Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

யாயும் யாயும் - 17

17. Hi!


"உனக்கு மனோ திடம் இல்லை மேக்பத். ஒரு பெண் தன்னுடைய குழந்தைக்காக இந்த உலகில் எதை வேண்டுமானாலும் செய்வாள். ஆனால், நான் மட்டும் ஒரு வேலையை செய்து முடிக்க நினைத்து விட்டால், என் குழந்தையைக் கூட தரையில் அடித்துக்கொன்று விட்டு நான் அந்த வேலையைச் செய்து முடிப்பேன்." என்று சொல்லி விட்டு மேக்பத்தை மிக அற்பமாகப் பார்த்த லேடி மேக்பத்தாக நின்ற மாயாவைப் பார்த்து மோகனுக்கே சற்று பயமாகத் தான் இருந்தது.


அடுத்தடுத்து ரிகர்சல் தொடர்ந்துகொண்டே இருந்தது. அவர்கள் முந்தைய ரிகர்சலுக்கும் அடுத்த ரிகர்சலுக்கும் இடையே நிறைய முன்னேற்றங்கள் இருந்தது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் எப்படிப் போனதென்றே தெரியவில்லை. யாருக்குமே கொஞ்சம் கூட களைப்பு இல்லை. அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.


மாலை நெருங்கிக் கொண்டிருந்தது. அனைவரும் ப்ரேக்கிற்காக கேன்டீனுக்குச் செல்ல முடிவெடுத்தனர். யார் யாருக்கு என்னென்ன வேண்டுமென ஒவ்வொருவராகக் கேட்டான் மோகன். மாயா தனக்கு ஒரு காஃபி மட்டும் போது மெனச் சொன்னால். அனைவரது ஆர்டர்களையும் மோகனும் மகேந்திரனும் சென்று வாங்கிவந்தனர்.


அப்போது மாயாவிற்கு வாங்கிய காஃபியில் மட்டும் பாலோ சர்க்கரையோ இல்லை. மாயா சொல்லாமலேயே அவளுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று மோகனுக்குத் தெரிந்திருந்தது. மாயா ஒரே நிமிடம் "உனக்கு எப்படிடா தெரியும்?" என்று கேட்பது போல பார்த்தாள். பின்னர் யாராவது தன்னைப் பார்க்கிறார்களா என்று கவனித்து விட்டு உடனே, அந்தப் பார்வையை மாற்றிக் கொண்டாள். இதனை ராகுலும் கவனிக்கத் தவறவில்லை.


இத்தனை நாள் பழக்கத்தில் மோகன் மாயாவைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டான். அவள் மீதான காதலும் அவனுக்கு அதிகமானது. அவளிடம் ப்ரப்போஸ் செய்து விடலாம் என அவன் நினைத்துக் கொண்டிருந்தான். இன்னும் இரண்டு நாளில் மாயாவுக்கு பிறந்தநாள் வருகிறது. அந்த நாளில் தன் காதலை அவளிடம் சொல்லலாமா என்று யோசித்தான். ஆனால், அப்படிச் செய்தால், ஒருவேளை அவளது பிறந்த நாளேன்றே அவள் அப்செட் ஆவதற்கு தானே ஒரு காரணம் ஆகி விடுவோமோ என்று தயங்கினான். அதனால் அவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாத வரை அவசரப்படக்கூடாது என தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.


அனைவரும் அவரவர் ஆர்டர் செய்த தேனீரையும், காஃபியையும், குளிர்பானத்தையும் குடித்துக் கொண்டிருந்தனர்.


மகேந்திரன், "மாயா லேடி மேக்பெத் கேரக்டரை ரொம்ப நல்லா நடிக்குறா. இந்தக் கேரக்டரைப் பார்த்து முதல்ல எரிச்சல் வரணும், அப்புறம் பயம் வரணும், கடைசியா இந்தக் கேரக்டர் மேல ஒரு பரிதாபம் வரணும். ரொம்பப் பெரிய கேரக்டர் ஆர்க் உள்ள கேரக்டர். லேடி மேக்பெத் கேரக்டர் பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க அன்க்கிள்?" என்று கேட்டான்.


அதற்கு ராகுல், "அந்தக் கேரக்டர் பர்சனலா எனக்கு ரொம்ப பிடிச்சக் கேரக்டர். அவளோட உறுதி எனக்கு ரொம்பப் பிடிக்கும். வரலாற்றை உருவாக்குறது ஆண்கள்தான்னு நிறையாப் பேரு நம்பிட்டு இருக்காங்க. ஆனா, இந்தக் கதையில லேடி மேக்பெத்னாலதான் மொத்த வரலாறே மாறிப் போகுது. மேக்பெத்துக்கு ராஜாவா ஆகணும்னு ஆசை இருக்கு. ஆனா, அவனால் ராஜாவைக் கொல்ல முடியல. ஆனா, லேடி மேக்பெத் ரொம்ப உறுதியா ராஜாவைக் கொல்லுறதுக்கு மேக்பெத்தை தூண்டுறா.


இப்போ, மாயா நடிச்சுக் காட்டுன மாதிரி, தான் எடுத்துக்கிட்ட வேலைக்காக தன்னோட குழந்தையைக் கூட கொல்லுவேன்னு சொன்ன லேடி மேக்பெத்னால அந்த ராஜாவைக் கொல்ல முடியல. அதுக்கு அவ சொல்ற காரணம் ரொம்ப முக்கியம்.


அவ கத்தியை எடுத்துட்டு கொலை பண்ணப் போறா, ஆனா, அந்த ராஜாவைப் பாக்குறதுக்கு அவளோட அப்பா மாதிரி இருக்குன்னு சொல்லி கொலை பண்ணாம திரும்பி வந்துட்டா. அவளுக்குள்ள என்ன தான் திறமை, வஞ்சம், பேராசை இதெல்லாம் இருந்தாலும். அவளுக்குள்ளையும் கொஞ்சம் கருணை இருக்குது.


அவ அந்தக் கொலையைப் பண்ணல, ஆனா, அந்தக் கொலையை எவ்ளோ சாமர்த்தியமா சமாளிக்குறா. இந்த நாடகத்தோட கடைசி வரைக்கும் அவளோட ஆசையும் உறுதியும் அவளுக்குப் பக்க பலமா இருக்கு. ஆனா, கடைசியில அவளோட உறுதியாலயே அவ அழிஞ்சுப் போயிடுறா.


அவ எவ்வளவு சாமர்த்தியமா அவ செஞ்ச பாவத்தையெல்லாம் மறைச்சாலே. அதே அளவுக்கு அவளுக்குள்ள ஒரு புத்து மாதிரி குற்ற உணர்வு வளர்ந்துகிட்டே போகுது. கடைசியில அதேக் குற்ற உணர்வு அவளைக் கொன்னுடுது.


இந்தக் கேரக்டர்ல இன்னொரு விஷயமும் இருக்கு. இந்தக் கதையில மேக்பத் உட்பட எல்லோருமே கவித்துவமா தான் பேசுவாங்க. ஆனா, லேடி மேக்பெத் மட்டும் தான் உரைநடையில பேசுவா. ஏன் ஷேக்ஸ்பியர் நினைச்சிருந்தா லேடி மேக்பெத்தையும் கவித்துவமா பேச வைச்சிருக்க முடியும். ஆனா அவர் அதை பண்ணல. ஏன்னா, இந்தக் கோக்டர் முதல் தடவையா மேடையில் வரும் போதே கிங் டன்கன்ன கொல்லனும்னு முடிவோட வருது. எந்த மனசுல வஞ்சம் இருக்குதோ அந்த மனசுல கவித்துவம் இருக்காதுன்னு சொல்லத்தான் ஷேக்ஸ்பியர் இந்த கேரக்டர் மட்டும் எப்பவும் உரைநடையிலயே பேசுற மாதிரி வைச்சுருக்காரு.


இந்தப் பாத்திரத்தை எப்படி ஷேக்ஸ்பியர் எழுதினார்னு தெரியல. இதுக்கு இணையாவோ இல்லை இந்தக் கேரக்டர் ஓட சாயல்ல யாராவது ஒரு கேரக்டரை எழுதிட்டாக் கூட அந்தக் கதை ரொம்ப நல்லா வந்திரும்." என்றார்.


அனைவரும் ராகுலை வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.


"ஏன்ப்பா நான் எதாவது தப்பா சொல்லிட்டேனா?" என்றார் ராகுல்.


"இல்லை அன்க்கிள் ரொம்பச் சரியா சொல்லி இருக்கீங்க" என்றான் மகேந்திரன்.


"சரி எல்லோரும் நாளைக்கு மதியம் வந்துருங்க. மிச்சத்தை கண்டின்யூ பண்ணலாம்." என்று சொல்லி அனுப்பினான் மகேந்திரன்.


அனைவரும் அங்கிருந்து கிளம்பினர். 


மாலை நன்கு பொன்னிறமாக மாறிக் கொண்டிருந்து இன்னும் சில நிமிடங்களில் அது எப்படி இருட்டாக மாறப்போகிறது என்பதை நினைக்கவே வியப்பாக இருந்தது. மாயாவும் ராகுலும் அங்கு சுத்தமாக பராமரிக்கப்பட்டிருந்த நடைபாதையில் நடந்து கொண்டிருந்தனர்.


"உனக்கு அவனைப் பிடிச்சிருக்கா மாயா?" என்று கேட்டார்.


"என்ன அன்க்கிள் கேட்டீங்க?" என்று மாயா தெரியாதது போலக் கேட்டாள்.


"நான் முதல் தடவை கேட்கும் போதே உனக்கு கேட்டுருச்சு மாயா" என்றார்.


"இல்லை, யாரை கேட்கிறீங்க அன்கிள்"


"அதான், நாடகத்துல வந்துச்சே ஒரு சூனியக்காரி அது தான்"


"நீங்க எதைப் பத்தி பேசுறீங்கன்னே எனக்குப் புரியல அன்க்கிள்" என்றாள் மாயா.


"மாயா நடிக்கிறத மேடையோட வைச்சுக்கோ அதை வாழ்க்கையில கொண்டு வந்தா அப்புறம் நீ ரொம்பக் கஷ்டப்படுவ. எனக்குத் தெரியும். அந்தப் பையன் மோகன் உனக்காகவே உன் பின்னாடியே சுத்திட்டு இருக்கான்னு."


மாயா தாழ்ந்த குரலில், " அது எனக்கும் நல்லாவே தெரியும் அன்க்கிள். ஆனா, அதை அப்படியே வளர விடுறதா இல்லை வெட்டி விடுறதான்னு எனக்குத் தெரியல அன்க்கிள்."


"அப்போ உனக்கும் அந்தப் பையனைப் பிடிச்சிருக்கு. அப்படி தான மாயா?"


"எனக்குத் தெரியல அன்க்கிள். அவன் எனக்கு பிடிக்கும்னு பண்ற ஒவ்வொரு விஷயமும் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. என் பின்னாடியே சுத்துறான். என் அப்பா மாதிரியே என்னை அவ்ளோ கேர் பண்றான். ஆனாலும், எனக்குத் தெரியல அன்க்கிள். அவனை லவ் பண்ணலாமா வேணாமானு." என்றாள் மாயா.


"ஏன் மாயா இப்படிச் சொல்ற பிடிச்சிருந்தா லவ் பண்ண வேண்டியது தான?"


"அன்க்கிள் நீங்க போர் வேண்டாம்னு வெளிய வந்துட்டீங்க. ஆனா, நான் ஒரு போருக்கு தயாராகிட்டு இருக்கேன். இதுக்கு நடுவுல நான் எப்படி ஒருத்தரை காதலிக்க முடியும்? அவன் மேல வரக் காதல் என் கடமையை அழிச்சறக் கூடாதுல்ல அன்க்கிள். அதனால தான் சொல்றேன்.

இப்போ லவ் பண்றேன்னு ஆசை காட்டிட்டு அப்புறம் விட்டுட்டுப் போயிறக் கூடாது இல்லை. "


"நீ சொல்றதெல்லாம் சரிதான் மாயா. என்கிட்ட ஒரு உண்மையை சொல்லு, அந்தப் போர் உன்னோட போரா? நீ அதுல கண்டிப்பா கலந்துக்கிட்டே ஆகணுமா? உன்னால இப்ப கூட அதுல இருந்து வெளிய வந்து உனக்குப் பிடிச்ச மாதிரி ஒரு வாழ்க்கையை வாழ முடியும்."


"இது என்னோட போர் தான் அன்க்கிள். இந்த யுத்தத்துல நான் ஜெயிச்சே ஆகணும். என் அம்மாக்காகவும் என் மக்களுக்காகவும் நான் பழி வாங்கியே ஆகணும்." இதைச் சொல்லும் போது அவளது உடல் பட படத்துக் கொண்டிருந்தது அவளது கண்கள் சிவந்து இருந்தது.


ராகுல் மெல்ல புன்னகைத்துக் கொண்டு,


"உனக்குள்ள பழிவாங்குற வெறி தான் இருக்கு. அது ஓரளவுக்கு உனக்கு சண்டை போட தெம்பு கொடுக்கும். ஆனா, அதை வைச்சிட்டு உன்னால ஒரு போருல ஜெயிக்க முடியாது. போருல ஜெயிக்கணும்னா, இந்தப் போருல ஜெயிச்சதுக்கு அப்புறமா நீ எந்த மாதிரி ஒரு வாழ்க்கையை உனக்கும் உன் மக்களுக்கும் அமைச்சிக்கப் போறன்னு ஒரு கனவு இருக்கணும். அது இருந்தா மட்டும் தான் உன்னால இந்த யுத்தத்துல ஜெயிக்க முடியும்."


மாயா அவர் சொல்வதைக் கூர்ந்து கவனித்தாள். ராகுல் தொடர்ந்தார்.


"இப்போ கேள்வி என்னன்னா? நீ போருல ஜெயிச்சதுக்கு அப்புறமா அந்தப் பையன் கூட உன் வாழ்க்கையை வாழனும்னு ஆசைப்படுறியா?" என்று கேட்டார் ராகுல்.


"ஆனா, அன்க்கிள் போருல என்ன வேணும்னாலும் நடக்குமே. ஒரு வேளை நான் தோத்துட்டா? செத்துப் போயிட்டா?"


"பரவாயில்லை செத்துப் போ. தோக்குறதும் சாகறதும் போரோட ஒரு பகுதி தான். அதுக்காகவெல்லாம் நீ கவலைப்படாத மாயா." என்றார்.


"இப்போ நான் என்ன பண்றது அன்க்கிள்?" என்று பாவமாய் கேட்டாள் மாயா.


"உனக்கு அந்தப் பையனைப் பிடிச்சிருந்தா, அவன் கிட்டப் பேசு" என்றார் ராகுல்.


பின்னர், "சரி மாயா ரொம்ப நாள் கழிச்சு உன்னைப் பார்த்ததுல ரொம்ப சந்தோசம். நான் கிளம்புறேன்" என்றார்.


"ஓகே அன்க்கிள்" என்று சொல்லிவிட்டு மாயா அவரைக் கட்டிக் கொண்டு விட்டு விடை கொடுத்தாள்.


ராகுல் என்கிற டையோனைசஸ்

சின்ன சின்ன ஒளிக் குமிழ்களாக மாறி அந்த இருளில் சிறிது வெளிச்சத்தைக் கொடுத்து விட்டு மெல்ல மெல்ல கரைந்து போனார்.


மாயா அவளது வீட்டிற்கு வந்தாள். இன்னும் முத்துக்குமரன் வேலை முடிந்து வராததால் அந்த வீட்டில் அவளுக்குத் தேவையான தனிமை அங்கு நிரம்பி இருந்தது.


அவள் தன் அறைக்குச் சென்று, கீதாவிடம் பேசி மோகனுடைய கைப்பேசி எண்ணை வாங்கினாள்.


மோகனுடைய எண்ணிற்கு 'ஹாய்' என்று ஒரு மெசேஜை அனுப்பி விட்டு அவனுடைய பதிலுக்காக காத்திருந்தாள்.


மோகனுடைய கைப்பேசியில் அந்த "ஹாய்" மெசேஜ் வந்து விழுந்தது. அவனிடம் ஏற்கனவே மாயாவின் எண் இருந்தது. ஆனாலும், அவள் அனுமதி இல்லாமல் கைப்பேசியில் அழைப்பது அல்லது மெசேஜ் செய்வது கூடாது என அவன் நினைத்திருந்ததால் அவன் இதுவரை அவளுக்கு எவ்வித மெசேஜ்ம் அனுப்பவில்லை. ஆனால், கைபேசியில் மாயாவின் பெயரைப் பார்த்ததும். அவன் உள்ளம் குதிக்க ஆரம்பித்தது. அவன் சந்தோஷம் இதயத்தில் தொடங்கி பற்களில் வழிந்து முகத்தில் பரவி கண்களுக்குள் செல்லும் போது திடீரென அந்த முக்கால்வாசி இருளில் அவன் நடந்து கொண்டிருந்த சாலையின் பக்கவாட்டில் இன்னொரு சாலை குறுக்காக புறப்பட்ட இடத்தில் இருந்து ஒரு நிழல் தோன்றியது. அந்த நிழலின் முடிவில் ஒரு மர்ம மனிதன் நின்று கொண்டு அவனைப் பார்ப்பதுபோல தெரிந்தது. அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.