Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

உயிரின் அர்த்தம் நீயே ???? - 2

ஆராதனா தன் கடந்த கால வாழ்வை நினைத்து வலி அனுபவித்தாலும்,

அதை தன் உயிரானவனிடம் காண்பிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்..

அதை நினைத்து அவளின் தோழி மகிழருவின் ஆச்சரியம் எப்போதும் போல் மனதிற்குள் பிரமிப்பை வழங்கியது..

"மகிழு, எந்த கோட்டை பிடிக்க இவ்வளவு யோசிச்சிகிட்டு இருக்க... நீ எந்த கோட்டையை யோசிச்சாலும் இப்போதைக்கு நம்மளால பிடிக்க முடியாது.


"வா, நம்ம நேரா கிளம்பி ஆபிஸ்க்கு போய், இன்னைக்கு அந்த மேனேஜர் என்ன எல்லாம் நமக்கு டாஸ்க் வச்சிருக்காரோ... அதை செஞ்சு கம்பி மேல நடக்கலாமா...? தலைகீழ நிக்கலாமான்னு..? பார்ப்போம் வா" என்றால் கண்ணை எட்டாத முறுவலுடன். 


தனக்காகத்தான் அவள் இவ்வாறு பேசுகிறாள் என்று உணர்ந்த மகிழருவி மனம் நெகிழ்ந்து, "சரிடி வா, நான் காலை டிபனும் பண்ணி சாப்பாடும் செஞ்சுட்டேன்... உனக்கு டிபன் பாக்ஸ்லயும் கட்டி வச்சுட்டேன்... நம்ம டிபன் சாப்பிட்டு கிளம்பலாம். "என்று அந்த இடத்தை இயல்பாக்கினாள். 

"ஐயோ சாரிடி, இன்னைக்கு நான் தானே சமைக்க வேண்டியது. ஆனா உன்னைய சமைக்க வச்சிட்டனா.. ரொம்ப சாரி டி... என்றாள். 

"ஹேய் , இதுக்கு எதுக்குடி சாரி? இன்னைக்கு ஒரு நாள் உன் சமையல் இருந்து நான் தப்பிச்சிக்கிறேன்.. விட்ருமா, எங்க அம்மா நான் உசுரோட இருக்கணும் நிறைய வருஷம் வாழனும்னு ஆசைப்படுது ... நீ சோறு போட்டே என்னை கொன்றுவ போல இருக்கு.. " என்றால் மகிழருவி. 

"ஏய் ரொம்ப ஓட்டாதடி... போன தடவ நான் சமைக்கும் போது கொஞ்சம் உப்பு கூடிப்போச்சு... அதுக்குன்னு இப்படியா கிண்டல் பண்ணுவ? "

" ஏது உப்பு கூடி போச்சா? நீ பண்ணதுல உப்பு மட்டும் தான்மா இருந்துச்சு... அத சமையல்னு முதல சொல்லாத அதுக்கு வேற ஏதாவது பேர நம்ம ஆபீஸ் போயிட்டு வந்துட்டு நிதானமா யோசிப்போம்.. "

"நம்ம ஊரை விட்டு வந்ததுக்கு அப்புறம், உனக்கு வாய் ஜாஸ்தி ஆயிடுச்சு மகிழு. என் சமையல கிண்டல் பண்ற.. இரு, இரு என்னைக்காவது முடியலடி தூக்கம் வருது, இன்னிக்கு எனக்காக நீ சமையல் செய்பானு கேப்ப இல்ல.. அன்னைக்கு இதே டயலாக் நான் எல்லாத்தையும் மனப்பாடமா சொல்றேன். "

உடனே மகிழருவி ஜகா வாங்கி "சரி தங்க புள்ள.. இதுக்கெல்லாம கோவிச்சுக்கிறது. விடு, விடு, இப்படி ஒரு பிரட்டு.. அப்படி ஒரு பிரட்டு.. சரி வா நாம சாப்பிட உட்காரலாம் இன்னிக்கு உனக்கு ரொம்ப பிடிச்ச ரவா இட்லியும் தேங்காய் சட்னியும் பண்ணி இருக்கேன். "

இருவரும் ஆளுக்கு ஒரு மனநிலையுடன் ஆளுக்கு ஒரு சிந்தனையில் காலை உணவை சாப்பிட்டனர். சாப்பிட்டு வெளியே வந்து கதவை பூட்டிக்கொண்டு அவர்கள் ஆஃபீஸ் அருகே செல்லக்கூடிய மெட்ரோ ட்ரெயின் க்காக ரயில்வே ஸ்டேஷன் வந்தனர். 

இன்று மட்டுமல்ல.. குறைந்த பட்சமாக மூன்று ஆண்டுகளாக அவர்களின் உயிர் அவர்களின் கூட்டை விட்டு தள்ளி இருப்பதால் தங்கள் மனதையும் உடலையும் பிரயத்தனப்பட்டு செலுத்திக் கொண்டிருந்தனர்... 

உயிர் இல்லா கூடு போல் வாழ்ந்து கொண்டிருந்தனர்... சரி.. அவர்களை இவ்வாறு யார் நிர்பந்தித்தது..? சூழ்நிலையா..? பெற்றோரா...? நண்பர்களா...? இவர்கள் யாருமே அல்ல... அவர்களே தான்... 

ஆம்... அவர்கள் இருவருமே அவர்களின் காதலுக்கு விலங்கிட்டு... தங்கள் உயிரை தாங்களே இழந்து... வெறும் கூடாக வாழ சம்மதித்து.. இன்றும் உயிர் வலி கண்டு வாழ்ந்து வருகின்றனர்.. 

அப்படி என்றால் அவர்களுக்குள் உள்ளே உள்ள காதல் மறைந்து விட்டதா..? அமிழ்ந்து விட்டதா...?குறைந்து விட்டதா...? இது எதுவுமே இல்லை.. 

என்றும் அவர்கள் காதல் அவர்களின் உயிர் சுவாசமாக வாழ்ந்து வருகிறது... காலையில் கண் விழிப்பதிலிருந்து இரவு கண் உறங்குவது வரை, இருவரும் ஒருவரை ஒருவர் ஒவ்வொரு நொடியும் நினைத்து அவர்களுடன் வாழ்வதாகவே கற்பனை செய்து வாழ்கிறார்கள்.

ஆனால், என்ன நிஜத்தை நெருங்க பயப்படுகிறார்கள். 

நிஜத்தில், எதிர் - எதிர் நோக்கினால், காயப்பட்டு விடுவோமோ? காயப்படுத்தி விடுவோமோ? என்று பயப்படுகிறார்கள்..

ஆனால் அவர்கள் அறியாத ஒன்று.. நிஜத்தில் அவர்கள் எவ்வளவுதான் காயப்படுத்திக் கொண்டாலும், இப்பொழுது அவர்கள் அனுபவிக்கும் காயத்தின் வலியை விட குறைந்த வலியே கொடுக்கும் என்பதை நினைத்துப் பார்க்க மறுக்கின்றனர். 

ஒருவேளை விதியின் வசத்தால் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டால் அடையாளம் தெரியாத யாரோ அந்நியர் போல் விலகி விடுவார்களா? உயிர் நேசத்தை கண்டு, கண்ணீர் பெருக்கெடுக்க பாய்ந்து அணைத்துக் கொள்வார்களா? அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் தான்... நாமும் அதைக் காண இயலும்.. 

நாமும் சென்று அவர்களுடன் பயணிப்போம்... அவர்களின் வலியை உடனிருந்து பார்ப்போம்... 

எவ்வாறு வாழ்க்கை மாறுகிறது... எவ்வாறு அவர்கள் தங்கள் இணையை சேர்கிறார்கள்... அல்லது நிரந்தரமாக பிரிகிறார்கள்... என்பதை அவர்களுடன் வாழ்ந்து தெரிந்து கொள்வோம். 

மகிழருவி ஆராதனாவுடன் இயல்பாக பேசி சிரிப்பது போல் பேசிக் கொண்டிருந்தாலும், அவள் மனதின் ஒரு மூலையில் இன்று ஆராதனா அழுத அழுகை பலவித சிந்தனையை தோற்றுவித்திருந்தது. அதன்படி, ஏதாவது செய்து ஆதியையும் ஆராதனாவையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று தோன்றியது. 

அதற்காக நன்கு யோசித்து அவள் ஒரு திட்டம் வகுத்தாள்.. அந்தத் திட்டம் ஆதி - ஆராதனா காதலுக்கு வழிவகுத்ததா..? வலியை கொடுத்ததா ...?

ஆராதனாவை போல் ஆதியும் ஏன் அதை வலியை அனுபவித்துக் கொண்டிருக்கின்றான்...?

இனி வரும் பகுதிகளில்…