"டேய் சவுண்டையாவது குறையேண்டா. ஏன் தான் இப்படி பண்ற?" அவள் அவனுடைய அறையின் கதவைத் திறந்து கத்தினாள். "மணி நைட் 12 ஆக போகுது... நீ தூங்கலனா வேற யாரும் தூங்க கூடாதா? எனக்கு நாளைக்கு பிராக்டிகல் எக்ஸாம் இருக்குடா!" செவிடன் காதில் ஊதிய சங்கைப் போல அவளுடைய சத்தம் அவன் காதில் விழவில்லை.
அவனுடைய அறையினுள் சென்று தொலைக்காட்சியில் சத்தத்தைக் குறைத்து வைத்தாள். அருகில் அவன் வைத்திருந்த ரிமோட்டில் அவன் பொத்தானை அழுத்தி அதை உயர்த்திக் கொண்டான்.
இருவரும் நான்கு ஐந்து முறைகள் இவ்வாறாக செய்த பின், அவள் கோபத்தில் தொலைக்காட்சியை அணைத்துவிட, அவனுக்கோ கோபம் மேலோங்கி வந்து விட்டது.
"ஏய் உனக்கு அவ்வளவு தான் மரியாதை பாத்துக்கோ... தூங்கணும்னா போய் தூங்கு! ஏன் என்ன டிஸ்டர்ப் பண்ற?" அவன் எழுந்து அவள் அருகில் கோபத்தில் வந்தான்.
"நீ வைக்கிற சவுண்ட் என் ரூம் வரைக்கும் கேட்குதுடா... சாதாரண மூவியா இருந்தா பரவாயில்லை. பேய் படமா பாக்குற. அதுவும் நைட்... சத்தம் கேட்டு நடுவுல எழுந்து உட்கார்ந்துரேண்டா. எனக்கு பயமா வேற இருக்கு என் ரூம்ல தனியா இருக்க. அண்ணா... ப்ளீஸ்! சத்தத்தை மட்டும் கம்மியா வச்சுக்கோ." என்றாள், கடைசி ஆயுதமாக என்றும் கூறாத 'அண்ணா' என்ற சொல்லைக் கூறி.
"சரி போ... அண்ணான்னு கூப்பிட்டதால உன்ன சும்மா விடுறேன். நான் கேட்கிறத செஞ்சா இன்னைக்கு சவுண்டு இல்லாம பார்க்கிறேன்... உனக்காக." என்றான் ஏளனமாக சிரித்தபடி.
கைகளைக் கட்டிக்கொண்டு, அவனை முறைத்துப் பார்த்தபடி நின்றாள் அவள். மீண்டும் பழைய இடத்தில் போய் அமர்ந்தவன், அவள் எதுவும் பேசாமல் போக, அவளை நிமிர்ந்து பார்த்து, "இப்ப நான் என்ன செய்யணும் அண்ணான்னு கேட்கணும் புவனா," என்றான்.
கடுப்பில் காலை உதைத்துக் கொண்டவள், "சொல்லு... என்ன செய்யணும்?" என்றாள்.
"உம்முனு கேக்குறதுக்கு சும்மாவே இருக்கலாம். தேவையே இல்ல. ஓடிரு!" என்றவன் மீண்டும் சத்தத்தைக் கூட்டினான்.
தனக்குள் முனங்கியவள், "சரி, சாரி அண்ணா, சொல்லு என்ன செய்யணும்?" பொய்யாக சிரித்தபடி கேட்டாள்.
"ம்ம்... அப்படி கேளு! போயி மேகி பண்ணி எடுத்துட்டு வா. ரெண்டு பேக். கொஞ்சமா ஆனியன் போட்டு அதுல ரெண்டு முட்டைய அடிச்சு கலந்து மேகி நூடுல்ஸ் பண்ணிட்டு, மேல லைட்டா நெய்ய ஊத்தி வாசனையா எடுத்துட்டு வா பாப்போம்," என்றான் ராஜதோரணையில்.
அவளோ கண்களை உருட்டிக் கொண்டு, "ஆறு மணி நேரம் நாளைக்கு நான் லேப்ல நிக்கணும். இவனுக்கு இப்ப நூடுல்ஸ் கேக்குது," முனங்கியபடியே அறையின் வெளியே சென்றாள்.
அவனும் ஆனந்தமாக தொலைக்காட்சியைப் பார்க்கத் துவங்கினான். 'ரிங்' என்ற ஆங்கிலப் படம் ஓடிக் கொண்டிருந்தது. "பழைய படம் ரொம்ப பயமா இருக்கும்னு சொன்னாங்க... எங்கடா?" எனத் தனக்குத்தானே பேசிக் கொண்டான்.
அப்போது படத்தில் வந்த காட்சியில் ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டி திடீரென அணைந்து, அதில் கிணறு ஒன்று தோன்றியது. பின் அதில் வரும் பேய் தொலைக்காட்சியில் இருந்து தவழ்ந்து ஈரத்துடன் தொலைக்காட்சி பெட்டிக்கு வெளியே வரும். படத்தில் அந்த அறையில் இருப்பவர்கள் பயந்து கதறுவார்கள். கண்ணிமைக்காமல் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அதில் வரும் பேய் தனது முடியை முன்னால் போட்டு முகத்தை மறைத்திருக்கும். முகத்தை நிமிர்த்தி காண்பிக்கப் போகும் தருவாயில்... அவனுடைய தொலைக்காட்சி தானாக அணைந்து விட்டது. அவன் திருக்கிட்டு போனான். நெஞ்சம் சிறிது பதைத்து விட்டது. அதையும் உணர்ந்தான். உடலெங்கும் மயிர் கூச்சம் தோன்றியது.
"பரவால்ல நம்மளையும் பயப்பட வச்சிட்டானுங்க..." தனக்குள்ளயே முணங்கி கொண்டான்.
தொலைக்காட்சி அணைந்து விட்டதா? இல்லை படத்தில் இந்த இருட்டும் ஒரு பகுதியா என்பது அவனுக்கு சிறிது நேரம் வரை விளங்கவில்லை. பின்பு தான் தொலைக்காட்சி அணைந்து விட்டதென புரிந்து கொண்டான். என்ன பிரச்சனை என அருகில் சென்று பார்க்க முனைந்தவன், தொலைக்காட்சியின் திரையில் ஏதோ ஒரு அசைவு தெரிய அதை கூர்ந்து கவனிக்கலானான்.
முதலில் ஏதோ அசைந்தது என்று தெரிந்ததே ஒழிய என்ன அசைந்தன தெரியவில்லை. ஏதேனும் பூச்சியாக இருக்க வேண்டும் என நினைத்தவன், தொலைக்காட்சியை சரி செய்ய முயன்றான். முதலில் சிறு புள்ளியாய்த் தெரிந்த அந்த நிழல் பெரிதாகிக் கொண்டு வருவதை உணர்ந்தான். அதிலிருந்த கவனத்தில் தொலைக்காட்சியின் அருகிலேயே நின்று விட்டான். மெல்ல அசைந்த அந்த நிழலிலை அவனும் ஆர்வமாக உற்று நோக்கினான். அருகில் வர வர அது ஒரு பெண் எனத் தெரிந்தது. படத்தின் அடுத்த கட்டமாக இருக்குமோ என்று நினைத்தால், அவள் வெள்ளைப் பட்டுப் புடவை அணிந்திருந்தாள். நகைகள் ஜொலித்தன. அவன் பார்த்துக் கொண்டிருந்தது ஆங்கிலப் படம். ஆங்கில படத்தில் எப்படி இத்தகைய நடிகை? படத்தில் பார்த்தது போல அவள் திரையின் மிக அருகில் வந்து, வெளியேயும் காலை வைத்தாள். அவன் சற்று பின்னால் நகர்ந்தான்.
அவள் முழுமையாக தொலைக்காட்சி பெட்டியை விட்டு வெளியே வந்து நின்றாள். அவன் அருகில் ஒய்யாரமாக இடை நெளிந்து நின்றிருந்தாள். அவன் திகைத்தான். கனவு என்ற முடிவிற்கே வந்து விட்டான். அவள் அவனுக்கு அழகாகத் தெரிந்தாள்.
'பாதிமுகம் மூடி இருக்கப்பவே இவ்வளவு அழகா இருக்காளே... ஃபுல்லா காமிக்க சொல்வோமா? கனவிலாவது அழகான பொண்ணு கிட்ட பேசுவோம்!' என்று எண்ணம் தோன்ற அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டு அவன் அருகே எந்த அசைவும் இல்லாமல் அமைதியாக நின்றவளிடம், "யார் நீங்க? எதுக்கு இந்த முகத்திரை?" என்றான்.
அவள் கண்கள் சிரிப்பதைக் கண்டான். அவளோ, "நான் அழகா இருக்கேனா?" என்ற கேள்வியை வீசினாள்.
****
A/n
எழுத்து உலகத்தில் உலாவி பல வருடங்கள் ஆகிவிட்டன. குறை இருந்தால் சுட்டி காமிக்கவும்... படித்தமைக்கு நன்றி!