Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

உயிரின் அர்த்தம் நீயே ???? - 3

அதே நேரம், கோயம்புத்தூரில் அந்த பிரம்மாண்டமான அரண்மனை போன்ற வீட்டின் மாடியிலிருக்கும் முதல் அறையிலிருந்து அந்த சத்தம் கேட்டது.

"ஐயா., ஐயா.," என்று வேலைக்காரர் ராமு அந்த அறையின் கதவை தட்டிக் கொண்டு இருந்தார். என்னதான் முதலாளி அவரை விட பல வயது சிறியவராக இருந்தாலும் அவனின் கண்ணியமான நடத்தையால், அவனிடம் மேலும் மரியாதையுடன் நடந்து கொண்டார்கள் அந்த வீட்டின் வேலைக்காரர்கள். 

"இதோ வந்துட்டேன்.. ராமு அண்ணா, 
சொல்லுங்கண்ணா..." என்றபடி வந்தான் நம் நாயகன் விக்ரமன் ஆத்ரேயன்.

"அது இல்ல தம்பி... உங்களுக்கு இதுல சத்துமாவு கஞ்சி... அப்புறம் இன்னைக்கு பேப்பர்.. அம்மா கீழ வரசொன்னாங்க தம்பி ரெடி ஆயிட்டீங்கன்னா... " என்றார். 

"நானே வந்து இருப்பேண்ணா... உங்கள மேல ஏறி வர வேணாம்னு எத்தன தடவ சொல்லி இருக்கேன்.. வேறு யார்கிட்டயாவது கொடுத்துவிடலாம் இல்ல.. இல்ல இன்டர்காம்ல கூப்பிடுங்க.. நானே கீழ வரேண்ணா இனிமே இப்படி ஏறி வராதீங்க.. இன்னிக்கு சத்துமா கஞ்சி வேண்டாம்.. அதுக்கு பதிலா காபி தயார் செய்ங்க நான் கீழே வந்து வாங்கிக்கிறேன்..." என்றான். 

இதுதான் நம் நாயகன் விக்ரம் அவனிடம் வேலை செய்பவரிடம் கூட மரியாதையுடனும், அன்பாகவும் நடந்து கொள்வான் அதனாலேயே அனைவருக்கும் அவன் மீது பிடித்தம் அதிகம். 

"காபியா! என்று ஆச்சரியமாக மனதிற்குள் நினைத்து. சரி தம்பி, இதோ கொண்டு வரேன்.."என்றார் வேலைக்காரர் ராமு. 

ராமு அந்த மாளிகையில் பல வருடமாக வேலை செய்து வருகிறார்.. நம் நாயகன் குழந்தையிலிருந்து வளர்வதை பார்த்து வந்தவர் எனவே நம் நாயகனை தன் பிள்ளை போல் பாசத்துடன் நடத்துபவர். 

ஆச்சரியப்பட்டதற்கு காரணம், விக்ரம் எப்பொழுதுமே சத்துமாவு கஞ்சி, கிரீன் டீ போன்றவற்றை தான் விரும்பி குடிப்பான். எப்போதாவது வருடத்தில் ஒன்று, இரண்டு முறை தான் காபி கேட்பான்... 

விக்ரம் காலையில் எழுந்து தனது அன்றாட வேலைகளை முடித்துக் கொண்டு, தன் ஜிம்மிற்குள் நுழைந்து ஒரு மணி நேரம் கடுமையான ஒர்க்கவுட் முடித்து வெளியே வந்து குளித்து தயாராகி கீழே அவன் அம்மாவை பார்க்கச் சென்றான். 

"அம்மா கூப்பிட்டீங்களா.." என்று கேட்டான். 

"ஆமா, விக்ரம்.. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்".

தன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே, வீட்டில் இருந்த அனைவரும் அந்த ஹாலில் ஆஜர் ஆகினர். 

விக்ரமின் பெரிய அக்கா தன் அப்பாவிடம் "அப்பா இன்னிக்கு அம்மா அவன்கிட்ட செமத்தியா திட்டு வாங்க போறாங்க.. சொன்னா கேட்கவும் மாட்டேங்கறாங்க.." என்றாள். 

" என்னடா பண்ண சொல்ற.. உங்க அம்மாவுக்கு சொன்னா புரியவும் மாட்டேங்குது.. இவனும் காரணத்தை ஒழுங்கா சொல்ல மாட்டேங்குறான். ரெண்டு பேருக்கு நடுவுல மாட்டிகிட்டு, நாம தான் முழிக்க வேண்டி இருக்கு.. " என்றார் அலுப்பாக. 

அப்போது விக்ரமின் அண்ணன் "விடுங்கப்பா.. இதுவும் ஒரு எண்டர்டெயின்மென்ட் தான்.. அவன் திட்டுறதும்.. அம்மா வாங்கறதும்., அம்மா வாங்கறதும்., அவன் திட்டுறதும்..."

"நாம உட்கார்ந்து என்ஜாய் பண்ணலாம். ஆனா நீங்க குறுக்குப் போய் எதுவும் சமாதானம் பண்ணிடாதீங்கப்பா." என்றான் தன் தந்தையை சமாதானம் செய்யும் பொருட்டு. 

"அய்யோ! நமக்கு என்ன? வந்தோமா, ஒக்காந்தோமா, என்டர்டைன்மென்ட்ட பார்த்தோமான்னு இருக்கனும். அடுத்து நம்ம வேலைய பாத்துக்கிட்டு போயிடணும்.." என்று மெலிதாக சிரித்தார் அந்த வீட்டின் தலைவர் கமலநாதன் விக்ரமின் அப்பா. 

அவர் மனைவி, குணவதி, "டேய் விக்ரம்.. நான் உன்கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன்.. நீ என்ன பாக்காம அங்க என்ன போன்ல பார்த்துட்டு இருக்க.." என்று கோபமாக கேட்டார். 

காரணம், தன் மகன் அநாவசியமாக போன் பார்த்து பொழுதை கழிக்க மாட்டான்.. என்று அவருக்குத் தெரியும். அதனால்தான் வார்த்தைகளை பார்த்து உபயோகித்தார். 

"சொல்லுங்கம்மா.. என்ன விஷயம் பேசணும்..?காலையிலேயே இவ்வளவு அவசரப்படுத்திகிட்டு இருக்கீங்க.." என்று அமைதியாக கேட்டான் விக்ரம். 

அவன் வெளிப்புறம் அமைதியாக தோன்றினாலும், அவன் மனதிற்குள் சூறாவளி வீசிக்கொண்டு தான் இருந்தது. காரணம், அவனுக்கு தெரியும் தன் அம்மா இப்பொழுது தன்னிடம் என்ன விஷயமாக பேசவிருக்கிறார் என்று..

இந்த பேச்சு எழும் போதெல்லாம் அம்மாவிடம் கோபம் காட்டுவதை விட தன் வலியுடன் போராடுவதே அவனுக்கு போராட்டமாக இருந்தது. 

"இல்ல விக்ரம்.. முந்தா நாள் நம்ம வீட்டுக்கு பொள்ளாச்சியில் இருந்து அந்த நகை கடை ஓனர் வந்திருந்தார்.. அத பத்தி தான்பா உன்கிட்ட பேசணும்..." என்றார் அவன் அன்னை. 

நகை கடைக்காரர் என்று அம்மா ஆரம்பிக்கும் போதே தெரியும் விக்ரம்க்கு எனவே அவரை இடைவெட்டி, "என்னம்மா நகை ஏதாவது வேண்டுமா..? உங்களுக்கா..? அக்காக்கா..? அண்ணிக்கா..? போய் வாங்கிக்கோங்க.." என்றான் கூலாக. 

"எங்களுக்கு நகை எடுக்க உன்கிட்ட எதுக்கு நான் பேச போறேன்" என்றார் குணவதி. 

"அதானே! வேற என்னமா" என்று கேட்டான். 

அதற்கு அவன் அம்மா, "இல்லப்பா.. அவருக்கு ஒரு பொண்ணு இருக்காளாம். "

"ஓ! அப்படியா? ஸ்கூல் படிக்கிறாளா? காலேஜ் சீட்டு எதுவும் வேணுமா? நம்ம காலேஜ்ல ட்ரை பண்ணனுமா? என்று கிண்டலடித்தான். 

"கண்ணா.. சொல்றத ஒழுங்கா கேளுப்பா... அவ பொள்ளாச்சியில் இளநீர் வச்சு பை பிராடக்ட்ஸ் பண்ற ஒரு பேக்டரி ஓபன் பண்ணனும்னு பேசிக்கிட்டு இருந்தா, இப்பதான் போன மாசம் ஓபன் பண்ணிட்டாளாம்".

"ஓ சூப்பர்மா! அவளோட ஷாப் இனாகிரேஷனுக்கு எதுக்கும் நீங்க போறீங்களா..? என்று கேட்டான். 

"விக்கி.. நான் சொல்றத முதல்ல கேட்பியா மாட்டியா?" என்ற அழுத்தமாக கேட்டார். 

விக்ரமும் தன்னுடைய இலகுத்தன்மையை விட்டு, கேலி கிண்டலை புறந்தள்ளிவிட்டு அழுத்தமாக அமர்ந்தான்.

(விக்ரமின் இந்த வலி புரிந்து அவன் அம்மா பேசுகிறாரா அல்லது புரியாமல் பேசுகிறாரா அடுத்த அத்தியாயத்தில்...))

(என் கதையை தொடர்ந்து படிக்கும் அனைவருக்கும் நன்றி... என்னை ஃபாலோ பண்ணுங்க.. என் கதையை படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க.. ரேட்டிங்ஸ் குடுங்க...))