13. முல்லை மயங்கி விழுந்ததும்..
அங்கிருந்த வேலைக்காரர்கள் அனைவருமே அவளுக்கான சிகிச்சை அளித்து எழுப்பி விட முயற்சித்தனர்…
நடுவே அவர்களுக்கு சர்வேஸ்வரனிடம் இதைப் பற்றிய உண்மையை கூற வேண்டும் என்ற பேச்சுக்கள் நடைபெற..
யார் இதைப் பற்றி நேரடியாக அவனிடம் கூற முடியும் என்ற பயமும் ஏற்பட்டது..
ஒருவேளை அவர்கள் கூறுவதை வெறும் புறம் பேசுவதாக நினைத்துக் கொண்டால்..
ஒரு முதலாளியிடம் அவனின் குடும்பத்தைப் பற்றி தைரியமாக எடுத்துக் கூற யாருக்குமே மனம் வரவில்லை…
எனினும், முல்லை படும்பாடுகளை கண்டவர்களுக்கு மனசாட்சி உறுத்த..
வேறு வழியின்றி அவளுடைய அறைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தவர்கள்…
அவளுக்கு இரவு உணவை உண்பதற்கு கொடுக்க..
அவளுக்கு இருந்த அசதியில் ஒருவாய் உணவை கூட உண்ண முடியாமல் தடுமாறினாள்…
அந்த நேரம் சரியாக வீட்டிற்கு வந்து சர்வேஸ்வரன் கண்களில் அவளின் அசதியும், சாப்பிட முடியாமல் அவள் படும் பாட்டை கண்டவன்…
விழிகளைச் சுருக்கி “என்ன ஆச்சு உனக்கு..?” கனத்த குரலில் திடீரென்று கேட்கவும்
ஒரு நொடி அந்த இடமே அமைதியானது..
அதுவும் அப்போது முல்லைக்கு உதவியாக அந்த அறையில் இரண்டு வேலைக்காரர்கள் அமர்ந்திருக்க…
இருவருக்கும் சர்வேஸ்வரன் இந்த திடீர் வருகை அதிர்ச்சி அளித்தது…
அதுவும் இதுவரை சர்வேஸ்வரன் தன் மனைவி முல்லையின் அறைக்கு நேரடியாக வந்ததே இல்லை எனலாம்…
அப்படி இருக்க அவனின் இந்த அதிரடியான வரவு அவர்களை மௌனமாக்க…
“முல்லை என்ன ஆச்சு..? என்ன பண்ணுது..?” அருகில் அமர்ந்து அவள் தலைக்கோதியபடி கேட்க
அவளோ வாயைத் திறந்து எதுவும் பேச முடியாத நிலையில் இருந்தாள்..
அவள் அருகில் இருந்த வேலையாட்களை நிமிர்ந்து பார்த்தவன் “அவளுக்கு என்ன ஆச்சு..?”
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பதில் பேசாமல் நிற்க
சற்று கடுமையாக “இப்ப பதில் சொல்லப் போறீங்களா..? இல்லையா..?”
அதற்குள் புதிதாக வேலைக்கு சேர்ந்த அந்த துடுக்கான பெண்
“அண்ணா.. பெரியம்மா முல்லை அக்காவ நிறைய வேலை வாங்கிட்டாங்க.. அது மட்டுமில்ல…
அவங்களுக்கு சரியா சாப்பாடு போடறதே இல்ல.. எப்ப பாத்தாலும் ஏதாவது முனுமுனுனு சொல்லி திட்டிக்கிட்டே இருக்காங்க…”
“கேட்டா என் பிள்ளையை என்கிட்டே இருந்து பிரிக்க பாக்கறியானு திட்டுனாங்க அண்ணா..”
அந்தப் பெண் பேசப்பேச பக்கத்தில் இருந்தவள் அவள் கைகளை பிடித்து “பேசாதே” என்பது போல் செய்கை செய்ய…
ஆனால் அந்தப் பெண்ணோ இளம் வயது என்பதால்,
சற்றும் பயமின்றி மனதில் பட்ட அனைத்து விஷயங்களையும் கூறி முடித்திருந்தாள்…
சர்வேஸ்வரனுக்கு முகம் இறுகி தன் கோபத்தை ஒரு நொடி கட்டுக்குள் கொண்டு வந்தவன்..
வேலை செய்பவர்களுக்கு எதிரே தன் கோபத்தை காண்பிக்க விரும்பாமல் தனக்குள்ளேயே இறுகினான்…
இப்போது தன் அம்மாவிடம் சென்று முல்லையைப் பற்றி பேசி சண்டையிடலாம்..
ஆனால் அது நிச்சயம் இன்னும் பெரிய பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்று உணர்ந்தவன்..
மறு நொடியே முல்லைக்கு அந்த வீட்டில் இனிமேல் இது போல் எந்த சம்பவமும் நேரிடாமல் தடுப்பதற்கான வழியை யோசித்து இருந்தான்..
எனவே தன்னிடம் புகார் கூறிய சின்ன பெண்ணை பார்த்து மென்மையாக சிரித்தவன்…
“மத்தவங்க எல்லாம் என்கிட்ட இதைப்பத்தி சொல்றதுக்கு பயப்படும் போது.. நீ எப்படி இவ்ளோ தைரியமா சொன்ன..?” மென்மையான குரலில் கேட்க
அவளோ இன்னும் துடுக்காக “நாங்க பாக்குற வேலைக்கு தான் நீங்க சம்பளம் கொடுக்குறீங்க… மத்தபடி வீட்ல இருக்குறவங்க என்ன தப்பு பண்ணினாலும் அது அப்படியே பொறுத்து போகணும் எந்த தேவையும் இல்லேல்ல அண்ணா..”
அவளின் தெளிவான பேச்சும் தைரியமான, வார்த்தைகளும் மேலும் அவனுக்கு மலர்ச்சியை கொடுக்க…
அவனின் புன்னகையின் மூலமாகவே அவள் கூறியதில் எந்தத் தவறும் இல்லை என்பதை உறுதியளித்தான்…
ஆனால் மறுபடியும் தன் மொத்த கவனமும் மனைவியின் புறம் திரும்பியிருக்க..
அவளை இந்த சூழ்நிலையில் வதங்கிய கொடியாக பார்ப்பது மனதில் குற்ற உணர்ச்சியே அதிகரித்தது..
பெற்றவளையும், தம்பிகளை பற்றியும் தெரிந்திருந்தும் முல்லைக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல் கவனக் குறைவாக இருந்ததாக தன்னையேத் திட்டிக் கொண்டவன்…
நாளையிலிருந்து வீட்டில் அநேக விஷயங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டான்.
முல்லையை அமர வைத்து முதலில் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஜூஸ் புகட்டி அவளை சற்று நிதானத்திற்கு அழைத்து வந்தவன்…
மேலும் அவளுக்கு உண்ண சத்தான விஷயங்களாக கொடுத்து,
அவளின் அசதியை ஓரளவுக்கு சரி செய்து நிதானத்திற்கு வர வைத்திருந்தான்…
ஓரளவிற்கு உடல்நிலை சரியானதும் கண்களை விரித்து தன் கணவனை பார்த்தவள்…
தன் அறையில் முதன்முதலாக அவனின் வருகை..
அவளுக்கு ஆச்சரியத்தோடு, நடந்த விஷயங்கள் அவனுக்கு அனைத்தும் தெரியுமோ என்று கேள்வியாக பார்த்திருந்தாள்..
“என்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல்ல முல்லை… எதுக்காக இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கணும்..?”
அவன் குரலில் அவள் மீதான அக்கறையும், உன்னை கவனிக்காமல் விட்டு விட்டேனே என்ற குற்ற உணர்வும் கலந்து இருந்தது…
ஆனால் அவன் கேட்டதற்கு அப்படியே நேர்மாறாக..
முல்லையோ “ஏற்கனவே அவங்க உங்களை நிறைய விஷயத்துல கஷ்டப்படுத்திகிட்டு இருக்காங்க.. இதுல நான் வேற இந்த விஷயத்தலாம் சொல்லி இன்னும் ஏன் உங்களை கஷ்டப்படுத்தணும்னு தாங்க உங்ககிட்ட சொல்லவே இல்ல…”
இதுவரை பெற்றவளும், உடன் பிறந்தவர்களும் தனக்காக ஒரு விஷயத்தை செய்ததே இல்லை எனலாம்..
ஆனால் திருமணமாகி இத்தனை நாட்களும் தன்னிடம் பெரிதாக ஈடுப்பாடு காட்டாத முல்லையோ..
ஒவ்வொரு விஷயத்திலும் தனக்காக யோசித்து செயல்படுவது மனதில் அவன் அறியாமலேயே அப்படி ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது…
மனதிற்குள்ளாக இனி முல்லையை யாரும் காயப்படுத்தி விடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும்..
முல்லை மட்டுமே நமக்கு உரியவள் என்ற உணர்வும் தோன்றியிருந்தது...