அன்புள்ள வாசகரே, இந்தப் பயணத்தை பயனுள்ளதாக மாற்றியதற்கும், இந்தப் பக்கங்களுக்கு உயிர் ஊட்டியதற்கும் உங்களுக்கு இப்புத்தகத்தை சமர்ப்பிக்கிறேன். மேலும், எனது தாய், தம்பி, ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு இதை சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
அணிந்துரை
வாசகர்களே, இப்போது நீங்கள் கையில் ஏந்தியிருப்பது ஒரு சாதாரண புத்தகம் அல்ல; இது ஒரு மாபெரும் கால இயந்திரம். ஒரு துளி மையில் ஒட்டுமொத்த சமுத்திரத்தையும் அடைக்க முயலும் பைத்தியக்காரத்தனமான முயற்சி இது. இந்தப் பக்கங்களுக்குள் நீங்கள் நுழையும்போது, நீங்கள் அறிந்த உலகம் உங்களை விட்டு மெல்ல நழுவிப்போகும். இங்கு மேகங்கள் ரத்தமாக மாறும், அமைதி இடியென முழங்கும், ஒரு சிறுமியின் புன்னகை பேரரசு ஒன்றையே சரிக்கும் வல்லமை கொண்டிருக்கும். இந்தப் பயணத்தின் இறுதியில், நீங்கள் இப்போது இருக்கும் அதே மனிதராகத் திரும்ப மாட்டீர்கள் என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். ஏனெனில், கற்பனை என்பது ஒரு சிறை அல்ல; அது நாம் கண்டிராத ஒரே சுதந்திரம் என்று இப்புத்தகத்தை வாசித்த பள்ளி ஆசிரியையாகிய நான் உறுதியளிக்கிறேன்.
முன்னுரை
நாம் வாழும் சாகச உலகத்தைப் பற்றியும், இந்த உலகத்தை தனது எதிரியிடமிருந்து காப்பாற்றிய நாயகனின் சாதனையைப் பற்றியும் இந்தப் புத்தகம் பேசுகிறது.
நன்றி
எனது கற்பனை என்னும் சிறு தீப்பொறியை, ஒரு மாபெரும் அறிவுப் பேரொளியாக மாற்றிய எனது பள்ளி ஆசிரியர்களுக்கும் எனது விடுதி நண்பர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள். ஒரு கல்லைச் செதுக்கி அதனுள் மறைந்திருக்கும் சிலையைக் கண்டெடுக்கும் சிற்பிகளைப் போல, என்னுள் இருந்த இந்தக் கதையை உலகறியச் செய்த பெருமை அவர்களையே சாரும்.
குறிப்பாக, ஷெர்லி மேம் (Shirley Mam) அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். ஒரு தாயின் அரவணைப்போடும், ஒரு வழிகாட்டியின் தீர்க்கதரிசனத்தோடும் அவர் கொடுத்த ஊக்கமே, இந்த நூலை இன்று உங்கள் கைகளில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. என் எழுத்துக்கள் திசைமாறிய போதெல்லாம், ஒரு கலங்கரை விளக்கமாக நின்று எனக்கு வழிகாட்டியவர் அவர். இந்த நூல் இன்று பிரசுரமாகியிருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் இருக்கும் உண்மையான நாயகி அவர்தான்.
முகவுரை
"இந்த உலகம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் இருள் சூழ்ந்து, ஒட்டுமொத்த பிரபஞ்சமே அழியும் தறுவாயில் இருந்தபோது, விதியின் விளிம்பிலிருந்து ஒருவன் உதித்தான். அவன் வெறும் மனிதன் அல்ல; அவன் இந்த மண்ணின் ஆன்மா. எதிரியின் பலம் என்பது ஒரு முடிவில்லாத சமுத்திரம் என்றால், அந்தச் சமுத்திரத்தையே தனது ஒற்றை மூச்சில் வற்றச் செய்யும் வல்லமை படைத்தவன் நம் நாயகன். அவன் வீழ்த்தும் ஒவ்வொரு அடியும் ஒரு யுகத்தின் சாட்சியாக மாறும்.
ஆனால் எச்சரிக்கை! அவன் உலகைக் காப்பாற்றிவிட்டான் என்று நீங்கள் நினைக்கும் போதுதான், உண்மையான சஸ்பென்ஸ் தன் முகமூடியைக் கழற்றும். இந்தக் கதையில் வெற்றி என்பது ஒரு தற்காலிக நிழல் மட்டுமே. நாயகன் உலகைக் காத்தாரா அல்லது ஒரு புதிய மர்மத்தின் தொடக்கத்தை உருவாக்கினாரா? இந்தப் பக்கங்களுக்குள் நுழையும்போது, நீங்கள் காண்பது ஒரு தனிமனிதனின் போர் மட்டுமல்ல, அது காலம் தோறும் தொடரும் முடிவில்லாத ஒரு மர்ம வேட்டை. ஒவ்வொரு முடிவும் இங்கே ஒரு புதிய ஆரம்பம்!"
உலகை சுற்றி
ஊர் முழுவதும் ஒரே பதற்றம். அதன் காரணம் அன்றைய செய்திதான். அன்று கடலுக்குச்சென்ற மீனவர்கள் ஓர் உருவத்தைப் பார்த்திருக்கின்றனர். கடலுக்குள் சென்ற ஆறு படகுகளில் ஒன்றுதான் தப்பியது. 11 பேர் காணவில்லை. கடல் முழுவதும் ஒரே இரத்தம். மேலும், இருநாட்களில் 8 உடல்கள் கடலில் மிதந்தன. இச்செய்தி அனைத்து ஊர்களுக்கும் பரவின. பதற்றம் மிகுந்தது.கடலுக்குச்சென்று தப்பி பிழைத்துவந்த சில மீனவர்களிடம் கேட்டதிலும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. ஓர் உருவத்தை கண்டதாக சொன்னார்கள். NIOT ஆய்வு நிலையத்திற்கு இந்த தகவல் சென்றது. கடலின் அருகேயிருந்த இடமெல்லாம் அழிந்தன. இதை அறிந்த ESSO ஆய்வு மையம், ஒரு குழுவை நியமித்தது. அக்குழு 7 கடற்படை வீரர்களை கொண்டது. குழுவின் கேப்டன் பெயர் ஆதவன். குழு ஆய்வுக்கு கிளம்பியது ; கப்பல் கடலுக்குள் இறங்கியது. தேவையான ஆயுதங்கள் எல்லாம் சேர்க்கப்பட்டது. சூரியன் மறையும் நேரம். மேகமெல்லாம் இரத்ததைப்போல் சிவந்து காணப்பட்டது. அது, ‘கடலுக்குள் வராதே’ என்று சைகை காட்டுவதுபோல் இருந்தது. ஆதவன், தன் பயணத்தை தனது குழுவினருடன் ஆரம்பித்தான். அவர்கள் சென்றது ஒரு நீர்மூழ்கி கப்பலில். மேகம் கருக்கத்தொடங்கியது. காற்று உஸ்ஸ்... உஸ்ஸ்... உஸ்ஸ்... என்று சத்தம்போட்டது. சுற்றிலும் கருமுகில். இருட்டு... இருட்டு... இருட்டு... அனைவரும் சாப்பிட்டனர். பயணம் தொடங்கியது. சாப்பிட்டனர் ; தூங்கினர். சிறிது நேரத்தில் அவ்வுருவதை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. 10 நாட்கள் ஆகியது. எதுவும் அவர்களது கண்களுக்குத் தென்படவில்லை. ஆராய்ச்சி மையத்திலிருந்து அழைப்பு வந்தது. குழுவினரை திரும்பி வரக்கூறியது. "இன்னும் இரு நாட்கள் பொறுங்கள் ; நாங்கள் தேடிபார்க்கிறோம் " என்று கேப்டன் அவ்வாராய்ச்சி மையத்திடம் கூறினார்.ஆயினும், ஆராய்ச்சி மையம் ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, கப்பல் துறைமுகத்தை நோக்கி திரும்பியது. தற்போது, வங்காள விரிகுடாவின் நடுப்பகுதியில் நீர்மூழ்கி கப்பல் இருக்கிறது. கப்பலை திருப்பினர். அனைவரும் நன்றாக சாப்பிட்டுவிட்டு மிகவும் சந்தோஷமாக பாடல்பாடிக்கொண்டு இருந்தனர். இந்த ஆராய்ச்சி இன்னும் முடியவில்லையே என்ற அதிருப்தியில் தன்னந்தனியாக ஆதவன் உட்கார்ந்துகொண்டு இருந்தார். அக்குழுவிலிருந்த ராம் என்பவன், கேப்டன் அருகில் வந்து சிறிது பதற்றத்துடன் உட்கார்ந்தான். அவனின் உணர்வை புரிந்துகொண்ட கேப்டன், அவனை கட்டித்தழுவினார். "அனைவரும் தங்கள் உறவினர்களை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளனர் ; நீங்கள் மட்டும் ஏன் சோகமாக தனியாக உட்கார்ந்துக்கொண்டு இருக்கிறீர்கள்" என்றான், ராம் .
ஆதவன் : உனக்கு உறவினர்கள் இருக்காங்களா ?
ராம் : ஆமா இருக்காங்க.
ஆதவன் : எனது அப்பா போன சுனாமில 98 பேர காப்பாத்துனாரு. அவரும் ஒரு கடற்படை வீரர் தான். எல்லாரையும் காப்பாத்திட்டு கடல்ல மூழ்கி செத்துட்டாரு. அத கேட்ட அதிர்ச்சியில அம்மா கோமாக்கு போய்ட்டாங்க. என் 3 வயசு தங்கச்சி சாப்பிடாம தூங்காம அழுதுட்டே செத்துட்டா. என் அண்ணா எங்கள விட்டுட்டு எங்கேயோ போய்ட்டாங்க. என் அம்மாக்கு 3 லட்சம் செலவுசெய்யனும். ஆனா, பணம் இல்ல. என் அப்பா மாதிரியே எல்லாரையும் காப்பாத்தி பணம் சம்பாதிக்கனும். அதுக்குதான் இந்த ஆராய்ச்சிக்கு வந்தேன்.ராம் : உங்க அப்பா பேரு என்ன ?
ஆதவன் : என் அப்பா பேரு கதிர். ஏன் கேக்குற ?
ராம் : என் அப்பா பேரு கார்த்தி. என் அப்பாவும் அந்த சுனாமில தான் செத்தாரு. அப்போ நான்தான் சுற்றுலாக்கு போலாம்னு என் அம்மா கிட்ட கேட்டேன். என் அப்பா, அம்மா, அண்ணா, நான் எல்லாரும் சுற்றுலாக்கு போனோம். அப்போதான் சுனாமி வந்துச்சு. உங்க அப்பாவாலதான் நானும் என் குடும்பமும் உயிரோடு இருக்கிறோம். உங்க அப்பா காப்பாத்துன 98 பேருல நானும் ஒருத்தன்.
ஆதவன் : என் அப்பா எனக்கு விட்டுச்சென்ற நண்பன்டா நீ.
கப்பல் துறைமுகத்தை நோக்கி சென்றது. சிறிது நேரம் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அனைவரும் தூங்கிவிட்டனர். நேரம் கடந்தது. ஆதவன் இன்னும் தூங்கவில்லை. எதையோ யோசித்துகொண்டு இருந்தான். திடீரென்று ஒரு சத்தம். டமில்... டமில்... டமில்... உஷ்ஷ்ஷ்ஷ்.... க்ரீக்... க்ரீக்க்... அனைவரும் எழுந்தனர். என்ன சத்தம் அது ? என்று கத்திகொண்டே அனைவரும் வெளியே சென்று பார்த்தனர். கும்மிருட்டு. அவ்விருட்டிலும் ஓர் உருவம் காணப்பட்டது. உடல்முழுவதும் தடித்த செதில்கள். கருமையாக தென்பட்டது அவ்வுருவம். தன் வாயை திறந்தது. மிகவும் கூர்மையான பற்கள். நீண்ட வால்தொங்கல். சுமார் 100 மைல் கொண்டது அந்த வால். இதுவரை யாரும் கண்டிராத ஓர் உருவம். அனைவரும் திகைத்தனர். பெரிய ஈட்டிகள் கொண்டுவரப்பட்டது. அனைவரும் ஈட்டியை ஆயத்தமாக வைத்திருந்தனர். கேப்டன் : அதை ஒன்னும் பண்ணாதீங்க. நாம ஏதாவது செஞ்சாதான் அது நம்மள தாக்கும். நாம ஆய்வு செய்யத்தான் வந்து இருக்கோம் ; அத கொல்ல இல்ல. எல்லாரும் அமைதியா இருங்க. இதுவரைக்கும் நாம இத பாத்தது இல்ல. அது எப்படி தாக்கும்னு நமக்கு தெரியாது. அதுனால அமைதியா இருங்க.
ஒருவன் : இந்தா பெருசு !
கப்பலின் ஒரு பகுதி பலமாக அடிவாங்கியது. மிகுந்த சேதாரம். ஒரு குத்து தான் குத்தியது. அதற்கு இவ்வளவு சேதாரம். மின்கம்பி அனைத்தும் அறுபட்டது. அதனால், மின்சாரம் இயங்கவில்லை.வெளியேயும் இருட்டு ; உள்ளேயும் இருட்டு. அனைவரும் அமைதியாக இருந்தனர். பொறுமையாக காத்திருந்தனர். இப்போது, ஆய்வு மையத்திற்கும் தொடர்புகொள்ள முடியவில்லை. அனைவரும் பயந்து இருந்தனர். யாரும் தூங்கவில்லை. காலை 5 மணியளவில் சூரியவெளிச்சம் சிறிதளவு தென்பட்டது. அவ்வுருவத்தை காணோம். அவ்வளவு பெரிய உருவம்! எங்கே போனதோ! பதிலேதும் கிடைக்காததால் ஆய்வுமையத்தில் ஒரே குழப்பம்.
ஆய்வுமையம் இன்னொரு குழுவை நியமித்தது. அக்குழுவின் கேப்டன் பெயர் கோசி. அவன் மிகுந்த கோபக்காரன். அக்குழு முந்தின குழுவை தேடி சென்றது. கடைசியாக ஆதவன் குழுவினர் தொடர்புகொண்ட இடம் வங்காள விரிகுடாவின் நடுப்பகுதி. அங்கு சென்றனர். 7 நாட்கள் ஆனது. ஆதவனின் குழு இன்னும் கிடைக்கவில்லை ; உருவமும் கிடைக்கவில்லை. அவ்வுருவத்தை பற்றின தகவல் முந்தின குழுவினருக்கு மட்டுமே தெரியும். அவர்களை வலைவீசி தேடியும் மேலும் 4 வாரங்கள் ஆனது. வங்காள விரிகுடாவை சுற்றிலும் தேடிப்பார்த்தனர். எதுவும் கிடைக்கவில்லை. கோசி தத்தளித்தான்.
கோசி மாலுமியிடம் : துறைமுகத்துக்கு கப்பல ஓட்டிட்டுபோ.
ஆய்வு மையத்திலிருந்து அழைப்பு வந்தது. சிறிதுகூட அச்சமின்றி தைரியமாய் பேசினான்.
கோசி : எங்களால் இனிமேலும் தேட முடியாது. எங்கள் உயிரை நினைத்தால் மிகவும் பயமாக உள்ளது. நாங்கள் திரும்புகிறோம்.
வேறுவழியில்லாமல், திரும்பிவர கூறியது ஆய்வுமையம். திரும்பிச்செல்ல 7 முதல் 10 நாட்கள் வரை ஆகலாம். ஆனால், உணவு மிகவும் குறைவாகதான் இருக்கிறது. எதிர்பாராதவிதமாக அந்நடுகடலுக்கு ஒரு கப்பல் வந்தது. அது கிட்டே நெருங்கியது. கோசியின் குழுவினர் அனைவரும் பதற்றமாயினர். யாரென்று கேட்டதுக்கு ஒரு பதிலும் வரவில்லை. ஒருசில நொடிகளில் உள்ளேயிருந்து துப்பாக்கிச்சுடும் சத்தம் கேட்டது. எல்லாரும் சத்தம் கேட்ட திசையை நோக்கி ஓடினர். அங்குச்சென்ற அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. கோசி அனைவரையும் சுட்டு தள்ளினான். பின், கோசி அருகில் வந்த கப்பலில் தாவினான். அக்கப்பலில் ஏறக்குறைய 500 பணியாட்கள் இருந்தனர். 30 பேர் முன்வந்து ஆய்வுமையத்தின் கப்பலின்மேல் குண்டு வீசினர். அக்கப்பல் தீயில் முழுவதுமாக பொசுங்கியது. அதன்பிறகு கோசி, ஆய்வுமையத்தின் கீழின்றி தன்னந்தனியாக ஆதவனை தேடி புறப்பட்டான். 3 நாட்கள் ஆனது. வங்காள விரிகுடாவின் மர்மமான தீவான சென்டினல் (Sentinel) தீவுக்கு கப்பலை திருப்பினான், கோசி. அங்கே ஒரு குகைக்குச்சென்றான். உள்ளே ஆதவன் மிகுந்த காயங்களோடு இருந்தான். 7 பேர் கொண்ட குழுவை உடையது ஆதவனின் குழு. அதில் 5 பேர் மிகுந்த அவெட்டுக்காயங்களோடுக்குகையில் இறந்துகிடந்தனர். மீதம் இருவரை காணவில்லை. ஆதவன் பலத்த காயங்களோடு கைகள் கட்டப்பட்டு தொங்கிக்கொண்டு இருந்தான். கோசி உள்ளே சென்று, சாட்டையை எடுத்து, ஆதவனை பலமாய் அடித்தான். சிறிதுநேரத்தில், கோசியின் ஆட்கள் சாப்பிட சென்றனர். ஆதவனுக்கு சாப்பாடு கொடுத்து சென்றுவிட்டனர்.அது ஓர் இரவுப்பொழுது. அந்நேரம் ராம் அங்கு மிகவும் ஆடம்பரமாக வந்தான். ராமின் பின்னே கோசி வந்தான்.
கோசி : என்னை ஞாபகம் இருக்கிறதா ? இவன்தான் எனது தம்பி.
ஆதவன் : ஓ ! இவன் உன் தம்பி தானா ? நானும் ராம ரொம்ப நம்பிட்டேன். நீயே என்ன தேடி வந்து இருக்க. ஆ.....
பேசியதும் கோசி ராமை அங்கிருந்து கூட்டிச்சென்றான். NIOT ஆராய்ச்சி மையம் மிகவும் பதற்றமானது. அரசாங்கம் இவ்வாராய்ச்சியை நிறுத்தவும், காணாமற்போன வீரர்களை தேடவும் உத்தரவிட்டது. கோசி மற்றும் ராம் இருவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கச்சென்றனர். 2 பேர்கள் ஆதவனுக்கு காவல் காத்தனர். காவலர்கள் கண்மூடி திறக்கும் நேரத்தில் புயலாய் இருவரையும் அடித்து தப்பித்து ஓடினான். அவர்கள் மயங்கி இருந்த நேரத்தை பயன்படுத்தி தீவில் இருக்கும் காட்டுக்குள் சென்றான். சென்டினல் தீவினர் பொறுத்தவரையில், வெளியாட்கள் யார் வந்தாலும் அவர்களை கொன்றுவிட்டு அங்கேயே புதைத்துவிடுவார்கள். அது, அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட தீவாகும். பிரதமரால்கூட உள்ளே செல்ல முடியாது.
நேரம் கடந்தது. சூரியன் உதித்தது. குகையில் ஒரே குழப்பம். ஆதவனை காணவில்லை. கோசி அத்தீவு மக்களை கூட்டினான். ஆதவனை கண்டுபுடிக்கச்சொல்லி அத்தீவு மக்களுக்கு கட்டளையிட்டான். அதேநேரம், ஆதவன் காட்டுக்குள் சுற்றி திரிந்தான். சிறிது தூரத்தில் மண் உள்வாங்கியது. குழியில் விழுந்தான். காட்டு வண்டுகள் கூட்டம் அவன் கால்களை மொய்த்தது. கதறி அழுதான். அனைத்தும் கரும் வண்டுகள் ; விஷ வண்டுகள். தன் காலை எடுத்ததும், அருகிலிருந்த மூலிகை செடிகளை எடுத்து, நசுக்கி, வண்டு கடித்த இடங்களில் பூசினான். மெதுவாக ஊர்ந்து நகர்ந்தான். திடீரென எங்கேயோ இருந்து அம்பு பாய்ந்தது. ஆதவனின் வலது காலை பதம் பார்த்தது. ராமின் குறி தப்பவில்லை. ராம் ஆதவனை புடித்துக்கொண்டு கோசியினிடம் அழைத்துச்சென்றான்.
கோசி : நீ எதுக்கும் கவலைப்படாத. நான் உன்ன கொல்லமாட்டேன். 15 வருஷத்துக்கு முன்னாடி எத பண்ணக்கூடாதுனு சொன்னியோ அத உன் கண்ணு முன்னாடியே பண்ணி காட்டுவேன். நீ இன்னும் ரொம்ப நாள் உயிர் வாழனும்.
தான் சாகமாட்டோம் என்று தெரிந்தபோதிலும், மிகவும் ஆதவன் பயந்தான். தனக்கு தெரிந்தும் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற கவலை ஆதவனை ஆட்கொண்டது. கோசி மற்றும் ராம் இருவரும் ஒரு பாழடைந்த வீட்டிற்குள் சென்றனர். அவர்களுடன் 50 பேர் கொண்ட ஒரு குழுவினர் முன்சென்றனர். கீழே ஓர் அரை தென்பட்டது. அவர்கள் அனைவரும் பூமிக்கு அடியில் இருக்கும் அந்த அறைக்கு சென்றனர். இருள் சூழ்ந்திருந்த அறையில் ராம் விளக்கை அழுத்தினான். அங்கே ஒரு பெரிய ஆராய்ச்சி கூடமே இருந்தது. அதேநேரம், ஆதவனை சுற்றி 50 பேர் காவல் செய்தனர். வெறியுடன் இருந்த அவன், அனைவருடனும் சண்டையிட்டான். மீண்டுமாய் தப்பித்தான். அத்தீவின் பெரியவர் கோசியை காண அந்த பாழடைந்த வீட்டிற்கு சென்றார். அவரை பின்பற்றி ஆதவனும் சென்றான். அங்கே சென்ற ஆதவன் கோசிக்கும் மேலே இருந்த தலைவியை பார்த்தான். அவள் பெயர் ரம்யா. ஆதவன் தனக்குள்ளேயே அழுதான். பின், தனது மனதை அமைதிப்படுத்தி, எந்தவித சத்தமும் இல்லாமல் மறைவாக நின்று அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தான். ‘இவையெல்லாம் நடக்கக்கூடாது. இதை எப்படியாவது நிறுத்த வேண்டும். ஆனால் , ஒற்றை ஆளால் எப்படி செய்யமுடியும்’ என்று ஆதவன் யோசித்தான். கோசியின் பணியாட்களுக்கு ஒருவித சீருடை இருந்தது. அவர்கள் அனைவரும் தங்கள் முகம் வெளியே தெரியாதவாறு உடை அணிந்திருப்பார்கள். அவர்களில் ஒருவனை கொன்று, சீருடையை எடுத்துக்கொண்டான். ஆதவன் தப்பித்த விஷயம் கோசிக்கு தெரியவந்தது. கோபமடைந்த கோசி, ஆதவனை பிடிக்க பெரியவரிடம் உத்தரவிட்டான். பின், தனக்கு ஒரு வேலை இருப்பதாகவும், வருவதற்கு ஒரு மாதம்வரை ஆகலாம் எனவும் சொல்லிவிட்டு இரு பணியாட்களையும் ராமையும் கூட்டிக்கொண்டு தன் பயணத்தை தொடங்கினான். தற்போது, ஆதவன் கோசியின் ஆட்களில் ஒருவனாக உலா வருகிறான். ஆதவன் கோசியின் ஆராய்ச்சி மையம் முற்றிலுமாக வளம் வந்தான். பணியாட்களில் ஒருவனாக இருந்து, அவர்கள் சொல்வதையெல்லாம் செய்து நற்பெயர் எடுத்தான். அங்கிருந்த நாட்களில் தனக்கென ஒரு தோணியை உண்டாக்கினான். தனக்கு தேவையான அனைத்தையும் ஆராய்ச்சி மையத்திலிருந்து எடுத்துக்கொண்டான். அவன், ரம்யாவை தனியாக அழைத்துவந்து பேசினான். அவள் தனது மனதை மாற்றிக்கொள்வதாக இல்லை. சில ரசாயனங்களை வைத்து ஆராய்ச்சி மையத்தை தீ வைத்து கொளுத்தினான். ரம்யா மற்றும் அங்கிருந்த பணியாட்கள் அனைவரும் தீயில் கருகி மாண்டனர். இது காட்டுத்தீயை போன்று அனைவருக்கும் பரவியது. கோசி ரம்யாவை கேட்டால், அல்லது இதை யார் செய்தது என்று கேட்டால் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அனைவரும் குழம்பினர். அவ்விடத்திலிருந்து ஆதவன் கிளம்பினான். தன பயணத்தை மரியானா தீவை நோக்கி தொடங்கினான். சென்டினல் தீவிலுள்ள காட்டில் அலைந்து திரிந்தான். பசி... பட்டினி.... இருட்டு.... ஆகியவற்றிலும் மனம் தளராது நடந்தான். நேரம் கடந்தது. காடு முழுவதும் கும்மிருட்டு. முன்னிருப்பது என்ன என்று தெரியாதவாறு இருந்தது. நிலாவின் நிழல் ஒரு ஆற்றில் பிரதிபலித்தது. அந்த ஆற்றை கடந்தால்தான் தப்பிக்கமுடியும் . அது ஒரு நீண்ட ஆறு. தான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த தோணியை சரிசெய்து புறப்பட ஆரம்பித்தான். சிறிது தூரம் சென்றான். திடீரென்று மழை பெய்தது. தோணியை கடினப்பட்டு நகர்த்தினான். ஊர் பெரியவர் கோசிக்கு பயந்து, தனது ஆட்களை கூட்டிக்கொண்டு அத்தீவிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் தீவைத்து கொளுத்தினார். பெரியவர் தானும் தீவைத்து கொளுத்தி ஊர்மக்களுடன் மாண்டுபோனார். ஊர்மக்களில் சிலர் தப்பநினைத்து ஆற்று பக்கமாக ஓடினர். கோசியின் பணியாட்கள் அனைவரும் தற்கொலை செய்துகொண்டனர். இனி இத்தீவில் கோசியின் ஆட்கள் யாருமில்லை; மக்களும் இல்லை; ஆற்றில் பெய்கிறது, மழை. ஏதோ ஒன்று ஆற்றுடன் ஓடிவந்தது. அது அருகில் நெருங்கியது. மேலும் அருகில் நெருங்கியது. ஒரு மிகப்பெரிய பாம்பு. மிகவும் நீளமாக உருவில் பெரியதாக இருந்தது. அதை பார்க்க அனகோண்டாவை போன்று இருந்தது. போன்று இல்லை, அது அனகோண்டாவேதான். இது மனிதர்களை லாவகமாக கொன்றுவிடும். ஆதவன் தனியாக இருக்கிறான். ஆயுதமும் இல்லை. அனகோண்டா மிகவும் வேகமாக நெருங்குகிறது. தோணி ஒரு பாறையில் மோதி உடைந்தது. உடைந்த பகுதியிலிருந்து ஒரு மரத்துண்டை எடுத்தான். தனது சட்டையை கழற்றி திரி போன்று செய்து மரத்துண்டில் கட்டினான். ஆராய்ச்சி மையத்திலிருந்து தான் எடுத்துவந்த சில வெடிமருந்துகளை கையில் எடுத்துக்கொண்டான். அவற்றை வேதிப்பொருட்களுடன் சேர்த்து தான் தயாரித்து வைத்திருந்த திரியால் தோய்த்தான். பின் தீயை கொளுத்தி, திறந்திருந்த அதன் வாயில் வீசினான். அது வலியால் மிகவும் துடித்து ஆக்ரோஷமாக சீறியது; அருகிலிருந்த மக்களை வெறியுடன் முழுங்கியது. ஒரு கட்டத்தில் அப்படியே ஆற்றில் மூழ்கியது. அந்நேரம், ஒரு பெரிய அதிர்வே ஏற்பட்டது. அவ்வூர் மக்களில் இருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அவர்களை ஆதவன் காப்பாற்றினான். தன்னிடமிருந்த மூலிகைகளை கொண்டு அவர்களின் காயத்தை ஆற்றினான். அவர்களை கரை சேர்த்தான். ஒருகாலத்தில் ஊர்மக்கள் ஆதவன்மேல் கோபமாக இருந்தனர். ஆனாலும் தற்போது அவன் செய்த உதவியால் அவர்கள் இருவரும் அவர்களை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் புது நண்பர்களாயினர். மூவரும் சேர்ந்து மரியானா தீவை நோக்கி தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர். மரியானா தீவில் இருக்கிறது மரியானா அகழி (Mariana Trench ). பசிபிக் பெருங்கடலில் இருக்கிறது இந்த அகழி. இது 11 கிலோமீட்டர் ஆழமுள்ளது. மேலும், 2,550 கிலோமீட்டர் நீளமும், 69 கிலோமீட்டர் அகலமும் உடையது. 200 மீட்டர் ஒரு சராசரி மனிதனால் ஒளியை காணமுடியும். 1000 மீட்டரில் சிறிது மங்கலாகவும் , அதற்குமேல் எதையும் காணவேமுடியாது. அதன் நடுவே இருக்கிறது, பசிபிக் எரிமலை வளையம் . இந்த இடத்தில் அடிக்கடி எரிமலை வெடிப்பு ஏற்படும்.
NIOT ஆராய்ச்சிமையம் இன்னும் இரு குழுவினரையும் தேடிக்கொண்டுதான் இருக்கிறது. அரசாங்கம் காணாமற்போனவர்களை உடனடியாக கண்டுபிடிக்கச்சொல்லி கட்டளையிட்டது. இந்த பொறுப்பு NIOT ல் இருந்து IORG க்கு மாற்றப்பட்டது. NIOT ஆய்வுமையமாகவும், ESSO படைவீரர்களின் மையமாகவும் இருந்து வந்தது. தற்போது அதுவும் மாற்றப்பட்டது. இந்திய அரசாங்கம் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு நிதியை திரட்டியது. ஆதவன் மற்றும் அவனது இரு நண்பர்கள் அனைவரும் மரியானா தீவுக்கு சென்றனர். ஆதவனிடமிருந்த தோணியும் உடைந்துவிட்டது. தற்போது ஆராய்ச்சிமையத்திலிருந்து எடுத்து வந்த சில பொருட்கள் மட்டுமே அவனிடம் உள்ளது. அதிலிருந்த 5 ஸ்கூபா டைவிங் உடையிலிருந்து ( Scuba diving suit ) மூன்றினை எடுத்தான். தானும் அணிந்து தனது நண்பர்களுக்கும் அணிவித்து மூவரும் நீந்தி சென்றனர். சென்டினல் தீவைவிட்டு வெளியேறி மரியானா தீவை நோக்கி சென்றனர். தீவை விட்டு சிறிது தூரம் சென்றதும், ஒரு கப்பல் தனது அருகில் வருவதை கவனித்தனர். அதை கண்ட ஆதவனின் நண்பர்கள் உடனே அதை அணுக விரைந்தனர்.
ஆதவன் : நாம் அந்த கப்பல்ல போகவேணா ; நாம அவங்ககிட்ட இருந்து ஒரு தோணிய மட்டும் வாங்கிக்கலாம்
இதனை ஏற்க அவனது நண்பர்கள் மறுத்ததால், அவன், " நீங்க அவங்களுடன் போங்க ; எனக்கு இங்க சில வேல இருக்கு, அதா முடிச்சிட்டு வரேன்".
நண்பர்கள் : நாங்களும் வரோம் ; நீங்க தனியா போக வேண்டாம்.
அந்த கப்பல் அருகேயும் வந்தது. ஆதவன் அவர்களிடம் ஒரு படகை மட்டும் கேட்டான். அவர்களிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. அது, IORG அனுப்பிய கப்பல் தான். ஆராய்ச்சிமையத்துக்கு தெரிவித்ததும் உலகமே வியந்தது. கப்பலும் துறைமுகத்தை நோக்கி சென்றது. ஆதவனை விசாரித்தனர். அவன் கூறுவதை எல்லாம் கேட்டு அதிர்ச்சி ஆயினர். கோசியை உயிரோடு பிடிக்கசொல்லியது அரசாங்கம்.
கோசியை பிடித்து கொடுப்பவர்களுக்கு 100கோடி தருவதாகும் அவன் உலகத்திற்கே துரோகம் செய்ததாகவும் பகிரங்கமாய் அறிவித்தது . ஆதவனின் நண்பர்கள் மிகவும் அதிர்ந்தனர் . என்னதான் ஆதவனுக்கு நண்பர்களாய் இருந்தாலும் கோசி உலகத்ரோகி என்று சொன்னதை அவர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. கப்பல் சென்டினல் தீவை விட்டு சிறிது தூரம் சென்றது . கோசியுடன் பணியாற்றிய ஒருவனை ஆதவன் அக்கப்பலில் பார்த்தான் . ஆதவனை பார்த்ததும் அவன் ஓட முயற்சித்தான் . அது மிகவும் பிரமாண்டமான கப்பல் . அவனை சுற்றி சுற்றி தேடினான் . செல்லும்வழியில் அந்த கப்பலின் கேப்டன் ஆதித்யா நின்று கொண்டிருந்தார் .
ஆதித்யா : இந்த வழியாக எங்கு செல்கிறாய் ?
ஆதவன் : ஒரு முக்கியமான வேலை இருக்கிறது ; அதை முடித்துவிட்டு வருகிறேன். அந்த பணியாளனை ஆதவன் கண்டுபிடித்தான்.
ஆதவன் : கோசி எங்கே ?
பணியாள் : அதெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் நீ இங்கு நடக்கும் சம்பவங்களை நிச்சயம் பார்க்க வேண்டும் .
ஆதவன் : உன் பெயர் என்ன?
பணியாள் : கௌதம்
ஆதவன் அதிர்ந்தான் .ஆதவனின் அண்ணன் பெயர் கௌதம். ஆதவன் வெற்றியில் துப்பாக்கி வைத்தான் , கௌதம் .
கௌதம் : நீ என் தம்பியாக இருக்கலாம் . கோசியின் முன்னாள் அனைவரும் ஒன்றுதான்.
திடீரென்று உள்ளே இருந்து மிகுந்த குரல் எழுந்தது. கப்பலின் மேலிருந்து கொத்துக்கொத்தாக பாம்புகள் விழுந்தன. தப்பிக்க அனைவரும் போராடினர். கௌதம் பாம்பு கடி பட்டு இறந்தான். ஆதவன் கௌதமை மடியில் வைத்துக் கொண்டு கதறிக்கதறி அழுதான். கேப்டன் ஆதித்யா ஆதவனுடன் சேர்ந்து கொண்டார். ஆதவனுடன் ஆதித்யா மற்றும் சில பேர் இருந்தனர். ஆதவன் ‘ஒரு நிமிடம் இருங்கள்’ என்று சொல்லிவிட்டு, கீழே இருக்கும் அடித்தளத்திற்கு சென்றான். அங்கே அநேக வாயு சிலிண்டர்கள் இருந்தன . திடீரென்று ஒரு புகைப்பட கருவி ஆதவன் அருகே வந்து விழுந்தது. அருகே நின்று கொண்டிருந்தது ஒரு பெண். மறைந்து மறைந்து வெளியே வந்தாள். அவளது அடையாள அட்டை கீழே விழுந்தது. அதை அவன் எடுத்துப் பார்த்தான். அவள் ஒரு பத்திரிக்கையாளர். அவளது பெயர் தாழினி. அவள் கையில் இருந்த புகைப்பட கருவி வாங்கி பார்த்தான், ஆதவன். அதில் அவள் அவனை புகைப்படம் எடுத்து இருந்தாள். அதனை ஆதவன் அழித்தான். ஆபரேஷன் ரெட் சம்பந்தமான ஆதாரங்களை சேகரிக்க வந்துள்ளதாக தெரிவித்தாள்.
ஆதவன் : இந்த ஆராய்ச்சியிக்கு வராதே அப்படியே போயிடு
தாழினி : இல்லை நான் உங்கள் கூட வருவேன் என்னை கூட்டிட்டு போங்க
மேலே இருந்து ஒரு சிறு குழந்தை " தாத்தா.... தாத்தா.... ரொம்ப பயமா இருக்கு. தாத்தா.....பாம்பு.... " ஆதவன் தாழினியை தன்னுடன் வர அறிவுறுத்தினான். எங்கு பார்த்தாலும் பாம்பு தான். அக்குழந்தையின் தாத்தா தனக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தனது கையில் ஒரு கம்பியை எடுத்து ஒவ்வொரு பாம்பாக கொல்ல ஆரம்பித்தார். சிறிது நேரம் வருகின்ற பாம்புகளை எல்லாம் தாத்தா அடித்துக் கொண்டார். அந்நேரத்தில் ஒரு மிகப்பெரிய பாம்பு வந்தது. அவர் கவனிக்காதிருந்த சமயத்தில் அவரை தன் உடம்புக்குள் சுற்றி நெரித்து கொன்றது. சாகும் முன் தன் பேத்தியை பார்த்துக் கொள்ளுமாறு ஆதவனிடம் தாத்தா கேட்டுக்கொண்டார். அக்குழந்தை கதறி கதறி அழுதது. ஆதவன் அச்சிறுமியை தூக்கிக்கொண்டு தாழினியையும்அழைத்துக் கொண்டு ஓடினான். குழந்தை அழுது கொண்டே இருந்தது. ஆதவன் குழந்தையின் வாயை மூடிக்கொண்டு மறைந்தான். அந்த பாம்பு அவர்களை விட்டு நகர்ந்தது. அந்த பாம்பு சத்தத்தை கேட்டு தான் நகர்கிறது என்பதை புரிந்து கொண்டான். அனைவரையும் அமைதியாக இருக்க கூறினான். மறுபடியும் அந்த பாம்பு வந்தது . அனைவரும் அமைதியாக ஒன்றன்பின் ஒன்றாக நின்றனர். பாம்பு அந்த இடத்தை விட்டு சென்றது. கேப்டன் ஆதித்யா அனைவரையும் உறையும் பனிக்கட்டி இருக்கும் அறைக்கு அழைத்து சென்றான் . 10 நிமிடத்திற்கு மேல் அந்த அறையில் இருக்க முடியாது. கண்டிப்பாக அந்த இடத்தை விட்டு சென்று ஆக வேண்டும். ஆதவனுடன் தப்பித்து வந்த ஒருவனுக்கு பாம்பு கடிப்பட்டு இருந்தது. இதனை தாழனி கவனித்தாள் .அவள் மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றவள். தன்னிடம் இருந்த முதலுதவி காணாமல் போனதை எண்ணி அதிர்ச்சடைந்தாள். ஆதவன் செய்வதறியாது தவித்தான் . அனைவரும் குளிரில் நடுங்கினர். அந்த அறை இரும்பு கதவால் அடைந்திருந்தது . எதைக் கொண்டும் அக்கதவினை உடைக்க முடியாது . அங்கு அந்த பாம்பு வந்தது. எவரும் இதனை எதிர்பார்க்கவில்லை . அங்கு இருந்தவர்களில் தாழினியும் அச்சிறு குழந்தையும் தான் பெண்கள் . ஆதவன் தாழினிக்கு தன் உடையை கொடுத்து அவளை போர்த்தினான் . பாம்பு கடிபட்டவன் உயிர் ஊசிலாடிக்கொண்டிருந்தது. அவன் ஒரு யோசனையை கூறினான் . பாம்பினை சத்தத்தை கொண்டு திசை திருப்பி உள்ளே வைத்து பூட்டி விடுவதாக கூறினான். அடிபட்டவன் , அந்த இரும்பு கதவை திறந்து கத்திக்கொண்டு பின்னோக்கி நடந்தான் . அந்த பாம்பு இவனது சத்தத்தை பின் தொடர்ந்து நகர்ந்தது. அது அவ்வளவு பெரிய அறை! பாம்பு முழுவதுமாக உள்ளே வந்தது . மற்றவர்களை வெளியே போகும்படி சைகை காட்டினான் . அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தனர் . ஆதவன் இவனை வெளியே வரும் படி சைகை காட்டினான். ஆனால் அவன் வெளியே வரவில்லை ; கதவை மூடிவிட்டான் . அவ்வளவுதான்!!! உள்ளே இருந்து ஓர் அலறல் சத்தம் . ஆதவன் கதறினான் . கேப்டன் ஆதித்யா ஆதவனை இழுத்துக்கொண்டு ஓடினார் . உள்ளே இருந்த பாம்பு உறைய ஆரம்பித்தது . அதன் தாக்கமாக வெளியே இருந்த பாம்புகள் அனைத்தும் துடிதுடித்தன. அனைவரும் என்ஜின் இருக்கும் இடத்திற்கு சென்றனர் . அங்கும் நிறைய பாம்புகள் இருந்தன . ஆதித்யா அதில் ஒரு பாம்பு கடி பட்டு இறந்தான் . இதை பார்த்த தாழினி பயத்தில் கத்த முற்பட்டாள். ஆதவன் அவளது வாயை மூடினான் . தாழினியின் தந்தை கேப்டனாக இருந்தவர் . எனவே தாழினியும் சிறிது கப்பல் இயக்கும் திறனில் தேர்ச்சி பெற்று இருந்தாள். முயற்சி செய்வதாக கூறினாள். அனைவரும் பயந்தனர் ; மிகவும் பதற்றம் ஆயினர். கப்பலை இயக்கினாள். முயற்சி வீணாகவில்லை . கேப்டன் ஆதித்யா இறந்ததை ஆதவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .கப்பல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தது . அனைவரும் ஆனந்தமாக இருந்தனர் . ஆதவன் மேல் தளத்திற்கு சென்றான் . அங்கு அந்த உருவத்தைக் கண்டு மிகவும் அதிர்ந்து போனான் . அவ்வளவு பெரிய உருவம் ! எத்தனை பெருசு !!! உள்ளே இருந்த பாம்பு அழிந்தது . இதனால் கப்பல் முழுவதும் இருந்த பாம்புகள் அனைத்தும் அடுத்தடுத்து ஒன்று ஒன்றாய் செத்து விழுந்தது. ஆதவன் இன்னும் மேல்தளத்தில் தான் இருக்கிறான் . அந்த உருவத்தின் வாயிலிருந்து வால் போன்று ஒன்று நீண்டு கொண்டிருந்தது . ஆதவன் வேகமாக உள்ளே சென்று அனைவரையும் சிறு படகில் ஏற்றினான். ஆதவனையும் வரும்படி அழைத்தனர் . ஆனால் அவன் வருவதாக இல்லை . எல்லாரையும் அனுப்பிவிட்டு கீழ்தளத்திற்கு சென்றான். அங்கே ஆதவனுடன் இருந்த 4 பேரில் ஒருவன் பதுங்கி இருந்தான். அவனையும் படகில் அனுப்பி வைத்தான். அங்கேயிருந்த வாயு சிலிண்டர்களை உடைத்தான் . வாயு அனைத்தும் வெளியே வந்தது. அவற்றை தீவைத்து கொளுத்தினான். கப்பலில் இருந்து வந்த நெருப்பை பார்த்த தாழினி பதறினாள். "கேப்டன்....கேப்டன்..." என்று அனைவரும் கதறினர். கப்பலுடன் சேர்ந்து அந்த உருவமும் சரிந்தது. தாழினி , தாழினியின் தோழி , ஆதவனின் நண்பர்கள் இருவர், சிறுமி, மற்றும் இன்னும் இருவர் மட்டுமே தப்பித்து இருந்தனர். இந்த இருவர் ஆதவனுக்கு முன்பின் தெரியாதவர்கள்தான். ஆனாலும் எங்கேயோ இருந்து அவர்கள் தப்பித்து வந்து இருந்தனர். ஆதவனை குறித்து அனைவரும் கவலை அடைந்தனர். சிறிது நேரம் கடந்தது. தாழினி இன்னும் ஆதவனுக்காக காத்து கொண்டு இருந்தாள் . தீடீரென்று ஆதவன் கடலில் நீந்தி கொண்டு வந்தான். அவனை அனைவரும் படகில் தூக்கினர். தாழினி அவனை கட்டியணைத்து கொண்டாள் . அவன் மூச்சு விடவும் மிகவும் சிரமப்பட்டான். படகு காற்றின் திசையை நோக்கி நகர்ந்தது. அந்த கப்பல் ஒரு தீவின் முன் நின்றது. தாழினியின் தோழியும் ஆதவனின் நண்பனும் முன் சென்றனர். திடீரென்று தாழினியின் தோழி அங்கிருந்த ஒரு பாறை மீது மோதி கீழே விழுந்தாள் . முட்டியிலிருந்து இரத்தம் வழிந்தது. உடனே அருகிலிருந்த பூ போன்று பெரிய உருவில் இருந்த ஓர் உருவம் காளான் உருவமெடுத்து தாழினியின் தோழியை முழுங்கியது . அனைவரும் சுற்றிச்சுற்றி பார்த்தனர். அங்கே அதே போன்று அநேக காளான்கள் இருந்தன. ஆதவன் அனைவரையும் பின்வாங்க கூறினான். அவன் அச்சிறுமியை தூக்கிக்கொண்டு பின்வாங்கினான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பின்வாங்கும் அவசரத்தில் இருந்த ஆதவனின் நண்பன் கீழே விழுந்தான். உடனே அருகிலிருந்த காளான் தன் உருவத்தை வெளிக்காட்டியது. ஆதவன் சுதாரித்துக்கொண்டான். உடனே அவனது நண்பனை பின்னுக்கு இழுத்தான். ஒரு துணியை வைத்து அவனது காயத்தை கட்டினான் . காளான்கள் தன் உருவத்தை மறைத்தது. ஆதவனுக்கு உண்மை புரிந்தது. இரத்தத்தின் உதவியினால்தான் அவைகள் இரைதேடுகிறது. பொறுமையாக நிதானமாக அனைவரும் அங்கிருந்து நகர்ந்தனர். இங்கிருத்து சென்றுவிடலாம் என்று ஆதவனின் நண்பன் கூறினான். அதுதான் நல்லது என்று அனைவரும் நினைத்தனர். அப்போது அங்கிருந்த ஒருவன் " இத்தீவில் அநேக கட்டிடங்கள் இருக்கிறது ; அங்கே பாருங்கள் " என்று கட்டடத்தை நோக்கி தனது கையை காண்பித்தான் . அங்கே அநேகர் இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறினான். எனவே அனைவரும் அவன்பின் சென்றனர். சிறிது தூரம் நடந்தனர். திரும்பி சென்று விடலாம் என்று தாழினி கூறினாள். ஆதவன் அவனை சமாதானப்படுத்தி வழிநடத்தினான். அவர்கள் ஒரு மூங்கில் காட்டினுள் சென்றனர். அப்போது திடீரென்று ஒரு மூங்கில் நகர்வதுபோல் தெரிந்தது. ஆதவனின் தோழன் திரும்பி பார்த்தான். அதற்குள் அம்மூங்கில் அவனை பதம் பார்த்தது. அவனின் உச்சந்தலையிலிருந்து அந்த மூங்கில் உள்நோக்கி ஊடுருவியது . ஆதவன் தன் தலையை உயர்த்தி பார்த்தான். அங்கே மிகவும் பிரமாண்டமான பெரிய வண்டு ஒன்று இருந்தது. அதன் கால்கள்தான் மூங்கில் போன்ற அமைப்பை கொண்டிருந்தது. அதன் கால்களிலொன்றுதான் ஆதவனின் தோழனை பதம்பார்த்தது. நின்றுகொண்டு இருந்த சிறுமியின்பக்கம் ஒரு வண்டு தனது கொடுக்குகளை உயர்த்தியது. ஆதவன் ஓடிவந்து சிறுமியை தூக்கி கொண்டு ஓடினான். அனைவரும் ஜாக்கிரதையாக விரைந்து ஓடினர். அநேக கட்டிடங்கள் வரிசையாக ஒரேமாதிரி கட்டப்பட்டு இருந்தது. அதன் ஒன்றினுள் ஆதவன் நுழைந்தான். அங்கே அநேக கைவேலை ஆயுதங்கள் இருந்தன. அவற்றில் சிலதை எடுத்தான். அனைவருக்கும் ஆயுதங்களை கொடுத்தான். அங்கேயிருந்து வெளியே வந்தான். பின், சிறிது தூரம் சென்றனர். அந்த கட்டடம் மிகவும் பாழடைந்து இருந்தது. ஆனால் , அநேகர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்தது. சிறிது தூரத்தில் அநேக மனித எலும்புக்கூடுகள் இருந்தன. சிறுமி பயத்தில் அழுதாள். கூட்டத்திலிருந்த ஒருவன் பிரிந்து சென்று வேறு பக்கமாக சென்றான். மேல்மாடிக்கு சென்று விளக்குகளை ஒளிரவைத்தான். ஆதவனுக்கு அவன்மேல் சந்தேகம் எழுந்தது. அந்த இடம் முழுவதும் நன்கு தெரிந்தவன்போல் சுற்றிச்சுற்றி வந்தான். எனவே, ஆதவன் சிறுமியை தாழினியிடம் கொடுத்துவிட்டு அங்கு தென்பட்ட அலுவகத்திற்கு சென்றான். அங்கே அந்த மனிதனின் உருவம் புகைப்படமாக தொங்கவைக்கப்பட்டு இருந்தது. அவனது பெயர் பிரதீப் என்பதை அறிந்து கொண்டான். தங்களை சிக்கவைக்க வேண்டுமென்றுதான், தனக்கு தெரிந்திருந்த உண்மைகளை மறைத்து இங்கு அழைத்து வந்திருக்கிறான் என்பதை ஆதவன் புரிந்துகொண்டான். ப்ரதீபால் தங்களுக்கு ஆபத்து வரும் என்பதை அறிந்த ஆதவன் , அனைவரையும் பத்திரப்படுத்த நினைத்தான். சிறிது தூரத்தில் இன்னொருவனின் புகைப்படமும் தொங்கிக்கொண்டு இருந்தது. ஆதவனுடன் வந்த முன்பின் தெரியாத இருவருமே இங்கு ஏற்கனவே வேலை செய்தவர்கள் என்பதை புரிந்து கொண்டான். அதில் பிரதீப் விஞ்ஞானியாக வேலை செய்திருக்கிறான். ஆபரேஷன் ரெட் தொடங்கப்பட்டது இந்த அலுவலகத்தில்தான். அது ஓர் ஆராய்ச்சி மையமாக இருந்துள்ளது. தீவைத்து கொன்ற பாம்பும் இங்கு தான் உருவாக்கப்பட்டு இருந்திருக்கிறது. ஆதவன் பிரதீப்பை வலைவீசி தேடினான். பிரதீப்புடன் இருந்த இன்னொருவன் சிக்கிக்கொண்டான். ஆபரேஷன் ரெட் என்பது அந்த பாம்பு உருவாக்குவது சம்பந்தமானது. அநேக ரசாயனம் மற்றும் வேதி பொருட்களை வைத்து அந்த பாம்பினை உருவாக்கி உள்ளனர். அவற்றிற்கு இந்த உலகிலுள்ள அனைவரையும் அழிக்கக்கூடிய சக்தி வழங்கப்பட்டு உள்ளது. அவர்களை தேடி இராணுவர்கள் வந்திருக்கின்றனர். அவர்களை அழிக்கவே அந்த காளான் மற்றும் வண்டுகள் உருவாக்க பட்டு இருந்திருக்கிறது. அவற்றையும் மீறி அநேகர் வந்து அங்கிருந்த அனைவரையும் கொன்றிருக்கின்றனர். பிரதீப் அந்நேரத்தில் அடைக்கப்பட்டு இருந்த பாம்பை திறந்து இருக்கிறான். அதை தான் ஆதவன் கப்பலில் கொன்றான். இன்னொன்றும் இங்கு அடைக்கப்பட்டு உள்ளது என்று அவன் கூறினான். உருவாக்கப்பட்டது இரண்டு. இன்னொன்றை குகையில் மறைத்துவைத்து இருக்கிறான். ஆதவன் ஆபரேஷன் ரெட் சம்பந்தமானவற்றை விசாரிக்கிறான் என்றும் கோசி அவனை கடத்தி வைத்திருக்கிறான் என்றும் அறிந்த பிரதீப் தனது நண்பனை கூட்டி கொண்டு வந்து வசமாய் சிக்க வைத்திருக்கிறான். அதை கொல்வதற்கான முறையை இந்த இடத்தில் எங்கேயோ தான் மறைத்துவைத்திருப்பதாகவும் தனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது எனவும் கூறினான். ஆதவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. ஆனால், அது மிகவும் அச்சுறுத்தலானது. தாழினியிடம் அனைத்தையும் ஆதவன் கூறினான். இருவரும் சிறிது நேரம் பேசினர். பின் ஒரு யோசனை செய்தனர். அதின்படி, தாழினி அங்கிருந்த குகையின் வாசலில் நெடு நீண்ட தூரம் கூர்மையான குச்சிகளை வெட்டி நட்டு வைத்தாள். பிரதீப் அந்த குகையின் முன் நின்று அந்த பாம்பை திறந்துவிட்டான். ஆதவன் அதின் மேல் ஒரு பெரிய குச்சியை வீசினான். இதனால் அப்பாம்பு சீறிப்பாய்ந்து வந்தது. ஆதவன் குகையின் பக்கமாக ஓடினான். பாம்பு பின்சென்று வந்து அக்குச்சியில் குத்தப்பட்டது. அதே நேரம், பிரதீப்பை லாவகமாக முழுங்கியது. அந்த இரத்தத்தை ஆதவனின் நண்பன் ஒரு குப்பியில் நிரப்பினான். ஆதவன் குகையின் இப்பக்கம் வந்ததும், பாம்பு பின்சென்று வந்தது. இதை எதிர்பார்த்த ஆதவனின் நண்பன், காளான் மேல் அந்த இரத்தத்தை ஊற்றினான். பாம்பு காளானின் வசம் பட்டு துடிதுடித்து இறந்தது. ஆதவன், ஆதவனின் நண்பன், தாழினி மற்றும் சிறுமி தப்பித்து படகில் ஏறினர். தூரத்திலிருந்து ஒரு படகு வேகவேகமாக வந்தது. ஆதவன் உற்று பார்த்தான். வந்தது ராம்தான். பலத்த காயங்களோடு உயிருக்கு போராடிய நிலையில் இருந்தான். உடனே ராம் ஆதவனின் கையை பிடித்து கொண்டு, " கோசி.... கோசி.... கோசி... " என்றான். " கோசிக்கு என்ன ஆச்சு? " என்று கேட்ட ஆதவனின் மடியிலேயே ராம் தனது உயிரை விட்டான்.
.....தொடரும்