Read Anitha - 1 by Naani mohan in Tamil Women Focused | மாட்ருபர்த்தி

Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

அனிதா - 1

அனிதா - பகுதி 1

வாழ்க்கையில் எல்லாம் மாறிவிட்டது, ஆனால் மாறாத ஒன்று நினைவுகள் மட்டுமே. பயணங்கள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது, இருந்தாலும் கூட ஏதோ ஒரு தருணத்தில் பழைய சுவடுகள சந்தோசம் அடைய செய்கிறது மற்றும் சோகத்தில் ஆழ்த்துகிறது.
அனிதாவின் வாழ்க்கை பயணத்தில் அவள் சந்தோசமாக இருந்ததை விட சோகமே அதிகம். அவளை பொறுத்தவரை அவள் குடும்பத்திற்கு வெறும் பணம் தரும் இயந்திரமாகவே பார்க்கபட்டாள். குழந்தை பருவம் தொடங்கி தந்தையை வெறுக்கும் ஒரு குழந்தையாகவே அவளின் வாழ்க்கை பயணம் தொடங்கியது.ஒன்றுக்கும் உதவாத தந்தை. கணவனே கண் கண்ட தெய்வம் என்று வாழும் அம்மா. அங்கே தொடங்கியது அனிதாவின் தனிமை. 'அம்மா என்ன சொன்னாலும் புரிஞ்சிக்கவே மாட்டாங்க ' என்பதே அனிதாவின் மனதில் அநேக நேரங்களில் எழ கூடிய ஒரு ஆதங்கம்.

பள்ளியில் அனிதா என்றால் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு குழந்தை. யார் பார்த்தாலும் வியப்பில் ஆழ்ந்து விடுவார்கள் சிறிது நேரம் அவளிடம் பேச்சு கொடுத்தால் ' இந்த வயதில் இப்படி ஒரு பக்குவமா' என்று வியக்கும் வகையில் அவளின் உரையாடல் அமையும். ஆனால் அவள் அம்மா அவளின் எந்த திறமையையும் கண்டு அவளை பாராட்டியதே இல்லை. இதன் விளைவாக அவளுக்கு வீட்டில் இருப்பதை விட பள்ளிக்கூடத்தில் இருப்பதே பிடிக்கும். ஆனாலும் கூட அவள் அம்மா மீது அவளுக்கு அபரிவிதமான மதிப்பு உண்டு. ஏனென்றால் கணவனின் எந்த ஒரு பொருளாதார உதவியும் இன்றி தனி ஒரு பெண்ணாக குடும்ப சுமைகளை தாங்கிக்கொண்டிருக்கிறார் என்பதே அதற்கு காரணம்.
அனிதாவின் வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது அவளின் சகோதரன். தனி ஒருத்தியாக இருந்த அவளின் வாழ்க்கை பயணத்தில் ஏதோ ஒரு நம்பிக்கையை தந்தது. அம்மா வேலைக்கு சென்றவுடன் தம்பியை பார்த்து கொள்வது அனிதாவின் பொறுப்பு. வருடங்கள் கழிய தங்கையும் வந்து இணைகிறாள். இப்போது அனிதா தனது தங்கைக்கும் தம்பிக்கும் ஒரு அம்மாவாக மாறுகிறாள்.

வருடங்கள் பல ஓட அனிதா கல்லூரிக்கு செல்கிறாள். பள்ளி பருவத்திலே தோழிகள் என யாருமே இல்லை என்பது நம்ப முடியாத உண்மை. அவளுக்கு கல்லூரி படிப்பு சற்று வித்தியாசமாகவே இருந்தது. கல்லூரி முதல் நாள் அவள் ஆயிரம் கனவுகளோடு உள்ளே நுழைந்தாள். ஆனால் சூழ்நிலையானது அவளை படிப்பின் மீது ஈடுபாடு காட்ட ஒத்துழைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் கண்ணீருடனே கழிந்தது. அனைத்து உறவுகளும் ஏதோ தன்னை நிராகரிப்பதை உணர்ந்தாள்.அப்பாவின் மீதான கோபம் எந்த ஆண்களையும் நம்ப முடியாத மனோநிலைக்கு தள்ளியது.

இளங்கலை பட்டப்படிப்பை இவ்வாறான நிலைகளில் முடித்த அவளின் வாழ்க்கை ஓட்டம் அங்கே தொடங்கியது. மேற்படிப்பை தொடர வேண்டும் என்ற அவளுடைய எண்ணம் அங்கே சிதறியது. அப்பாவின் மறைவு அம்மாவை மனதளவில் முடமாக்கியது. இனி தன்னுடைய தங்கை தம்பியின் படிப்பு மற்றும் அவர்களுடைய எதிர்காலம் தன்னுடைய கையில் தான் இருக்கிறது என உணர்ந்த அனிதா தன்னுடைய எதிர்காலத்தை பற்றி சற்றும் யோசிக்காமல் அப்போது கிடைத்த டைப்பிஸ்ட் பணியை செய்ய தொடங்கினாள்.

தனது 21 ஆவது வயதில் தொடங்கிய சுமை அவளின் 35 வயதிலும் தொடரும் என்று அவள் அப்போது அறியவில்லை. அம்மாவின் கவனம் அனைத்தும் மற்ற இரு குழந்தைகளின் மேல் இருந்ததே தவிர அனிதா மீது சிறிதும் இல்லை.காலை 9 மணிக்கு பணிக்கு செல்லும் அனிதா வீடு வர 7 மணி ஆகும். அவள் ஒரு பணம் தரும் இயந்திரமாக மட்டுமே இருக்கிறாள் என்று அவளுக்கும் தெரியவில்லை.

தன்னோடு பிறந்தவர்கள தன்னை பற்றி சிறிதும் யோசிக்கவில்லை என்றாலும் தன்னை பெற்ற தாயும் தன் வாழ்க்கையை பற்றி எப்படி யோசிக்காமல் இருப்பார் என்றே எண்ணி கொண்டிருந்தாள். வீட்டு தேவைகளை தன் சக்திக்கு மீறி செய்த அனிதாவுக்கு தம்பி மீது அதீத நம்பிக்கை. படிப்பை முடித்தவனுக்கு வேலையும் கிடைத்தது. தம்பிக்கு வேலை கிடைத்த கையோடு தங்கையை திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணியிருந்த அனிதாவுக்கு சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு பேரிடி காத்துக்கொண்டிருந்தது. வேலைக்கு சென்று தன் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வருவான் என்ற அவளின் எண்ணம் தன் தம்பியின் காதல் திருமணம் முடிவுக்கு கொண்டு வந்தது. அனிதாவின் அம்மாவுக்கு அது சிறிதும் தவறாக படவில்லை. அதே நேரத்தில் தன் மூத்த மகளின் வயதும் அவளுக்கு கண்ணுக்கு பட வில்லை. 'அவன் ஆண் மகன்; அவன் வாழ்க்கை ; அவன் எது செய்தாலும் சரிதான்' இது மட்டுமே அவளின் கருத்து. '