Wedding Crashers books and stories free download online pdf in Tamil

கல்யாண கலாட்டா (Wedding Crashers

டிஸ்க்ளைமர் – Sarcasm, Comedy & Satire
Sarcasm, comedy மற்றும் satire கலந்த இந்தக் கதைகளை எழுதும்போது P. G. Wodehouse, சுஜாதா, மதன், தேவன், கிரேஸி மோகன் உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் படைப்புகளும், அவர்களுடைய நகைச்சுவை அணுகுமுறைகளும் எனக்கு inspiration-ஆக இருந்திருக்கின்றன.
அந்தப் படைப்புகள் தந்த ஊக்கத்துடன், என்னுடைய சொந்தக் கற்பனையையும், நம்மைச் சுற்றி நான் கவனிக்கும் மனிதர்களையும், அன்றாட நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு சில சிறுகதைகளை முயற்சி செய்து பார்க்கிறேன்.
இந்தக் கதைகள் அனைத்தும் ஒரு சுவாரஸ்யமான, நகைச்சுவையான வாசிப்பு அனுபவத்திற்காக மட்டுமே. இதில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள், பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனையானவை. எந்தவொரு உண்மையான நபரையோ, நிறுவனத்தையோ அல்லது அமைப்பையோ குறிப்பிடுவது அல்ல.
கல்யாண கலாட்டா (Wedding Crashers)
அத்தியாயம் 1 – இலவச மதிய உணவுத் திட்டம்
சென்னையில் ஒரு சனிக்கிழமை மாலை.
மயிலாப்பூரில் இருந்த ஒரு கல்யாண மண்டபம் வழக்கமான கல்யாணக் களைகட்டலுடன் இருந்தது. வாசலில் வாழைமரம், மாவிலைத் தோரணம், கோலம். உள்ளே நாதஸ்வரமும் தவில் சத்தமும். மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சிக்காக உறவினர்கள் எல்லோரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.
அந்தக் கூட்டத்துக்குள் மிகவும் இயல்பாக நுழைந்தார்கள் ரவியும் அஷ்வினும்.
இருவரும் சென்னையில் வேலை பார்க்கும் இளைஞர்கள். தனித்தனியாக வசிப்பவர்கள். ரவி finance துறையில் வேலை செய்பவன். யாரிடம் வேண்டுமானாலும் எளிதாகப் பேசிவிடுவான். ஒரு சாதாரண அறிமுகத்தைக்கூட business opportunity ஆக மாற்றிவிடும் திறமை அவனுக்கு இருந்தது.
அஷ்வின் IT துறையில் வேலை செய்பவன். புத்தகம், இசை, பயணம் என்று கொஞ்சம் அமைதியான உலகம் அவனுடையது. ரவியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு அவ்வப்போது ஒரு dry comment அடிப்பது அவனுடைய வழக்கம்.
இருவருக்கும் ஒரு பொதுவான விருப்பம் இருந்தது. நல்ல சாப்பாடு!
அதற்காகவே அவர்கள் கல்யாணம், ரிசப்ஷன், நிச்சயதார்த்தம் என்று அவ்வப்போது ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்குச் செல்வார்கள். வாராவாரம் அல்ல. மாதம் ஒன்று அல்லது இரண்டு நிகழ்ச்சிகள் கிடைத்தால் போதும்.
டேய், இது யாரு கல்யாணம்?என்று அஷ்வின் கேட்டான்.
மாப்பிள்ளை வீட்டுக்குத் தெரிஞ்சவங்க.
உனக்குத் தெரியுமா?
அதான் சொல்றேனே, மாப்பிள்ளை வீட்டுக்குத் தெரியும்.
அப்படின்னா உனக்குத் தெரியுமா, இல்ல உனக்குத் தெரிஞ்சவங்களுக்கு அவரைத் தெரியுமா?
நீ எப்பப் பார்த்தாலும் இப்படித்தான் கேள்வி கேட்பே!
இருவரும் சிரித்துக்கொண்டே உள்ளே சென்றார்கள்.
அங்கேதான் ஜானகி மாமியைச் சந்தித்தார்கள்.
மண்டபத்தின் ஒரு மூலையில் நின்றுகொண்டு, யார் யாருடன் பேசுகிறார்கள், யார் யாருக்கு என்ன உறவு என்று கவனித்துக்கொண்டிருந்தார் மாமி. அவருக்கு அந்த மண்டபத்தில் பல முகங்கள் பரிச்சயம்.
ரவி, அஷ்வின் இருவரையும் பார்த்ததும் புருவத்தை உயர்த்தினார்.
அடடா! நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன பண்றேள்?
ரவி உடனே சுதாரித்துக்கொண்டான்.
மாமி! நாங்க மாப்பிள்ளை வீட்டுக்குத் தெரிஞ்சவங்க.
அப்படியா? எந்தப் பக்கத்துச் சொந்தம்?
ரவி ஒரு நொடி தடுமாறினான்.
அது... மாப்பிள்ளை வீட்டுப் பக்கம்...
அதான் கேக்கறேன். எந்தப் பக்கம்? அப்பா வழியா, அம்மா வழியா?”
அஷ்வின் சிரிப்பை அடக்கிக்கொண்டான்.
மாமி, நாங்க கொஞ்சம் தூரத்து சொந்தம்.
அப்படியா? அந்தத் தூரம் எவ்வளவு? கூப்பிட்டா வரக்கூடிய தூரமா, இல்ல சாப்பாட்டுக்கு மட்டும் வரக்கூடிய தூரமா?
அஷ்வினால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
ரவி உடனே பேச்சை மாற்றினான்.
மாமி, நீங்க எப்படி இங்க?
எனக்குச் சொந்தக்காரங்க இல்லாத இடமே கிடையாதுப்பா!
அந்த ஒரு வரியில் மாமியின் குடும்ப வட்டம் முழுவதும் அடங்கிவிட்டது.
அவங்க அம்மா பக்கம், அப்பா பக்கம், ஆத்துக்காரர் பக்கம், எங்க ஆத்து மாமா பக்கம் என்று எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு உறவு இருக்கும். ஒரு கல்யாணத்துக்குப் போனால் அங்கே இன்னொரு உறவு; அந்த உறவு மூலமாக இன்னொரு குடும்பம். அப்படித்தான் மாமியின் அறிமுக வட்டம் விரிந்துகொண்டே போகும்.
சரி, நீங்க ரெண்டு பேரும் எந்த வீட்டுக்குத் தெரிஞ்சவங்கன்னு நான் அப்புறம் விசாரிச்சுக்கறேன். இப்போ போய் உட்காருங்க. சாப்பாடு நேரம் ஆகப்போகுது!
ரவி முகத்தில் வெற்றிப் புன்னகை.
பார்த்தியா அஷ்வின்? மாமி நம்மள ஏத்துக்கிட்டாங்க!
அவங்க ஏத்துக்கிட்டாங்களா, இல்ல சாப்பாட்டுக்கு அனுப்பிட்டாங்களா?
அந்த நேரத்தில் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் தொடங்கியது. மாப்பிள்ளைக்கு மாலை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள். நாதஸ்வரம் முழங்க, உறவினர்கள் கூட்டமாக வெளியே சென்றார்கள்.
அஷ்வின் அந்த நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தான். ரவியோ ஏற்கெனவே சாப்பாட்டு மேஜையை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான்.
டேய், முதல்ல சாப்பாடு. அப்புறம் கலாச்சாரம்.
உனக்கு எல்லாமே சாப்பாட்டுலதான் முடியும்.
அதுல என்ன தப்பு? வாழ்க்கையில சில விஷயங்கள் தெளிவா இருக்கணும்.
சாப்பாட்டு அறையில் இருவரும் நல்ல திருப்தியுடன் சாப்பிட்டார்கள். ரவி இனிப்பை இரண்டாவது முறை வாங்கும்போது அஷ்வின் அவனைப் பார்த்தான்.
இது உன்னோட networking-ஆ?
இல்ல. இது personal interest.
அந்த இரவு இருவரும் வீட்டுக்குத் திரும்பும்போது, அடுத்த நிகழ்ச்சிக்கான திட்டத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்குத் தெரியாது. அந்தக் கல்யாணத்தில் சந்தித்த ஜானகி மாமி அவர்களுடைய அடுத்தடுத்த சந்திப்புகளிலும் முக்கியமானவராக இருக்கப்போகிறார் என்று.
அத்தியாயம் 2 – மேடை ஏறாதீர்!
சில வாரங்களுக்குப் பிறகு, தி.நகரில் ஒரு பெரிய திருமண வரவேற்பு நிகழ்ச்சி.
இந்த முறை ரவியும் அஷ்வினும் கொஞ்சம் நன்றாக உடை அணிந்திருந்தார்கள். ரவிக்கு வழக்கம்போல ஒரு திட்டம் இருந்தது. நல்ல சாப்பாடு, கொஞ்சம் socialising, யாராவது புதிய அறிமுகம் கிடைத்தால் அதுவும் சரி.
உள்ளே நுழைந்ததும் அஷ்வின் சுற்றிப் பார்த்தான்.
டேய், இந்த முறை யாரு சொந்தம்?
இந்த முறை யாரையும் கேட்காதே. நேரா உள்ளே போ.
அதாவது இந்த முறை நமக்கே நம்ம சொந்தம் தெரியலையா?
இருவரும் சிரித்தார்கள்.
அந்த நேரத்தில் பின்னால் இருந்து ஒரு குரல்.
அடடா! மறுபடியுமா?
திரும்பிப் பார்த்தால் ஜானகி மாமி!
மாமி! நீங்களா?
நான் இல்லாம இந்த மாதிரி இடத்துல என்ன விசேஷம்? உங்க ரெண்டு பேரையும் பார்த்தா எனக்கு ஒரு சந்தேகம் வருது.
என்ன மாமி?
நீங்க உண்மையிலேயே இவ்வளவு பேருக்குத் தெரிஞ்சவங்களா? இல்ல சாப்பாடு நல்லா கிடைக்கிற இடத்தையெல்லாம் கண்டுபிடிச்சு வந்துடறீங்களா?
அஷ்வின் சிரித்தான்.
மாமி, அது ரெண்டுமே இருக்கலாம்.
அதான் எனக்கும் தோணுது!
அந்த நேரத்தில் ரவியின் பார்வை மேடைக்கு அருகில் நின்றிருந்த ஒரு பெண்ணின் மீது விழுந்தது. அழகாகவும், தன்னம்பிக்கையுடனும் பேசிக்கொண்டிருந்தாள். அவள்தான் தீபிகா.
மாமி அவளைப் பார்த்து ரவியிடம் சொன்னார்.
அவ தீபிகா. எங்க சொந்தத்துல ஒரு பொண்ணு. நல்லா படிச்சிருக்கா, வேலை பார்க்கிறா. கொஞ்சம் நேரடியா பேசுவா. பார்த்து பேசுங்கோ!
மாமி, நான் எல்லாரிடமும் மரியாதையாத்தான் பேசுவேன்.
அது உன் பேச்சுல தெரியலையே!
ரவி சிரித்துக்கொண்டே தீபிகாவிடம் சென்றான்.
ஹலோ, நான் ரவி.
ஹலோ.
நீங்க தீபிகாதானே? மாமி உங்களைப் பற்றிச் சொன்னாங்க.
அப்படியா? என்ன சொன்னாங்க?
நல்லா படிச்சிருக்கீங்க, வேலை பார்க்கிறீங்கன்னு.
அவ்வளவுதானா? நல்லா பேசுவேன்னு சொல்லலையா?
ரவி ஒரு நொடி சிரித்தான்.
அது நீங்க பேச ஆரம்பிச்ச பிறகுதான் தெரிஞ்சது.
தீபிகா சிரித்தாள்.
பேச்சு வேலை, அலுவலகம் என்று போய்க்கொண்டிருந்தது. ரவி தன் finance வேலை பற்றிச் சொன்னான். Loans, investments, insurance என்று பேச்சு வந்ததும் அவன் வழக்கமான உற்சாகத்துடன் விளக்க ஆரம்பித்தான்.
தீபிகா அவனை நிறுத்தினாள்.
ஒரு நிமிஷம். இது கல்யாண ரிசப்ஷனா, இல்ல financial awareness seminar-ஆ?
இல்ல, உங்களுக்கு useful-ஆ இருக்கும் என்று சொன்னேன்.
சரி. அப்படின்னா உங்க visiting card கொடுங்க. வீட்டுக்குப் போய் பார்த்துட்டு பேசறேன்.
நிச்சயமா!
ஆனா ஒரு condition.
என்ன?
அடுத்த தடவை பேசும்போது முதல்ல சாதாரணமா பேசணும். உடனே investment plan ஆரம்பிக்கக் கூடாது.
ரவி சிரித்தான்.
Deal!
அந்தப் பேச்சைத் தொலைவிலிருந்து கவனித்துக்கொண்டிருந்த மாமி, அஷ்வினிடம் வந்தார்.
என்னடா, உன் நண்பன் business ஆரம்பிச்சுட்டானா?
மாமி, அவன் எங்க போனாலும் business opportunity தேடுவான்.
அது சரி. அந்தப் பொண்ணு அவனைத் தேடுவாளா, இல்ல அவன் அவளைத் தேடுவானா பார்க்கலாம்!
அந்த இரவு ரவி வீட்டுக்குத் திரும்பியதும் தீபிகாவின் visiting card-ஐப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அஷ்வின் அவனைப் பார்த்து கேட்டான்.
என்னடா, card-ஐ இவ்வளவு ஆராய்ச்சி பண்ற?
அவளோட details பார்க்கறேன்.
அதாவது investment opportunity?
அது... இன்னும் முடிவு செய்யல.
அஷ்வின் சிரித்தான்.
உனக்கு அவளைத் தெரியுமா?
இப்போதான் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கேன்.
அவளுக்கு உன்னைத் தெரியுமா?
அதையும் அடுத்த meeting-ல தெரிஞ்சுக்கலாம்!
அத்தியாயம் 3 – ரவியின் சுயம்வரம்
சில நாட்களுக்குப் பிறகு தீபிகாவிடமிருந்து ரவிக்கு ஒரு message வந்தது.
அவளுடைய அப்பாவின் பிறந்தநாள். வீட்டில் சிறிய get-together. ரவியும் அஷ்வினும் வர வேண்டும் என்று அழைத்திருந்தாள்.
டேய், இது உண்மையான invitation. இந்த முறை நம்மள யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க, என்றான் ரவி.
அதான் பயமா இருக்கு. இப்போ நம்மளே அழைக்கிற அளவுக்கு வளர்ந்துட்டோமா?
இருவரும் குறிப்பிட்ட நாளில் தீபிகாவின் வீட்டுக்குச் சென்றார்கள்.
வீட்டில் அழகான கோலம், வாசலில் பூ அலங்காரம், உள்ளே குடும்பத்தினர் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். பெரிய கூட்டம் இல்லை. நெருக்கமான உறவினர்களும் நண்பர்களும் மட்டும்.
தீபிகா இருவரையும் வரவேற்றாள்.
வாங்க! நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்.
Happy birthday to uncle! என்று ரவி சொல்லி வாழ்த்தினான்.
தீபிகாவின் அப்பா ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி. ரவியின் வேலை பற்றிக் கேட்டதும் அவருக்கு ஆர்வம் வந்தது.
நீங்க finance-ல இருக்கீங்களா? நல்லது. இப்போ எல்லாருக்கும் investment பற்றி தெரிஞ்சிருக்கணும். ஆனா risk புரிஞ்சிருக்கணும்!
ரவி உடனே உற்சாகமானான்.
Exactly uncle! அதைத்தான் நான் எல்லாருக்கும் சொல்லுவேன்.
அப்பா சிரித்தார்.
சரி, நீங்க பேசறதை ஒருநாள் நிதானமா கேட்கணும். இன்னிக்கு birthday. இன்னிக்கு finance வேண்டாம்!
சரி uncle!
இதற்கிடையில் அஷ்வின் கொஞ்சம் ஒதுங்கி நின்று புத்தக அலமாரியைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
உங்களுக்கு புத்தகம் படிக்கப் பிடிக்குமா?
திரும்பிப் பார்த்தான். மீரா.
ஆமாம். நீங்களும் படிப்பீங்களா?
நிறைய. ஆனா வாங்கற புத்தகங்களையெல்லாம் படிச்சு முடிக்கிறேனா என்பது வேற விஷயம்.
அது எல்லாருக்கும் இருக்கிற பிரச்சினைதான்!
இருவரும் சிரித்தார்கள்.
மீராவுக்கு புத்தகங்கள், பயணம், இசை என்று பல விஷயங்களில் ஆர்வம் இருந்தது. அவளும் தீபிகாவுக்கு நெருக்கமான உறவினர். இருவரும் பேச ஆரம்பித்ததும் அஷ்வினுக்கு நேரம் போனதே தெரியவில்லை.
நீங்க எந்த மாதிரி புத்தகங்கள் படிப்பீங்க?என்று மீரா கேட்டாள்.
நாவல்கள், short stories, travel writing. சில சமயம் non-fiction.
Travel பிடிக்குமா?
ரொம்ப. ஆனா பயணத்தைவிட அதற்கான planning-லேயே சில சமயம் அதிக நேரம் போயிடும்.
அப்படியா? நான் சில சமயம் எந்தத் திட்டமும் இல்லாமல் போயிடுவேன்.
அது நல்லது. என்னுடைய planning-க்கும் உங்களுடைய spontaneity-க்கும் நல்ல balance கிடைக்கும் போல!
மீரா சிரித்தாள்.
அன்று மாலை இருவரும் இசை பற்றியும் பேசினார்கள். பழைய பாடல்கள், புத்தகங்கள், பார்க்க விரும்பும் இடங்கள் என்று பேச்சு நீண்டது.
இதற்கிடையில் ரவியும் தீபிகாவும் ஒரு மூலையில் காபி குடித்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போ உங்க investment plan என்ன ஆச்சு?என்று தீபிகா கேட்டாள்.
அது இன்னும் இருக்கிறது. ஆனா இப்போ உங்களோட பேசறதுதான் முக்கியமான plan.
நல்லா பேசக் கத்துக்கிட்டீங்க போல!
நான் எப்பவுமே நல்லாத்தான் பேசுவேன். கேட்கிறவங்கதான் மாறுவாங்க.
அப்படியா? அப்போ நான் இன்னும் கொஞ்சம் கேட்கிறேன்.
இருவரும் சிரித்தார்கள்.
பிறந்தநாள் நிகழ்ச்சி முடிவில், தீபிகா அடுத்த வாரம் ஒரு புத்தகக் கண்காட்சிக்குப் போகலாம் என்று சொன்னாள். மீராவும் அஷ்வினும் அதில் ஆர்வம் காட்டினார்கள்.
அடுத்த வாரம் நால்வரும் புத்தகக் கண்காட்சியில் சந்தித்தார்கள்.
ரவி, தீபிகாவுடன் காபி குடித்துக்கொண்டிருந்தான். அஷ்வினும் மீராவும் புத்தகக் கடைகளில் சுற்றிக்கொண்டிருந்தார்கள்.
நீங்க புத்தகம் வாங்கற வேகத்தைப் பார்த்தா, வீட்டில ஒரு library ஆரம்பிக்கலாம் போல,என்றான் அஷ்வின்.
அது பரவாயில்லை. நீங்க படிக்கிற வேகத்தைப் பார்த்தா library-யே எனக்காகக் காத்திருக்கும்!
அஷ்வின் சிரித்தான்.
அந்தச் சந்திப்புகளுக்குப் பிறகு இருவருக்கும் பேசுவதற்கான காரணங்கள் அதிகரித்தன. ரவி, தீபிகாவிடம் இனி ஒவ்வொரு உரையாடலையும் business pitch-ஆக மாற்றவில்லை. அவளுடைய வேலை, விருப்பங்கள், குடும்பம் என்று உண்மையாகக் கேட்க ஆரம்பித்தான்.
அஷ்வினும் மீராவும் புத்தகங்களையும் பயணங்களையும் தாண்டி தங்களுடைய எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.
ஒரு நாள் ரவி அஷ்வினிடம் சொன்னான்.
டேய், நம்ம வாழ்க்கைல ஒரு மாற்றம் வரப்போகுது போல.
என்ன? இனிமேல் கல்யாணத்துக்குப் போக மாட்டோமா?
அதெல்லாம் இல்லை. இனிமேல் invitation வந்தா உண்மையாவே போக வேண்டியிருக்கும்!
அத்தியாயம் 4 – இனி அழைப்பிதழ் காத்திருக்கும் நாட்கள்
சில மாதங்கள் கழிந்தன.
மீராவின் நெருங்கிய உறவினர் ஒருவரின் நிச்சயதார்த்தம் சென்னையில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறை ரவி, அஷ்வின், தீபிகா, மீரா நால்வருக்கும் முறையான அழைப்பு.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே நால்வரும் சந்தித்துக்கொண்டார்கள்.
இப்போ நம்மள யாரும் கேட்க மாட்டாங்க. எந்தப் பக்கத்துச் சொந்தம்னு! என்று ரவி சொன்னான்.
ஆமாம். இந்த முறை நம்ம பெயர் guest list-ல இருக்கு, என்றாள் தீபிகா.
அது சரி. உங்க பெயர் guest list-ல இருக்கிறதா, இல்ல உங்க பெயரை யாராவது guest list-ல போட்டாங்களா? என்று அஷ்வின் கேட்டான்.
உனக்கு வேற வேலையே இல்லையா? என்று ரவி சிரித்தான்.
அந்த நேரத்தில் ஒரு பரிச்சயமான குரல்.
அடடா! நீங்களும் இங்க வந்துட்டேளா?
ஜானகி மாமி!
நால்வரும் திரும்பிப் பார்த்தார்கள்.
மாமி! நீங்களா? என்றான் ரவி.
நான் ஒருத்திதான் எல்லா இடத்துக்கும் போவேன்னு நினைச்சேன். இப்போ நீங்களும் என்ன மாதிரி சர்வவியாபி ஆயிட்டேள் போல இருக்கே!
அஷ்வின் சிரித்தான்.
மாமி, உங்களாலதான் எங்களுக்கு இந்தப் பழக்கம் வந்திருக்கும் போல!
அட, என்னை வேற இழுக்காதே! நான் சொந்தக்காரங்க கூப்பிட்டா வருவேன். நீங்கதான் ஆரம்பத்துல யாரு கூப்பிட்டாங்கன்னே தெரியாம வந்தேளே!
தீபிகா சிரித்தாள்.
மாமி, இப்போ எல்லாம் முறையான அழைப்புதான்.
அது எனக்குத் தெரியும். ரவியைப் பார்த்தாலே இப்போ புரியுது. முகத்துல ஒரு பொறுப்பான தோற்றம் வந்திருக்கு!
மாமி, அது வயசு ஆகறதால!
இல்லப்பா, அது வேற காரணம் போல இருக்கு!
மாமியின் பார்வை ரவியையும் தீபிகாவையும் மாறி மாறிப் பார்த்தது.
அஷ்வின் மீராவைப் பார்த்தான். இருவரும் சிரித்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சி முடிந்து, கூட்டம் கொஞ்சம் குறைந்தபோது நால்வரும் தனியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
ரவி தீபிகாவிடம் சொன்னான்.
நம்ம அறிமுகம் ஒரு கல்யாணத்துல ஆரம்பிச்சது. அப்போ நான் உங்ககிட்ட finance பற்றித்தான் பேசினேன். இப்போ உங்களோட பேசறதுக்கு வேற பல விஷயங்கள் இருக்கிறது.
தீபிகா புன்னகைத்தாள்.
அது எனக்கும் தெரியும். நம்ம இருவரும் ஒருவரை ஒருவர் இன்னும் நன்றாகத் தெரிஞ்சுக்கிட்டிருக்கோம். அடுத்த கட்டத்தைப் பற்றியும் யோசிக்கலாம்.
அப்படின்னா வீட்டில் பேசலாமா?
பேசலாம். அவசரப்படாமல், நிதானமா.
அதே நேரத்தில் அஷ்வினும் மீராவும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
நம்மளோட புத்தகப் பேச்சு எப்போ ஆரம்பிச்சது தெரியுமா?” என்று மீரா கேட்டாள்.
உங்க வீட்டில அந்த birthday அன்று. நான் புத்தக அலமாரியைப் பார்த்துக்கிட்டு நின்னப்போ.
அதுக்கப்புறம் எவ்வளவு பேசிட்டோம்!
ஆமாம். அடுத்த பயணம் எங்கே போகலாம் என்று கூட முடிவு பண்ணிட்டோம். ஆனா அந்தப் பயணத்துக்கு முன்னாடி இன்னொரு விஷயம் பேசணும்.
என்ன?
நம்ம உறவைப் பற்றி வீட்டில் பேசலாம்னு நினைக்கிறேன்.”l
மீரா மெதுவாகப் புன்னகைத்தாள்.
நானும் அதைத்தான் நினைச்சேன்.
அந்த மாலை நால்வருக்கும் ஒரு புதிய தொடக்கமாக இருந்தது.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ரவியின் போன் ஒலித்தது. ஜானகி மாமி அழைத்திருந்தார். ரவி speaker-ல் போட்டான்.
என்னப்பா, எல்லாரும் கிளம்பிட்டேளா?
ஆமாம் மாமி. நாங்க நாலு பேரும் இங்கதான் இருக்கோம்.
நாலு பேருமா? நல்லது நல்லது! அடுத்த வாரம் இன்னொரு கல்யாணம் இருக்கு. இந்த முறை சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கும். வரணும்!
ரவி தீபிகாவைப் பார்த்தான். அஷ்வின் மீராவைப் பார்த்தான்.
மாமி, இந்த முறை நாங்க invitation வந்தா கண்டிப்பா வருவோம்! என்றான் அஷ்வின்.
அட, உங்களுக்கு invitation இல்லாம வர்றதுலதானே இவ்வளவு அனுபவம்!
நால்வரும் சிரித்தார்கள்.
சரி மாமி. எங்க கல்யாணத்துக்கும் நீங்க வரணும், என்றான் ரவி.
அதுக்கென்னப்பா? நான் வராம இருக்க முடியுமா? ஆனா ஒரு விஷயம். உங்க கல்யாணத்துல சாப்பாடு நல்லா இருக்கணும். இவ்வளவு நாள் நீங்க மற்றவங்க கல்யாணத்துல சாப்பிட்டேளே. இப்போ உங்க கல்யாணத்துல எங்களுக்கும் நல்ல விருந்து வைக்கணும்!
கண்டிப்பா மாமி! என்றான் ரவி.
போன் துண்டிக்கப்பட்டது.
நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தார்கள்.
ஒரு காலத்தில் நல்ல சாப்பாட்டுக்காகத் திருமண மண்டபங்களுக்குள் நுழைந்த ரவியும் அஷ்வினும், இன்று தங்களுக்கென ஒரு உறவையும், அன்பான நட்பையும், உண்மையான அழைப்புகளையும் சம்பாதித்திருந்தார்கள்.
இனிமேல் அவர்களுக்கும் திருமணம் நடக்கவிருப்பதால், அவர்களுக்கு வரப்போகும் அழைப்பிதழ்களுக்காகவும், தங்கள் சொந்தக் கல்யாண அழைப்பிதழ்களை வழங்குவதற்காகவும் ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கினார்கள்.
ஆனால் அவர்களுக்குத் தெரியும் ஜானகி மாமிக்கு அழைப்பிதழ் அனுப்ப வேண்டிய அவசியமே இல்லை!
சுபம்!