18. அசாதரணமான எதிரிமோகன் அன்று முழுவதும் அவளுடன் பேசிய நிமிடங்களையே நினைத்தபடி அந்தச் சாலையில் நடந்து கொண்டிருந்தான். மாலை 7 மணி தான் என்ற போதிலும் அங்கு ஏனோ அளவுக்கு அதிகமான இருட்டு இருந்தது. நகரின் தெருவிளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அதனால் அது முழு இருளாக இல்லாமல் ஒரு முக்கால்வாசி இருளாக இருந்தது.அன்று ராகுல் அன்க்கிள் பேசியதை நினைத்துப் பார்த்துக் கொண்டான்."வஞ்சம் இருக்கிற மனதில் எப்போதும் கவித்துவம் இருக்காது"அவன் தன் மனதைத் தோண்டிப் பார்த்தான். மாயாவைப் பார்க்கிற ஒவ்வொரு நொடியும் அவன் மனதில் எப்போதும் கவிதை கொப்பளித்துக் கொண்டிருந்தது. ஆனால், அவனால் எழுதத் தான் முடியவில்லை. அப்போது அவனுக்குத் தோன்றியது, 'காதல் இருக்கிற மனதில் எப்போதும் கவிதை மட்டுமே இருக்கும். அது மட்டுமல்ல காதலிக்கிற அனைவருமே கவிதை எழுதத் தெரியாத ஒரு கவிஞன் தான்.'இதையெல்லாம் நினைத்துக் கொண்டு அவன் நடந்துகொண்டிருந்த போது அவனுக்குள் ஏதோ ஒரு மகிழ்ச்சி ஊற்று ஊற்றத் தொடங்கியது.