நினைவு-26 ஒருவழியாக கண்ணனின் அறுவைசிகிச்சை முடிந்திருந்தது. தீவிரசிகிச்சை பிரிவில் வெளியே அனைவரும் காத்திருந்தனர். அனைவரிடமும் பதற்றத்துடன் கூடிய அமைதியே நிலை கொண்டிருந்தது. சண்முகமும், லட்சுமியும் இருபுறமும் அமர்ந்திருக்க, திவ்யா அவளவன் கண் விழிக்கும் நேரத்திற்காகக் காத்திருந்தாள். மங்கையர்க்கரசியும் திவ்யாவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார். மகனின் அதிரடி முடிவு அவருக்குமே ஆச்சரியம்தான். நேற்று வரை மகனுக்கு உதவிய பெண்ணாக நினைத்துக் கொண்டிருந்தவள், இன்று அவனின் மனைவியாக, தனக்கு மருமகளாக மாறியிருந்தாள். அவள் மீது மகன் கொண்ட காதலின் தீவிரம் அப்பட்டமாகப் புரிந்தது. ‘எதிர்பாராததை எதிர்பாருங்க அம்மணி!’ என்று முன்தினம் இரவில் திவ்யாவிடம் கூறியவன், அடுத்து எடுத்த முடிவுகளெல்லாம் அதிரடிதான். விடிந்தவுடன் அவரவர் வேலையை முடித்துக் கொண்டு, பிள்ளைகளும் கிளம்பிவிட, திவ்யாவை கைபிடித்து இழுத்து கொண்டு சண்முகம் மற்றும் லட்சுமியின் முன் வந்தவன், "ம்மா… நான் திவ்யாவை விரும்புறேன்… அவளும் தான்!" என்றான் தடாலடியாக. இருவரும் அதிர்ச்சியுடன் திவ்யாவைப் பார்க்க, "அவளை ஏன் பாக்குறீங்க? நேத்துல