Read Dhandati - 2 by Prabhaharan Kalidasan in Tamil த்ரில்லர் | மாட்ருபர்த்தி

Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

தண்டட்டி - 2

கொல்லிமலையின் அடர்ந்த காட்டுக்குள் நுழையும் முன், பாரதி ஒரு கணம் திரும்பி வீட்டைப் பார்த்தாள். தன் நாய் குட்டியின் ஞாபகம் அவளை கூர்ந்து  கவனிக்க செய்தது. கூறை வேய்ந்த அந்தப் பழைய பாக்குமர வீட்டில், காய்ச்சலில் படுத்திருந்த லெட்சுமியும், திண்ணையில் அமர்ந்து கவலையுடன் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த பாட்டியும் தெரித்தனர்.
அன்றுவரை பூக்களின் வாசனையிலும், நாய்க்குட்டியின் விளையாட்டிலும் இருந்த அவளது வெகுளித்தனம், அன்றாட உணவின் நிதர்சனச் சுமையால் மெல்ல உடைந்தது.
மூங்கில் கூடையைச் சுமந்து, ஈரமான மண்ணில் அவள் காலடி எடுத்து வைத்தாள். பாதை மிகவும் சவாலானது. சில இடங்களில் பாறைகள் வழுக்கின, சில இடங்களில் கால்கள் புதைகின்றன. தாயுடன் செல்லும்போது இருந்த பாதுகாப்பு உணர்வு இப்போது இல்லை. தனியாக இருக்கும் அவளை பயம் அவளைச் சூழ்ந்தது.
பாரதிக்குச் சில குறிப்பிட்ட பூக்கள் பூக்கும் இடங்கள் தெரியும். ஆசைப்பட்டு அதிக தூரம் சென்று விடக் கூடாது என்ற தாயின் எச்சரிக்கை நினைவில் இருந்தது. அவள் வேகமாகப் பூக்களைப் பறிக்கத் தொடங்கினாள்.
பறித்துக் கொண்டிருக்கும் போது துரத்தில் மரக் கிளைகள் ஆடுவது பே ாால் தெரிந்தது. மரக்கிளைகளின் அசைவு பாரதியை சட்டென்று உறைந்து போகச் செய்தது. காற்றின் வேகத்தால் இலைகள் அசைந்தால், அது ஒருவித சீரான ஓசையை எழுப்பும். ஆனால், ஆனால் இப்போது தெரிந்த அசைவு அப்படியில்லை. அது அந்த தடித்த கிளைகள், யாரோ அசைப்பது போலவோ, அல்லது ஏதோ ஒன்று அதன் மீது ஏறுவது போலவோ இருந்தது. பயம் அவளை தொற்றிக் கொண்டது. தாயின் எச்சரிக்கை நினைவில் வந்தது: "காட்டுக்கு உள்ளே போனதும், வெங்காலியாட்டம் (வேக வேகமாக) ஓடாதே பொறுமை மிக முக்கியம் விவேகமும் கூட. கிளைகளை உடைக்கிற சத்தமோ, பாறைகளை உருட்டுகிற சத்தமோ கேட்டா, உடனே நின்னு, அந்தப் பக்கம் காது கொடுத்துக் கேள். அது விலங்கா, இல்ல மனுசனான்னு கண்டுபிடிக்கணும்."
பாரதி தன் இதயத் துடிப்பு காதில் கேட்கும் வேகத்தைக் குறைத்தாள். மூங்கில் கூடையை மெல்ல தரையில் வைத்தாள். பூக்கள் அவளுக்கு முக்கியம். ஆனால், அவளது பாதுகாப்பு அதைவிட முக்கியம்.
கிளை அசைந்த திசையிலிருந்து, இப்போது ஒரு மெல்லிய உறுமல் சத்தம் கேட்டது. அது உறுமலா, அல்லது ஒரு கனமான சுவாசிப்பா என அவளால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. கொல்லி மலையின் காட்டுக்குள் இருக்கும் காட்டுப் பன்றிகள், அல்லது ஒரு சிறுத்தைக் கூட இருக்கலாம்.
பாரதி மெதுவாகப் பின் வாங்கத் தொடங்கினாள். அவள் திரும்பிப் பார்க்கும் முன், ஒரு கருமையான நிழல் அடர்ந்த மரங்களுக்கு இடையே மிக வேகமாக அசைந்தது. அவள் பதற்றத்துடன் அங்கேயே நின்று விட்டாள்.
'இவ்வளவு தொலைவு இந்த இடம் வரைக்கும் வரக்கூடாது ன்னு அம்மா சொன்னாங்களே... நான் தப்பு பண்ணிட்டேன்,' என்று அவள் மனதில் ஓடியது. தன்னை தானே கடிந்துக் கொண்டாள்.
வீட்டிலுள்ள பாட்டியின் கவலையான முகம் அவளுக்கு ஞாபகம் வந்தது. அவர்களுக்கு எப்படியாவது இன்று உணவு வேண்டும். துணிச்சலை வரவழைத்துக்கொண்டு, முன்னோக்கிப் பார்க்கத் துணிந்தாள்.
அந்த மரங்களுக்கு நடுவே, நிழலும் ஒளியும் மாறி மாறி வந்த இடத்தில், அது உயரமான, கருமையான ஒரு உருவமாகத் தெரிந்தது. அதன் வடிவம் முழுவதுமாகத் தெரியவில்லை. அதன் தலையில், ஏதோ வெண்மையானது இருந்தது போல் அவளுக்கு ஒரு வினோதமான உணர்வு. அது ஒரு மனித உருவம் இல்லை, ஆனால் ஒரு விலங்கைப் போலவும் இல்லை.
பாரதிக்குத் தன் உடலில் ஒரு ரத்தம் உறைந்த உணர்வு ஏற்பட்டது. தன் மூங்கில் கூடையை எடுக்கவா அல்லது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடவா என்ற போராட்டம் அவளுக்குள் நடந்தது.
அந்த உருவம் அவளை நோக்கி மெல்ல நகர்ந்தது. கிளைகளை விலக்கி அது வெளியே வரும் முன், பாரதிக்கு ஒரு வினாடி அவகாசம் கிடைத்தது. அந்த உருவத்தைப் பார்க்க அவளால் இயலவில்லை; காரணம், சூரிய ஒளி அதன் பின்புலத்திலிருந்து வருவதால், அது ஒரு அடர்ந்த நிழல் வடிவமாகவே தெரிந்தது.
பாரதியின் இதயம் 'டும் டும்' என வேகமாக அடித்துக்கொண்டது. அந்தச் சத்தம், அடர்ந்த அமைதியில் சுற்றியுள்ள எல்லாவற்றையும் விடப் பெரிதாக அவளுக்குக் கேட்டது.
அவள் கைகள் வேகமாகத் தரையிலிருந்த மூங்கில் கூடையை எடுத்தன. அந்தக் கூடை அவளது உயிர்நாடி. பூக்களைப் பாதியிலேயே விட்டுவிட்டு, அவள் கூடையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, வந்த வழியை நோக்கித் திரும்பாமல், அடர்ந்த புதர்கள் நிறைந்த பக்கவாட்டுப் பாதையில் ஓடத் தொடங்கினாள்.அந்த உருவத்திடமிருந்து தப்பிக்க, அவளுக்கு அறிமுகமில்லாத புதிய பாதை இது.
அவள் ஓடும் சத்தம், உடைந்த கிளைகளின் ஓசை, அவளது துரிதமான சுவாசம்—இவை அனைத்தும் பின்னாலிருந்து கேட்கும் அந்த மர்மமான ஓசைகளை விடச் சத்தமாக இருந்தன.
ஓடிக்கொண்டிருந்த போது இந்நாட்டின் எதிர்காலமான இளைஞன் ஒருவன் மது குடுவையின் தலையை திருகி அதன் இரத்ததை குடித்துவிட்டு வீசி எறிந்த காலி அதன் உடல் சிதறி கண்ணாடி சில்லாக மாறியது அவளின் காலை பதம்பார்த்திருந்தது, அந்த வலியை கூட பொருட்படுத்தாமல் மேலும் ஓடி அவள் ஓரிடத்தில் தடுக்கி விழுந்தாள். கையில் இருந்த கூடை பறந்து ஒரு பாறை மீது மோதியது. விழுந்த இடத்தில் மயக்கமானாள்.