Read DNA Murders - 2 by KATHIRMATHI in Tamil த்ரில்லர் | மாட்ருபர்த்தி

Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

DNA கொலைகள் - 2

DNA ☠️ கொலைகள் -2    

அந்த நீல நிற ஹோண்டா ஷைன் காட்டுக்கு நடுவே அமைந்திருந்த சாலையில் விரைந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் கவனமுடன்தான் வேலை செய்கிறேன். ஆனால் சில சமயங்களில் டாக்டர் கொடுக்கும் டிக்டேட் படி ரிசல்ட் அமையமாட்டேங்குது. அப்படிப் பார்த்தாலும் எங்க தப்பு செய்யறேன்னு சொல்லவும் மாட்டேங்குறாரு. அது மட்டுமில்லாம உன்ன என்னமோ நெனைச்சேன் ஆனா நான் எதிர்ப்பார்க்கற அளவுக்கு இல்ல. அதுவும் ஃபாரின்ல ப்ரோக்ராம் பண்ணவன் ரிசர்ச் சென்ட்டரல்ல ஒர்க் பண்ணவன்னு சொல்ற ஆனா இப்படி சொதப்பிடறியே கொஞ்சம் கேர்ஃபுல்லா பண்ணுனு சொல்றாரே தவிர எங்க தப்பு பண்றேன்னு சொல்லாம அவரே அதை சரி செஞ்சிடறாரு. நான் என்ன தப்பு பண்றேன்னு சொன்னாத்தான நம்மள டெவலப் பண்ணிக்க முடியும். சரி இன்னைக்கு என்ன ஆனாலும் விடறதில்லை. அவரோட டிக்டேட்டா இல்ல நானானு ஒருகை பார்த்திடறேன் என்று பலவிதமான சிந்தனைகளுடன் வண்டியை விரட்டிக் கொண்டிருந்தவன் பெயர் ரகு,

ஃபியூட்சர் வேர்ல்ட் பாட்டனிக் ரிசர்ச் & மெடிக் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை டெக்னீஷியன். அப்படி அவன் சென்றுகொண்டிருந்த வேலை பார்க்கும் நிறுவனம் இருக்கும் இடம் பக்கமலை (தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சிக்கு தென்மேற்கே 45 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு மலை மற்றும் வனப்பகுதி ஆகும் - இதை தவிர மற்றவை கற்பனையே). காட்டின் நடுவே யாரும் சட்டென அறிந்திடாத வண்ணம் ஃபியூட்சர் வேர்ல்ட் பாட்டனிக் ரிசர்ச் & மெடிக் என்ற ஆராய்ச்சி கூடம் தனது கட்டட உடம்பிற்காக சுமார் ஐந்து ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து அமர்ந்துக்கொண்டிருந்தது.

கிட்டதட்ட 50 பேர் பல்வேறு பிரிவுகளில் பலவிதமான பணிகளைச் செய்துக்கொண்டிருக்க, நாட்டில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்குத் தாவரவியல் துறையில் சாதனைகளைப் புரிந்து கொண்டிருக்கும் பல முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் அதுவும் ஒன்று. இவர்கள் அனைவருக்கும் தலைமையேற்று அதன் அருமை பெருமைகளுக்கு ஒற்றை மனிதனாய் வலம் வருபவர்  டாக்டர் ராயர். உயிரியல் பிரிவு ஆராய்ச்சிக்கு விலங்கியல் மற்றும் தாவரவியல் இரண்டு பிரிவிலும் தகுதி பெற்றவராக இருந்தபோதும், தனது ஆராய்ச்சியைத் தாவரவியல் பக்கமாக திருப்பியிருப்பவர். இவரின் முதன்மை உதவியாளர்களுள் ஒருவராகவும், நிறுவனத்தில் அவருக்கு அடுத்த நிலையிலும் இருப்பவன் தான் நாம் பார்த்த ரகுவும் அவனோடு சேர்த்து பர்ஃபீனாவும்.

பாட்டனிக் ரிசர்ச் கன்குலூஷன் செக்டார் 'அனுமதியின்றி யாரும் அனுமதியில்லை' என்ற பித்தளை எழுத்துக்களைத் தனது நெற்றியில் ஒட்டிக்கொண்டு மூடியிருந்த அறையின் கதவுக்குப் பின்னால் முழுதும் குளிரூட்டப்பட்ட அறையில் ரகுவும் பர்ஃபீனாவும் கம்ப்யூட்டரில் எதையோ அதிதீவிரமாக லோட் செய்துக்கொண்டிருக்க, மாலை 5:30 மணியளவில் பர்ஃபீனா தன் வேலையை முடித்துவிட்டு ரகு இருந்த கேபினுக்குள் வந்தவள், ரகுவைப் பார்த்து என்னாச்சு தெரியலையே? எனப் பார்த்தபடி நின்றாள். 

இன்று எப்படியாவது சரியான ரிசல்ட்டை கொடுத்து விட வேண்டும் என்ற வைராக்கியத்தில் டாக்டர் ராயர் கொடுத்த ஃபைலை கம்ப்யூட்டரில் கோடிங் செய்து கொண்டே மீண்டும் மீண்டும் சந்தேகத்தோடு திரும்ப திரும்ப அந்த டிக்டேட் ஃபைலை பார்த்துக்கொண்டிருந்தவன் மனதில் ஒருவித பதட்டம் குடியேற ஆரம்பித்தது. இதற்கு முன்னர் தான் அவரின் டிக்டேட் படி ரிசல்ட் அமையாததைத் தன்னுடைய கவனக்குறைவாக எண்ணியவன், இப்போதுதான் அது தனது தவறால் இல்லை, வேண்டுமென்றே திரிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்தான். அதற்குக் காரணம் இந்த முறை எந்த சறுக்கல்களும் இல்லாமல் முடிக்க வேண்டும் என வேலை செய்ய ஆரம்பித்தவன் மனதில் அபாய கௌளி கத்தியதே. 

இல்லை... இல்லை இதுல ஏதோ மர்மம் இருக்கு. இது சரியான கோடிங் மாதிரி தெரியல. நம்மகிட்ட கொடுத்த நோட்ஸ்ல இல்லாத பல டிக்டேட் கலந்திருக்கு. அதுமட்டுமில்லாம டாக்டர் கொடுத்ததும் இதுவும் எங்கேயோ மாறிப்போகுது. என்னோட கெஸ்ஸிங்க்கு இது தாவரவியல் ஆராய்ச்சியே இல்ல. பிறகு என்னவாக இருக்கும்? இதுவரைக்கும் என்னோட தப்புனுதான என்ன பிளேம் பண்ணி என்னை டைவர்ட் பண்ணியிருக்காரு. ஆனா இப்பதான தெரியுது. நான் முட்டாளாக்கப் பட்டிருக்கேன். இதனால விபரீதம் ஏதாவது நடந்து நாளைக்கு நானும் மாட்டிக்கிட்டனா.. ஸோ இதை கண்டுபிடிச்சே ஆகணும் என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே.,சிறிது நேரமாக அவனுடைய செயல்களைப் பார்த்துக் கொண்டிருந்த பர்ஃபீனாவிற்கு ஆச்சரியமாகி போனது. எப்பவுமே நான் நடக்கும் நடையின் ஓசையை வைத்தே திரும்பி பார்க்காமலேயே வா.. பர்ஃபீனா வேலையை முடிச்சிட்டியா.. எனக் கேட்கும் ரகுவா இது? என்னாச்சுனு தெரியலையே சரி, அவரிடமே கேட்டுடுவோம் என்று முடிவு செய்து ஏன் ரகு ஒருவித டென்ஷனா இருக்கீங்க? என்று பர்ஃபீனா குரல் கொடுக்க திரும்பிப் பார்த்தவன்.,எடுத்ததும் இவளிடம் முழுமையாக சொல்லிவிடலாமா அல்லது வேண்டாமா. ஏதேனும் வீண் பதட்டமும் பிரச்சினையும் ஏற்பட்டால் என்ன செய்வது? முதலில் நாமளே கண்டுபிடிப்போமா அல்லது ஸேம் ஃபீல்டில் இருப்பவள் தானே எதற்கும் உதவியாக இருக்குமே என்று இருவேறு மனநிலையில் இருந்தவன் சரி இப்போதைக்கு சமாளிப்போம் என்றெண்ணி இல்ல... பர்ஃபீனா டாக்டர் கொடுத்த டிக்டேட் படி கோடிங் அமையல. அவர் வர நேரமும் ஆயிடுச்சு. அரைமணி நேரத்துக்கு முன்ன ஃபோன் செய்தப்ப மேக்ஸிமம் முடிச்சிட்ட சார் நீங்க வரதுக்குள்ள கம்ப்ளீட் ஆயிடும்னு சொன்ன பட் இன்னும் ஃபனலைஸ் ஆகல.

அதுக்கா இவ்வளவு டென்ஷன்? நீங்கதான் எக்ஸ்பீரியன்ஸ் ஹேண்டாச்சே. அதுவும் ஃபாரின்ல ஒர்க் பண்ணவர் வேற இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணுங்க முடிச்சிடலாம்.

இல்ல, இது முதல் தடவையில்லை. இதுமாதிரி ஆகறது நாலாவது தடவ. அதுவும் அவர் வெரி கான்ஷியஸ்னு சொல்ற கோடிங்லதா பிரச்சனையே வருது.

ஓ... அதுதா நெர்வெஸா இருக்கீங்களா?

ஆமா, அதுமட்டுமில்ல, நான் ஃபாரின்லயே ஒர்க பண்ணி சம்பாதிச்சது போதும், அப்பா மட்டும் தனியா இருக்காரே அவரோட இருக்கலாம்னுதா இந்தியாவுக்கே வந்த.

சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?

இதுவரைக்கும் இதுமாதிரி எனக்கு எங்கேயுமே ஏற்பட்டதில்லை. அதுமட்டுமில்லாம லாஸ்ட் ஒரு சிக்ஸ் மன்தாவே அவர் கொடுக்கற டிக்டேட்படி ரிசல்ட் வரமாட்டேங்குது.

சரி அதனால...

இல்ல.. ஒருத்தன் முதல் தடவ தப்பு பண்ணா பாஸானவரு சரி ஏதோ சிந்தனையில தப்பு பண்ணிட்டான்னு பொறுத்துக்கலாம் ஆனா மறுபடியும் மறுபடியும் தப்பு பண்ணா திட்டுவாங்களா இல்லையா.. ஆனா நான் ஒரு தடவ ரெண்டு தடவ இல்ல, இதுக்கு முன்னாடி மூனு தடவ பண்ணியிருக்கேன் ஆனா ஒருதடவகூட திட்டுனது இல்ல. ஏன் இதுவரை நான் எங்க தப்பு பண்றனுகூட சுட்டிக்காட்டனதும் கிடையாது. அதையும் பிரைவசியா அவரே சரி செய்துட்டு, மறுநாள் நான் சரி பண்ணிட்ட நீ உன் வேலையைப் பாருன்னு சொல்லிடறாரு. 

சரி அதனால இப்ப என்ன? ஒருவேளை நம்ம பாஸ் அவ்வளவு ஜெனியூனாவும் இருக்கலாம் இல்ல.

நீ புரிஞ்சிக்கிட்டுதா பேசறியா பர்ஃபீனா. என்னோட வேலைக்கு அவர் தர சம்பளம் கொஞ்ச நஞ்சமில்ல மாசம் பொறந்தா சொலையா 2,00,000. என்று சொல்லிக்கொண்டே வந்தவன், அதுவுமில்லாம இப்ப எனக்கு அவர் மேலயே.. என்றவன் உணர்ச்சி வசப்பட்டு உண்மையைச் சொல்கிறோம் என உணர்ந்து சட்டென பேச்சை மாற்றி.. ஆங்... சரி பாஸ் வரட்டும் அவர்கிட்டயே டிஸ்கஸ் பண்ணிக்கலாம் எனப் பேச்சை திசைதிருப்ப..

ஒரு நிமிஷம். என்னவோ சொல்ல வந்தீங்க. ஆனா பாதியிலேயே பேச்ச மாத்திட்டீங்க. 

அதெல்லாம் ஒன்னுமில்லையே நார்மலாதா பேசுன.

இல்ல ரகு, உங்களைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். நீங்களும் நானும் இன்னைக்கு நேத்து பழகல. இதே ஆஃபீசுல ஒன்னா இரண்டு வருஷத்துக்கு மேல வேல பாக்கறோம். அதுவுமட்டுமில்லாம நா...

போதும் பர்ஃபீனா என் மனசுல அந்த மாதிரி எண்ணமில்ல.

பரவாயில்ல. ஒருத்தருக்கு ஒருத்தர் எதையும் மறைக்க வேணாம். ரெண்டு பேரும் ஒரே செக்ஷன்ல வேலை பார்க்கறோம். யாரும் யாராலையும் பாதிக்கக்கூடாதுனா மனசுல உள்ளத மறைக்காம சொல்லுங்க. என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ற.

இப்படி அவள் கேட்டதும், இவளும் பயோ டெக் படிச்சவதான நமக்கு வந்த சந்தேகம் இவளுக்கும் வருதானு பார்ப்போம். ஒரு பிரெச்சனையை தனியா ஃபேஸ் பண்றதை விட விஷயம் தெரிஞ்சவங்க ஒருத்தங்க கூட இருக்கறதும் நல்லதுதான் என்று நினைத்தவன்.,

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, கம்மியக் குரலில் பேசத் தொடங்கினான். பர்ஃபீனா இது என்னோட ஹெஸ்ஸிங்தான். பட் அதுதான்னு சென்ட் பர்சென்ட் தெரியல. இங்க என்னமோ தப்பு நடக்கற மாதிரி எனக்கு தோனுது.

ரகு சொன்னதைக் கேட்ட பர்ஃபீனா முகத்தில் மெல்ல மெல்ல கலவரம் குடியேற ஆரம்பித்தது.

அவளும் தாழ்ந்த குரலில், என்ன... தப்பு நடக்கற மாதிரி இருக்குதா? என்ன சொல்றீங்க ரகு? என்றாள்.

இப்ப நான் சொல்ல போறத கவனமா கேட்டுக்க. நான் சொல்றது முழுசா ஊர்ஜிதம் ஆனாலும் சரி. ஆகாவிட்டாலும் சரி. எப்பவும் வெளிய வரக்கூடாது. உயிரேப் போனாலும் வெளியத் தெரியாத மாதிரி நமக்குள்ளயே இருக்கணும் புரிஞ்சுதா? இதுல உன்னோட  ஒத்துழைப்பும் வேணும். அப்பதான் நம்மளால இங்க நடக்கறத கண்டுபிடிக்க முடியும்.

சரி சொல்லுங்க. இருந்தாலும் நீங்க நினைக்கிற மாதிரி தப்பு எதுவும் இல்லைனா. 

அதனால என்ன பிரச்சினை வந்தாலும், தேவையில்லாத வேலையில ஈடுபட்டதா சொல்லி எல்லா பழியையும் நானே ஏத்துக்கறே. இதுல தண்டனையா என் உயிரேப்போனாலும் சரி.

சீ.. எதுக்கு இப்படி எடுத்ததும் அபசகுணமா பேசறீங்க? எதுவா இருந்தாலும் சேர்ந்தே சந்திக்கலாம். என்னன்னு முதல்ல செய்தியைச் சொல்லுங்க.

வர.. வர எனக்கு நம்ம பாஸ் மேல சந்தேகம் வருது.

என்ன.. சந்தேகம் வருதா?.. என்ன சந்தேகம், ஏன் வருது?

ஒருவேளை அவரே தப்பான டிக்டேட் கொடுத்து, கடைசியில எனக்கு தெரியாம வேற எதுனா செய்யறாரோனு தோனுது.

அதாவது வேற ஒரு பிராஜெக்ட்ட பிளான் பண்ணி, உங்கள பிளாக் பண்ணி தப்பா டிக்டேட் கொடுத்து, கடைசியில வேற ஒன்ன பண்றாரோனு நினைக்கிறீங்களா?

ஆமா பர்ஃபீனா.

என்னவா இருக்கும்னு உங்க எக்ஸ்பீரியன்ஸுக்கு எதுனா தெரியுதா?

சம்திங் ஹுயூமன்.

வாட் ஹீயுமனா..? அது எப்படி சாத்தியமாகும்?

ஏன்?

ஏன்னா நாம அதாவது ஐ மீன் நம்ம டாக்டர் வாங்கியிருக்கிற லைசென்ஸ் பாட்டனி சம்பந்தமான ரிசர்ச்-க்கு. அப்படியிருக்க ஸுவாலஜி அதுவும் ஹீயுமன் பத்தின ரிசர்ச் எப்படி பண்ண முடியும்?

பிளாக்கா பண்றாருனு நினைக்கிறீங்களானு கேட்டியே, ஏன் அப்படியும் இருக்கக்கூடாது?

அதாவது இல்லீகலா.

ஆமா.

எத வச்சி சொல்றீங்க.

யாரேனும் நம்மை கவனிக்கிறார்களா என்று மீண்டும் ஒருமுறை சுற்றும் பார்த்தவன் இங்க வா.. சிஸ்டத்த பாரு.. நீயும் பயோ டெக்தான.. இந்த பாயின்ட்ட பாரு.. இதப்பார்த்தா டவுட் வரல..

அவன் சுட்டிக்காட்டிய இடத்தை பார்த்த பர்ஃபீனா விழிகள் அவன் சொன்னதில் இருந்த உண்மையை உணர்ந்து பயம் கலந்த வியப்புடன் நிலைகுத்தி நின்றன. 


கொலைகள் நடக்கும்