Are you poetic...! books and stories free download online pdf in Tamil

நீ கவிதைகளா...!அழகிய காலைப்பொழுதை பறைசாற்றும் வகையில் புது வண்ணத்தோடு மலர்கள் தலையசைக்க, பசும்புற்களில் பனித்துளிகள் சிறு குழந்தையென தவிழ்ந்து கொண்டிருக்க, பறவைக் கூட்டங்கள் சிறு இசை கச்சேரியை நடத்திக் கொண்டிருந்தன.


கண்டவரை கண்ட நொடி கைது செய்யும் அந்த காட்சியை கண்டு கொள்ளாமல் தனது எண்ணங்களே பெரிது என சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் ஒருத்தி.


" உன்ன பார்த்த நேரம் மனசு ஆடும் மயிலாட்டம்...
உன்ன நெனச்ச நேரம் நெஞ்சில் மலரும் பூந்தோட்டம் " என்ற பாடல் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்க, நான் எங்கே பார்த்தேன்....? என்று சலித்துக்கொண்டாள் சங்கடத்துடன்.


அவளது எண்ண அலைகள் இரண்டு வருடங்கள் பின்னோக்கி பாயத் தொடங்கின....


" யாழினி " பெயருக்கு ஏற்ப பரிசுத்தமானவள், அலங்காரத்தின் பின்னே ஓடும் பெண்களுக்கு நடுவில், கவிதைகளோடு கரைந்து கொண்டிருந்த காரிகை அவள்... பொல்லாத ஒன்றைக்கூட பொறுமையாய் கூறுவாள், இல்லாத ஒன்றைக் கூட இயல்பாய் கூறுவாள்...


கேட்காமல் கிடைக்கும் வரங்கள் எல்லாம் சொல்லிக் கொள்ளாமல் தான் வருமாம், காலத்தின் கணக்கை யார் தான் அறிவார்கள்.


அது போலத்தான்...
என்றோ பதிவிட்ட கவிதைக்கு, ஏராளமான இதயங்களை ( Like ) பறக்கவிட்டு , யாரோ ஒருவன் கூறிய கருத்து இவள் கவனத்தை சற்றே அவன் பக்கம் சாய்த்தது.


" பாலைவனத்தின் நடுவே பெய்த பருவ மழையாய் உயிரை உருக்கி, மனதை வருடும் கவிதைகளை எங்கிருந்து திருடுகிறாய்....? " என்று பதிவிட்டு இருந்தான்.


அவன் சிறு வரியில் இருந்த ஆயிரம் அர்த்தங்களை, அரும் மொழியாய் அவள் எடுத்துக்கொள்ள, அங்கே தொடங்கியது அவர்கள் சமூக வலைதள நட்பு.


பகிர்வதில் அவன் பகலவனாய் இருக்க, உணர்வதில் இவள் உறை நிலவாய் இருந்தாள். காலை, மாலை என அவன் கதைகளை அள்ளி விட அக்கதைகளுக்கு பின்னும் அர்த்தங்கள் இருக்குமோ என அவள் ஆராய்ந்து கொண்டிருந்தாள்.


" அவனோடு உரையாடாத நாளும் ஒருநாளோ... ? " என்றவாறு காலம் போய்க்கொண்டிருந்தது.


கணக்கில்லாமல் கதைகளை இயற்றுபவன் காரணம் கூட சொல்லாமல் சிலகாலம் காணாமல் போயிருக்க, இவளுக்கோ அவன் நிலை அறியாமல் கண் அயரும் எண்ணம் இல்லை. பருவம் மாறி பெய்யும் மழை என தன் இஷ்டத்திற்கு திரும்பி வந்தவனை, வரையறையின்றி வசை பாடியவளைப் பார்த்து சிரிப்புதான் வந்தது அவனுக்கு.


காரணத்தை சொல்லாமல் மேலும் ஓரிரு நாட்கள் அவளை தவிக்க விட்டான் அந்தக் கள்வன். கொஞ்சி, கெஞ்சி என அனைத்து வகையிலும் அவள் மன்றாட இறுதியாக வழிக்கு வந்தான்.


ஓராண்டாக ஒரு பெண்ணை உருகி உருகி காதலித்து, ஒன்றுமே இல்லாத காரணத்தை கூறி அவள் விலகிச்செல்ல, சரி விட்டுப் பிடிக்கலாம் என்று இவன் நினைத்திருக்க, அந்த நினைப்புதான் பொழப்பை கெடுத்தது போல் ஆகிவிட்டது.


" மீண்டும் நீங்கள் அப்பெண்ணை பார்க்கவில்லையா ? " என்று அவள் கேள்வி எழுப்ப, " ம்ம் பார்த்தேன் சென்றவாரம் அவள் திருமணத்தில்...." என்று ஒற்றை வரியில் அவளுக்கு தன் நிலையை விளக்கினான்.


" ச்ச.... ஏன் தான் இந்த பெண்கள் இப்படி இருக்கிறார்களோ, காதலிப்பது ஒருவனை, கட்டிக்கொள்வது வேறு ஒருவனை " என்று வசை பாட அவள் வாயெடுக்க...

" அவள் மீது தவறு இல்லை " என்று கூறி அடுத்த நொடி இவள் வாயை அடைத்து விட்டான் அந்த காதல் கடலின் ஆழம் கண்டவன்.


" ஓ... இதற்கு பெயர் தான் காதலோ... இருக்கட்டும் இருக்கட்டும்... தங்கள் தேவதையின் பெயர் என்னவோ ? " என்று அவள் விளையாட்டாக கேட்க, சட்டென்று கூறினான் " யாழினி...! " என்று.


ஒன்றும் புரியாமல் அவள் உறைந்திருக்க, இவள் மனநிலையை மைல் தொலைவில் இருந்தே உணர்ந்த அவன் " இல்லை, இல்லை தவறாக எண்ண வேண்டாம் அவள் பெயரும் யாழினி தான்... " என்று அவன் பதட்டத்துடன் கூறிய போதும் அவன் வார்த்தைகள் கலக்கம் ஏதுமின்றி தெளிவாக இருந்தது.


என்ன கூறுவது என்று தெரியாமல் " யாழன் யாழினி என்ன ஒரு பெயர் பொருத்தம் " என்று அவள் மீண்டும் எடுத்துக்கொடுக்க,


( யாழன் - கதாநாயகன் பெயரை இவ்வளவு தாமதமாக கூறியதற்கு வாசகர்கள் நிச்சயம் என்னை மன்னிக்க வேண்டும்... )


" எனக்கு அந்தப் பெயர் மீது சற்று மோகம் அதிகம் " என்றான் சிறிதும் சிந்திக்காமல், அதற்கு மேல் அவள் என்ன பேசமுடியும் பாவம், வாயடைத்து தான் போனாள்.


" உனக்கு தான் நன்றி கூற வேண்டும் யாழினி, அவளே இல்லாதபோதும் அவளை என்னுள் உணரவைத்தது உன் கவிதைகள் தான் " என்று அவன் தொடர,


" போதும், போதும்... இப்பொழுது நீங்களும் கவிதை எழுத தொடங்கி விட்டீர்கள் போலும் " என ஏதேதோ கூறி அவனை இயல்பு நிலைக்குக் கொண்டு வர முயற்சி செய்தாள்.


" நிச்சயம் இல்லை, உனது துறையில் நான் மூக்கை நுழைப்பேனா, எனது நாட்டம் என்றும் இசையின் மீது தான், நான் சுவைத்த முதல் கவிதையும் என்னை ஈர்த்த முதல் கவிதையும் நீதான் யாழினி " என்று எதார்த்தமாய் பதிலளித்தான்.


" பேசும் வார்த்தைகளையே கவிதை என பொழிகிறாய், இதில் நீ தனியாக கவிதை வேறு எழுத தொடங்கிவிட்டால் உலகில் உள்ள பெண்கள் எல்லாம் பாவமடா " என மனதுக்குள் மட்டுமே கூறி கொள்ள முடிந்தது அந்த வெண்தாமரையால்...


" ஓஹோ... அப்படி எனில் தங்கள் இசைமழையில் நனைய நான் தயார், எனக்கான பாடல் எதுவோ...? " என அவள் ஆர்ப்பரிக்க, ஆரம்பத்தில் சற்றே தயங்கியவன் எங்கிருந்தோ தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,
" அவளை எனக்கு ஞாபகப் படுத்தும் பாடல் இதுதான், அதனாலேயே இந்த பாடலை கேட்பதையே விட்டுவிட்டேன் ஆனால் இன்று உனக்காக பாட வேண்டும் என்று தோன்றுகிறது " என கூறி...


" நீ கவிதைகளா...? கனவுகளா...? கயல்விழியை...
நான் நிகழ்வதுவா நடந்ததுவா பதில் மொழியேன்..." எனும் பாடலை குரல் பதிவிட்டு அனுப்பினான்.


அதிகாலை பனியாய் தெரிந்திருந்த அவன் பாடல் வரிகள், பின்னணி இசை ஏதும் இல்லாதபோதும் ஈர்ப்பை குறைக்காத அவன் குரலில் சற்று கிறங்கி தான் போனாள் அந்தக் கவிதைகளின் காரிகை. இதற்கு முன்பு ஆயிரம் முறை அப்பாடலை கேட்டிருப்பாள், ஆனால் இன்று ஏனோ அந்த பாடல் அவளுக்காகவே எழுதப்பட்டது போல் தோன்றியது கருவிழியாளுக்கு.


அளவிடமுடியாத இனிமையை மழைச்சாரலாய் மண்மீது தெளித்தது அவன் பாடல்கள்.... வாய்ப்பே இல்லை என படித்தவர் கூறும் வரம்புகளை வரையறையின்றி கிறுக்கிக் கொண்டிருந்தது அவள் எழுதுகோல்கள்....


இப்படி இசையும் கவிதையுமாய் காலம் கரைய, ஏதோ ஒரு தருணத்தில், இவள் எழுதிய ஏதோ ஒரு கவிதையை சுட்டிக்காட்டி " இது என்னை குறிப்பிடுவது போலவே உள்ளது " என அவன் சொல்லி சிரிக்க, அப்பொழுதுதான் அவளுக்கு புரிந்தது சில காலமாய் எழுதப்பட்ட கவிதைகள் அனைத்துமே அவனை சுற்றியே அமைந்திருப்பது.


எந்த கஷ்டத்தையும் சிரித்துக்கொண்டே சமாளிக்கும் அவன் இயல்பு, விதியை குறை கூறாத அவன் பேச்சு, ஆயிரம் அர்த்தங்களை அரை வரியில் உதிர்த்து விடும் திறன் படைத்தவன், சில பல அறிவுரைகளை அள்ளித் தெளித்தாலும், இன்னும் சில நேரங்களில் " குழந்தை தான் அவன் " என தோன்றும் இவளுக்கு, இப்படி எண்ணிலடங்கா இயல்புகளால் அவளைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டிருந்தான், அந்த எல்லையில்லா தேடல்கள் கொண்ட எதார்த்தவாதி.


" தங்கைக்கு திருமணம் முடிவாகிவிட்டது, உன் வரவை நிச்சயம் எதிர்பார்ப்போம் " என்று அழைத்தவனை இது தான் சந்தர்ப்பம் என்று எண்ணி, நேரில் வந்து அழைத்தால் தான் வருவேன் என்று இவள் அடம் பிடிக்க, வேறுவழியின்றி அவனும் தலையசைத்தான்.


அவனது வருகைக்காக நான் அதிகாலையில் இருந்து பூவையை சுற்றும் வண்டாய், அந்த பூங்காவையே சுற்றி வந்து கொண்டிருந்தாள். அவள் நிலையை அறியாமல் அவனோ நேரத்தைக் கடத்தி காத்திருப்பின் கதகதப்பை அதிகரித்துக் கொண்டிருந்தான்.


அவன் வந்தவுடன் வசைபாட வேண்டுமென்று எண்ணிய அவளுக்கு நிச்சயம் தெரியாது வார்த்தை இல்லாமல் தவிக்க போகிறாள் என்று.


நேரத்தை கடத்த வழி தெரியாமல், ஏதோ சில வரிகளை அவள் கிறுக்க தொடங்க, கிறுக்கல்கள் முடியும் முன்பே கீதை என வந்து நின்றான், அந்த கருமை நிறக் கண்ணன்.


ஆம், கருப்பு தான்... கருமை என்பதற்காக அந்த கார் மேக கண்ணனை மறுப்பவர் எவருமில்லை, கார்மேகத்தை கண்டு தோகை விரிக்காத மயில்களும் இல்லை. அக்கருமை நிறத்தில் " நான் என் அப்பாவை போல " என்ற கர்வமும் உண்டு அவனுக்கு.


பூங்காவின் உள்ளே கல் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் கற்சிலையும் அது அணிந்திருக்கும் கருப்பு உடையும் உயிர் பறிக்கும் என்ற எச்சரிக்கை பலகையை பூங்காவின் வெளியே வைத்திருந்தால், எப்படியேனும் உயிர் தப்பித்து இருப்பானோ என்னவோ....


புழுதிப் புயலில் நடுவே பூங்காற்றாய் அவன் அவ்விடம் நுழைய, தன்னிலை மறந்து அவள் இதழ்கள் புன்னகை முத்துக்களை தத்தெடுத்துக் கொண்டன.


இதுவரை தொலைபேசியில் மட்டுமே கேட்டு ரசித்த குரல் நேரில் பலமடங்கு மென்மையும் இனிமையும் கொண்டிருக்க இசையென ரசித்து கேட்டுக் கொண்டிருந்தாள் அவன் உளறல்களை.


வந்ததில் இருந்தே அவள் கையிலிருந்த காகிதத்தில் கண்ணாய் இருந்தவன் தக்க சமயம் பார்த்து இது என்னவென்று கேட்க, " ஒன்றும் இல்லையே " என்று மறைத்த அவளிடமிருந்து தட்டிப் பறித்தான் தயக்கம் என்பது சிறிதுமின்றி.


விதியின் சதியை முன்பே அறிந்திருந்தால் அதை செய்யாமல் இருந்து இருப்பானோ என்னவோ...


" இன்று உன் கவிதையை முதலில் படிக்கப் போவது இந்த அடியேன் தான் " என்று படிக்கத் தொடங்கியவனை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தது அக்கவிதை.


என்றுமில்லாத வகையில் இன்று இசையின் தன்மையினை உவமையாக்கி வடித்திருந்தாள் அக்கவிதையினை, தன்னை மறந்து கவி மொழியில் நீந்திக் கொண்டிருந்த அவனை தடுமாற வைத்தன சில வரிகள்.


" நதியின் தடங்கள் சேருமிடம் கடலின் மடியோ...
என் இதய மொழிகள் தேடும் இடம் யாழன் வழியோ...!?"
என்று அவள் எழுதி இருக்க சற்று தடுமாறித்தான் போனான் அவ்வரிகளில்...


சட்டென்று அக்காகிதத்தை பிடுங்கி அவள் கைப்பையில் போட்டுக் கொள்ள, என்ன செய்வது என்று அறியாமல் சிறிது நேரம் அவன் தயங்கி நிற்க... அண்டமே அவன் கூற போகும் வார்த்தைகளுக்காக அமைதி காத்தது...


சில வருடங்களுக்கு முன்பு இருந்த யாழனாக இருந்தால், நிச்சயம் அவன் பதில் யாழினியை வியக்க வைக்கும் விதத்தில் இருந்திருக்கும். ஆனால் விதி அவன் கைப்பற்றி அழைத்து வந்த தூரம் அத்தனையும் துயரங்கள் மட்டுமே நிறைந்திருக்க, அத்துன்பக்கடலில் யாழினியும் விழுவதில் துளியும் விருப்பமில்லை யாழனுக்கு.


நீண்ட நேரமாக அவன் எதாவது சொல்லுவான் என யாழினி காத்திருக்க, அவனோ அவள் கேள்விக்கு பதிலாக பத்திரிக்கையை மட்டும் அவளிடம் நீட்டினான்.
" நான்கு நாட்கள் முன்னமே வந்து விட வேண்டும் " என்ற சம்பிரதாயமாய் அவன் கூற அவள் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.


ஏற, இறங்க ஏதேனும் கூறுவான் அப்போது அவன் மனதைப் படித்து விடலாம் என்று அவள் எதிர்பார்க்க, அவனோ அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று கிளம்பி விட்டான்.


" யாழன் அது " என்று அவள் தொடர முயற்சிக்க, அவனோ " நீ அந்த காகிதத்தை கிழித்தெறிவது நல்லது " என்று கூறி முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டான்.


" ஏன் " என்று அவள் எத்தணிக்க, " ஏன் என்று உனக்கு தெரியாதா யாழினி...? "என்றான் கனத்த இதயத்துடன்....


அவளோ " ஏன் தெரியாது எல்லாம் தெரியும் தந்தை இறந்து மூன்று வருடம் ஆகிறது, இப்பொழுது குடும்ப பொறுப்பு அனைத்தும் உங்கள் தலைமேல், அம்மாவிற்கு தந்தை இறந்ததிலிருந்து உடல்நலம் சரியில்லை, பல பிரச்சனைகளை கடந்து இப்பொழுதுதான் தங்கையின் திருமணம் நடக்கப்போகிறது, இத்தனை வருட உழைப்பும் தந்தை வாங்கிய கடனை அடைக்கவே சரியாக இருந்தது, இதற்கு மேல் ஒரு சுய தொழில் தொடங்கும் எண்ணம் இருக்கிறது, இது எல்லாவற்றிற்கும் மேல் கடந்த காலத்தில் கலங்கவைக்கும் காதல் கதையும் ஒன்று உள்ளது, அவ்வளவுதானா வேறு ஏதேனும் மறந்து விட்டேனா..? " என்று அவள் விளையாட்டாய் கன்னத்தில் கை வைத்து யோசிப்பது போல் பாவனை செய்தாள்.


" எல்லாம் தெரிந்த உனக்கு உனது எண்ணம் ஈடேறுவதற்கான சாத்தியம் பற்றியும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் " என சொல்லி முன்னேறத் தொடங்கினான்.


" அந்த யாழினி மீது மட்டும்தான் விருப்பமோ...? " என்று அவள் முகம் சுருங்க கூற, அவளை கண்டுகொள்ளாமல் அவன் மேலும் இரண்டு அடி எடுத்து வைத்தான்.


" என்ன நடந்தாலும் சரி, என்னுடைய மனம் மாறாது, நான் முடிவு செய்து விட்டேன், இந்த யாளன் எனக்குத்தான்....! " என்று அவள் கூறிய போது அவன் முகத்தில் கேலியாக எழுந்த குறுநகையை அவள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.


*****அன்று திரும்பிப் பார்க்காமல் சென்றவன் தான், அதற்கு பிறகு அவனை பற்றி ஒரு தகவலும் இல்லை. யாழினி அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கும், தொலைபேசி அழைப்புகளும் அவன் செவிசாய்க்க போவதாய் அவளுக்கு தோன்றவில்லை. யாழன் மன எண்ணம் என்னவென்று அறியாமல் இவளுக்கோ எதிலும் நாட்டமில்லை எதைக் கண்டாலும் பிடிக்கவில்லை.


பத்து முறை அழைத்த அம்மாவை திரும்பிக்கூட பார்க்காதவள், தொலைபேசி சிணுங்கிய போதெல்லாம் முறையின்றி ஓடி வந்து சுவரில் முறையாக மோதியது தான் மிச்சம், முறை அறியாத அந்த யாழனோ ஒரு முறை கூட இவளை அழைப்பதாகவும் இல்லை, அவன் குரல் கேட்காமல் இவள் மனம் அமைதி பெற போவதாகவும் தெரியவில்லை.


அவன் தங்கையின் திருமண நாள் வேறு நெருங்கிக்கொண்டிருந்தது. இப்போது திருமணத்திற்கு செல்வதா ? வேண்டாமா ? என்று தெரியாமல் குழம்பி தவித்துக் கொண்டிருந்தாள்.


தோழி ஒருத்தியிடம் அறிவுரை கேட்ட பாவத்திற்கு, அவள் " இது காதல் இல்லை வெறும் ஈர்ப்பு தான் " என்று பத்து பக்க கட்டுரை போல் பேசிக்கொண்டே போக, இவள் மனமோ " இல்லை, இது காதல் தான் " என்றது.


எதுவாயினும் அவனிடம் மீண்டும் ஒரு முறை கேட்டு விட வேண்டும், அதன்பிறகு அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்து தோழியின் திருமணத்திற்கு செல்வதாய் வீட்டில் கூறிவிட்டு புறப்பட்டாள்.


*****


காணுமிடமெல்லாம் வண்ண, வண்ண மலர்களும், வரிசை கட்டி நிற்கும் வாழை மரங்களும், மதுரமாய் அமைந்து இருந்த மாவிலைத் தோரணங்களும், கடல் அலையென சலசலத்துக் கொண்டிருந்த மக்களின் கேலி கிண்டல் சிரிப்புகளும், அவளை அதனை ஆர்வத்துடன் வரவேற்றது.


திருமண ஏற்பாடுகளில் அந்த இடமே ஆர்ப்பரித்துக் கொண்டிருக்க, நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் ஏற்கனவே அங்கு கூட தொடங்கியிருந்தன.


அத்தனை உரிமையாய் அனைவருக்கும் முன்பு வந்து நின்றவளை கண்டு அவன் மெய்சிலிர்க்க, " நான் ஒன்றும் யாரோ அல்லவே திருமணத்தன்று வந்து பார்த்து செல்வதற்கு" என்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு வேகமாய் உள்ளே நுழைந்தாள்.


வந்தவர்களை வரவேற்கும் பொருட்டு அவன் அம்மா மரகதம், " வாம்மா இப்பொழுதுதான் வருகிறாயா ? நீ கவிதாவின் தோழியா ? தோழியின் திருமணத்திற்கு இவ்வளவு தாமதமாகவா வருவது " என்று உரிமையாய் கோபித்துக் கொள்ள, அவளை தொடர்ந்து உள்ளே வந்தவன் " அம்மா இது யாழினி, நான் சொல்லியிருக்கிறேன் அல்லவா " என்று அறிமுகப்படுத்தினான்.


இவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு எங்கிருந்தோ ஓடி வந்த அவன் தங்கை கவிதா, " வாங்க அண்ணி, கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும், ஒரு வழியாக என் அண்ணன் உங்களை என் கண்களில் காட்டி விட்டான் " என்று மூச்சுக்கு முன்னூறு தடவை இவளை " அண்ணி அண்ணி " என்று அழைத்தாள்.

ஆச்சரியத்திலும் வியப்பிலும் ஒன்றும் புரியாமல் யாழனை யாழினி பார்க்க " அவள் சொல்வதில் என்ன தவறு " என்பது போல் பார்த்து குறுநகை புரிந்தான் அதில் சிறிது வெட்கமும் கலந்திருந்தது.


( ஆண்களின் வெட்கம் எவ்வளவு அழகானது என்று நான் சொல்லியா தெரிய வேண்டும் )


அந்த நிமிடம் அவள் கைகளில் நோட்டு பேனா மட்டும் இருந்திருந்தால் அவனுடைய அரைநொடி வெட்கத்தை ஆயிரம் கவிதைகளாய் எழுதி அவனுக்கே அதைப் பரிசளித்திருப்பாள்.


ஒற்றை கண்ணசைவில் ஒட்டு மொத்த உரிமையையும் அவன் கொடுத்துவிட, அவ்வளவுதான் பல காலமாய் தவமிருந்த பட்டாம்பூச்சிக்கு இன்றுதான் சிறகுகள் விரிந்ததுபோல திருமண வீட்டை... இல்லை, இல்லை அவள் எதிர்கால வீட்டை சுற்றி திரிய தொடங்கினாள்.


திருமண வீடு என்று கூட பார்க்காமல் அவன் அவள் பின்னே சுற்றிக் கொண்டும், அவ்வப்போது வழிமறித்து கொண்டும், ரகளைகள் செய்து கொண்டிருக்க, அவள் ஒன்றும் அவனுக்கு சளைத்தவள் இல்லையே.... சில நாட்களாக அவள் அழைப்பை ஏற்காமல் ஏங்க வைத்ததிற்கு, பார்வையால் கூட அவனை தீண்டாமல் பழி தீர்த்துக் கொண்டாள்.


ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என திருமண நிகழ்ச்சிகள் அரங்கேற... "யாழினியை பாட சொல்..." என்று யாழன் கவிதாவை தூண்டி விட, கவிதா யாழினியை பாட சொல்லி வற்புறுத்த, சில பல கெஞ்சலுக்கு பிறகு அரங்கேறியது அவள் இசை நாடகம்...
" நான் அவள் இல்லை...
நான் அவள் இல்லை
அழகிலும் குணத்திலும் எதிலும் நான் அவள் இல்லை...
உன் மீது காதல் கொண்டேன்...
உன் வானத்தில் இரண்டாம் நிலவாய் என்னை பூக்க செய்வாயா...? செய்வாயா...!!!
அவள் எங்கே விட்டு போனாளோ...
அங்கே தொடங்கி உன்னை நான் காதல் செய்தேனே...!!!"
என்ற பாடலை எல்லையில்லா இனிமையோடு தன்னவனுக்காய் தலைவி பாட... அவள் குரல் வளத்தில் மட்டுமே சுற்றி இருந்தவர்கள் நாட்டம் கொண்டனர், அப்பாடல் வரிகளில் மறைந்திருந்த அர்த்தங்கள் புரிந்தது அவள் இதய அரசன் யாழனுக்கு மட்டும் தான்.


திருமணம் முடிந்து அவளை அனுப்ப ( பிரிய ) மனமில்லாமல் " பேருந்து நிறுத்தம் வரை அழைத்துச் செல்கிறேன் " என்று அவன் தன் இரு சக்கர வாகனத்தை உயிர்ப்பிக்க, அதில் ஏறி அமர்ந்தவள் எங்கே பிடிப்பது என்று தெரியாமல் தடுமாற, அவள் கைகளை அழகாய் பற்றி தன் தோளின் மீது வைத்துக்கொண்டான் அந்த கள்வன்.


அவனே அவள் கவிதையாக...
அவளே அவன் இசையாக....
மாறிய அப்பயணம், எங்கிருந்தோ காற்றில் பயணித்த " நீ கவிதைகளா....! " எனும் பாடல் வரிகளுடன் இனிதே உயிர் பெற்றது...!


அப்புறம் என்னங்க இனிமேல் டும் டும் டும் தான்..... !