வானவில்-03
செந்தாளம்பட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அம்மன் கோவில் திருவிழா முந்தைய வாரத்தில் தான் காப்புக் கட்டி இருந்தனர். தெருவை அடைத்து போடப்பட்ட பந்தலும் ஒவ்வொரு வீட்டின் வாயிலில் கட்டப்பட்ட வாழைமரமும் விழாக்கோலத்தை பறைசாற்றியது. மைக் செட் ஒரு பக்கம் அலறிக் கொண்டிருக்க மற்றொரு பக்கம் வாகனங்களின் இரைச்சல். ஆனாலும் இதெல்லாம் ஒரு கொண்டாட்ட மனநிலையை உருவாக்கியிருந்தது அவர்களுக்கு
"திருவிழா களை கட்டிருச்சு" என்று சிலாகித்தபடி பத்மநாபன் இறங்க, பின்னோடே மலர்ந்த முகத்துடன் திரிபுரசுந்தரியும் இறங்கினார்.
'பத்து அண்ணா வந்தாச்சு, வாங்க அண்ணி அத்தை சித்தப்பா மாமா! 'என்று ஒவ்வொரு உறவாக விளித்து வரவேற்பு கிடைக்க அதோடு பிள்ளைகளையும் ,'ஹேய் தேஜா ப்ரது அகிலே...!'என்று ஆர்ப்பரித்து வரவேற்றனர்.
ஒரு கூட்டமே குழுமியிருந்தது. சிலர் ஒதுங்கி தலையாட்டல் வரவேற்பு மட்டுமே அதில் யுகாதித்தியனின் அம்மாவும் ஒருவர். கோபத்தில் அல்ல எப்படி வரவேற்பது என்ற தயக்கத்தில். நடந்த நிகழ்வுகள் எல்லாம் அப்படி.
பின்னர் பத்மநாபனே, "என்னம்மா நல்லா இருக்கியா எங்கே மாப்ள வந்திருக்காரா? "என்று இயல்பாய் விசாரிக்க கண்ணே கலங்கியது அவருக்கு.
"அண்ணே! "என்று உணர்ச்சிவசப்பட்டவர், "யுகி நானும் அவரும் தான் வந்தோம்" என்றார் முகமலர்ச்சியுடன்.
திரிபுரசுந்தரி எதுவும் பேசவே இல்லை அவரிடத்தில். அத்தனை கோபம் ஆனால் காண்பிக்க முடியாமல் அமைதி காத்தார்.
அண்ணி என்ற அழைப்பில் ஹ்ம்ம் மட்டுமே பதிலாக இருந்தது திரிபுரசுந்தரியின் பக்கத்தில் இருந்து.
வரவேற்பு முகமன் எல்லாம் முடிந்து வீட்டிற்குள் சென்றுவிட யுகாதித்தியன் அனைத்தையும் மாடியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
'அது அந்த கண்ணாடிகாரி தானே... ஆள் வளர்ந்துட்டா போல ம்ம்ம் இருக்கும் எப்படியும் பார்த்து ஏழு வருஷம் இருக்கும் ல...' என்று எண்ணியவன் அங்கேயே நின்றான்.
பின்னர்,'யார் வந்தா எனக்கு என்ன?,நான் எங்கப்பா அம்மாக்காக இங்கே வந்திருக்கேன்' என்று நினைத்து தலையை உலுக்கிக் கொண்டான். .
வரவேற்றவர்களில் சிலர் தேஜாவை பார்த்து விட்டு தங்களுக்குள் பேசிக் கொண்டனர். அதை அவள் பார்த்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இதுவெல்லாம் நடக்கும் என்று உணர்ந்து தான் இங்கே வரவே தீர்மானித்திருந்தாள். 'எப்படியாயினும் தான் செய்த காரியத்திற்கு இதை பழகிக் கொள்ள வேண்டும்' என்றெண்ணியபடி பெரியவர்களைக் காணச் சென்றாள்.
பாட்டி கெஜலெட்சுமி தொன்னூறின் நடுவில் இருந்தார். தாத்தா வெங்கடாசலம் நூறின் துவக்கம் கொள்ளுப் பேரன் பேத்தி வரை பார்த்து விட்டவருக்கு இப்போது வளர்ந்து நிற்கும் பேரன் பேத்திகளை காண வேண்டும் என்ற ஆவல். இந்த திருவிழாவை சாக்கு வைத்து எல்லோரையும் கண்டிப்பாக வர வேண்டும் என்று உத்தரவிட்டு அவரின் மூத்த மகனையும் இரண்டாம் இளைய மகனையும் அலைய வைத்து அத்தனை சொந்தங்களையும் திரட்டி விட்டார்.
அரண்மனை போன்ற வீடு இருக்கையில் ஆட்களை தங்க வைக்கவா சிரமம். ஏனையோர் மீண்டும் தங்கள் சொந்தங்களையும் பந்தங்களையும் காண விடுமுறை எடுத்துக் கொண்டு வந்து விட்டனர் திருவிழாவிற்கு இரண்டு மூன்று நாட்கள் இருக்கும் போதே. இது போன்ற சங்கமங்கள் அரிதாகத் தான் நிகழும் ஆளாளுக்கு வேலை தொழில், குடும்பம் என்று போய்விட பெரிதாய் விஷேஷத்திற்கு எட்டிப் பார்ப்பதில்லை அப்படியே வந்தாலும் ஆளாளுக்கு ஒரு தினம் வந்துவிட்டு சென்று விடுவர்.
ஏழு வருடங்களுக்கு முன்பு திருவிழாவிற்கு வந்தது அனைவரும். அத்திருவிழாவில் சில கசப்பான சம்பவங்கள் நடந்தேற, பகை, மனக்கசப்பு என்று துளிர்விட விளைவு சொந்தங்களின் வரவு குறைந்து போயிற்று ஏதேனும் திருமண நிகழ்வோ அல்லது வேறு விஷேஷங்களோ அதில் பார்த்தால் தான் உண்டு. இப்போது பெரியவர்களுக்கு வயதாகிவிட்டது அவர்களின் ஆசை என்று சொல்லி இருக்க யாராலும் மறுக்க முடியவில்லை. சிலர் ஆவலாய் சிலர் தயக்கமாய் ஆனாலும் ஆசையோடு கிளம்பி வந்து விட்டனர். அதில் பத்மநாபனின் குடும்பமும், யுகாதித்தியனின் குடும்பமும் தயக்கத்துடன் தான் வந்திருந்தனர். ஏனெனில் நடந்த நிகழ்வு அப்படி.
யுகாதித்தியனின் அம்மா வேறு யாரும் அல்ல பத்மநாபனின் சித்தப்பா மகள் தான். அப்போதெல்லாம் உடன் பிறந்த அண்ணன் தங்கை போல அத்தனை இணக்கம் தான் பிள்ளைகள் அனைவரும். எல்லா தலைமுறையும் அப்படி இருக்கும் என்று கூறிவிட முடியாதே. பத்மநாபன் தன் அத்தை மகளை பெரியவர்களின் சொல்படி மணந்திருந்தார். அவரின் தம்பியோ காதல் திருமணம். இப்படி பல்வேறு விதமான மனிதர்கள் ஆனாலும் ரத்த சொந்தம் என்று ஒன்றிற்குள் ஒன்றாக தான் வாழ்ந்தனர் வாழ்கின்றனர்.
"அம்மா மிச்ச சொந்தத்தை எல்லாம் நீங்க பார்த்துடுவீங்களாம் நவ் ஸோ டயர்ட்" என்று படுக்கையில் விழுந்தாள் ப்ரதன்யா.
"ஐம் ஆல்ஸோ மம்மி டோன்ட் டிஸ்டர்ப் மீ" என்று அதிலும் அவளுக்குத் தள்ளிப் படுக்க, திரிபுரசுந்தரி, "எது வேணும்னாலும் ஃபோன் பண்ணுங்க நான் வெளியே போறேன்" என்று தேஜாவை பார்க்க
அவளோ, "நான் கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருந்துட்டு வெளியே வரணும்னா வர்றேன் மா" என்றாள்.
"சரிடா அங்கே வெளியே தாத்தாவோட ரூமில் புக் அலமாரி இருக்கு உனக்கு தேவைனா எடுத்துப் படி" என்று வெளியேறினார்.
தேஜாவின் வாழ்க்கையில் புத்தகங்கள் பிரிக்க முடியாத பந்தத்தில் இருப்பவை. கையில் ஆண்ட்ராய்டுடன் திரிபவர்கள் மத்தியில் பயணத்தின் போது புத்தகத்தை துணைக்கழைப்பவள். அது அவளுக்கு பல விஷயங்களில் மருந்தாகியிருக்கிறது.
வெளியே வந்தாள் அலமாரியைப் பார்க்க. தாத்தாவின் அறை எப்போதும் திறந்த பூங்கா தான். அங்கே வர அனைவருக்கும் அனுமதி உண்டு.மினி நூலகம் எனலாம் அந்த அலமாரியை. தமிழ் ஆங்கிலம் என்று இரண்டாகப் பிரித்து சரித்திர நாவல்கள் குடும்ப காதல் நாவல்கள் என்று ஒவ்வொரு அடுக்கிலும் இருந்தது. பத்மநாபனின் தந்தை அலாதியான புத்தகப் பிரியர். அந்த கால பியூசி வரை படித்திருந்தார். ஆனால் உலக அறிவு வல்லுநர்கள் போல அவருக்கு.
எல்லாம் பேசுவார். அரசியல் ஆன்மீகம் என்று அத்தனையும் ஆராய்ந்து பேசும் மனிதர். நடமாடும் நூலகம் அவர்.
தேஜா வேலைக்குச் சென்றதிலிருந்து படிப்பது குறைந்து போனது. இப்போது புத்தக அலமாரியைக் காணவும் ஆவலாய் திறந்தவள் கையில் கிடைத்தது சாண்டில்யனின் யவனராணி.
"வாவ்!,யவனராணி."என்று பின்னால் இருந்து அவன் குரல் கேட்க திடுக்கிட்டு திரும்பியவள், தன் கண்ணாடியை மேலே ஏற்றி சரி செய்தபடி புத்தகத்தைப் பிரித்தாள்.
"என்ன மேடம் அடையாளம் தெரியலையா...? "அவனாகத் தான் பேச்சைத் துவங்கினான் அவள் பேச மாட்டாள் என்று உணர்ந்து.
"ஏன் தெரியாமல் நல்லாத் தெரியுது" என்றவள் புத்தகத்தில் இருந்து விழிகளை அகற்றவில்லை. அவளின் இந்த தைரியம் ஒரு வகையில் பிடித்தது அவனுக்கு.
" ஓஓஓ ம்ம்ம் நைஸ்." என்றவன், "கொஞ்சம் தள்ளினா நானும் ஒரு புக் எடுத்துப்பேன்" என்றதும் வேகமாக தள்ளி நின்றாள்.
"எப்படி இருக்க?,ஆள் அடையாளமேத் தெரியலை ரொம்ப மாறிட்ட" என்று கேட்டுக் கொண்டே புத்தகத்தை ஒன்றன் மீது ஒன்றாக மோதி நகர்த்திக் கொண்டு வந்தான்.
"நல்லாவே இருக்கேன்" என்றவள்,"ஆனால் மாறலை அதேபோல் தான் இருக்கேன்" என்றாள் வெடுக்கென்று.
"அப்போ என் மேல கோபமா இருக்க ரைட்." என்று முணுமுணுக்க
"கோவப்பட நீ எனக்கு யாரும் கிடையாது, கெட் லாஸ்ட்" என்று பல்லைக் கடித்து விட்டு செல்ல
"இன்னுமா அந்த கோபம் உனக்கு? "என்று அவள் பின்னால் செல்ல
"எல்லோரும் பார்க்கிறாங்க, இப்போ இது ரொம்ப அவசியமா தயவு செஞ்சு வேற பக்கம் போங்க" என்று அடிக்குரலில் பேசியவள் அங்கிருந்த மென்மெத்தையில் அமர்ந்து படிக்கத் துவங்கினாள். ஆனால் அங்கு ஒருவரும் இல்லை.
யுகாதித்யனுக்கு என்ன தோன்றியதோ சற்று தள்ளி கிடந்த மர நாற்காலியில் அமர்ந்து அவனும் புத்தகத்தைப் புரட்டினான்.
'வாவ்டா சிட்னி ஷெல்டன் புக் எனக்கே எனக்காகவா? 'என்று கவிலயா இவன் பரிசளித்தபோது பளிச்சென்று கன்னத்தில் முத்தமிட்டது நினைவிலாடியது அவனுக்கு.
'எதைப் பார்த்தாலும் உன் ஞாபகம் வந்திடணும் அதானேடி. எல்லாத்திலும் கலந்து இருக்கியேடி' என்று செல்லமாக சினந்தவன் முகத்தில் மென்னகையோடு படிக்கத் துவங்கினான்.
இவனுக்கும் புத்தகத்திற்கும் ஏழாம் பொருத்தம் நான்கு பக்கத்தை புரட்டுவதற்குள் உறக்கம் கண்களை சுழற்ற உறங்கிப் போவான். அதனாலேயே எப்போதாவது புத்தகம் தொடும் பிறவி அதாவது கதை புத்தகம் படிக்கும் போது மட்டும். படிப்பு என்று வந்து விட்டால் வேறொருவனாக மாறிப் போவான். இந்த உறக்கப் பழக்கத்தை மாற்றியவள் கவிலயா தான்.
"அதெப்படி உனக்கு காலேஜ் புக்ஸ்னா தூக்கம் வராது மத்ததுனா வருமோ என் கூட முழு புக்கையும் படிக்கிற" என்று வம்பு செய்து, சிறிது சிறிதாக அவனை மாற்றியிருந்தாள்.
யவனராணியை படித்துக் கொண்டிருந்தவள் மெல்ல விழியுயர்த்திப் பார்க்க, யுகன் ஏதோ சிந்தனையில் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
"சிட்னி ஷெல்டன் தலைகீழா படிச்சா தான் மனசில் பதியும்னு சொன்னாரோ? "என்று அவன் காதில் கேட்கும்படி கிண்டலாகக் கூற சட்டென்று திகைத்தவன் புத்தகத்தைத் திருப்ப, அது இப்போது தான் தலைகீழாக தெரிந்தது.
அவளை கோபத்துடன் முறைத்து விட்டு, மீண்டும் புத்தகத்தை நேராக வைத்தான்.
"இதைத்தான் யார் என்ன சொன்னாலும் நம்பக்கூடாது. சரியா இருக்கா இல்லையானு நாமளே செக் பண்ணிக்கணும்னு."என்று எழுந்து கொண்டாள்.
" நான் பாட்டுக்கு அமைதியாக தானே இருந்தேன்.இப்ப எதுக்கு வம்பு செய்ற? "குரலை உயர்த்தாமல் அவளிடம் வினவ
"புத்தகத்தை கையில் வச்சிருந்தா அதில் இருக்க உலகத்துக்கு தான் நாம போகணும். வேற ஏதோ உலகத்தில் இருந்துட்டு புத்தகத்தில் தலையை விடக் கூடாது" என்று கூறி விட்டு போய் விட்டாள்.
"சரியான மிலிட்டரி. வந்ததும் வராததும் இவ கிட்ட பேசினேன் பாரு எனக்குத் தேவை தான்" என்று முனகியபடி எழுந்து அவனும் போய்விட்டான்.
நல்ல வேளை புத்தக அலமாரி இருக்கும் அறை என்பதால் யாரும் அங்கில்லை இல்லையேல் பலதரப்பட்ட கிசுகிசு இந்நேரம் வலம் வந்திருக்கும்.
*********
செந்தாளம்பட்டி அன்புடன் உங்களை வரவேற்கிறது. என்று பலகையில் எழுதி இருந்ததை சத்தமாக வாசித்தான் அருண் பிரசாத்.
"எல்லையில் வரவேற்பு பலமாக தான் இருக்கு. இது ஊருக்குள்ள இருக்குமான்னு தெரியலையே...! அகி குட்டி போலாமா? "என்று மகனைத் தூக்கிக் கொண்டு, லக்கேஜையும் இழுத்துக் கொண்டு நடந்தான்.
அதே நேரத்தில் இங்கே வெங்கடாசலத்தின் வீட்டில் ஒரு பரபரப்பு.
"அந்த அருணுபய ஊருக்குள்ள வாரியானாம். எம்புட்டு தெகிரியம் இருக்கும். கெளம்புங்கடா அவனை அந்த எல்லைக்குள்ளேயே மொழைய (நுழைய) விடக்கூடாது. ஏ சுபாசு வரதா சீனி அட இந்தா அகிலா நீயும் வா. யப்பா யுகா மச்சான் நீயும் வா ஆளும் பேருமா அவனை சம்பவம் பண்ணிப்புட்டு வருவோம்" என்று படையைத் திரட்டினான் தேஜாவின் பெரியப்பா மகன் சுதாகரன்.
'ஏதே சம்பவம் பண்ணனுமா இன்னுமாடா இதை எல்லாம் நெனைச்சுட்டு இருக்கீங்க?!'என்ற ரீதியில் யுகாதித்யன் அவர்களைப் பார்த்து விட்டு அப்படியே வேகமாய் வந்த தேஜாவை பார்க்க அவளோ திகைத்துப் போய் நின்றிருந்தாள்.
..... தொடரும்.