கொல்லிமலையின் உச்சியில், மூலிகைக் காற்றும் நீரோடைகளின் சலசலப்பும் நிறைந்த அந்தப் பழைய பாக்குமர வீட்டில், அன்றைய காலை வழக்கத்திற்கு மாறாக அமைதியில் உறைந்திருந்தது. திண்ணையில் அமர்ந்திருந்த சுமங்கலி பாட்டியின் முகத்தில், காதில் மின்னிய தண்டட்டியின் ஒளியில் கடந்த காலத்தின் பெரும் துயரமும், தியாகத்தின் பெருமையும் கலந்திருந்தன. கர்ப்பிணியாக இருந்த தன்னைத் தவிக்கவிட்டு, நேதாஜியின் பாதையைப் பின்பற்றி நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்த கணவரின் நினைவுகள், அவள் முண்டச்சி வரி கட்ட நிலத்தை விற்ற அந்தப் போராட்டமான காலத்தை அந்த காட்டிலேயே வேலை பார்த்து மீண்டும் முண்டச்சி வரி கட்டி தன் மகளுடன் வரும் வருமானத்தில் ஜீவனம் நடத்தியதும் எப்போதும் கண்முன் நிறுத்தும்.ஆனால், காலம் மாறியது. முண்டச்சி வரி நீங்கியது. பாட்டி நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், மலையின் அமைதியில் அவரது கணவரையும் நினைத்து அந்த நினைவுகளைச் சுமந்து பாட்டியின் வாழ்வு நகர்ந்ததாலும், அவரது மகள் லெட்சுமிக்கு விடிவு கிடைக்கவில்லை. லெட்சுமி, வாழ்க்கையின் வலிகளைத் தாங்கிக் கொண்டவள்.