25. அழைப்பு
ஜன்னலில் அமர்ந்திருந்த அந்தப் புறா தலையைத் திருப்பி திருப்பி மோகனையே பார்த்துக் கொண்டிருந்தது. மோகனும் அந்தப் புறாவையே வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தான். மாலை முதல் இரவு வரை அவனுக்கு ஏதேதோ நடந்து விட்டிருந்தது.
ஏதோ ஒரு அதிசய சக்திகள் கொண்ட ஒருவன் மோகனைத் தாக்கியிருக்கிறான். இறந்து விடுவோம் என்று நினைக்கிற நொடியில் அவனை நோக்கி வந்த அந்த ஆயுதம் அந்தரத்தில் நின்றது. இன்னொருவன் வந்தான். வந்தவன் அவனை ஏதோவொரு மாய சிறையில் பல மாதங்கள் அடைத்து வைத்திருந்தான். இனி நமக்கு சுதந்திரமான வாழ்வென்பதே கிடையாது. மரணத்திற்கு காத்திருக்க வேண்டியது தான் என்கிற போது மீண்டும் அவனே வந்து சிறையில் அடைத்து பல மாதங்கள் ஆகவில்லை என்றான். தன்னைக் கடத்திய இடத்திலேயே மீண்டும் கொண்டு வந்து தன்னை விட்டு விட்டு போய் விட்டான். போகிற போக்கில் இத்தனை நாட்களாக யார் தனக்காக இருக்கிறார் என்று நம்பிக் கொண்டிருந்தானோ அவரையே அவனுடைய அத்தை இல்லை என்று சொல்லி விட்டுப் போய் விட்டான். வீட்டிற்கு வந்தால் அத்தையின் நடவடிக்கையும் அவன் சொன்னதை உறுதி செய்வது போலத்தான் இருக்கிறது. இதையெல்லாம் தாங்கிக் கொள்ளும் பக்குவம், சில மாதங்களுக்கு முன்பு தான் இருபது வயதைத் தாண்டியிருக்கும் மோகனுக்கு இருக்க வாய்ப்பில்லை. அவனுடைய ஆன்மாவே அடித்துத் துவைக்கப்பட்டு கிழிக்கப்பட்ட ஒரு கந்தல் துணி போல இருந்தது.
அவன் படுக்கையில் படுத்துக் கொண்டு, ஜன்னலில் அமர்ந்திருந்த அந்தப் புறாவைப் பார்த்தபடி தூங்கிப் போனான்.
கனவு கூட வராத ஒரு ஆழ்ந்த தூக்கம். அந்த அறை மெல்ல குளிர்ந்து கொண்டிருந்தது. குளிருக்கு இதமாக போர்வையை இழுத்து காது வரை மூடிக்கொண்டு தூங்கிப் போனான்.
*
காலை நன்கு விடிந்து அந்த ஜன்னலின் வழியே வெளிச்சம் வரத் தொடங்கியது. காலையின் சத்தத்தைக் கேட்டபடி மோகன் விழித்தான். இப்போது அவனுக்கு ஏதோ ஆறுதல் கிடைத்தது போல இருந்தது.
நம் வாழ்வில் பாதி நாட்களை நாம் தூக்கத்தில் கழிக்கிறோம். அதன் பின் மிச்சம் இருக்கிற மீதி நாளிலேயே இத்தனைப் பிரச்சனை என்றால், தூக்கம் என்ற ஒன்று இல்லாமல் இருபத்தி நாலு மணிநேரமும் விழித்தே இருந்தால், மனிதனுக்கு இன்னும் எத்தனைப் பிரச்சனை வரும்? ‘என்று யோசித்தான்.
பின்னர், “என்ன ஒரே நாளுல இப்படி ஆயிட்டோம்?” என்று யோசித்தபடி சிரித்தான். பாத்ரூமிற்குள் சென்று குளித்து விட்டு உடை மாற்றி வந்து ஜன்னலைப் பார்த்தான். அப்போதும், அந்த வெள்ளை நிறப் புறா அங்கேயே நின்று கொண்டிருந்தது. மோகன் இப்போதுதான் கவனித்தான், அந்தப் புறாவின் காலில் ஒரு சின்னக் காகிதத் துண்டு கட்டப்பட்டிருந்தது.
மோகன் அந்தப் புறாவின் அருகே சென்று அதனைப் பிடித்து, அதன் காலில் கட்டப்பட்டிருந்த அந்தக் காகிதத்தை எடுத்து பிரித்துப் படித்தான்.
அதில், “X.A.M. 2.21.19. 19.20.1.14.4 . IIIRD RMEOSOTR” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது ஏதோ குறியாக்கம் (ENCRYPTED) செய்யப்பட்ட செய்தி போல தெரிந்தது. உடனே தனது கல்லூரி பையிலிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து அந்தச் செய்தியை குறிவிலக்கம் (DECRYPTION) செய்யத் தொடங்கினான்.
இறுதியாக அவனுக்கு ‘காலை 10 மணிக்கு பேருந்து நிலையத்தில் உள்ள மூன்றாவது கழிவறைக்கு வரவும்’ என்ற செய்தி கிடைத்தது.
அந்த இடத்திற்கு கண்டிப்பாக போக வேண்டுமென அவன் முடிவெடுப்பதற்கு ரொம்ப நேரமாகவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தது ஒன்று, அவனது தந்தையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இன்னொன்று அவனது அப்பாவின் குழந்தைப் பருவத்தைப் பற்றி கேட்ட போது வெளிப்பட்ட அத்தையின் குழப்பம். இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென அவனுக்குத் தோன்றியது.
அந்தக் காகிதத்தை எடுத்து தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, அந்தப் புறாவை ஜன்னல் வழியே வெளியே விட்டான். அது பறந்து வானில் மறையும் வரை நின்று பார்த்து விட்டு படியிறங்கி கீழே வந்தான். சாப்பாட்டு மேஜையில் அவனது அத்தை அவனுக்காக காத்திருந்தாள். ஆனால், மோகன் அவளிடம் எதுவும் பேசாமல் அவளைக் கடந்து சென்றான். கலைவாணிக்கு அது ஏதோ அவளை அவமானப்படுத்துவது போல இருந்தது. அவளுக்கு மோகனைத் தடுத்து நிறுத்தி “ஏன் இப்படிச் செய்கிறாய்?” என்று கேட்க வேண்டும் போல இருந்தது. ஆனால், அவள் அதைச் செய்யாமல் ஏதோவொன்று அவளைத் தடுப்பது போல இருந்தது. நேற்று வரை தனக்குச் சொந்தமான மோகன் இன்று முதல் தனக்கு இல்லையோ என்று தோன்றியது.
மோகனுக்கும் தான் ஏதோ தவறைச் செய்கிறோம் என்று தோன்றியது. ஆனாலும், அவனுக்கு இதைச் செய்ய வேண்டுமென தோன்றியது. அதனால், அவன் தனது அத்தையைப் பற்றி கவலைப்படாமல், காகிதத்தில் குறிக்கப்பட்டிருந்த இடத்திற்கு விரைந்தான்.
பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கே ஓரமாக இருந்த கட்டணக் கழிப்பிடத்திற்கு சென்றான். சரியாக 9:55 க்கு மூன்றாவது கழிவறை முன்பு அவன் நின்று கொண்டிருந்தான். அந்தக் கழிவறையின் நாற்றம் அவனை மூச்சடைக்க செய்தது. மூக்கைப் பிடித்துக் கொண்டு அந்தக் கழிவறையின் கதவைத் திறந்தான்.
யாரோ கொஞ்ச நேரத்திற்கு முன் அங்கே மது அருந்தி விட்டு போட்டிருந்த மலிவு விலை மது பாட்டிலும் ஒரு ஊறுகாயும் அதன் ஜன்னலில் இருந்தது. அதே ஜன்னலில் அழுத்தி நசுக்கிக் கொல்லப்பட்ட பாதி எரிந்த பீடித் துண்டுகள் இருந்தன. அந்த அறை முழுக்க பெண்ணின் உடல் உறுப்புகள் மிக ஆபாசமாக குறிக்கப்பட்டிருந்தன. “மேட்டர் வேணுமா? கால் பண்ணு” என்று குறிக்கப்பட்டு சில செல்பேசி எண்கள் எழுதப்பட்டிருந்தன. அந்த வரிசையில் சூப்பர்வைசரின் கொடுங்கோண்மையால் பாதிக்கப்பட்ட யாரோ ஒரு துணிக்கடை தொழிலாளி அந்த சூப்பர்வைசரின் எண்ணையும் எழுதியிருந்தான்.
இவை எல்லாமே மோகனுக்கு மிகுந்த அருவருப்பை கொடுத்தது. இதற்கு முன்னர், இது போல ஒரு முறை கூட பேருந்து நிலைய கழிவறைக்குள் நுழைந்ததே இல்லை. பட்டென்று கதவைச் சாத்திவிட்டு வெளியே நின்றான்.
அப்போது ஒரு பேருந்து பயணி, அவசரமாக அந்த மூன்றாவது கழிவறையை நோக்கி வந்தான். மோகன் வந்த அந்த பயணியை நிறுத்தி அருகில் இருந்த இன்னொரு கழிவறையை எடுத்துக் கொள்ள சொல்லிவிட்டு அவன் அந்த மூன்றாவது கழிவறை முன்பே நின்றான்.
தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் சரியாக 10:00 எனக் காட்டியது. மோகன் அந்தக் கழிவறையின் கதவை மீண்டும் திறந்தான். இப்போது அந்தக் கழிவறையின் உள்ளே ஒரு பெரிய லிஃப்ட் இருந்தது. அவன் வேகமாக உள்ளே வந்து கழிவறைக் கதவை மூடி விட்டு, லிஃப்ட்டிற்குள் நுழைந்து அதன் கதவை மூடினான். அந்த லிஃப்ட்டில் தளத்திற்கான பொத்தான்களே இல்லை.
லிஃப்டின் கதவு மூடியவுடனேயே அது வேகமாய் கீழே சென்றது. அதன் வேகத்தை உள்ளிருந்த மோகனால் நன்கு உணர முடிந்தது. அது ஏதோ பாதாளத்திற்குள் அறுந்து விழுந்த ஒரு கருப்புப் பெட்டி போல் போய்க் கொண்டிருந்தது. அது கீழே போய்க் கொண்டிருந்த வேகத்தில் அவனது உடல் எடை குறைந்து மெல்ல அந்த லிஃப்டிற்குள் அவன் மிதப்பது போல இருந்தது.
கீழே விழுந்து கொண்டிருந்த லிஃப்ட் சட்டென்று ஒரு இடத்தில் நின்றது. பின்னர், அந்த லிஃப்ட்டின் கதவுகள் தன்னிச்சையாக திறந்து கொண்டன.
மோகன் அதிலிருந்து வெளியே வந்தான். வெளியே வந்த பின்னர்தான் தெரிந்தது அதுவொரு சுரங்க ரயில் நிலையம் என்று. பெரும்பாலும் அங்கு இருட்டுதான் இருந்தது. அவன் இருந்த அந்த பகுதியில் மட்டும் சிறிதளவு வெளிச்சம் இருந்தது. அவன் அங்கே போடப்பட்டிருந்த ஒரு பழைமையான சிமெண்ட் பெஞ்ச்சில் சென்று அமர்ந்தான். அது கொஞ்சம் அவனுக்கு இளைப்பாறுதலை தந்தது. அதே சிமெண்ட் பெஞ்ச்சில் தான் அவனது தந்தையும் சில காலங்களுக்கு முன்னர் அமர்ந்து இளைப்பாறினார்.
சில நிமிடங்களில் மோகன் அமர்ந்திருந்த ஃப்ளாட்பாரத்தில் ஒரு ரயில் வந்து நின்றது. அதனை ரயில் என்று சொல்ல முடியாது, ஒரு நீராவி என்ஜினும் அதன் பின் இணைக்கப்பட்ட ஒரு ரயில் பெட்டியும் அங்கே வந்து நின்றது. அந்த என்ஜின் பார்ப்பதற்கு மிகப் புராதனமான ஒரு கருப்பு நிறத்தில் இருந்தது. மோகன் அந்த ரயில் பெட்டியை அணுகியதும் அதன் கதவுகள் தன்னிச்சையாக திறந்து கொண்டன. அவன் உடனே அந்தப் பெட்டிக்குள் ஏறி அங்கே இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான். உடனே , அந்தப் ரயில் பெட்டியின் கதவு மூடிக் கொண்டது. அப்போது அந்த இருக்கையின் பக்கவாட்டில் சீட் பெல்ட்டை மாட்டுவதற்கான ஒரு பிளக் இருந்தது. அதன் அருகில் ஒரு ப்ளாஸ்டிக் பையும் ஒரு அச்சடிக்கப்பட்ட காகிதமும் இருந்தது.
அந்தக் காகிதத்தில் இரு குறிப்புகள் இருந்தன.
சீட் பெல்ட்டை அணிந்தவுடன் ரயில் புறப்படத் தொடங்கும்.
ப்ளாஸ்டிக் பையை பயன்படுத்திக் கொள்ளவும்.
என்று அச்சடிக்கப்பட்டு இருந்தது.
மோகன், அந்தப் ப்ளாஸ்டிக் பையை அதன் இடத்திலேயே வைத்து விட்டு, சீட் பெல்ட்டை அணிந்தான்.
அந்த நீராவி என்ஜின் “ஃப்பூ…ஃப்பூ…” என்று சப்தமிட்டது. பின்னர், அதன் பிஸ்டன்கள் மெல்ல இயங்கத் தொடங்கின. அந்த ரயில் மெல்ல முன் நகர்ந்தது. சில நொடிகளில் அந்த இரயில் முழு வேகத்தில் ஓடத் தொடங்கியது. கிட்டத்தட்ட அது ஒலியின் வேகத்தில் ஓடத் தொடங்கியது. அதன் சோனிக் ஒலியை மோகன் கேட்டான். அவனது கை அவனை அறியாமலேயே அங்கிருந்த ப்ளாஸ்டிக் பையை எடுத்திருந்தது.
சில நிமிடங்களில் அந்த ரயில் ஒரு இடத்தில் நின்றது. அந்த வண்டி நின்றவுடன், அதன் கதவுகள் தன்னிச்சையாக திறந்து கொண்டன.
ரயிலின் வெளியே திருச்செந்தாழை நின்று கொண்டிருந்தான். மிகுந்த சோர்வுடன் மோகன் அந்த ரயில் பெட்டியில் இருந்து வெளியே வந்தான். அவனது கையில் வாந்தி நிரம்பி இருந்த ப்ளாஸ்டிக் பை இருந்தது.
“இதை எங்க போடணும்?” என்று அந்தப் பையைக் காட்டி கேட்டான் மோகன்.
அருகிலிருந்த குப்பைத் தொட்டி யைக் காட்டி விட்டு, “வெல்கம்” என்றான் திருச்செந்தாழை.
பின்னர், இருவரும் அங்கிருந்த ஒரு சிறு குகை வழியாக இந்திர சேனையின் தலைமையகத்திற்குள் நுழைந்தனர்.
(மோகன் எப்படி அவனுக்கு வந்த அந்த குறியாக்கம் செய்யப்பட்ட செய்தியை Decrypt செய்தான் என உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் அதை கமெண்ட் செய்யவும்.)