அழகிய காலைப்பொழுதை பறைசாற்றும் வகையில் புது வண்ணத்தோடு மலர்கள் தலையசைக்க, பசும்புற்களில் பனித்துளிகள் சிறு குழந்தையென தவிழ்ந்து கொண்டிருக்க, பறவைக் கூட்டங்கள் சிறு இசை கச்சேரியை நடத்திக் கொண்டிருந்தன.கண்டவரை கண்ட நொடி கைது செய்யும் அந்த காட்சியை கண்டு கொள்ளாமல் தனது எண்ணங்களே பெரிது என சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் ஒருத்தி." உன்ன பார்த்த நேரம் மனசு ஆடும் மயிலாட்டம்... உன்ன நெனச்ச நேரம் நெஞ்சில் மலரும் பூந்தோட்டம் " என்ற பாடல் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்க, நான் எங்கே பார்த்தேன்....? என்று சலித்துக்கொண்டாள் சங்கடத்துடன். அவளது எண்ண அலைகள் இரண்டு வருடங்கள் பின்னோக்கி பாயத் தொடங்கின...." யாழினி " பெயருக்கு ஏற்ப பரிசுத்தமானவள், அலங்காரத்தின் பின்னே ஓடும் பெண்களுக்கு நடுவில், கவிதைகளோடு கரைந்து கொண்டிருந்த காரிகை அவள்... பொல்லாத ஒன்றைக்கூட பொறுமையாய் கூறுவாள், இல்லாத ஒன்றைக் கூட இயல்பாய் கூறுவாள்... கேட்காமல் கிடைக்கும் வரங்கள் எல்லாம் சொல்லிக் கொள்ளாமல் தான் வருமாம்,