Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

வரமாக வந்த வான்முகிழ் நீயடி

“என்னமா தேனு உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தான” என்று கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் கேட்டார்.

அனைவர் முன்பு பதில் கூற சிறிது பயந்த பெண்ணவள் தன் தாயின் கையினை இறுக பற்றி கொண்டாள்.

அந்த தாயின் உள்ளத்திற்கு தெரியாதா தன் மகளை பற்றி அதனால் அவளின் முகத்தினை அவர் பார்க்க, அவருக்கு மட்டும் தெரியுமாறு தலையை ஆட்டி திருமணத்திற்கு சம்மதம் கூறினாள் தேனு என்று எல்லோராலும் அழைக்கப்படும் தேன்மதி.

பெண்ணவளுக்கு இந்த திருமணத்தில் சம்மதம் என்று அவளின் தாய் அனைவரிடமும் கூறிய உடன் இதுவரை அங்கு இருந்த யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் தலையை தாழ்த்தி அமர்ந்து இருந்த நமது நாயகன் முதல் முறை நிமிர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கூறிய பெண்ணவளை பார்த்தவன் முகத்தில் அப்புடி ஒரு அதிர்வு.

 அவன் பார்க்க வந்திருக்கும் பெண்ணவளை இப்பொழுது தான் முதல் முறை நேரில் பார்க்கிறான். அவன் அதற்காக கூட அதிரவில்லை பெண் இருக்கும் நிறத்தைப் பார்த்து தான் அதிர்ந்தான். 

ஒரு வேளை பெண் கருப்பா இருந்து அழகாக இல்லை என்று நினைத்து அதிருகிறான் என்று நீங்கள் நினைப்பது தவறு. ஏனென்றால் பெண் அவ்வளவு அழகாக தங்க சிலை போல் இருந்தால் அதனைப் பார்த்து தான் அதிர்ந்தான் நம் நாயகன்.

இரண்டு வருடமாக அவனின் மாமா சமரசம் செழியனுக்கு பெண் தேடுகிறார். தேடும் இடத்தில் அனைத்திலும் அவனின் வசதியை பார்த்து சம்மதம் கூற நினைத்தாலும் மாப்பிள்ளையின் நிறத்தைப் பார்த்து தான் தட்டி கழித்தார்கள். ஏனென்றால் நமது நாயகன் கிராமத்து கருப்பழகன் அதற்காக ரொம்ப கருப்பாகவும் எல்லாம் இல்லை மாநிறத்திற்கு சற்று குறைவான நிறம்.

 கருப்பாக இருந்தாலும் கலையான கம்பீரத்துடன் இருக்கும் முகம். ஒவ்வொரு இடத்திலும் பெண் பார்க்க அவனை அழைத்துச் செல்லும் பொழுது எல்லாம் அவன் நிறத்தை வைத்து நாளை பதில் கூறுகிறேன் என்று அனுப்பி வைத்து விட்டு அடுத்த நாள் இந்த சம்மதம் சரி வராது என்று நிறுத்தி விடுவார்கள். அது போல் தான் இன்றும் நடக்க போகிறது என்று நினைத்து வந்திருந்தான் நம் நாயகன். ஆனால் இந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்று பார்த்த உடனே கூறியது மட்டுமல்லாமல் அவள் இருக்கும் நிறத்திற்கு தன்னை எவ்வாறு திருமணம் செய்து கொள்ள சம்பாதித்தால் என்று தான் அதிர்ந்தான் நம் நாயகன்.

அவனின் அதிர்ந்த முகத்தினை அவனின் மாமான் சமரசம் பார்த்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் பெண்ணின் தந்தையிடம் அதான் பொண்ணே சம்மதம் சொல்லிடுச்சு இல்ல அப்பறம் என்ன தட்ட மாத்திக்கலாம் இல்ல என்று கேட்டார்.

கருணாகரன் ஐயாவோட பையனுக்கு என் பொண்ண கொடுக்கிறதுல எனக்கு சம்மதம் தாங்க ஐய்யா ஆனா என்று ஏதோ சொல்ல சிறிது தயங்கினார்.

என்னப்பா சேகரா இவ்வளவு தூரம் பேசியாச்சு இன்னும் உன்னோட பொண்ண கொடுக்கிறதுல அப்படி என்ன உனக்கு தயக்கம் எதுவாக இருந்தாலும் நேரடியா சொல்லுப்பா என்றார் சமரசத்தின் தந்தை நாச்சியப்பன்.

ஐயா எல்லா குடும்பத்திலும் சண்டை சச்சரவு இருக்கிறது தான். எந்த குடும்பத்துல இப்ப சண்டை இல்லாம இருக்கு என்னோட பொண்ணு போற வீட்ல தனியா இல்லாமல் கூட்டு குடும்பமா இருக்கணும்னு நினைக்கிறேன். ஆனா மாப்பிள்ளை தம்பி வீட்ல இருக்க யார் கிட்டையும் பேசாம தனியா இருக்கிறது தான் கொஞ்சம் சங்கடமா இருக்கு என்றார் பெண்ணின் தந்தை சேகர்.

சேகரா உனக்கு நான் முன்பே என்ன பிரச்சனைன்னு என்று சொல்லிட்டேன். திரும்பவும் சொல்றேன் என்னோட பேரன் குணத்துல தங்கம் அது தான் அவன் தனியா இருக்கறதுக்கு முக்கியமான காரணம். அவன் அம்மாவோட குணமும் தம்பியோட உதாரிதனமும் கொஞ்சமும் பிடிக்காம தனியா வீடு கட்டி அதுல தங்கி இருக்கான். அது கூட அவனுக்காக மட்டும் இல்ல அவன் கல்யாணம் செஞ்சுக்க போற பொண்ணுக்காகவும் தான் இப்பவே அவன் தனியா இருக்கான். எங்க தன்னை நம்பி வற பொண்ணு இவங்களால கஷ்டப்படுமோ அப்படின்னு நினைச்சு தான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே அவன் தனியா போயிட்டான் அதுவும் ரொம்ப தூரம் தள்ளி எல்லாம் இல்ல கூப்பிடும் தூரத்தில் தான் அவன் அம்மா, தம்பி தங்கி இருக்க வீடும் அவனோட அண்ணனோட வீடும் இருக்கு அதனால நீ வேறு எதை பத்தியும் யோசிக்காம தயக்கம் இல்லாம என் மேல நம்பிக்கை வச்சு உன்னோட பொண்ணு தேன்மதிய என் பேரன் செழியனுக்கு கொடுக்கலாம் சேகரா என்றார் நாச்சியப்பன்.

சரிங்கய்யா! “உங்க மேல இருக்க நம்பிக்கைக்காக மட்டும் இல்ல கருணாகரன் ஐயாவோட வளர்ப்பு மேல இருக்க நம்பிக்கையிலயும் எங்க பொண்ண கொடுக்குறதுக்கு நான் சம்மதிக்கிறேன்” என்று தன் மனைவியிடம் கூட கலந்துறைக்காமல் தன் சம்மதத்தை தெரிவித்தார் தேன்மதியின் தந்தை.

அவர் சம்மதம் கூறிய அடுத்த ஐந்து நிமிடத்தில் தேன் எனும் தேன்மதிக்கும் செழியன் எனும் அன்புச்செழியனுக்கும் பெரியோர்கள் தாம்பூல தட்டு மாற்றி திருமணம் நிச்சயக்கப்பட்டது.

இருவருக்கும் நிச்சய தாம்பூலம் மாற்றியிருந்தாலும், “ஏனோ செழியனுக்கு அந்தப் பெண்ணிடம் உண்மையிலேயே தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்க வேண்டும்” என்று நினைத்தான்.

                                                  தொடரும்..!