எங்கும் கட்டிடங்களால் சூழ்ந்த அழகிய நகரமது. நெடுஞ்சாலை ஒட்டிப் பெரிய கண்ணாடி தடுப்புக்களிலான சூப்பர் மார்க்கெட். அதன் அருகே பிரசித்தி பெற்ற சிவனாலயம். எதிர் சாலையில் சிறிய பேருந்து தரிப்பிடம்.
அதனுள் தான் நம் கதையின் நாயகி துஷாந்தினி ஏதோ பலத்த யோசனையுடன் சாலையை வெறித்தபடி நின்றிருந்தாள். எந்தத் தைரியத்தில் இவ்வளவு தூரம் தனியாக வந்தாள் என்பதே அவளது பெரும் கேள்வியாக இருந்தது.
இங்கு யாரையும் அறியாள்! அதுவும் அவளுக்குப் புதிய இடம் வேறு யாரிடம் உதவி என்று கேட்பது? இங்கு எங்கே தங்குவது? அப்படித் தங்க இடம் கிடைத்தாலும், எவ்வளவு காலம் தான் கையில் இருக்கும் பத்தாயிரம் ரூபாய் போதுமானதாக இருக்கும்?
ஏதோ ஒரு குருட்டுத் தைரியத்தில் எனக்கு எதுவும் தேவையில்லை அவர்களே வைத்துக் கொள்ளட்டும் என்று இரவோடு இரவாக வந்து விட்டோம். இப்போது என்ன செய்வேன்? என்று எண்ணியவளுக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல அவள் உலகம் மட்டும் இருளாக இருப்பது போலத் தோன்றியது.
இவ்வாறு சிந்தனையில் இருந்தவளை திடுமென வந்த அரச பேருந்தின் ஹாரன் சத்தம் சிந்தை கலைத்ததில் நடப்புக்கு வந்தாள் துஷாந்தினி.
அவள் முன்பு பேருந்துக்காகக் காத்திருக்கும் ஆணின் தோளில் சாய்ந்திருந்த சிறுமி, இவளையே வைத்த கண்கள் வாங்காது தனது வலக்கையின் இரண்டு நடு விரல்களையும் சப்பியபடி துஷாந்தினியைப் பார்த்து அழகாகப் புன்னகைத்தாள்.
அவளைக் கண்டதும் தந்தையின் நினைவு தாக்கப் பதிலுக்குப் புன்னகைத்தவள் விழிகள் மட்டும் கண்ணீர் கண்டிருந்தது.
சிறுமி விரல் சப்புவதைத் தவறென்று அவள் தந்தை அறியாமல் சைகையால் கூறிக் கொண்டிருந்தவள் தொடர்ந்து அவளுடன் சைகையாலே பேச்சைத் தொடர்ந்தாள் துஷாந்தினி.
இவர்கள் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருக்கும் போதே அவர்கள் செல்லும் பேருந்தும் வந்து விட அவர்கள் ஏறுவதைக் கண்ட துஷா, சிறுமிக்குப் பறக்கும் முத்தத்தைப் பறக்க விட்டுப் பேருந்து புறப்பட்டதும் எதிர் சாலையில் பார்வையைப் பதித்தாள்.
கோவிலை அண்டி வயதான பெண்மணி நெற்றியை அழுத்திப் பிடித்தவாறு தள்ளாடியபடி நடக்க தென்பு இல்லாமல் நடந்து வருவதைக் கண்டாள். வேகமாக எதிர் சாலையைக் கடந்து அவர் சரிவதற்கு முன்னர் தாங்கிப் பிடித்து அருகில் மர நிழலில் இருந்த கல்லின்மேல் அமர வைத்து,
"என்ன செய்யிது பாட்டி? குடிக்க ஏதாவது வாங்கி வரவா?" என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே திடுமென அவள் காதருகே,
"பாட்டி..." என்ற அலறல் குரல் திடுமெனக் கேட்டதில் திரும்பிப் பார்த்தவள் கையினை பாட்டியிடமிருந்து இழுத்து அவளைத் தூரமாகத் தள்ளி விட்டான் அந்த அலறலுக்குரிய ஆண் மகன்.
திடீர் என்று நடந்த தாக்குதலில் எதுவும் புரியாமல் நின்றவளைக் கருத்தில் கொள்ளாது அந்தப் பெண்மணியிடம்,
"பாட்டி என்னாச்சு? ஏதாவது செய்யுதா? தனியேவா இவ்வளவு தூரம் வந்தீங்க? உங்களைத் தனியே அனுப்பி விட்டுட்டு அந்தத் தடியன் அங்க என்ன வெட்டிச் சாய்க்கிறானாம்?" என்று அந்த வயதானவரிடம் வினவினாலும், அவன் பார்வை என்னமோ துஷாவை கேவலமாகவே மேய்ந்தது.
தன் பின்னால் வந்த இரண்டு இளைஞர்களில் ஒருவனை அழைத்து,
"குடிக்க ஏதாவது எடுத்து வா!" என்று கட்டளையிட்டான். அவன் எடுத்து வரச் சென்றதும் துஷா மேலான முறைப்பை நிறுத்தாமல்,
"அது தான் பாட்டி முடியாம இருக்கிறா என்டு தெரியுதே, பிறகென்ன வாங்கி வரவா என்டு கேள்வி?" என்றான்.
அவள் எதுவோ பேச வாயெடுக்கும் சமயம்,
"என்ன ரதன்? அந்தப் பெண்ணை ஏன் திட்டுகிறாய்? அவளுக்கென்ன என்னைத் தாங்கிப் பிடிக்க வேணுமெண்டு வேண்டுதலா என்ன? ஆபத்தில் உதவி செய்தவளைத் திட்டிக்கொண்டு... இதனால் தான் யாருக்கு என்ன நடந்தா எனக்கென்ன என்று தங்கட வேலையைப் பார்த்துட்டு எல்லாரும் போறாங்கள்.
அதோட நான் மயங்கி விழக்கூட இல்லை. சின்னதாய் தலை சுத்திட்டுது அவ்வளவு தான். அவள் இருத்தின மறு நிமிஷமே நீ வந்துட்ட. அப்படி இருக்கேக்க அவளால் என்ன எனக்குக் குடிக்கத் தர முடியும்" என்ற அந்த வயது முதிர்ந்தவள், அவளின் நல்ல செயலுக்காக அவளுக்காகப் பரிந்து பேசி அவளை அருகில் அழைத்தார்.
"ரொம்ப நன்றியம்மா! அவன் பேசிட்டான் என்டு பெரிசா எடுக்காத. எனக்கொரு பேத்தி இருந்திருந்தா உன்னைப் போலத் தான் இருந்திருப்பா. ஹூம்..." என்ற பெருமூச்சுடன், "நீ எப்பவும் சந்தோஷமாக இருக்கணும்டா" என்று அவள் தலையில் கை வைத்து ஆசி வழங்கியவரை பார்க்கும்போது கண்கள் குளம் கட்டியது.
உடனே அதை மறைப்பதற்காக உதட்டை வலுக்கட்டாயமாக இழுத்து சிறிதாய் புன்னகை சிந்தியவள், சற்றே விலகி நின்று கொண்டாள்.
அதற்குள் ரதன் அனுப்பிய இளைஞனும் குளிர்பானத்துடன் வந்து விட, அதைப் பாட்டியிடம் குடிக்குமாறு கொடுத்தவன், அவர் குடித்து முடித்ததும்,
"என்ன பாட்டி! தனியேவா வந்தீங்க? என்றான் மீண்டும் அவன்.
"ஆமாப்பா! வீட்டில தனியா இருக்க ஒரு மாதிரி இருந்தது அதான் கோவில் போயிட்டு வந்தாலாவது கொஞ்சம் நல்லா இருக்குமேன்டு வந்தன். வந்த இடத்தில் இப்பிடி ஆயிடிச்சு."
"ஐயோ பாட்டி! கோவில் போகோணும் என்டா, அந்தத் தடியனைக் கூப்பிட வேண்டியது தானே? எதுக்கு தனியா வந்தீங்க?" என்றவன், பாக்கெட்டில் இருந்த கைப்பேசியை எடுக்கக் குறுக்கிட்ட முதியவர்,
"இல்ல ரதன்! நான் அவனிட்ட கேட்கேல... நான் கோவிலுக்கு வந்ததும் அவனுக்குத் தெரியாது. அவனும் என்ன சும்மா இருக்கிறான்? விடுப்பா... பக்கம் தானே! நானே போயிப்பேன்" என்றார் விரக்தியோடு.
"ஏன் பாட்டி இப்பிடி எல்லாம் பேசுறீங்க? நானே உங்களை வீட்டில விட்டுட்டு வாறேன்." என்றான்.
"உனக்கேன் ரதன் வீண் சிரமம்? நீ உன் வேலையைப் பாருப்பா! நான் போயிடுவேன்" என்ற முதியவரிடம்,
"என்ன பாட்டி நீங்க? நானும் இப்ப வீட்டுக்குத் தான் போறேன். உங்களை வழியில விட்டுட்டு போறதுக்கு எனக்கு ஒன்டும் சிரமமில்லை வாங்க!" என்று அவரைக் கையணைப்பில் அழைத்துச் சென்றவன் திரும்பித் துஷாவை ஒரு பார்வை பார்த்தே சென்றான்.
அந்தப் பார்வையில் கோபமோ, கேலியோ, அருவருப்போ... என்ன இருந்ததென்று அவனே அறிவான்.
அவர்கள் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்தவள், அவன் பார்வையின் வீச்சு அறிந்து அந்த இடத்தை விட்டுப் பழைய படி பேருந்து தரிப்பிடம் சென்று நின்றாள். பேருந்து தரிப்பிடத்தை ஒட்டியவாறு இருந்த கடையில் இளநீர் விற்றுக் கொண்டிருந்த முதியவர் அவளைக் கண்டதும்,
"இவங்க நம்ம ஊர் பெரிய மனுசனோட சம்சாரம்மா... எப்படி வாழ்ந்தவங்க... யார் கண் பட்டுதோ..." என்றவர் ஒரு பெருமூச்சினை விட்டு,
"ஏன்மா! நீ எங்க போகணும்? கன நேரமா நிக்கிறியே? இந்த வழியா போற எல்லா பஸ்ஸும் தான் போயிட்டிருக்குது. நீ ஏன் எந்தப் பஸ்லேயும் ஏறாம நிக்கிற? பஸ் நம்பர் மறந்திட்டியா என்ன?
எங்க போகோணும் என்டு சொல்லு, எந்த நம்பர் பஸ் என்டு நான் சொல்லுறேன்" என்றார் அவளது நல்ல மனதுக்கு தானும் சின்ன உதவி செய்யும் நோக்கோடு.
அவர் தான் அங்கு நடந்த காட்சிகள் அனைத்தையும் விழித்திரையில் படம் பிடித்தவாறு நின்றாரே!
அவர் கேட்டதும் தான் நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பதை உணர்ந்தவள், 'இப்படியே நின்றால் வேலைக்காகாது' என்று எண்ணியவாறு, தனது பதிலுக்காகக் காத்திருந்த முதியவரிடம்,
“அது... அது... வந்து தாத்தா நான்... நான் என் தோழி வீட்டுக்குப் போகோணும். ஆனால்... அவள் தந்த விலாசத்தை துலைச்சிட்டேன். அதனால தான் அவள் வரும் வரைக்கும் காத்திட்டிருக்கிறன்” என்று வாயில் வந்ததைத் தட்டுத் தடுமாறிக் கூறி சமாளிக்கலானாள்.
"இந்தக் காலப் பிள்ளைகள் என்ன பிள்ளைகளோ! தனியா வெளி ஊருக்கு வந்திருக்கிற... இதில பெட்டி வேற... அதுவும் விலாசத்தையும் துலைச்சிட்ட எண்டுறியே... இவ்வளவு நேரமாக நிக்கிறயே உன் தோழிக்கு அறிவு வேண்டாம்?" என்று அக்கறையாய் திட்டியவர், அதற்குமேல் அவளோடு அளவளாவிக் கொண்டிருக்க நேரமற்றவராய் தன் வேலையில் கவனமானார்.
அவர் தன் வேலையில் இறங்கியதும் பெருமூச்சொன்றினை எடுத்து விட்ட துஷாவோ, பழைய படி தன் சிந்தனையில் ஆழ்ந்தாள்.
'இப்போ என்ன செய்யிறது? எங்க போனா தங்க முடியும்? யார் இங்க எனக்கு உதவ வருவாங்க' என்ற சிந்தையில் இருந்தவளை, யாரோ அவள் கையின் தசை பிரிந்து கையோடு வருமளவு கிள்ளி விடச் சுயத்துக்கு வந்தவள்,
தன் எதிரே நிற்பவரைக் கண்டு அதிர்ந்தே போனாள்.