Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

யாயும் யாயும் - 32

32. புது தலைவி

நிலா ஒரு வெள்ளிக் காசு என ஒளிர்ந்து கொண்டிருந்தது. வானம் ஒரு கருப்பு வெல்வெட் போல இருந்தது. மாயாவும் முத்துக்குரனும் அந்த அடர்ந்த காட்டிற்குள் சென்று கொண்டிருந்தனர். மாயாவின் ஸ்வெட்டர் மீது சில முட்கள் குத்தியிருந்தன.

அவர்கள் இருவரும் அந்தக் காட்டின் நடுவே ஒரு ஒளிரக்கூடிய ஆலமரத்தைக் கண்டனர். இருவரும் அந்த மரத்தருகே சென்ற போது, அந்த மரத்தின் அடியில் ஒரு ஆள் நுழைவதற்கு ஏற்ற ஒரு மூடி ஒன்று இருந்தது. முத்துக்குமரன் அந்த மூடியைத் திறந்தார். அதனுள் கீழே செல்வதற்கான படிக்கட்டுகள் இருந்தன. மாயாவும் முத்துக்குமரனும் அந்தப் படிக்கட்டில் இறங்கி நடக்கத் தொடங்கினர். அவர்கள் இறங்கி நடக்கத் தொடங்கியதும் அந்த ஒளிர்ந்து கொண்டிருந்த மரம் அணைந்து விட்டது.

தரைக்குக் கீழே அது ஒரு பெரிய ஹால் போன்று இருந்தது. அதன் நடுவில், ஒரு அக்னிக் குண்டம் வளர்க்கப்பட்டிருந்தது. ஒரு இளம் டிராகனுடைய மூச்சுக்காற்றைப் போல அதிலிருந்து நெருப்பும் புகையும் வந்து கொண்டிருந்தது. அந்த நெருப்பிற்கு முன் ஒரு பெரிய நட்சத்திரம் ஒன்று வெள்ளை நிறத்தால் வரையப்பட்டு இருந்தது. அந்த நட்சத்திரத்தின் உள்ளேயும் வெளியேயும் ஒரு வட்டமொன்று வரையப்பட்டிருந்தது. அந்த அக்னிக் குண்டத்தையும் வரையப்பட்ட நட்சத்திரத்தையும் சுற்றி ஐம்பது பேர் நாற்காலியில் அமர்ந்திருந்தனர். அவர்கள் அனைவரும் கருப்பு மேலங்கியை அணிந்து அந்த அங்கியால் தங்களது தலையை மூடி இருந்தனர். அங்கு எரிந்து கொண்டிருந்த தீப்பந்தங்கள் குறைந்த அளவு வெளிச்சத்தை மட்டுமே கொடுத்ததால், அங்கே அமர்ந்திருந்தவர்களின் முகங்களை சரியாகப் பார்க்க முடியவில்லை. அவர்களின் மூக்கும் வாயும் மட்டுமே தெரிந்தது.

முத்துக்குமரனையும் மாயாவையும் வரவேற்ற முதியவர் ஒருவர், அந்தக் கூட்டத்தை நோக்கி அறிவித்தார்.

“இந்த இரவின் மகள் இங்கு வந்து விட்டாள். நமது நம்பிக்கையின் ஒளி வந்துவிட்டாள்.” என்றார்.

நாற்காலியில் அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து நின்றனர். பின், அந்த முதியவர் மாயாவை அழைத்துச் சென்று வரையப்பட்டிருந்த நட்சத்திரத்தின் நடுவே நிற்க வைத்தார். அனைவரும் மாயாவை மிகுந்த மரியாதையோடு பார்த்துக் கொண்டிருந்தனர். எந்த தந்தைக்கும் அதுவொரு பெருமையான கணம் தான். ஆனால், முத்துக்குமரனுடைய கண்களில் அப்போது பெருமையை விட வருத்தமே அதிகமாய் இருந்தது.

வட்டத்தின் நடுவே நின்றுகொண்டிருந்த மாயாவின் அருகே ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி வந்தாள். அவளும் கருப்பு நிற அங்கியை அணிந்திருந்தாள். ஆனால், தனது தலையை அவள் மூடவில்லை. பதிலாக அவள் கூந்தலில் ஒரு மரகதப் பச்சை நிறம் கொண்டை ஊசி ஒளிர்ந்தபடி இருந்தது. அவளது கூந்தல் தலையிலிருந்து தோள் பட்டை மீது படர்ந்து இருந்தது. பார்ப்பதற்கு கருப்பு அருவி போல இருந்தது. அவள் மாயாவின் எதிரே நின்று மிகுந்த நன்றியுடன் ஒரு புன்னகை செய்தாள். மாயாவும் பதிலுக்கு புன்னகை செய்தாள்.

“மாயா நீ இப்போ பண்ணப்போற காரியம் உன்னோட வாழ்க்கையில ரொம்ப முக்கியமான ஒன்னு. நீ இப்போ ஜீயூஸ் படையோட தலைவி ஆகப்போற. யார் வேணும்னாலும் இந்தப் பதவிக்கு தேர்வெழுதி ஜெயிச்சு வந்தற முடியும். ஆனா, இந்தப் பொறுப்பை எல்லோராலும் சுமக்க முடியாது.

அதனால மறுபடியும் ஒரு முறை நீ யோசிச்சுப் பாரு. நீ இப்போ நினைச்சாலும் இதுல இருந்து விலகிப் போக முடியும். ஆனா, ஒரு முறை நீ ஜியூஸ் படையோட தலைவி, ஆயிட்டா, அப்புறம் நீ உன்னோட பொறுப்புகள்ல இருந்து எப்பவும் வெளியேற முடியாது. உனக்கு சம்மதமா?” என்று கேட்டாள்.

“சம்மதம்” என்றாள் மாயா.

நாற்காலியில் அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து நின்றனர். அவர்களது வழக்கப்படி குலப்பாடலுடன் சடங்குகள் தொடங்கியது.

“புல் உண்ண மண் கொடுத்த 

மான் உண்ண புல் கொடுத்த

நான் உண்ண மான் கொடுத்த

புலி உண்ண எனைக் கொடுத்த

புழு உண்ண புலி கொடுத்த

மண் உண்ண புழு கொடுத்த

ஜியூஸே நீ வாழ்க. உனது புகழ் ஓங்குக” 

என்று அந்தப் பெண் பாடப் பாட சுற்றி இருந்த அனைவரும் வாழ்க வாழ்கவென்று கோஷமெழுப்பினர். பின் உரத்தக் குரலில்,

“யாவரும் கேட்பீர், பல ஒளியாண்டு தள்ளி இருக்கிற ஜியூஸே நமது வீடு. அதன் தலைவன் ஜியூஸே நமது தலைவன். அவன் சொல்லே நமக்கு கட்டளை.

நமது தந்தை ஜீயூஸ் பூமியிலிருந்த யூரோப்பா என்ற பெண்ணை காதலித்தான். அவளே நமது அன்னை. அவளிடமிருந்து பல குழந்தைகளை பெற்றெடுத்த நம் மூதாதை ஜீயூஸ், நம் கிரகத்தை காப்பாற்ற பூமியிலிருக்கிற தங்கத்தை எடுத்து வரும்படி நமக்கு கட்டளையிட்டான். நமது தந்தையின் கட்டளையை நாம் மீறாமல் இருப்பதாக.

பேரன்பும் பெருங்கருணையும் கொண்ட பெண்ணால் மட்டும் தான் இத்தகைய படையை தலைமை தாங்க முடியுமென நமது படைக்கு பெண்ணைத் தலைவியாக இருக்கும் பொருட்டு விதி செய்தான்.

பல நூறு ஆண்டுகள் நாம் நமது கடமையை முறையாக செய்து வந்த போதிலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நமது எதிரிகளான இந்திரசேனையினர் நம்மை எதிர்த்து வந்தனர்.

நமது எதிரிகளுடனான சண்டையில் முதல் முறையாக சோஃபியா என்ற வீராங்கனை வீரமரணம் அடைந்தாள். அவள் தன்னலமற்ற தியாகம் வாழ்வதாக. அவளுக்குப் பின் பல தலைவிகள் இந்தப் படையை வழி நடத்தி தங்கள் வாழ்வை தியாகம் செய்திருக்கின்றனர்.

அன்யா, கசாண்ட்ரா, ஐரீன், ஏரியாடின், மேடலின், சாஃபோ , ஒலிம்பியா என்ற புகழ்பெற்ற ஒரு நீண்ட நெடிய மரபில் இன்று எனக்குப் பின் நமது மகள், ஜீயூஸின் வாரிசு, மாயா இந்தப் படைக்கு தலைமையேற்கப் போகிறாள். அவளால் நம்மைச் சூழ்ந்த இந்திர சேனையினரின் இருள் அகழ்வதாக. நமக்கு வெற்றி உண்டாகுக. ஜியூஸின் பெயராலும் அன்னை யூரோப்பாவின் பெயராலும் மாயாவை ஜீயூஸ் படையின் தலைவியாக ஏற்றுக் கொள்ள சடங்குகள் தொடங்கட்டும்.” என்றாள் அந்தப் பெண்.

சுற்றி இருந்த அனைவரும் தங்களது வலது கையை எடுத்து தங்களது நெஞ்சில் வைத்துக் கொண்டனர். மாயா நின்று கொண்டிருந்த நட்சத்திரத்திற்கு வெளியே வட்டமாக ஒவ்வொரு மெழுகுவர்த்தியாக எரியத் தொடங்கின. என்னவென்று அறிய முடியாத மர்மமான வார்த்தைகள் மந்திரங்களாக முனகத் தொடங்கின. மாயா ஒரு உறுதியான அமைதியுடன் அதனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். முத்துக்குமரன் தன் மகளின் தியாகத்தை நினைத்துப் பெருமைப்படுவதா? இல்லை கவலைப்படுவதா? என்று புரியாமல் மெளனமாக இருந்தார்.

சடங்குகள் கிட்டத்தட்ட முடிவை எட்டி விட்டன. ஒரு பெரியக் கோப்பையில் ஓநாயின் இரத்தம் மாயாவுக்கு கொடுக்கப்பட்டது. மாயா அதனை ஒரு துளி மிச்சமின்றி அத்தனையும் பருகினாள்.

பின்னர், அவள் முன் பதவியேற்பு உறுதி மொழி பத்திரம் வைக்கப்பட்டது. மாயா அதைக் கையிலெடுத்து வாசித்தாள்,

“மாயா என்கிற நான், இன்று முதல் ஜியூஸ் படையின் தலைவி என்கிற பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். இந்த அதிகாரத்தை ஜியூஸ் மக்களின் நல் வாழ்விற்காக பயன்படுத்துவேன் என்றும், நம் எதிரிகளான இந்திரசேனையினரை மொத்தமாக அழிப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்.” என்றாள்.

அவள் உறுதி மொழி எடுப்பதை சுற்றியிருந்த கூட்டம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தது.

இப்போது, அந்தப் பெண் மாயாவின் அருகே வந்து அவளுக்கு மட்டும் கேட்கும் ஒலியில்,

“மாயா நீ ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தேன்னு தெரியல. ஆனா, எனக்கு இதுல இருந்து விடுதலை கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி.

நான், இந்தப் பொறுப்பை ஏத்துக்கும் போது எனக்கு 40 வயது. கிட்டத்தட்ட என்னோட வாழ்க்கையை நான் கொஞ்சமாவது வாழ்ந்திருந்தேன். ஆனா, உனக்கு இப்போ தான் வாழ்க்கையே தொடங்கியிருக்கு. நீ ரொம்ப சின்னப் பொண்ணா இருக்குற உன்னை இவ்ளோ பெரிய பொறுப்புல கட்டி வைக்க எனக்கு விருப்பமில்லை. ஆனா, நம்மளோட சட்டம், தனி ஆளோட விருப்பத்துக்கு எல்லாம் வளையாது.

இந்தப் பொறுப்புக்கு நீ வந்ததுக்கு அப்புறம், உனக்குப் பிடிச்சவங்க, உன்னைப் பிடிச்சவங்க எல்லோர் கிட்டயிருந்தும் நீ விலகி வந்துரு. ஏன்னா, அவங்க ஒருநாள் உன்னை விட்டுட்டுப் போயிருவாங்க. அப்போ, அதை உன்னால தாங்க முடியாது.

சாவே இல்லாம இருக்கிறது வரமில்லை. அது, எவ்ளோ பெரிய சாபம்னு ரொம்ப நாள் வாழ்ந்தவங்களுக்கு தான் தெரியும். உன் கூட வாழ்ந்த எல்லோரும் உன் கண் முன்னாடி வயசாகி இறந்து போவாங்க. ஆனா, உனக்கு சாவு வராது. உன் உறவுகள் எல்லோருமே இறந்ததுக்கு அப்புறமா, உன்னால புது உறவுகளை உருவாக்கிக்க முடியாது. நீ தனியா தான் இருக்கணும். ஒரு நீண்ட முடிவேயில்லாத தனிமை. நீ உயிரோட இருந்தும் உயிர்ப்போட இருக்க முடியாது.

எல்லாத்துக்கும் தயாரா இரு. இனி, என்ன நடந்தாலும் உடைஞ்சு போயிறாத மனசை வளர்த்துக்கோ. 

நன்றி மாயா, நான் போறேன்.” என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் மாயாவின் கன்னத்தில் ஒரு முத்தமிட்டாள். 

பின், அவள் தலையில் குத்திருந்த மரகதப் பச்சை நிறம் கொண்ட கொண்டை ஊசியை எடுத்து மாயாவின் தலைமுடியில் சொருகினாள். மாயாவின் தலைமீது ஒரு மிகப்பெரிய கனம் ஏறியிருப்பதை மாயா உணர்ந்தாள்.

அந்தக் கொண்டை ஊசியை மாயாவின் தலையில் சொருகியவுடன், அந்தப் பெண்ணின் தலைமுடி நரைக்கத் தொடங்கியது. தோல்கள் சுருங்கத் தொடங்கியது. அவள் முதுகு வளைந்து குறுகத் தொடங்கினாள். கண்கள் ஒளியிழந்தன. அவள் மெல்லக் கீழே விழுந்தாள். முன்னூறு வருடங்களாக படபடத்துக் கொண்டிருந்த அவளது இதயம், அமைதியாக கடைசியாக ஒரு முறை மெல்லத் துடித்து நின்று விட்டது.

மாயா குனிந்து அந்தப் பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்டாள். அப்போது கவனித்தாள், அந்த இறந்த பெண்ணின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை இருந்தது. வெறுமையால் நிறைந்த புன்னகை.