Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

என் வானின் வானவில் நீ - 4

வானவில்-04

"யாரடா அடிக்க போறீங்க அதுக்கு ஏன் டா நான் வரணும்? "கேட்டபடியே யுகாதித்தன் அவர்கள் இழுத்த இழுப்பிற்கு சென்று தான் ஆக வேண்டியதிருந்தது. ஏனெனில் அவன் இழுத்துச் சென்ற விதம் அப்படி. கழுத்தோடு கையைப் போட்டு விலக விடாமல் நகர்த்தி இருந்தான் அவனை. 

"சுதா... கோவப்படாதப்பா" பாட்டியின் குரல் தீனமாக ஒலிக்க

"சும்மா கெட கெழவி, அவனுக்கு எவ்வளவு ஏத்தம் இருந்தா ஊருக்குள்ள வந்திருப்பான். ஏழு வருஷமா காங்கலையேனு நெனைச்சா இப்ப பவுசா வந்திருக்கியான்." என்று குதித்தான் சுதாகரன். 

"எப்படி டா இந்த வருஷம் வந்தான் அவேன். ஒரு வேளை அவேன் சேக்காளி பயலுவ வெசாரண போட்ருப்பானுவளோ?!"என்று பத்மநாபனின் தம்பி சந்தேகம் கேட்க

"இருக்கும் சித்தப்பு, நம்ம புள்ள வர்றதை எங்கனயோ மோப்பம் புடிச்சுத்தேன் வந்திருக்கான். இன்னிக்கு அவேன் மென்னிய கடிச்சு துப்பல நா(ன்) சுந்தரபாண்டி மவேன் இல்ல" என்று சூளுரைக்க தேஜஸ்வினி அதிர்ந்து விழித்தாள். 


"அண்ணா !"என்று பதறிப் போய் அழைக்கவும்

"நீ ஒண்ணுமேட்டுக்கு வெசனப்படாதத்தா, நா இருக்கேனில்ல, அண்ணேன் ஒருத்தன் போதும் அவனுகளை சம்பவம் பண்ண... யாரு கிட்ட சின்னம்மோவ் புள்ளைய உள்ள கூட்டிட்டு போ. லேய் பயலுவளா! வெரசா வாங்கடா அவேன் ஊருக்குள் கால வைக்கக் கூடாது" என்று கொக்கரித்த சுதாகரன் கூட்டத்தை கிளப்பிக் கொண்டு சென்றான். 

'ஓஓஓ அவனையா? 'என்று எண்ணிக் கொண்ட யுகாவும் அவர்களோடு திமிறாமல் நடந்தவன்,"ஆனாலும் தான் எதுவும் நடக்கலையேடா இன்னுமா அதையே புடிச்சு தொங்கறீங்க? "என்று கேட்டு வைக்க

"நடக்கலைனா நடந்த விஷியம் இல்லேனு ஆகிப் போயிருமா...? நம்ம புள்ளைக்கு எதுவும் தெரியாது. அந்த பயதேன் அம்புட்டுக்கும் காரணம்"என்ற சுதாகரனை வியப்புடன் பார்த்தான் யுகா. 


'ஏழு வருடங்கள் முன்பு இவன் போட்ட ஆட்டம் என்ன, இப்போது இவன் பேசும் பேச்சு என்ன என்று.' 


"புள்ளையா வளத்துருக்கீக எங்க மானம் மருவாதிய வாங்கன்னே பொறப்பெடுத்துருக்குது. இருந்து இருந்து தேரு திருவுழா பாக்க வந்தது, இந்த சோலிக்கழுதைய பாக்கத்தானா... பேசாம கெளம்பிருங்க ஊரப் பாத்து" என்று அத்தனை குதி குதித்திருந்தான். இத்தனைக்கும் வயது அவ்வளவாக ஒன்றும் பெரிதில்லை அவனுக்கு. 

"என்ன மாப்பு ரோசன...? ஓஓஓ பட்டணத்துல சட்ட கலயாம இருந்தவனை சம்பவம் பண்ண கூப்புடுறீங்களேடானு நெனப்பாக்கும். அதெல்லாம் சட்டக் கிழியாம ஒன்னை பொத்துனாப்டி கூட்டி வர்றது எம் பொறுப்பு சரிதான? "என்று சுதாகரன் கேட்க

"பின்ன எதுக்கு நானு. பேசாம பொத்துனாப்டி இங்கேயே இருக்கேனே" என்றான் யுகா. 

"என்ன மாப்பு இப்புடி சொல்லிப்புட்ட ஏதோ பேச்சுக்கு சொல்லுவோம் தான். சண்டையில கிழியாத சட்ட எங்கருக்கு? "என்றவனின் மாற்றங்கள் யுகாவிற்கு வியப்பு தான். 

பெரிய வீட்டின் இள வட்டங்கள் கிளம்புவது கண்டு அங்கிருந்த சிலர் வேகமாய் வந்து, "என்ன சுதா ஏதும் பெரச்சனையா...? எங்கன எல்லாரும் பயணமாவுது. தொணைக்கு நாங்களும் வரவா? "என்று வேட்டியை மடித்துக் கட்ட

"அட ஒண்ணுமில்ல மாமோய். ஏழு வருசத்துக்கு முந்தி நடந்துச்சே ஒரு சங்கதி..." 

"ஆமா...! "

"அந்த கந்தன் மவேன் வந்திருக்கியானாம், அதேம் ஒரு காட்டு காட்டலாமெண்டு போறோம். நா பாத்துக்கிடுதேன் நீய சோலியை பாருங்க" என்றபடி ஏதோ வாடிவாசலுக்குச் செல்லும் பொலிகாளை போல சென்றான் சுதாகரன். 

"பெரிய வூட்டு பயக பயகதேன் பா. பாத்தியளா ஏழு வருஷமோ எழுவது வருஷமோ பகையை கருவறுக்க நிக்குதானுக பாரு" என்றும், "இத்தனை வருஷங்கழிச்சா? "என்று சிலரும் பேசியபடி நகர்ந்தாலும் இளைஞர்கள் சிலரும் அவனோடு இணைந்து சென்றனர். 


**********

'அவனா அவன் வந்திருக்கிறானா... ஏன் இத்தனை வருடம் வராமல் இப்போது வந்திருக்கிறான். ஒரு வேளை எனக்காகவா? நான் வந்தது எப்படித் தெரியும்? இல்லை எப்போதும் போல இயல்பாய் வந்திருப்பானா... ஏழு வருடங்கள் ஆகிற்று அவன் எப்படி இருப்பான் என்ன வேலை பார்த்துக் கொண்டு இருப்பான். என்னைப் போலவே அவனும் என்னை நினைவில் வைத்திருப்பானா? 'என்று வரிசையாக மனம் கேட்டக் கேள்விகளில் அவளுக்கு அவனைப் பார்க்கும் ஆவல் பெருகியது. ஆனாலும் இப்போது சென்றவர்கள் அவனை மீண்டும் என்ன செய்வரோ என்று பயமும் பிறந்தது அவளுக்கு. 

அன்றே அத்தனை அடி அடித்து பின்னி இருந்தனரே என்று கலங்கியவள், நேராக சென்று விடலாம் என்று முடிவெடுக்க பின்னர் அது சரிவராது என அமைதி காத்தாள். அந்த அமைதி எல்லாம் ஒரு சில நொடிகள் மட்டும் தான் பின்னர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு செந்தாளம்பட்டி பேருந்து நிலையத்திற்கு விரைந்தாள். 

அங்கே ஜேஜேவெனக் கூட்டம் நிரம்பியிருக்க ,காக்கைக் கூட்டத்தில் கல்லெறிந்தது போல அத்தனை சத்தம் அங்கே. 

இவர்கள் மட்டும் தான் ஆட்களா என்ன சம்பந்தப்பட்டவனுக்கும் சொந்தங்கள் நண்பர்கள் என்று இருப்பார்கள் அல்லவா. 

அவனுக்காக பரிந்து பேச அவன் பக்கம் நின்று அவர்கள் பங்கிற்கு கத்தினர். 

வேகமாக அங்கே ஓடினாள் தேஜஸ்வினி. கூட்டத்தை விலக்கி விட்டுப் பார்க்க தலையில் கைவைத்தபடி அவன் அமர்ந்திருந்தான். சலிப்பான ஒரு தோற்றம். அவனருகில் ஐந்து வயது ஆண் குழந்தை. அவன் குழந்தை தான் சொல்லும் படி அவன் முகச்சாடை அப்படியே இருக்க, ஆதூரமாய் அந்த சிறுவனைப் பார்த்தாள் தேஜா. 

"இன்னைக்கு இவனைக் கொல்லாம விடுறதில்லை. இந்தாங்கடா எங்கிட்ட அவனை விட்டீங்கன்னா வூட்டுச் சண்டையாப் போயிரும், இல்லை ரெண்டு தெருவுக்குமான சண்டையாகிரும். அவனை எங்க கிட்ட ஒப்படைங்க" என்று சுதாகரன் கத்த

'இவனை ஏன்டா அவங்க ஒப்படைக்கணும்? 'என்று புரியாமல் குழம்பிய தேஜா, "அண்ணா! "என்று சத்தமிட்டுக் கொண்டே அவனருகில் செல்லவும், அருண் பிரசாத் அவளை நிமிர்ந்து பார்க்கவும் சரியாக இருந்தது. 

'வாம்மா பரதேவத... உன்னால ஏழு வருஷம் நா பொறந்த மண்ணுக்கு வர முடியல. இப்ப வந்தும் உள்ளே போக முடியல' என்று பொருமியபடி அவளைப் பார்த்தான். 

"அவள என்னடா பாக்குற...?"என்று எகிறிய சுதாகரன் அவனை அடிக்கப் பாய, தேஜா அவனை விடாமல் ஒரு பக்கம் தடுத்து பிடிக்க மறுபக்கம் யுகாதித்தன் பிடித்துக் கொண்டான். 

அதற்குள் பெரிய வீட்டு உறுப்பினர்களும் வந்துவிட, அருண் பிரசாத் சொந்தங்களும் வந்துவிட்டது. 

"நாங்க வர்றதுக்குள்ள ஒனக்கு ஏன் டா அவசரம்? "என்று அவனைக் கடிந்துகொண்ட அருணின் தந்தை பேரனைத் தூக்கிக் கொண்டார். 

"அட, இன்னும் இதெல்லாம் நெனப்பு வச்சிருப்பாய்ங்க என்னை ஊருக்குள்ள விட மாட்டானுவன்னு கெனாவா கண்டேன் நானு?,நீயி வேற ஏம்ப்பா? "என்ற அருண்

"ஏலேய் படிச்ச மேதாவி ஒந்தலையில மூளை இருக்கா இல்ல கழட்டி வறுவல் பண்ணி தின்னுட்டியா...? "

"டேய் என்னடா திமிரா. வெட்டி பொலி போட்ருவேன்டி "என்று சுதாகரன் பல்லைக் கடித்துக் கொண்டு எகிறவும்

" ஏன்டா... காதலிச்சு வீட்டை விட்டு ஓடிப் போன ரெண்டு பேரையும் ஊருக்குள்ள சேத்துக்குவீங்க... கூட தொணைக்குப் போனவனை வெட்டுறேன் குத்துறேன்னு வருவீங்களாடா, ஏ வெண்ருங்களா?!"என்ற அருண் 

"ஏம்மா இதெல்லாம் ஒங்கண்ணனுக்கு நீயி சொல்ல மாட்டீயா ?"என்றான் தேஜாவிடம். 

"நான் அவனைத் தான் தேடி வர்றாங்களோனு நினைச்சேன். "சிறு குரலில் கூறினாள் தேஜா. 


"நல்லா நெனச்ச... டேய் போங்கடா உன் தங்கச்சியை கூட்டிட்டு ஓடினவன் வருஷா வருஷம் ஊருக்குள்ள வந்துட்டு போறானாம் அதைப் பார்த்துட்டு சும்மா தானே இருந்தீக. இப்ப என்ன கொடுக்கு மொளைச்சவனாட்டம் எங்கிட்ட ஆடுற... அடியேய் சுந்தரேசன் மவனே ஒனக்கு இருக்குடி ஒரு நாளைக்கு" என்று அருண் திட்ட

யுகாதித்தன், "இத வந்ததும் சொல்றதுக்கு என்னடா? "என்று அருணைக் கடிந்து கொள்ள

"எங்கடா சொல்ல விட்டியான் செக்கு மாடு சுத்துறாப்ள என்னைய சுத்துப் போடுறான். பேசி பிரயோசனம் இல்லைனு ஒக்காந்துட்டேன்" என்றான் சலிப்பாக. 

சுதாகரன், "அப்போ அது நீயில்லன்றியா... ஏன்டா சொந்தக்காரனா இருந்துகிட்டு நம்மூட்டு புள்ளையை ஓட வச்சிருக்க, ஒன்னைய கொஞ்ச சொல்றியா?,ஒன்னைய மிதிச்சா எல்லாஞ்செரியாப்போவும்" என்று முறைக்க, "
நல்லா இருக்குடா உன் ஞாயக்கழுத" என்றவன், "ஏன்மா நீ எதுவுமே அங்கே சொல்லலையா? "என்றான். 

"இல்லை அன்னைக்கே அடிச்சுட்டாங்க மாமா சித்தப்பா பெரியப்பா எல்லாம் "என்றாள் மெதுவாக. 

"ஏன் தொணைக்குப் போனவனுக்குத் தெரியாதோ நடந்தது என்னான்டு? "என்று அதற்கும் சீறினான் சுதாகரன். 


"ஏ லந்தா... இந்தா நிக்குறாள்ள உந்தொங்கச்சி கேளு யாரு கூட போனன்னு கேளு" என்றான் கடுப்பாக

தேஜா அங்கிருந்து செல்ல முற்பட 

"சொல்லிட்டுப் போத்தா. இங்கன எவ்வளவு பெரச்சனை நடக்குது ஒம்பாட்டுக்குப் போற?"என்று அருணின் தந்தை சீறினார் அவளிடம். 

"பெரியப்பா பொம்பளைப்புள்ளைய நடுவீதியில கேள்வி கேட்குறீக என்ன இருந்தாலும் எல்லாம் சொந்தக்காரங்க இப்புடி மானத்தை கெடுக்காதீங்க, வாங்க ஊருக்குள்ளார போவோம்" என்று யுகாதித்தன் சமாதானம் செய்ய

"அ(த்)த அவேன் நெனைச்சானாய்யா...எம்மவேன் இருந்துருந்து ஊருக்குள்ள ஏழு வருஷங்கழிச்சு வாரியான் இப்ப போய் என்ன ஏழ்ரைய கூட்டுதான் பாரு."என்று அவர் சற்று தணிந்த குரலில் பேச

"ப்பா விடுப்பா. இவனுக்கு புரிஞ்சுட்டாலும்...திருவிழா பாக்கத்தான வந்தோம் பாத்துப்போட்டு ஊரைப் பாத்து போவோம்" என்று நகர்ந்த அருண் பிரசாத்தின் கையைப் பிடித்துக் கொண்டார் பத்மநாபன். 

"எய்யா நடந்த எதுவும் தெள்ளத் தெளிவா எங்களுக்கும் தெரியாது. நாங்களுமே அந்த சங்கதிக்கு அப்பறம் இங்க போக்குவரத்து இல்லை. ஏதோ பெரிய கெழவி எங்களை எல்லாம் பாக்கணுமின்டு சொல்லவும் ஓடி வந்தோம். வந்த எடத்துல சலம்பலு வேணாம், பொண்ணைப் பெத்துட்டேன். இந்தமானைக்காவது எல்லாஞ்செரியாகி வருஷந்தவறாம ஊருக்குள்ள வந்து போவணும் நாம, பகையும் வேணா பழியும் வேணாமின்னு நெனைக்கிதேன். ஒண்ணுமண்ணா போயிருவோம்யா" என்றார் சமாதானமாக. 

அவர் கைப்பிடித்து பேசியதில் அருணுக்கு ஒரு மாதிரியாகி விட தன் தந்தையைப் பார்த்தான். 

அவர் என்ன நினைத்தாரோ, "செரித்தான் விடுங்க மச்சான் வாங்க போவோம். ஏதோ சின்னஞ்சிறுசுக அறியாம பண்ணிடுச்சுக" என்று சமாதானம் ஆனவர் தன் சொந்தங்களையும் திரட்டி கொண்டு பெரிய வீடு நோக்கிச் செல்ல 

சுதாகரன், "அப்போ இத்தனை வருஷம் நாங்க பட்ட அவமானம் எல்லா காத்தோட போச்சு அப்படித்தான? "என்று எகிறினான் மீண்டும். 

"டேய் உசுரை வாங்காதடா "என்று திட்டிய யுகாதித்தன், "இதுக்கு பேசணுமின்னா நீ உன் தங்கச்சியை தான் பேசணும்" என்று போகிற போக்கில் தேஜாவை மாட்டி விட அவளோ ஒரு திக்கில் திகைத்து வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள். 

அங்கே அவளைக் காதலித்தவன் தன் மனைவி பிள்ளைகள் சகிதம் வந்து கொண்டிருந்தான். 

...... தொடரும்.