல போலிஸ் வரதுக்குள்ள எங்களுக்கு உதவி பண்றோம்னு நெனைச்சி முட்டாளதனமா பெட்டிய எடுத்து வைக்க நெனைச்சியா.

அய்யா அப்படியெல்லாம் இல்லீங்க. மழ ஜாஸ்தியா பேஞ்சதால சரியா கண்ணு தெரியலைங்க. ஊட்டுக்கு போற அவசரத்துல கால் தடுமாறி விழுந்தேனுங்க. ஏதோ மரவேறுன்னு நெனைச்சு பிடிச்சு எழுந்தேனுங்க, ஆனா கையோட எதுவோ பேர்ந்து வந்த மாதிரி இருந்ததுங்க. பார்த்ததும் பகீர்னு ஆயிடுச்சு. அதுவும் ஒழுங்கா பொதைக்காததுன்னு தெரிஞ்சுது அப்புறந்தா ஸ்டேஷனுக்கு ஃபோன் பண்ணேனுங்க.

சரி ஃபாதர் என்னைக்கு ஊருக்கு போனாரு.

அவர் போயி அஞ்சு நாளாவுதுங்க.

என்னையோட அந்த மாநில கூட்டம் முடியுது.

முந்தாநாளோட முடிஞ்சதுங்க.

முடிஞ்சதும் வேற எங்கேயாவது போய்ட்டு வரேன்னு சொல்லிட்டு உனக்கு எதுனா வேலை கொடுத்துட்டு போனாரா.

அப்படிலாம் எதுவும் சொல்லலைங்க. கூட்டம் முடிஞ்சதும் முக்கியமான வேலையெல்லாம் இருக்குது அதனால உடனேயே திரும்பி வந்துடுவேனுதா சொல்லிட்டு போனாருங்க.

அப்புறம் ஏன் இன்னும் வரலை?

என்ன காரணமோ தெரியலைங்களே...

சரி ஃபாதரோட ஃபோன் நம்பரக் குடு.கொடுத்தான், ரவி கால் செய்தார், ஒருமுறை.. மருமுறை.. பலமுறை முயன்றும் சுவிட்ச்ட் ஆஃப், சுவிட்ச்ட் ஆஃப் என்று வந்ததேயன்றி பதில் இல்லை.ஒருவித டென்ஷன் ஆன ரவி.. மீண்டும் ஒருமுறை ஜெபாஸ்டியனை ஊடுறுவி பார்த்தார். இல்லை இவன் பொய் சொல்லவில்லை. உண்மையைத்தான் சொல்கிறான் எனத் தனது அனுபவத்தின் மூலம் கண்டறிந்தவர் சரி யாராவது இங்க குழி தோண்டறவங்க இருக்கீங்களா என குரல் கொடுக்க இரண்டு பேர் முன்னே வந்தனர்.

நீங்க யாரு?

ஊர் வெட்டியானுனுங்க.

சரி என்றவர் காண்ஸ்டபிள் முருகனை அழைத்து, முருகன் நீங்க கொஞ்ச ஹெல்ப் பண்ணுங்க. கனகம் நீங்க டார்ச் அடிங்க என கட்டளையிட, வேலை துரிதமாக நடந்தது. சவப்பெட்டியை எடுக்கும் வேலை நடக்க ஆரம்பித்தது.அந்த கொட்டும் மழையில் சவப்பெட்டி வெளியே எடுக்கப்பட்டு அதன் ஆணிகள் ஒவ்வொன்றையும்  பிடுங்க.. பிடுங்க, அதைப் பார்க்க கூடியிருந்த கூட்டம் முண்டியடித்து முன் வந்தாலும் வந்திருந்த காவலர்கள் உட்பட சுற்றியுள்ளோர் அனைவரின் கைகளும் அசுர கதியில் மூக்கை பொத்தும் வேலையைச் செய்தன. மூக்கை மூடி, குடலை பிரட்டும் ஒரு துர்நாற்ற அவஸ்தை போராட்டத்திற்கு பின்னே... திறக்கப்பட்ட அந்த சவப்பெட்டியினுள்ளே இருந்த உடலைக் கண்டதும் அங்கிருந்த அனைவரும் ஒரு சேர அதிர்ந்தனர். அந்த சவப்பெட்டியினுள்ளே இருந்தது. 


கொலைகள் நடக்கும்