Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நட்சத்திராவின் மித்ரன் - 2

பாகம் 2  

நிறைய நாட்களாக ஆசை ஆசையாக காத்திருந்த அந்த நாளும் வந்துவிட்டது.

பல நாட்களாக யோசித்து…

பல முறை அணிந்து கண்ணாடி முன் நின்று பார்த்து…

மனதுக்குள் ஆயிரம் கனவுகளை சுமந்து வைத்திருந்த அந்த நீல நிற உடையை கவனமாக எடுத்தாள் நட்சத்திரா.

குளித்து முடித்து அதை அணிந்தவள்…

மெதுவாக தலைமுடியை உலர்த்தி ஒழுங்குபடுத்திக் கொண்டாள்.

அதன்பிறகு சிறிய வெள்ளை நிற தோடும்…

அதற்கு பொருத்தமான மெலிதான கழுத்தணியும் அணிந்துகொண்டாள்.

அவ்வளவுதான்.

அதற்கு மேல் எந்த அலங்காரமும் அவளுக்கு தேவைப்படவில்லை.

ஏனென்றால்…

அந்த உடையிலேயே ஒரு தேவதை போல இருந்தாள் நட்சத்திரா.

இல்லை…

உண்மையான இளவரசி போல.

அவளை பார்ப்பவர்கள் கண்களை திருப்ப முடியாத அளவுக்கு அவ்வளவு அழகாக இருந்தாள்.

கண்ணாடி முன் நின்று தன்னையே பார்த்தவளுக்கு கூட ஒரு நொடி தன்னையே அடையாளம் தெரியவில்லை.

மெதுவாக இதழ்களில் சிரிப்பு மலர்ந்தது.

இன்று…

ஒருவேளை மித்ரன் தன்னை கவனிப்பானோ என்ற சிறிய நம்பிக்கை மனதுக்குள் எட்டிப்பார்த்தது.

அதை உடனே அடக்கிக்கொண்டவள்,

“பைத்தியம் மாதிரி யோசிக்காத நட்சு…”

என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டாள்.

அனைத்து அலங்கார வேலைகளையும் முடித்துவிட்டு கைப்பையை எடுத்துக்கொண்டவள்,

“அம்மா… நான் கிளம்புறேன்மா…”

என்று குரல் கொடுத்தபடியே வாசலை நோக்கி நடந்தாள்.

ஆனால்…

அவள் வெளியே செல்ல இருந்த அந்த நொடியிலேயே…

வாசலை மறித்தபடி இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு நின்றிருந்தான் அர்ஜுன்.

நட்சத்திராவின் மூத்த அண்ணன்.

அவனை பார்த்ததும்…

நட்சத்திராவின் முகத்தில் இருந்த சந்தோஷம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.

ஏனென்றால்…

அர்ஜுன் இப்படி வழியை மறித்து நின்றால்…

அது சாதாரண விஷயத்திற்காக இருக்காது.

“எங்க கிளம்பிட்டிருக்க மேடம்?”

என்று அவன் புருவத்தை உயர்த்தி கேட்டதும்…

நட்சத்திராவின் இதயம் ஒரு துடிப்பை தவறவிட்டது.

“என்ன டிரஸ் இது?”

என்று அர்ஜுனின் குரல் சற்று உயர்ந்தது.

“இப்படி ஒரு டிரஸ் போட்டுட்டு வெளிய போறியா?”

நட்சத்திராவின் முகம் உடனே சுருங்கிப் போனது.

“அண்ணா… ப்ளீஸ் அண்ணா… இன்னைக்கு காலேஜ்ல ஃபேர்வெல். தயவு செஞ்சு போக விடு…”

என்று கெஞ்சலாக கூறினாள்.

“என்னால முடியாது. இந்த டிரஸ் போட்டுட்டு காலேஜுக்கு போறதெல்லாம் நடக்காது. போய் ஒழுங்கா நல்ல ஒரு டிரஸ் எடுத்து போட்டுட்டு வா.”

“ஏன்? இந்த டிரஸ்க்கு என்ன குறைச்சல்?”

“எனக்கு பிடிக்கல.”

“அண்ணா… ப்ளீஸ்… ஒரே ஒரு நாள் மட்டும்…”

அவளது கெஞ்சல் எதுவுமே அவன் காதில் விழுந்த மாதிரி தெரியவில்லை.

“இந்த அம்மா எங்க போனாங்க? உன் இஷ்டத்துக்கு நீ பாட்டுக்கு ஆடிட்டு இருக்க…”

என்று வீட்டுக்குள் பார்த்து சத்தமாக கத்தினான்.

“அம்மா! இவளை என்னன்னு கேக்க மாட்டீங்களா?”

அந்த சத்தம் கேட்டு சமையலறையில் இருந்த மல்லிகா வெளியே வந்தார்.

“என்னடா இப்போ பஞ்சாயத்து?”

“அம்மா… இது என்ன டிரஸ்? இத போட்டுட்டு காலேஜ்க்கு போறேன்னு சொல்றா. நீங்களும் எதுவும் கேட்காம இருக்கீங்க.”

மல்லிகா ஒரு நொடி மகளை பார்த்தார்.

பிறகு மகனை பார்த்தார்.

“சரி விடுடா. அவளுக்கு ஏதோ பிடிச்சிருக்கு. போட்டுட்டு ஒரு நாள் போறேன்னு சொல்றா இல்ல…”

“அம்மா…”

என்று அர்ஜுன் மீண்டும் ஏதோ சொல்ல வர,

இதுவரை பொறுமையாக நின்று கொண்டிருந்த நட்சத்திராவுக்கு உண்மையாகவே கோபம் வந்துவிட்டது.

“இப்போ உனக்கு என்ன பிரச்சனை?”

என்று நேராக அண்ணனை பார்த்துக் கேட்டாள்.

அவளது குரலில் இருந்த உறுதியை பார்த்து அர்ஜுனே ஒரு நொடி அமைதியானான்.

“நான் அம்மா, அப்பா ரெண்டு பேர்கிட்டயும் பர்மிஷன் வாங்கிட்டேன். நான் எந்த டிரஸ் போட்டு போனா உனக்கு என்ன?”

“நட்சு…”

என்று மல்லிகா எச்சரிக்கையாக அழைத்தார்.

ஆனால் அந்த நேரத்தில் அவள் எதையும் கேட்கும் நிலையில் இல்லை.

காலையிலிருந்து ஆசையாக தயாராகி…

எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடி இந்த உடையை அணிய அனுமதி வாங்கியிருந்தாள்.

இப்போது மீண்டும் யாராவது அதை மாற்றச் சொன்னால் எப்படி அமைதியாக இருப்பாள்?

“அம்மா… நான் கிளம்புறேன்.”

என்று சொல்லிவிட்டு தன்னுடைய கைப்பையை தோளில் மாட்டிக்கொண்டாள்.

“குழந்தைங்க வந்தாங்கன்னா சாயந்திரம் பார்த்துக்கோங்க…”

என்று அவசரமாக கூறிவிட்டு கோபத்தோடு வாசலை கடந்தாள்.

“நட்சு…”

என்று மல்லிகா அழைத்தும் அவள் திரும்பிப் பார்க்கவில்லை.

அவள் வெளியேறியதும்…

“இப்போ சந்தோஷமா?”

என்று மல்லிகா மகனை முறைத்தார்.

அர்ஜுனோ…

தங்கையின் பின்னால் சென்ற பார்வையை மீட்டுக் கொள்ள முடியாமல் அப்படியே நின்றிருந்தான்.

அவளை கஷ்டப்படுத்த வேண்டும் என்பது அவன் நோக்கம் இல்லை.

ஆனால்…

அவள் மீது அவனுக்கு இருந்த அக்கறை சில நேரங்களில் கோபமாகவே வெளிப்பட்டு விடும்.

கோபமாக வீட்டை விட்டு வெளியே வந்திருந்தாலும்…

கொஞ்ச தூரம் நடந்த பிறகு அர்ஜுனின் மீது இருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.

“எப்ப பார்த்தாலும் இதே வேலை…”

என்று தனக்குத்தானே முணுமுணுத்துக்கொண்டு நடந்தாள்.

ஆனால் மனதின் ஒரு ஓரத்தில்…

அவன் தன்னைப் பற்றிய அக்கறையில்தான் அப்படி பேசினான் என்பதும் அவளுக்கு புரியாமல் இல்லை.

இருந்தாலும்…

இன்று மட்டும் அவன் சண்டை போடாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

புலம்பிக்கொண்டே பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தவள்…

அங்கே ஏற்கனவே நின்று கொண்டிருந்த யாழினியையும் ஹரிணியையும் பார்த்ததும் முகம் மலர்ந்தது.

ஆனால்…

அவர்கள் இருவரின் நிலைமையோ வேறு.

நட்சத்திராவை மேலிருந்து கீழ்வரை பார்த்தவர்கள் அப்படியே வாயடைத்து நின்றுவிட்டார்கள்.

“என்னடி இப்படி பார்க்கிறீங்க?”

என்று புருவத்தை சுருக்கினாள் நட்சத்திரா.

“யாழி… நான் கனவு எதுவும் காணலையே?”

என்று ஹரிணி அருகில் இருந்தவளிடம் கேட்டாள்.

“இல்ல…”

“அப்போ நம்ம முன்னாடி நிற்கிறது நம்ம நட்சத்திராதானா?”

என்று மீண்டும் கேட்டவள்,

“அடப்பாவி… என்னடி அழகா இருக்க!”

என்று கத்திவிட்டாள்.

“ஹரிணி…”

என்று வெட்கத்தில் முகம் சிவந்தது நட்சத்திராவுக்கு.

“நிஜமாவே சொல்றேன் டி… இன்னைக்கு காலேஜ்ல பாதி பேருக்கு மாரடைப்பு வரப்போகுது.”

“முதல்ல இவளோட மித்ரனுக்கு வரட்டும்…”

என்று யாழினி அமைதியாக சொல்ல,

நட்சத்திராவின் கன்னங்கள் இன்னும் சிவந்துவிட்டது.

“ஏய்…”

என்று அவர்களை அடிக்க ஓட,

மூவரும் சிரித்துக்கொண்டே கல்லூரியை நோக்கி நடந்தார்கள்.

பேச்சு…

சிரிப்பு…

கேலி…

என்று நேரம் போனதே தெரியவில்லை.

சில நிமிடங்களில்…

அவர்களுடைய கல்லூரி வளாகம் கண்களில் பட்டது.

வாசலை கடந்த உடனே…

நட்சத்திராவின் இதயம் வழக்கத்தை விட வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

காரணம்…

அவள் கண்கள் தானாகவே ஒருவரை தேட ஆரம்பித்துவிட்டது.

மித்ரன்.

அந்த ஒரு பெயர் போதும்…

அவளுக்குள் ஏதோ மாற்றம் நிகழ.

சாதாரணமாக இருந்த இதயம் துடிக்க ஆரம்பிக்கும்.

அமைதியாக இருந்த மனம் பதட்டப்பட ஆரம்பிக்கும்.

அவனை பார்க்காத ஒரு நாள் கூட முழுமையற்றதாக தோன்றும்.

அவளுடைய கண்கள் கல்லூரி முழுவதும் அவனை தேடி அலைந்துகொண்டிருந்தது.

ஆனால்…

அவன் எங்கும் தெரியவில்லை.

அந்த நேரத்தில் திடீரென்று கல்லூரி வாசல் அருகே ஒரே ஆரவாரம் எழுந்தது.

“டேய் மித்ரன் வந்துட்டான் டா!”

என்று யாரோ கத்த,

தன்னையும் அறியாமல் அந்த திசையை நோக்கி திரும்பினாள் நட்சத்திரா.

அடுத்த நொடி…

அவளுடைய இதயம் ஒரு துடிப்பை தவறவிட்டது.

எப்போதும் போல அவனை சுற்றி ஒரு பெரிய கூட்டம்.

அதற்கு நடுவில் மித்ரன்.

அவன் அருகில் அன்றைய காதலி.

அதை பார்த்ததும் நட்சத்திராவின் மனதில் ஒரு சிறிய வலி எழுந்தது.

ஆனால்…

இது அவளுக்கு புதிதல்ல.

கல்லூரியில் சேர்ந்த முதல் வருடத்திலிருந்தே இதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள்.

மித்ரனுக்கு காதலிகள் மாறலாம்.

ஆனால்…

நட்சத்திராவின் காதல் மட்டும் மாறவே இல்லை.

“பரவாயில்லை…”

என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

“எப்படியாவது இன்னைக்கு அவன் என்னை பார்க்கணும்…”

அதுவே இப்போது அவளுடைய ஒரே குறிக்கோள்.

அதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே இருந்தாள்.

நேரம் மெதுவாக நகர்ந்தது.

புகைப்படங்கள்…
குளிர்பானங்கள்…
நண்பர்களோட அரட்டை…
ஆசிரியர்களோட உரையாடல்…

என்று கல்லூரி முழுக்க கொண்டாட்டமாக இருந்தது.

ஆனால் நட்சத்திராவின் கவனம் மட்டும் ஒரே இடத்தில்.

மித்ரன்.

ஒரு கட்டத்தில் அவனை சுற்றியிருந்த கூட்டம் கொஞ்சம் குறைந்தது.

அதை பார்த்ததும் அவளது இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

“இதுதான் சரியான நேரம்…”

என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவள் மெதுவாக அவனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

காலை முழுக்க ஆசையாக அணிந்திருந்த உயரமான காலணி வேறு சரியாக ஒத்துழைக்கவில்லை.

கீழே விழுந்துவிடக்கூடாது என்று உடையை சற்று தூக்கிப்பிடித்தபடி கவனமாக நடந்தாள்.

அந்த நேரம் பார்த்து...

“நட்சத்திரா...”

என்று ஒரு குரல்.

கண்களை மூடிக்கொண்டாள் அவள்.

அந்த குரலுக்கு சொந்தக்காரன் யார் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.

நடேஷ்.

கடந்த மூன்று வருடங்களாக அவளை ஒருதலையாக காதலித்துக் கொண்டிருப்பவன்.

எத்தனை முறை மறுத்தாலும்...

அவன் மட்டும் விடவில்லை.

“ஹாய்...”

என்று சிரித்தபடி அவள் முன் வந்து நின்றான்.

“இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க... வீட்டுக்கு போனதும் உங்க அம்மாவை சுத்தி போட சொல்லு...”

என்று சொல்லிக்கொண்டே பின்னால் மறைத்து வைத்திருந்த பூங்கொத்தை அவளிடம் நீட்டினான்.

“நடேஷ்...”

என்று சோர்வாக அழைத்தாள் நட்சத்திரா.

“இன்னைக்காச்சும் நீ என்னை ஏத்துக்குவியா?”

அவளுக்கு எப்படி பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

“நான் உன்கிட்ட நிறைய தடவை சொல்லியிருக்கேன்... தயவு செஞ்சு என்னை விட்டுடு...”

“ஏன்?”

“என் மனசுல ஏற்கனவே ஒருத்தர் இருக்காங்க.”

அதை கேட்டவன் சிரித்தான்.

“இல்லையே... இந்த மூணு வருஷமா நான் உன் பின்னாடி தான் சுத்திக்கிட்டு இருக்கேன். அப்படி யார்கூட நீ பேசினத கூட நான் பார்த்ததில்லையே.”

“நடேஷ்... நான் சொல்றது புரிஞ்சுக்க...”

“நீ என்ன அவாய்ட் பண்றதுக்காக அப்படி சொல்றியா?”

“நம்ம ரெண்டு பேருக்கும் செட்டாகாது. என்னை விட்டுடு ப்ளீஸ்.”

என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர முயன்றாள்.

அவளுடைய பார்வை மீண்டும் மித்ரனை தேடிக்கொண்டிருந்தது.

அவனை நோக்கி நடந்தவள்...

தனக்கே தெரியாமல் பின்னால் வந்துகொண்டிருந்த நடேஷை கவனிக்கவில்லை.

அடுத்த நொடி...

அவனுடைய கால் தெரியாமல் நட்சத்திராவின் உடையின் நுனியில் மிதித்தது.

“அய்யோ...!”

என்று அலறக்கூட நேரம் இல்லாமல்...

சட்டென்று முன்னால் சரிந்து விழுந்தாள்.

ஒரே நொடியில்...

சுற்றியிருந்த சத்தம் நின்றது.

அடுத்த நொடியில்...

சிலரின் சிரிப்பு.
சிலரின் கிசுகிசுப்பு.
சிலரின் பரிதாப பார்வை.

நட்சத்திராவோ...

தரையில் விழுந்த நிலையிலேயே அப்படியே உறைந்து போனாள்.

அவமானம்.
வேதனை.
கண்ணீர்.

எல்லாமே ஒரே நேரத்தில் தொண்டையை அடைத்தது.

காதலோடு அவன் தன்னை பார்க்க வேண்டும் என்று நினைத்தாள்.

ஆனால்...

இப்படி எல்லாருக்கும் முன்னாடி விழுந்து அசிங்கப்பட்ட நிலையில் அவன் பார்க்க வேண்டும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை.

மெதுவாக தலையை நிமிர்ந்தாள்.

அந்த நேரத்தில்...

அவள்மேல் விழுந்திருந்த ஒரு பார்வையை உணர்ந்தாள்.

மித்ரன்.

முதல் முறையாக...

மித்ரன் அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.

மூன்று வருடங்களாக...

அவள் காத்திருந்த பார்வை அது.

ஆனால்...

அவள் கனவு கண்டது போல அல்ல.

காதலோடு அல்ல.

புன்னகையோடு அல்ல.

கண்ணீரும் அவமானமும் நிறைந்த அந்த நொடியில்தான்...

மித்ரன் முதல் முறையாக நட்சத்திராவை பார்த்தான்.

தொடரும்...💕

ஹாய் பிரண்ட்ஸ் 💗

என்னோட ஸ்டோரி எப்படி இருக்குன்னு படிச்சுட்டு உங்களோட கருத்துகளை கண்டிப்பா சொல்லுங்க 😊
உங்களோட ஒவ்வொரு கமெண்டும் எனக்கு ரொம்ப பெரிய மோட்டிவேஷன் ❤️

கதை பிடிச்சிருந்தா லைக், கமெண்ட், ஷேர் பண்ண மறக்காதீங்க 🙏🙏

உங்களோட கமெண்ட்ஸ்க்காக ஆவலோட காத்துகிட்டு இருக்கேன் 💕🤗