அகிலத்தை ஆண்ட அரசன்
அத்தியாயம் 1 : விதியின் தொடக்கம்
சந்திர குல அரசுக்கும் சூரிய குல அரசுக்கும் இடையே வரலாறு காணாத ஒரு பெரும் போர் நடைபெற்று வந்தது. இரு குலங்களும் தங்கள் அதிகாரத்திற்காக உயிர் தியாகம் செய்யத் தயார் நிலையில் இருந்தன.
அந்தப் போரின் உச்சக் கட்டத்தில், சூரிய குல அரசரின் அரண்மனையில் ஒரு நிகழ்வு நடந்தது. சூரிய குல அரசிக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. குழந்தை பிறந்த சில நேரங்களிலேயே அரசி உயிர் நீத்தாள்.
தாயின் மரணம், போரின் அழுத்தம் — இரண்டுமே அரசனை மனமுடைந்த நிலையில் தள்ளின.
போர்க்களத்தில் சூரிய குலம் தோல்வியின் விளிம்பில் நின்றது. இதற்குக் காரணம் அந்தப் புதிதாகப் பிறந்த குழந்தைதான் என மக்கள் நம்பினர்.
“இந்தக் குழந்தை நாட்டிற்கு அபசகுனம்” என்று பேசத் தொடங்கினர்.
மக்களின் பயமும் அழுத்தமும் அரசனை ஒரு கடுமையான முடிவுக்கு தள்ளியது.
ஒரு இரவில், அந்தக் குழந்தையை ஒரு மரப்பெட்டியில் வைத்து, ஆற்றில் விட்டான் சூரிய குல மன்னன். கண்ணீர் வழிந்தாலும், அரசன் மனம் கல்லாகியிருந்தது.
சில நாட்களுக்குப் பிறகு, போர்க்களத்தில் மாவீரனாகச் சூரிய குல மன்னன் வீரமரணம் அடைந்தான்.
அரசும் அரச குடும்பமும் அழிந்தன.
சந்திர ஒளியில், அமைதியாக ஓடும் ஆற்றின் நடுவே, அந்தக் குழந்தை அழுதபடியே மிதந்து சென்றது. விதி அதை எங்கே கொண்டு செல்லும் என்று யாருக்கும் தெரியவில்லை.
ஆற்றருகே “வாழ்கை” எனும் சிறிய கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில், பெரிய கண்ணு என்ற முதியவரும், அவரது மனைவி முத்தழகியும் வாழ்ந்து வந்தனர்.
அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இருந்தாலும், அன்பும் ஒற்றுமையும் நிறைந்த வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தனர்.
பெரிய கண்ணு நாள்தோறும் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்துவார். ஒரு நாள் காலை வழக்கம்போல் மீன் பிடிக்க ஆற்றுக்குச் சென்றார். நீண்ட நேரம் முயன்றும் மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.
இரண்டு மணி நேரம் கழித்து அவர் வீடு திரும்பினார்.
அவரை பார்த்த முத்தழகி கேட்டாள்,
“என்னங்க… இன்னைக்கும் எதுவும் கிடைக்கலையா?”
பெரிய கண்ணு சிரித்தபடியே,
“மீன் கிடைக்கல முத்து… ஆனா கடவுள் ஒரு பெரிய பொக்கிஷத்தை கொடுத்திருக்கார்” என்றார்.
அதனைச் சொல்லிக்கொண்டே, மரப்பெட்டியில் இருந்த குழந்தையை மனைவிக்கு காட்டினார்.
முத்தழகி அதிர்ச்சியுடன் கேட்டாள்,
“யாருங்க இந்தக் குழந்தை? முத்து மாதிரி மின்னுதே!”
“மீன் பிடிக்கப் போன இடத்துல ஆற்றில மிதந்துக்கிட்டு இருந்தான் முத்து” என்றார் பெரிய கண்ணு.
குழந்தையை கைகளில் எடுத்த முத்தழகியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“எங்க… இவனை நம்மளோட பிள்ளையா வளர்த்துக்கலாமா?” என்று மென்மையாக கேட்டாள்.
சில நொடிகள் யோசித்த பெரிய கண்ணு,
“கடவுள் அனுப்பிய வரம் தான். நாம வளர்ப்போம்” என்றார் உறுதியுடன்.
“அப்படின்னா… இவனுக்கு என்ன பேர் வைக்கலாம்?” என்று முத்தழகி கேட்டாள்.
சிறிது நேரம் யோசித்தபின்,
“செந்தாமரை மூர்த்தி” என்று சொன்னாள்.
சந்திர ஒளியில் ஆற்றில் வந்த அந்தக் குழந்தை, இனி ஒரு புதிய வாழ்க்கைக்குள் நுழைந்தது.
அகிலம் ஆண்ட அரசன்
அத்தியாயம் 1.2 – விதியின் வழி
செந்தாமரை மூர்த்தி என்ற பெயர் சூட்டப்பட்ட அந்தக் குழந்தை, பெரிய கண்ணுவின் அன்பிலும் முத்தழகியின் அரவணைப்பிலும் வளர்ந்தான்.
காலம் நகர்ந்தது. இப்போது அவனுக்கு பன்னிரண்டு வயது.
காட்டின் மடியில், வெளி உலகைப் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் அவன் வளர்ந்தான். மரங்களின் நிழல், ஆற்றின் ஓசை, வேட்டையின் சத்தம் — அவனது உலகம் அதுவே.
ஒரு நாள், தந்தையுடன் வேட்டையாடி திரும்பிக் கொண்டிருந்தபோது, மூர்த்தி திடீரென கேட்டான்:
“அப்பா… வெளி உலகம் எப்படி இருக்கும்? அங்கே இருப்பவர்கள் நல்லவர்களா? இல்லையென்றால் தீயவர்களா?”
பெரிய கண்ணு சிறிது சிரித்தார்.
“இறைவன் படைத்த மனிதன் ஒவ்வொருவரும் நல்லவராகத்தான் பிறக்கிறான். ஆனால் சூழ்நிலைகள்தான் சிலரை மாற்றி விடுகின்றன. நல்லவனாகவும், தீயவனாகவும் ஆக்குவது வாழ்க்கை தான்.”
மூர்த்தி குழப்பத்துடன் பார்த்தான்.
“எனக்கு இன்னும் புரியவில்லை அப்பா…”
“நாம் வேட்டையாடும் மிருகங்களை நினைச்சுப் பார்,” என்றார் பெரிய கண்ணு.
“சிங்கம் தைரியமாக இருக்கும். நரி சூழ்ச்சி செய்யும். மான் அப்பாவியாக இருக்கும். மனிதர்களும் அப்படித்தான். அவர்களின் மனசு எப்படி வளர்க்கப்படுகிறது என்பதுதான் முக்கியம்.”
சில நொடிகள் அமைதியாக நடந்தார்கள்.
“நான் எப்போது அந்த உலகத்தைக் காண்பேன்?” என்று மூர்த்தி மீண்டும் கேட்டான்.
பெரிய கண்ணு ஆழ்ந்த மூச்சுவிட்டு,
“நேரம் வரும்… ஆனால் அந்த உலகம் நாம் வாழும் காட்டை விட கடினமானது,” என்றார்.
காலம் வேகமாக நகர்ந்தது.
மூர்த்தி பதினாறு வயதை எட்டினான். ஆனால் விதி அவனை மீண்டும் சோதித்தது.
முதலில் பெரிய கண்ணு நோயால் உயிரிழந்தார்.
அந்த துயரம் இன்னும் ஆறாத நிலையில், சில மாதங்களில் முத்தழகியும் மறைந்தாள்.
ஒரே ஆண்டில் தாய் தந்தையையும் இழந்த மூர்த்தி, தனிமையில் காட்டிலேயே வாழத் தொடங்கினான். துயரம் அவனை மெலிந்தவனாக்கவில்லை — மாறாக மனதளவில் உறுதியானவனாக்கியது.
ஒரு வருடம் கழித்து, வாழ்க்கையின் ஓட்டத்தில் அவன் மனிதர்கள் வாழும் பகுதியை அடைந்தான்.
அங்கிருந்த கூட்ட நெரிசல், சந்தை சத்தம், அந்நிய முகங்கள் — அவனுக்கு அனைத்தும் புதிது. எங்கு செல்வது? யாரிடம் பேசுவது? அவனுக்கே தெரியவில்லை.
அப்போது ஒரு உரத்த அறிவிப்பு கேட்டது:
“அரண்மனை அறிவிப்பு!
இன்று மாலை நம் சந்திர குல மன்னன் புதிய படைவீரர் பயிற்சி கூடத்தைத் தொடங்குகிறார்! விருப்பம் உள்ள இளைஞர்கள் அனைவரும் சேரலாம்!”
அந்த வார்த்தைகள் மூர்த்தியின் உள்ளத்தில் ஒரு தீப்பொறியை ஏற்படுத்தின.
விதியின் விநோதம் பாருங்கள் —
சூரிய குலத்தின் இளவரசன் என்பதை அறியாமல், சந்திர குல மன்னனின் படையில் சேர அவன் முடிவு செய்தான்.
பசி மற்றும் வறுமை அவன் உடலை மெலிந்ததாக மாற்றியிருந்தது. அவனைப் பார்த்த சில இளைஞர்கள் கிண்டலாக,
“பாருங்க… எலும்பு வீரன் வந்துட்டான்!” என்று சிரித்தனர்.
ஆனால் அவன் கண்களில் இருந்த உறுதியை யாரும் கவனிக்கவில்லை.
படையில் சேர்க்கப்பட்ட நாள், ஒவ்வொரு புதிய வீரருக்கும் அடையாளமாக சூடான இரும்பால் எண் பதிக்கப்பட்டது.
மூர்த்தியின் முதுகில் பதிந்தது:
படை வீரன் – 789
அந்த எண் அவனுக்கு ஒரு அடையாளம் மட்டும் அல்ல.
அது அவன் பழைய வாழ்க்கையின் முடிவும், புதிய போராட்டத்தின் தொடக்கமும் ஆகும்.