Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

யாயும் யாயும் - 27

27. பொக்கிஷம் 


“உன் அப்பாவுக்கு இந்தப் போருல ஒன்னும் ஆகல. சொல்லப் போனா, உன்னோட அப்பாவை யாரும் எதுவும் பண்ணியிருக்க முடியாது.


எங்களுக்கு உங்கப்பா தான் கமேண்டரா இருந்தாரு. அவரு உருவாக்குன சில டெக்னிக்ஸை வைச்சு தான் இப்போ நாங்க எங்களோட புது பசங்களை ட்ரெயின் பண்ணிட்டு இருக்கோம்.


இங்க பாரு” என்று சொல்லி விட்டு திருச்செந்தாழை தன்னுடைய வெள்ளிக் காப்பைக் காட்டினான்.


“ஒவ்வொரு இந்திர சேனை வீரனும் செய்ற சாதனைகளை பொறுத்து அவன் எடுத்துக்கிட்ட அசைன்மெண்ட்ஸ்ல அவனோட வெற்றிகளைப் பொறுத்து. இங்க, இரும்பு, செம்பு, வெள்ளி, தங்கம்னு காப்பு கொடுப்பாங்க. அது ஒரு பதவி. இரும்பிலிருந்து தங்கத்துக்கு போக போக ஒரு வீரனோட பொறுப்புகளும் சக்திகளும் அதிகமாகும். 


தங்கக்காப்பு போட்ட ஒருத்தர் தான் மொத்த இந்திரசேனைக்கும் கமேண்டர். அப்படியொருத்தரை சேனையோட தலைமை கூடி தேர்ந்தெடுக்கும். இப்போதைக்கு இந்த உலகத்துல ஒரே ஒரு தங்கக்காப்பு கமேண்டர் மட்டும் தான் இருக்காரு‌. அவரும் இன்னும் ஒரு மாசத்துல ரிடையர் ஆயிடுவாரு. அவருக்கு அடுத்து நானோ இல்லை மயிலோ தான் அந்தப் பதவிக்கு வருவோம். நாங்க இன்னைக்கு இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கோம்னா அதுக்கு காரணம் உன் அப்பா எங்க மாஸ்டர் கதிரவன் தான் காரணம்.


நாங்க இந்த இடத்துக்கு வரதுக்கு எங்களுக்கு நாற்பது வயசு ஆச்சு. இந்த பாதை எவ்வளவு கஷ்டம்னு எங்க ரெண்டு பேருக்கும் தெரியும். ஆனா, உன் அப்பா கதிரவன் அவரோட முப்பது வயசுக்குள்ள தங்கக்காப்பு போட்டார். மொத்த இந்திரசேனைக்கும் அவர் கமேண்டரா இருந்தாரு. அவர் பண்ணுன சாதனைகளை தான் நாங்க பாடமா படிச்சிட்டு இருக்கோம். உன் அப்பா மாதிரி ஆகத் தான் தினமும் நாங்க முயற்சி பண்ணிட்டு இருக்கோம். அவர் எங்க எல்லோருக்கும் ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன். அந்த மாதிரி ஒரு தலைவன் எங்களோட போர்க்களத்தில தான் இறப்பார்னு நினைச்சோம். ஆனா, யாரும் எதிர்பார்க்காத ஒன்னு நடந்துச்சு.


2001, செப்டம்பர் 11 ஆம் தேதி. ஒரு அசைன்மெண்ட். அது தான் உன்னோட அப்பாவோட கடைசி அசைன்மெண்ட். ஃபர்ஸ்ட்

ஃபெயில்டு அசைண்மெண்ட். நாங்க இப்போ வரைக்கும் முடிக்க முடியாம போராடிட்டு இருக்கிற அசைன்மெண்ட்.


நடந்திட்டு இருக்கிற இந்தப் போரோட தலையெழுத்தையே மாத்தப்போற ஒரு முக்கியமான பொருள் அமெரிக்கன் டிரேட் சென்டருக்கு கீழ இருக்குதுன்னு. எங்களுக்கு தகவல் கிடைச்சது.


ஆனா, அந்த டிரேட் சென்டரை தீவிரவாதிகள் தகர்க்கப் போறதை உன் அப்பா முன்னாடியே கணிச்சாரு. இந்த தகவலை உன் அப்பா அப்பவே அவருக்கு தெரிஞ்ச எஃப்.பி.ஐ‌ ஏஜென்ட்ஸ் மூலமா அமெரிக்கன் கவர்ன்மென்ட் கிட்ட தெரியப்படுத்துனாரு. ஆனா, அதை அவங்க சீரியஸா எடுத்துக்கலை.


கண்டிப்பா எங்க மிஷனுக்காக நாங்க உள்ள போகும் போது அங்க தாக்குதல் நடக்கப் போகுதுன்னு உங்க அப்பாவுக்கு தெரியும். உள்ள போனா நாங்க திரும்பி வருவோமான்னு தெரியாது. ஆனா, கேப்டன் கதிரவன் கொஞ்சம் கூட பயப்படல. நாங்க உள்ள இறங்குனோம்.


நாங்க அந்த இடத்துல எவ்வளவு தேடியும் எங்கனால நாங்க தேடுன அந்தப் பொருளைக் கண்டுபிடிக்க முடியல. அப்போ தான் அந்த ஃப்ளைட்ஸ் டவரை இடிச்சது. ஒரு பெரிய சத்தம், அதுக்கு அப்புறம் பெரிய கூச்சல் குழப்பம். அங்கயிருந்த ஜனங்க எல்லாம் உயிரைக் காப்பாத்திக்க எவ்வளவோ முயற்சி பண்ணி ஓடிட்டு இருந்தாங்க. நான் அங்கேயே செத்துருப்பேன் மோகன். உன் அப்பா தான் என்னைக் காப்பாத்துனாரு.


ஆனா, விதியைப் பாரு, என் உயிரைக் காப்பாத்துன என் மாஸ்டரோட பையனை நானே டார்ச்சர் பண்ணும்படி ஆயிடுச்சு.


அந்த மிஷன் ஃபெயிலியர் ஆயிடுச்சு. உன்னோட அப்பா அதுக்கு முன்னாடி தோல்வியைக் கூட பார்த்திராத ஒரு ஆளு. அது அவரோட முதல் தோல்வி ஆனா பெரிய தோல்வி. அதுக்கு அவரே பொறுப்பேத்துக்கிட்டு அவரே இந்திர சேனையில இருந்து ராஜினாமா பண்ணிட்டு வெளிய போயிட்டாரு.


அப்புறம் ஒரு நாள் உங்கப்பாவும் அம்மாவும் கோவளத்துக்கிட்ட ஒரு சாதாரண ரோட் ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டதா கேள்விப்பட்டோம். அப்படிப்பட்ட ஒரு வீரனுக்கு இப்படியொரு முடிவுங்கிறதை எங்கனால ஏத்துக்க முடியல. ஒருவேளை இது எதிரிகளோட வேலையா இருக்குமோன்னு, நானே நேருல போய் விசாரிச்சேன். ஆனா, அது உண்மையாவே ஒரு ஆக்ஸிடென்ட் தான். ஒரு லாரி டிரைவர் குடி போதையில வந்து உன் அப்பா அம்மா வந்தக் காரை இடிச்சுட்டான்.” என்றான் திருச்செந்தாழை.


“எல்லாம் சரி, ஆனா, ஏன் கலைவாணி அத்தையை என்னோட சொந்த அத்தை இல்லைன்னு சொன்னீங்க?”


“உன் அப்பா டிவின் டவர்ல என்னையை காப்பாத்துனாருன்னு சொன்னேனில்ல? அப்போ இன்னொரு சின்னப் பொண்ணையும் அங்கிருந்து உங்கப்பா காப்பாத்துனாரு. அதுக்கு முன்னாடி உன்னோட அப்பா அந்தப் பொண்ண பார்த்தது கூட இல்லை. அந்தப் பொண்ணு தான் நீ இத்தனை நாளா அத்தைனு நினைச்சிட்டு இருக்கிற கலைவாணி” என்றான் திருச்செந்தாழை.


மோகன் திருச்செந்தாழையையே பார்த்துக் கொண்டிருந்தான்.


திருச்செந்தாழை மேலும் தொடர்ந்தான்.


“எனக்கு உன்னோட அப்பாவை பத்தி எல்லாமே தெரியும். அவருக்குன்னு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை. அவரோட அப்பா அம்மா எப்பவோ இறந்து போயிட்டாங்க. இந்திரசேனையில ஒரு ஆள் வெள்ளிக் காப்பு வாங்குறதுக்கான முதல் தகுதியே தனக்குன்னு குடும்பம் ஒன்னு இருக்க கூடாது. ஏன்னா, ஒருத்தன் வெள்ளிக் காப்பு போட்டவுடனேயே அவன் கமேண்டர் நிலைமைக்கு உயர்ந்திடுவான். அப்புறம் அவன் சொன்னதும் உயிரைக் கொடுக்க ஒரு பெரிய படையே அவன் பின்னால நிக்கும். அந்த இடத்துல இருக்கிற ஒருத்தன் எப்பவுமே தன்னோட உயிரைப் பத்திக் கவலைப் படக்கூடாது.


ஆனா, ஒருத்தனக்கு குடும்பம்னு ஒன்னு வந்துட்டா, அதுக்கப்புறம் அவனுக்கு தன்னோட உயிர் மேல ஒரு ஆசை வந்திரும். அது வந்துட்டா அதுக்கப்புறம் அவங்களால சண்டை போட முடியாது. அப்படி கமேண்டர். நிலையில இருக்கறவங்க குடும்பம் வேணும்னு நினைச்சாங்கனா, இந்த இந்திரசேனையில் இருந்து ராஜினாமா பண்ணிட்டு போகனும்.


உன்னோட அப்பா டிவின் டவர்ல இருந்து கலைவாணியை காப்பாத்திட்டு வந்தாலும், அந்தப் பொண்ணுக்கு பலமா தலையில அடிபட்டுருச்சு. அந்தப் பொண்ணு தான் யாருங்கிறதயே மறந்திட்டா. எங்கனாலயும் அந்தப் பொண்ணு யாருன்னு கண்டுபிடிக்க முடியல. கலைவாணிங்கிற பேரைக் கூட உன் அப்பா தான் வைச்சாரு.


அப்படி எல்லாமே மறந்து போயி ஒரு வெள்ளைக் காகிதமா இருந்த அந்தப் பொண்ணு கிட்ட உன்னோட அப்பா தன்னை அவளோட அண்ணன்னு சொல்லி அறிமுகம் ஆயிட்டாரு. இப்படி தான் யாருனே தெரியாத அந்தப் பொண்ணு உனக்கு கலைவாணி அத்தையா மாறுனா.


உன் அப்பா இங்கயிருந்து போனதுக்கு அப்புறம், அவரை திரும்ப எப்படியாவது படைக்குள்ள கொண்டு வரணும்னு சொல்லி நிறையா முயற்சி பண்ணினோம். ஆனா முடியல. அதுக்கப்புறம் தான் உன் அப்பா, கலைவாணியை அட்மிட் பண்ணுன ஹாஸ்பிட்டலேயே டாக்டரா இருந்த மேக்னாவைப் பார்த்து காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அவங்க தான் உன்னோட அம்மா. அதுக்கப்புறம் நாங்களும் அவரை தொந்தரவு பண்றத நிறுத்திட்டோம்.”


அதன் பின்னர் அங்கொரு அமைதி நிலவியது. இவ்வளவு விரிவாக மோகன் இதற்கு முன் ஒரு முறை கூட தனது தந்தையைப் பற்றி கேள்விப்பட்டதில்லை. தனக்கு சொல்லப்பட்ட தந்தைக்கும் இங்கே சொல்லப்படுகிற தந்தைக்கும் எத்தனை வித்யாசங்கள். அவனது அத்தை அவனை ஒரு குறையும் இல்லாமல் வளர்த்தால். அதனால் ஒரு முறை கூட அவனுக்கு தனது தாயையும் தந்தையையும் காண வேண்டுமென தோன்றியதில்லை. ஆனால், இன்று அவர்களைப் பார்க்க வேண்டுமென அவனுக்குத் தோன்றியது. 


திருச்செந்தாழை ஆறுதலாய் வந்து அவனது தோளைத் தொட்டான்.


“இந்திரசேனையில இருக்கிற எல்லோருக்குமே ஏதாவது ஒரு வித்தியாசமான சக்தி இருக்கும். அந்தச் சக்தியை அவங்க வாழ்க்கைல ஒரு முறையாவது உணர்ந்திருப்பாங்க. ஆனா, அது உனக்கு மட்டும் எப்படித் தெரியாம போச்சுன்னு எங்களுக்கு புரியவேயில்லை. அது மட்டும் தான் எங்களுக்கு ரொம்பப் பெரிய ஒரு குழப்பமாவே இருந்துச்சு.


ஒவ்வொரு முறையும் நீ உன்னோட சக்திகளை வெளிப்படுத்தும்போதும் நாங்க உன்னைக் கான்டாக்ட் பண்ண எங்க கம்ப்யூட்டர்ல ப்ரோக்ராம் பண்ணியிருந்தோம். டீவியில, கம்ப்யூட்டர் மானிட்டர்ல, ஏன் உன்னோட செல்ஃபோன் ஸ்கீரின்ல கூட அந்தப் ப்ரோக்ராம் உனக்கு வெல்கம்னு மெஸேஜ் அனுப்பியிருக்கு. அந்த மெசேஜஸைப் பிடிச்சு நீ இங்க வருவேன்னு நாங்க நினைச்சோம். ஆனா, நீ வரவேயில்லை. அதனால, இந்திர சேனையைப் பத்தி தெரிஞ்சுகிட்டு நீ பிடிக்காம தான் அவாய்ட் பண்றேன்னு நாங்க நினைச்சோம். கடைசியா தான் தெரிஞ்சது. உன்னோட அத்தையா நீ நினைச்சுக்கிட்டு இருக்கிற கலைவாணிதான் இதைச் செஞ்சாங்கன்னு.”


அத்தை எதற்காக இதைச் செய்திருப்பாள் என மோகன் யோசித்துக் கொண்டிருந்த போது,


“சரி, இப்போ சொல்லு, நீ உன்னைப் புத்தியும் உன்னோட அப்பாவைப் பத்தியும் நிறையா தெரிஞ்சுக்கிட்ட. இப்போ என்ன முடிவெடுக்கப் போற?


எங்களோட சேர்ந்து நம்ம முன்னோர்கள் கொடுத்த வார்த்தையைக் காப்பாத்த போறியா?


இல்லை. இப்போ நடந்ததெல்லாம் மறந்திட்டு, நீ உன்னோட பழைய வாழ்க்கையவே வாழப் போறியா?


எந்த முடிவா இருந்தாலும் சரி, எங்களுக்கு அது சந்தோஷம் தான்.” என்றான் திருச்செந்தாழை.


“இல்லை. என்னால, இப்ப எந்த முடிவையும் தெளிவா எடுக்க முடியல. ரெண்டு நாள் டைம் கொடுங்க, நான் யோசிச்சு சொல்றேன்.” என்றான் மோகன்.


“நல்லா டைம் எடுத்து யோசிச்சு சொல்லு மோகன். நாங்க காத்திருக்கோம்” என்றான் திருச்செந்தாழை.


“சரி, நான் இப்போ வீட்டுக்கும் போகனும். எப்படிப் போறது?”


“நீ இங்க வந்த அதே ட்ரெயின்லேயே திரும்பப் போலாம். அது உன்னை, நீ காலையில கிளம்பன இடத்துலேயே கொண்டு போய் விட்டுரும். 


ரெண்டு நாள் கழிச்சு உனக்கு மறுபடியும் செய்தி அனுப்புறோம். நீ அதுக்கப்புறம் வா” என்றான் திருச்செந்தாழை.


“சரி, நான் கிளம்புறேன்” என மோகன் எழுந்தான்.


“ஒரு நிமிஷம்” என்று சொல்லி திருச்செந்தாழை, அவர்கள் அமர்ந்திருந்த விவாத மேடைக்கு அருகில் இருந்து ஒரு நீளமான பெட்டியை வெளியே எடுத்து அதை மோகனிடம் கொடுத்து, “திறந்து பார்” என்றான்.


மோகன், அந்தப் பெட்டியை வாங்கி அதைத் திறந்தான். அதில் ஒரு நீண்ட கருப்பு உறை மாட்டப்பட்ட ஜப்பானிய கட்டானா கத்தி, ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி, ஒரு சிறு தங்கக்கட்டி இருந்தது. அதனுடன் 80 மற்றும் 90 களின் தமிழ் சினிமாப் பாடல்களின் கேசட்டுகளும் ஒரு வாக்மேனும் இருந்தன.


“இதெல்லாம் என்ன?” என்பது போல மோகன் பார்த்தான்.


“இதெல்லாம் உன் அப்பாவோட பொக்கிஷம். நியாயமா இதெல்லாம் உனக்குத் தான் சேரணும்.


உங்கப்பாவோட இன்னொரு பொருள் இருக்கு” என்று சொல்லி தனது விரலைச் சொடுக்கினான், எங்கிருந்தோ ஒரு ஆலாப் பறவை பறந்து வந்து திருச்செந்தாழையின் கை மீது அமர்ந்தது. 


“இவன் பேரு விஜி. இவன் தான் உன் அப்பாவோட மெசேன்ஜர். இனிமேல் இவனை நீ வைச்சுக்கோ. நீ இந்திரசேனையில ஒருவேளை சேர்ந்தா இவனை உன்னோட மெசேன்ஜரா வைச்சுக்கோ. அப்படி இல்லாட்டி, இவனை உன்னோட செல்லப் பிராணியாக் கூட வைச்சுக்கலாம்.” என்று சொல்லிவிட்டு,


“விஜி மோகன் கிட்டப் போ” என்றான் திருச்செந்தாழை.


விஜி என்ற ஆலாப் பறவை பறந்து வந்து மோகனுடைய தோளில் அமர்ந்தது. 


“உங்கப்பாவோட இன்னொரு பொருளும் இருக்குது. அது அவரோட தங்கக் காப்பு. அதை நாங்க தர முடியாது. நீதான் அதை சம்பாரிக்கணும்” என்றான் திருசெந்தாழை. 


மோகன் பெட்டியை எடுத்துக் கொள்ள மூவரும் அந்த தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தனர். விஜி மோகனுடைய தோள் மீது அமர்ந்திருந்தது. அவனுக்காக அங்கு அதே கருப்பு என்ஜின் கொண்ட ரயில் காத்துக் கொண்டிருந்தது. அவன் அதில் ஏறிக் கொண்டான்.


அந்த ரயில் அவனை வேறொரு இடத்தில் கொண்டு நிறுத்தியது. அங்கு ஒரு லிஃப்ட் இருந்தது. அதில் ஏறிக் கொண்டான். இம்முறை அந்த லிஃப்ட் வேறேதோ கழிவறைக்கு போகாமல் நேரடியாக மோகனுடைய அறையில் இருந்த கழிவறைக்குள் வந்தது. 


அவன் லிஃப்டில் இருந்தும் கழிவறையில் இருந்தும் வெளியேறி தனது தோள் மீது அமர்ந்திருந்த ஆலாவைப் பிடித்து பறக்க விட்டு விட்டு, படுக்கையில் விழுந்தான். பின்னர், தனது அப்பாவின் பெட்டியில் இருந்து வாக்மேனை எடுத்து, அதில் இளையராஜாவின், ‘ஈரவிழிக் காவியங்கள்’ என்ற கேசட்டைப் போட்டு ஆன் செய்து விட்டு கண்களை மூடிக் கொண்டான்.


அதில், ‘என் கானம்’ என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கியது.